ன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி பாட்காஸ்ட் உரையாடல் ஒன்றில், “உலக அளவில் நாட்டின் போட்டித்தன்மையை அதிகரிக்க இந்திய இளைஞர்கள் வாரத்தில் குறைந்தது 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்!” என்றும், “மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் குறைந்த வேலை நேரம் மற்றும் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது!” என்று தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக சமூக உடகங்களில் பல்வேறு வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருபுறம் கார்ப்பரேட்டுகள் நாராயண மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். மறுபுறம் உழைக்கும் மக்களுக்கான பிரதிநிதிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய சூழலில், கார்ப்பரேட்டுகளின் தேவை என்பது தொழிலாளி வர்க்கத்தினை ஒட்ட சுரண்டுவதும், அதிக இலாபத்தினை கொள்ளையடிப்பதே தாரக மந்திர சொல்லாகவும், செயலாகவும் உள்ளது. உலக கார்ப்பரேட்டுகள் முதல் இந்திய கார்ப்பரேட்டுகள் வரையில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டுமென நிர்பந்தித்து வருகின்றனர். தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற துறைகளில் “நிரந்தமாக்கப்பட்ட தொழிலாளிகள்” என்கிற முறையினை ஒழித்துக்கட்டி, அதற்கு மாற்றாக NEEM, NAPS, FTE என்று தொடங்கி கிக் தொழிலாளர்களை உருவாக்கி வருகின்றனர், கார்ப்பரேட்டு முதலாளிகள். இவர்களை நேர வரைமுறையின்றி சுரண்டுவது, குறைவான கூலி கொடுப்பது, பணி நிரந்தரமின்மை, பணிப்பாதுகாப்பு இல்லாமை என எந்தவித உரிமையும், சலுகையின்றி கொள்ளையடித்து வருகின்றனர். மேற்கண்ட வழிமுறையில்தான் இனிவரும் காலங்களில் “வேலைமுறை” இருக்கும் என்பதை கார்ப்பரேட்டுகள் பகிரங்கமாக அறிவிக்கின்றனர்.

சீனாவின் அலிபாபா நிறுவனர் ஜாக் மா “996” என்கிற ஒரு விதிமுறையினை முன்மொழிந்தார். அதாவது, சீனாவில் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை (12 மணிநேரம்) வேலை செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்து நடைமுறைப்படுத்தியும் விட்டார். இதன்விளைவு, அதிக நேர பணிச்சுமையால் தற்கொலைகள், குடும்ப வாழ்க்கையே நிலைக்குலைந்தது. இதே போன்ற விதிமுறையை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நமது தமிழ்நாட்டிலும் அமுல்படுத்தவும் துடித்தனர், சீன முதலாளிகள். பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததால் வேறுவழியின்றி அத்திட்டத்தை பின்வாங்கியது தமிழக அரசு.

அடுத்தபடியாக, உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலோன் மஸ்க், முந்தைய ஆண்டு அக்டோபரில் எக்ஸ் (டிவிட்டர்) இயங்குதளத்தைப் வாங்கிய பிறகு, ட்விட்டரின் ஊழியர்களை வாரத்திற்கு 100 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினார்.

இதேபோல், பாம்பே ஷேவிங் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு தேஷ்பாண்டே, குறைந்தது 4-5 ஆண்டுகளுக்கு 18 மணி நேர வேலை நாட்களில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார். ஓலாவின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் நாரணயன மூர்த்தியின் கருத்தை முழுவதுமாக ஆதரித்துள்ளார்.

ஜே.எஸ்.டபிள்யூ குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் “திரு. நாராயண மூர்த்தியின் அறிக்கையை நான் முழு மனதுடன் ஆமோதிக்கிறேன். இது சோர்வு அல்ல, அர்ப்பணிப்பு. இந்தியாவை பொருளாதார வல்லரசாக 5-நாள் வார கலாச்சாரம் என்பது வேகமாக வளர்ந்து வரும் நமது அளவிலான தேசத்திற்குத் தேவையில்லை.”  தினமும் 14-16 மணி நேரம் தொடர்ந்து உழைத்ததற்காக நாட்டின் பிரதமருக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். “என் தந்தை வாரத்தில் 12-14 மணி நேரம், 7 நாட்கள் வேலை செய்வார். நான் தினமும் 10-12 மணி நேரம் வேலை செய்கிறேன். இந்தியாவின் மிகப்பெரிய பலம் இளைஞர்கள் ஆவர். இந்த தலைமுறை ஓய்வு நேரத்தை விட வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

இப்படியாக ஒவ்வொரு கார்ப்பரேட் முதலாளிகளும் 8 மணிநேர வேலையை ஒழித்திட முனைப்பு காட்டியும், அதிக வேலைநேரத்தை சட்டபூர்வமாகவே நடைமுறைப்படுத்தவும் துடித்து கொண்டு வருகின்றனர். அதற்கு ஏற்ப பாசிச பாஜக அரசும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக்கட்டி கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கவும் தயார் நிலையில் உள்ளனர்.

உலக பாட்டாளி வர்க்கம் போராடி பெற்ற 8 மணிநேர வேலை – 8 மணிநேர ஓய்வு – 8 மணிநேர உறக்கம் என்கிற உன்னதமான உரிமையை ஒழித்துக்கட்ட கார்ப்பரேட் முதலாளிகள் ஒன்று சேர்கின்றனர். அன்றைக்கு கார்ல் மார்க்ஸ் கூறியபடி, ”முதலாளித்துவ வர்க்கத்தினை வீழ்த்த கோடிக்கால் பூதமாய் திரண்டெழுவது!” என்பதை தவிர, நமக்கு மாற்று வழி ஏதுமில்லை! என்பதை உணர்வோம். செயல்பட முன்வருவோம்.

  • மகிழினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here