தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெறும் நிதியைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒன்றிய பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதாவது  பாசிச பாஜக அம்பானி-யிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றுள்ளது,  அதானி-யிடம்  இருந்து எவ்வளவு நிதி பெற்றுள்றது? என்பன போன்ற விவரங்களை  தெரிந்து கொள்வதற்கு  மக்களுக்கு உரிமை இல்லை என்று பாசிச பாஜக கூறுகிறது.

முதலில் தேர்தல்  பத்திரங்கள் என்றால் என்ன? என்பதை பற்றி சுருக்கமாக பார்த்து விடுவோம்.

பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் 1,000; 10,000; 1லட்சம் ; 1கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களாக இந்த நிதி பத்திரங்கள் கிடைக்கும். இந்த தேர்தல் நிதி பத்திரங்களை தனிநபரோ, நிறுவனங்களோ பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வாங்கி அரசியல் கட்சிகளிடம் கொடுத்தால் அந்த பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

ஒன்றியத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல்  பத்திரம் என்பது நடைமுறையில் இல்லை.  ஒரு கட்சிக்கு ஒரு தனி நபரிடம் இருந்து அல்லது ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.20,000 க்கு மேலாக நிதி வந்தால் அது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றாலும் அது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டியதில்லை என்று இந்த சட்டத்தில் 2018-ஆம் ஆண்டு ஒரு திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. அது தொடர்பான ஒரு வழக்கில் தான் ஒன்றிய அரசு தற்போது பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஒரு கட்சி நிதியை பெறும் பொழுது அந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி வந்துள்ளது என்று மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும். அந்தக் குறிப்பிட்ட கட்சிக்கு யார் எவ்வளவு நிதியை கொடுத்தார்கள் என்று எந்தவித  விபரங்களையும்  மக்கள் அறிந்து கொள்ள முடியாது என்ற நிலை தான் தற்போது உள்ளது.

எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த முதலாளிகள் நிதி கொடுத்திருக்கிறார்கள் என்பது மக்களுக்கு  தெரிந்தால்  என்ன பிரச்சினை?  ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சி எந்தெந்த கார்ப்பரேட் முதலாளிகளிடம் இருந்து நிதி பெற்றிருக்கிறது என்று மக்களுக்கு தெரிந்துள்ள நிலையில் ஆட்சியில் உள்ள கட்சி நிதி கொடுத்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏதாவது சாதகமாக செயல்பட்டால் அது மக்களுக்கு பட்டவர்த்தனமாக தெரிந்து விடும். வாங்கிய காசுக்கு  (அந்த முதலாளி போட்ட எலும்புத் துண்டிற்கு) இந்த கட்சி வாலாட்டுகிறது; அந்த முதலாளிகளுக்கு மக்களின் பணத்தை வாரி இறைக்கிறது; சலுகைகள் அளிக்கிறது என்று மக்கள் தெளிவாக தெரிந்து கொண்டு அது குறித்து விமர்சிப்பார்கள் என்ற நிலை தான் இருந்தது.

இதைத் தவிர்ப்பதற்காக கணக்கில் வராத பணத்தை (அதாவது கருப்பு பணத்தை) முதலாளிகள் நன்கொடையாக தருவதும் அதை அரசியல் கட்சிகள் இரகசியமாகப் பெறுவதும்  தனிக்கதையாக இருந்தது. தேர்தல் பத்திரங்களும் கருப்பு பணத்தை பதுக்குவதற்கான இடமாக தான் உள்ளன என்று தற்போது பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதையும் படியுங்கள்: லாட்டரி மார்ட்டின் பாஜகவுக்கு100 கோடி நிதி! எதற்காக?

பல்லாயிரக்கணக்கான கோடிகளை ரகசியமாக வைத்திருக்க  சிரமப்பட வேண்டும் என்பதால் தானோ என்னவோ  அந்த நடைமுறையை மாற்றிவிட   பாஜக விரும்பியது. எனவே கருப்பு பணத்தை ரகசியமாக பெற்று கொள்வதை, அதாவது, சட்டவிரோதமான செயலை சட்டபூர்வமானதாக பாஜகவினர் மாற்றி விட்டனர். அதன் வெளிப்பாடு தான் தேர்தல்  பத்திரங்கள் என்ற வடிவில் அரசியல் கட்சிகள் நிதி பெறலாம் என்ற நடைமுறை.

இன்று வரை பாஜக தேர்தல்  பத்திரங்கள் மூலமாக ரூ.5,271.97 கோடி நிதி திரட்டியுள்ளது. இது காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக திரட்டிய மொத்த நிதியை விட மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. இதிலிருந்து தேர்தல் நிதிப் பத்திரங்களில் பாஜக ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்: RSS-க்கு நிதி திரட்டும் அமெரிக்க RSS ஆன HSS சும், IDRFம்!

இப்படி, பெரும் முதலாளிகளிடமிருந்து பெறும் நிதிக்காகத்தான் (அதாவது எலும்பு துண்டிற்காகத்தான்) 25 லட்சம் கோடி ரூபாய் கடனை முதலாளிகள் திருப்பி செலுத்த வேண்டியதில்லை என்று பாஜக அரசு தள்ளுபடி செய்துவிட்டது. இதற்காகத்தான் இந்திய அரசின் துறைமுகங்கள், விமான நிறுவனங்கள் போன்றவற்றை அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடி அரசு விற்றுக் கொண்டிருக்கிறது. மீதமுள்ள ரயில்வே, என்எல்சி ,பிஎஸ்என்எல், எல்ஐசி போன்றவற்றையும் விற்பதற்கு பாசிச பாஜக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.

சுருக்கமாக கூறினால் பார…தீய…ஜனதா … கட்சி  கார்ப்பரேட்  முதலாளிகளிடம்  வாங்கிய  காசிற்காக இந்தியாவையே கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறது;இனி வாங்கப் போகும் காசிற்காக மீதம் உள்ளதையும் விற்றுவிடத் துடித்துக்
கொண்டிருக்கிறது. இனியும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கலாமா?

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here