கடந்த 2021 ஜனவரியில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு நஷ்டத்தை காரணம் காட்டி விசாகபட்டிணம் ஸ்டீல் தொழிற்சாலையில் அரசு முதலீட்டை 100 சதவீதம் விலக்கி கொள்ள ஒப்புதல் அளித்ததிலிருந்து 800 நாட்களாக தொழிலாளர்களும், தொழிற்சங்களும் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே கடந்த மார்ச் 27ம் தேதி விசாகபட்டிணம் ஸ்டீல் தொழிற்சாலையின் கார்ப்பரேட் தலைமை நிறுவனமான, Rashtriya Ispat Nigam Limited (RINL) இரண்டு நீண்ட கால பிரச்சினைகளாக கூறப்படும் மூலப்பொருள் பற்றாக்குறை மற்றும் மூலதன பற்றாக்குறைகளை போக்கும் வகையில் ஸ்டீல் அல்லது ஸ்டீல் மூலப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டமைத்து தொழில் நடத்த தயாராக உள்ளதாக மற்ற தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தனியார் நிறுவனங்களை விசாகப்பட்டிணம் ஸ்டீல் தொழிற்சாலையில் கூட்டு சேர அனுமதிக்கும் முடிவு நிறுவனத்தின் நலன்களை பாதிக்கும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிலிருந்து இந்த பிரச்சினை மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
வைசாக் ஸ்டீலின் தனித்துவத்தை ஒன்றிய அரசு ஒழிக்கப் பார்க்கிறது. “இது திட்டமிட்ட செயல். தனியார் ஆதரவு இல்லாமல் ஆலை இனி இயங்க முடியாது என்பதைக் காட்டுவதே நோக்கமாகத் தெரிகிறது.” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மனித உரிமைகள் மன்றத்தின் ஆந்திரப் பிரதேச மாநிலக் குழுவின் துணைத் தலைவர் எம். சரத்.
30,000 க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் காண்டிராக்ட் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள், விசாகப்பட்டிணம் ஸ்டீல் ஆலையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக உறுதியுடன் போராடுகின்றனர்.
முன்னதாக, மார்ச் 7 அன்று, பொதுத்துறை மற்றும் பொது சேவைகளுக்கான மக்கள் ஆணையம் (PCPSPS) ஒரு அறிக்கையை வெளியிட்டது, “RNIL-லை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவு, பொதுவெளியில் வெளியிடப்பட்ட அதன் சொந்த கொள்கைக்கு எதிரானது” என்று கூறியது. PCPSPS என்பது புகழ்பெற்ற கல்வியாளர்கள், முன்னாள் நிர்வாகிகள், தொழிற்சங்கங்கள், மக்கள் இயக்கங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் ஒரு மன்றமாகும்.
இதுவரை 29 தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் விசாகப்பட்டிணம் எஃகு ஆலையில் முதலீடு செய்வதற்கு தங்கள் ஆர்வத்தை காட்டியுள்ளன. RINL குழு விண்ணப்பங்களை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள்:
எஃகு ஆலைத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் தேசிய பொதுத்துறை நிறுவனங்களை ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (சிஐடியு) இணைந்த ஸ்டீல் ஆலை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் யு.ராமசாமி Frontline-இடம் பேசுகையில், “ விரைவில் டெண்டர் விடப்பட இருக்கிறது இதில் இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் அல்லது தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் போன்ற நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று தங்களது விருப்பத்தை தெரிவித்தார்.
சிஐடியு, இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐஎன்டியுசி) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) ஆகியவை விசாக் ஸ்டீல் நிறுவனத்தில் மிக முக்கியமான தொழிற்சங்கங்களாகும். 20 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் எஃகு ஆலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை இந்த மூன்றுடன் ஒத்துப்போகின்றன. விசாகப்பட்டிணம் ஸ்டீலைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சியின் விளைவாக விசாகப்பட்டிணம் உருக்கு ஆலை பரிரக்ஷனா போராட்டக் கமிட்டி – என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது – இது தனியார்மயமாக்கல் முயற்சிக்கு எதிராக செயல்படும் தொழிற்சங்கங்களின் அதிகாரப்பூர்வ கூட்டு ஆகும்.
“அரசின் ஆதரவாலும் முதலீட்டாலும் விசாகப்பட்டிணம் உருக்காலையை புதுப்பிக்க முடியும் எனும் போது, தனியார்மயமாக்குவது பகுத்தறிவற்றது. நாங்கள் அதற்கு முற்றிலும் எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம்,” என்று பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (பிஎம்எஸ்) கே. ஸ்ரீனிவாஸ் ராவ் கூறினார். ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற பிஎம்எஸ் கூட இந்த தனியார்மயத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.
ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் (JSPL) மற்றும் ஜிண்டால் தலைமையிலான JSW குழுமத்தின் விண்ணப்பங்களை நிராகரிக்குமாறு RNIL நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் ஃப்ரண்ட்லைனிடம் பேசுகையில் கூறினர். ஜிண்டால் நிறுவனங்களை RINL க்கு நேரடி போட்டியாளராக அவர்கள் கருதுகின்றனர். ஐஎன்டியுசி தலைவர் நீருகொண்ட ராமச்சந்திர ராவின் கருத்துப்படி ஜிண்டாலின் சந்தை நலன்கள் விசாக் ஸ்டீலின் நீண்ட கால இலக்குகளுக்கு உகந்தவை அல்ல.
தொழிற்சங்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் RINL இல் புதிய பணிநியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகளையும் நிர்வாகம் களைய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். “பணிஓய்வு காரணமாக ஏற்பட்ட காலியிடங்கள் இருந்தபோதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை” என்று ராமசாமி கூறினார்.
அலட்சியத்தால் உண்டான பாதிப்பு:
விசாகப்பட்டிணம் எஃகு ஆலைக்கு ஒரு சரித்திர வரலாறு உண்டு. விசாகப்பட்டிணத்தில் உருக்கு ஆலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆந்திராவில் 1966ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலம் தழுவிய போராட்டங்களில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பிறகு 25 ஆண்டுகள் கழித்து 1991 இல் ஆலை உற்பத்தியைத் தொடங்கியது. ஆலை செயல்படத் தொடங்கிய நேரத்தில், கட்டுமானச் செலவு அதிகரித்துவிட்டது, விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப முழுச் செலவையும் அரசு செலுத்தவில்லை “எஃகு ஆலையின் திறன்கள் உற்பத்திக்கு வருவதற்கு முன்பே குறைந்துவிட்டன” என்று சரத் குறிப்பிட்டார். “உற்பத்தி திறன் மற்றும் மொத்த நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை இரண்டும் குறைக்கப்பட்டன.” என்றும் சரத் கூறினார்.
மத்திய அரசின் அக்கறையின்மை மற்றும் பல தசாப்தங்களாக ஆலையின் திறனை சேதப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்ட கொள்கை முடிவுகள் இருந்தபோதிலும், ஆலை தேவைகளுக்கென பிரத்யேக இரும்பு தாது சுரங்கங்களை ஒதுக்காது புறக்கணித்தாலும், ஆலை இதுநாள் வரை நீடித்து நிற்கிறது. வைசாக் ஸ்டீல் இன்று ஆண்டுக்கு 7.3 மில்லியன் டன்கள் திரவ எஃகு உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது, ஆனால் தனக்கான பிரத்யேக சுரங்கத்தைப் பெறுவதற்கான அதன் முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆரம்பத்திலிருந்தே இரும்புத் தாது ஒதுக்கீடு செய்யப்படாத ஒரே மத்திய பொதுத்துறை நிறுவனமாக RINL உள்ளது. “நாங்கள் அதிக விலைக்கு மூலப்பொருட்களை வாங்குவதால், எங்கள் லாப வரம்புகள் குறைந்துவிட்டன” என்று ராமச்சந்திர ராவ் கூறினார்.
பிப்ரவரியில் உருக்கு அமைச்சகத்தின் செயலாளர் நாகேந்திர நாத் சின்ஹாவுக்கு எழுதிய கடிதத்தில், இ.ஏ.எஸ். சர்மா, இந்திய அரசாங்கத்தின் முன்னாள் செயலாளர், “RINL க்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் ஒரு வெள்ளித் தட்டில் பிரத்யேக சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்குவது துரதிர்ஷ்டவசமானது,”என்று கூறினார். வைசாக் ஸ்டீலின் பிரச்சனைகள் குறித்து கடந்த இரண்டு வருடங்களாக உருக்கு அமைச்சகத்திற்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு ஆலையை தாரை வார்க்க ஏதுவாக RNIL ஐ பலவீனப்படுத்த. பல்வேறு மத்திய ஏஜென்சிகள் வேண்டுமென்றே, ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபடுவதை, என்னால் உணர முடிகிறது” என்று சர்மா கூறுகிறார்.
2021 ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் ஆலையை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, கிட்டத்தட்ட அனைத்து பிராந்திய கட்சிகளும், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஒன்றுபட்டு நிற்கின்றன.
ஆந்திராவில் ஆளும் யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள் உருக்கு ஆலைக்கு ஆதரவாக இருப்பதாக உறுதியளித்துள்ளன. மிக சமீபத்தில், பாரத ராஷ்டிர சமிதி (BRS) குழுவில் இணைந்தது.
சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL) இல் தெலுங்கானா 51 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது, மீதமுள்ள 49 சதவீதத்தை இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது. சமீபத்தில் SCCL-ன் குழு ஒன்று விசாகபட்டிணம் உருக்காலைக்கு சென்று பார்வையிட்டுள்ளது. ஏலத்தில் தெலுங்கானா பங்கேற்கலாம் என்ற ஊகத்தை தூண்டியிருந்தது.
இருப்பினும், எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், SCCL விலகி இருந்தது. மாநிலம் பிரிக்கப்பட்ட பத்தாண்டு காலத்திற்கு பிறகு, ஆந்திரப் பிரதேச மக்களைக் கவர தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் BRS-க்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று மக்கள் கருதியிருந்தனர்.
“அரசியல் ரீதியாக வசதியான விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன, மேலும் தொழிற்சங்கங்களின் சில பிரிவுகள் ஆரம்பத்தில் தள்ளாடின. SCCL ஏலம் எடுக்கக்கூடும் என்ற உயர்தர நாடகத்தில் மூன்று நாட்கள் வீணடிக்கப்பட்டன,சிறிது காலத்திற்கு, தொழிற்சங்கங்களின் ஒற்றுமையில் பிளவு ஏற்பட்டது.” என்று ஒரு தொழிற்சங்கத் தலைவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்! முதல் பலி தொழிலாளிதான்! சமீபத்திய உதாரணம்- Air India!
முன்னாள் சிபிஐ இணை இயக்குநரும், ஆர்வமுள்ள அரசியல்வாதியுமான V.V. லக்ஷ்மிநாராயணா, வைசாக் ஸ்டீல் நிறுவனத்திற்கான கிரவுட் ஃபண்ட் (Crowd funding) செயல்பாட்டு மூலதனத்திற்கு Eoi ஐ சமர்ப்பித்து ஏலத்தில் பங்கேற்க அனுமதி கோரியுள்ளார்.
தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பேசும்போது அரசியல் கட்சிகள் மீது தாங்கள் எந்த நம்பிக்கையும் வைப்பதில்லை என்று கூறினார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வைசாக் ஸ்டீல் அரசியல் கட்சிகளிடமிருந்து ஒரு ஐக்கிய முன்னணியை விரும்புகிறது, இது பத்திரிகை சந்திப்புகள் மற்றும் உறுதிமொழிகளுக்கு அப்பாற்பட்டது. “பெரும்பாலான கட்சிகள் தனியார்மயமாக்கலின் வியாபாரிகள் என்பதை ஒருவர் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று ஒரு தலைவர் சுட்டிக்காட்டினார்,”
Eoi (Expression of interest) காலக்கெடுவின் முடிவில் (ஏப்ரல் 20), ஒரு சில ஊடக அறிக்கைகளில், மத்திய எஃகு இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே, “விசாகப்பட்டிணம் எஃகு ஆலையை இந்த நேரத்தில் தனியார்மயமாக்குவதை விட அதை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகக் கூறினார். ”.
இதைத் தொடர்ந்து, BRS தலைவர்கள் “ஒன்றிய அரசின் யு-டர்ன்” முடிவின் மூலம் வெற்றி பெற்றதாகக் கூறினர். இருப்பினும், எஃகு அமைச்சகம் ஏப்ரல் 14 அன்று “RINL-ன் பங்கு விலக்கல் செயல்முறையில் எந்த முடக்கமும் இல்லை” என்று தெளிவுபடுத்தியதால் கொண்டாட்டம் குறுகிய காலத்திற்கு நீடித்தது.
எனினும், தொழிற்சங்கங்கள் போராட்டங்களை கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக உள்ளன. விசாகப்பட்டிணத்தில் 20,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இந்தியாவின் முதல் கரையோர எஃகு ஆலையான விசாக் ஸ்டீல் கட்டப்பட்டது. நிலத்தின் சந்தை விலை ரூ.1.5 லட்சம் கோடி என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். “பொது நோக்கத்திற்காக” கையகப்படுத்தப்பட்ட நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு மாற்றக்கூடாது என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
மேலும், விசாகப்பட்டினத்தின் வளர்ச்சிக்கு ஆலையின் பங்களிப்பு மறுக்க முடியாத அளவுக்கு நன்கு நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆலை தற்போது 15,000 நிரந்தர தொழிலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் 20,000 ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. பராமரிப்புப் பணிகளுக்காக 5,000க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணியமர்த்தப்படுவதாக சரத் கூறினார். ஒரு லட்சம் குடும்பங்கள் நேரடி வேலைவாய்ப்பு, துணைத் தொழில்கள் மற்றும் தொழிற்சாலையை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் என பலனடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ராமசாமியின் கூற்றுப்படி, தொழிலாளர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஆலை ஒரு பொதுத்துறை நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது ஒரு காரணம். உதாரணமாக, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது சமூகத்தை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது, என்றார். வைசாக் ஸ்டீலின் மற்ற பங்களிப்புகளையும் அவர் நினைவு கூர்ந்தார். “இழப்புகள் இருந்தபோதிலும், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு உறுதிப்பாடுகள் தக்கவைக்கப்பட்டுள்ளன,” என்று ராமசாமி கூறினார், சமீபத்திய காலங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு பணிகளைப் பட்டியலிட்டார்.
PCPSPS அறிக்கையின்படி, RINL ஐ தனியார்மயமாக்குவதற்கான மையத்தின் “குழப்பமான” அணுகுமுறை மற்றும் “கேள்விக்குரிய முன்னேற்றங்கள்” பொது நல தாக்கங்களைக் கொண்டுள்ளன. இது “பொது நம்பிக்கையை மீறுவதாகும்” என்று மன்றம் வலியுறுத்தியது. RINL இன் நிதி மற்றும் நிர்வாகத்தை புதுப்பிக்கவும் மற்றும் பிரத்யேக இரும்பு தாது சுரங்கத்தை ஒதுக்கவும் மையம் பரிந்துரைத்துள்ளது.
மேலும், பட்ஜெட் ஆதரவின் மூலம் கடனை திரும்பப் பெறுதல், தனியார் நிறுவனங்களுக்கு “வரம்பற்ற மானியங்களை” நீக்குதல் மற்றும் இரும்பு தாதுவிற்கு பதிலாக மதிப்பு கூட்டப்பட்ட எஃகு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தும் எஃகு அமைச்சகத்தின் இரும்பு தாது ஏற்றுமதி கொள்கையின் மறுஆய்வு ஆகியவை மன்றத்தின் பரிந்துரையில்அடங்கும்.
சாத்தியமான விருப்பங்களும் பொதுமக்களின் ஆதரவும் உள்ளன, ஆனால் ஒன்றிய அரசால் மட்டுமே விசாகப்பட்டிணம் ஸ்டீல் புதுப்பிக்கப்பட்டு தனியார்மயமாக்கல் முயற்சியை ரத்து செய்ய முடியும்.
பேதங்கள் கடந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் மத்திய அரசை பணிய வைக்க முடியும் என்பதற்கு ஜல்லிக்கட்டு போராட்டமும், விவசாயிகள் போராட்டமும் நம் முன் இருக்கும் சமீபத்திய உதாரணங்கள். எனினும் அரசு மீண்டும் மீண்டும் விடாது பெருமுதலாளிகளின் நலனுக்காக மக்களின் நலனை பலி கொடுக்கும் செயல்களை செயல்படுத்த தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே தான் இருக்கும். ஏனெனில் இது முதலாளிகளுக்கான அரசு. இதிலிருந்து உழைக்கும் மக்கள் விடுபடவேண்டும் என்றால் சோசலிசத்தை நோக்கி சமூகத்தை நகர்த்த வேண்டும்.
மொழியாக்கம்: தாமோதரன்