ருநாள் மாலை 4 மணிஇருக்கும். அந்த முச்சந்தியில் பள்ளிச் சிறுவர்கள் சீருடையோடு,  வயது  7 முதல்11 வயதுக்குள் இருக்கும், சாலையைக் கடக்க மொத்தம்  15பேர் காத்திருந்தார்கள்.

டாக்டர்வீடு  போகவேண்டிய நான் அவசரமே இல்லாமல் சிறுவர்களோடு நின்றிருந்தேன். நீண்டநேரம் அவர்கள் காத்திருக்கிறார்கள். அதில் 7வயதுப் பிள்ளைகள் இரண்டு பொறுமை கடந்து சண்டை போட்டன. அதில் ஒன்று பெண்குழந்தை. தன்வயிற்றைக் காட்டி அழுதது. அதன் ரெட்டைச் சடையில் ஒன்று அவிழ்ந்துகலைந்து ரிப்பனோடு தொங்கியது. கண்களில் நீர்பெருகி தடம் போட்டிருந்தது.

அந்த முச்சந்தி ஒருபூங்காவைச்சுற்றி ஓடும் இரண்டாம் சுற்றுவட்டச்  சாலையில் வருகிறது. இரு சக்கர, நான்கு சக்கர  வண்டிகள் வரிசைகட்டிப்  போய்க்கொண்டேயிருந்தன. இடையே நேரம்தப்பிய ஊபர், பெரியசைஸ் வண்டிகளும்  சத்தமும் நாற்றமுமாய் விரைந்தன.

காத்திருக்கும்பிள்ளைகளோ, நானோ கொஞ்சம் அவசரப்பட்டாலும் விபத்து நடந்துவிடக்கூடிய இடம்தான். வயதில்சற்று மூத்தபெண் அழும்குழந்தையைத் தேற்றினாள்.கொஞ்சம் திகைப்பைநீக்கி  நொடியில் வேகம் வரவழைத்துக்கொண்ட நான் ஓடிவரும் வாகனங்கள்மத்தியில் போய் மலைஉச்சி ஏசுபோலக் கைவீசி மறித்து நின்றுகொண்டேன்.இதையும் மீறி எதுவுமே நடக்காததுபோல இருசக்கர இளசுகள்  உர்உர்ரென்று மிரட்டியபடி தாண்டிச்சென்றன.

அங்கிருந்தபடியே பிள்ளைகள் வரிசையிடம் சத்தமாய்ச் சொன்னேன் : “ஒருத்தர் கைய ஒருத்தர் நல்லாப்பிடிங்க. சின்னப் பிள்ளைகள  நடுவுலநிறுத்துங்க,   அப்படியே நீளமா கயிறுபிடிச்சாப்பல நகர்ந்து வாங்க. தைரியமா வாங்க .”பிள்ளைவரிசை என்குரலில் அக்கறையும் உத்தரவும் உணர்ந்து வண்டிகளைமறித்து முன்னேவந்தது. இங்கேஅங்கே உதவிக்கு ஆட்கள் வந்தார்கள். சாலையின் எதிர்ப்பக்கம்  பத்திரமாய் வந்ததும் பிள்ளைகள்  உற்சாகமாய்க் காச்சுமூச்சென்று குருவிகள் போலக் கத்தினார்கள். என்னை வழியனுப்பினார்கள்.

டாக்டர்வீட்டில்  என்டோக்கன் வரிசையில் எங்கோ கடைசிக்குப்  போய்விட்டது.  பருவம்தப்பி  பனிக்குளிர், சளி, காய்ச்சல்,   துரத்தும் இருமல் என்று ஏராளமான நோயாளிகள். பெஞ்சில்உட்கார்ந்தேன்.  உடல்வலிமறந்து பலகேள்விகள் குடைந்தன. சாலைவிதிகள் பற்றி யோசித்தேன். போலீஸ்பீட் போட்டஇடம் தவிர உள்பகுதி முச்சந்திகளில் , வளைவுகளில் பிரச்சினைதான். நடந்துசெல்லும் என்னைப் போன்ற” கால்நடைகள் ”  எப்படிச் சமாளிப்பது ?  ஏற்கெனவே அனேக இடங்களில்   ” கால்நடைப் ” பாதசாரிகளுக்கு நடை பாதை கிடையாது. சமூகத்தில் 5% கனவான்களுக்கு மட்டுமே அந்தச் சொகுசும், ஸ்மார்ட்  சிட்டியும்  எல்லாமும் ;  தவிர, வண்டிகளே நிறையவந்து ஜாம் ஆனாலும் சந்திப்புகளில் ஒழுங்குபடுத்த வேண்டாமா?

முன்பெல்லாம் ‘வேகம் 10’, ‘வேகம் 30’ , ‘அருகே வேகத்தடை,  பார்த்துச்செல்க’ , ‘அருகே மருத்துவமனை,  ஹார்ன்வேண்டாம்’, ‘அருகேபள்ளிகள்,  வேகம்குறை’, ‘ஆட்கள்வேலை’,   right turn ‘   left turn” போன்ற வட்டத்தகடுகள் வழிகாட்டும்.  மெயின்ஏரியா  சந்திப்புக்களில் போலீஸ் உதவி என்று  ஒரு பேருக்கு சிக்னலோடு   ஒட்டிக் கொண்டு இருப்பதென்னவோ உண்மை. ஆனால் பல  ஆயிரக்கணக்கில்  உள்ள  உள்பகுதிகளில் தகடும்இல்லை,   ஒருவெங்காயமும் இல்லை. அவையும் ஓஎம்ஆர் அகலப்பாதை  போல இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு சீறும் சிறுத்தைகளைக் கட்டுப் படுத்த  விதித் தகடுகள் தேவை  அல்லவா ? எங்கேபோயிற்று அத்தனையும் ?

 

நடந்துகொண்டே இருக்கிறேன்,  சாலைகடக்கையில்  இடமிருந்தோ வலமிருந்தோ சட்டென இருசக்கரவாகனமோ, சரக்குவேனோ உரசிக்கொண்டு போகும். பலரும்  தடுமாறிப் போவார்கள். நானும்  வசைமாரிகளில் பழகிவிட்டேன்.   பாசிசம் கெட்ட வார்த்தையே என்று மக்கள் புரிந்துகொள்ளும்போது  நிச்சயமாக  ஃபாசிஸ்டு என்று உரக்கத் திட்டுவேன்; ஜெர்மனியில் அதை வசவாகவே மக்கள் பயன்படுத்துகிறார்கள். எதையும் மதிக்காமல்! ‘போடா’ என்று சொல்லிவிட்டுப் பறக்கும்  வாகனங்களை என்னசெய்துவிட முடியும் ?

இங்கேகொடுத்த  விவரங்கள் போல  மேலும் நூறுவிசயம்  அனுபவமாக,  சிறுவர்கள், நடைப்பயிற்சி மன்னர்கள் , தலைச்சுமையுடன் பெண்கள்,  சிறுவியாபாரிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நடுரோட்டில் தவிப்பதை உங்களால் பார்க்காமல் இருக்கவே முடியாது;  நீங்களேகூட பார்க்காததுபோல வேறுபக்கம் தலைதிருப்பி நழுவியிருக்கலாம்.  பாவம், உங்களுக்கு வேறு  அவசர சோலியிருந்திருக்கலாம் !

பிரதான சாலைவிபத்துக்கள் தவிர, உள்பகுதிகளில் சமூகம் அன்றாடம் பார்த்தும் உடனே மறந்துபோகிற பல ஆயிரம் விபத்துகள் – சாலை வழிகாட்டும் தகடுகள், ஒழுங்குமுறைஇல்லாததால்தான் நடக்கின்றன. ஏன், எங்கேபோயிற்று அறிவிப்புப்பலகைகள் ?

 

இரண்டுநாள்முன்பு வெளியூர் போய்த் திரும்பும்போதுதான் கவனித்தேன். காணாமல்போன அத்தனைப் பறவைகளும், மன்னிக்கவும், பலகை — தகடுகளும்  நெடுஞ்சாலைகளுக்கும் மெட்ரோவேலை நடக்கும்இடங்களுக்கும் ஓடிவிட்டன. உள்பகுதிகளிலிருந்து பறித்து இங்கெல்லாம் கொண்டுவரச்சொல்லி மனுசன் யாராவது சொல்வானா, சொல்லிவிட்டதாகத் தெரிகிறதே !

தவிர,  மெட்ரோவேலை நடக்குமிடங்களில் ஒழுங்கு படுத்த   வழிகாட்டும் தகடு மட்டுமல்லாமல் , அந்த இடங்களிலேயே ஏராளம் ஆட்கள் தேவை ; அதுவும் உள்ளூர் மொழி தெரிந்த  வேலையாட்கள்  ஆயிரக்கணக்கில் தேவை. அப்படிப் போடாததால்  எப்போதுமே டிராஃபிக் ஜாம்கள், மோதல்  சண்டைகள்,  ரத்த விபத்துகள் நடக்கின்றன.  ஒப்பந்தக்காரர்களுக்கோ  லாபம் பார்ப்பது மட்டுமே முக்கியம்.

கட்டுப்பாடு  போட்டு நிர்வகிக்கவே செய்யாமல்,  எப்போதுமே  உள்ளூரில் சாகசவித்தை காட்டும் இளைஞர்களை மட்டுமே  பழிசொல்லிவிட முடியுமா ?  பிறந்து வளர்ந்ததே உருப்படாமல் போவதற்காகவா நம் பிள்ளைகள்  வளர்கிறார்கள் ?  உண்மை எங்கே இருக்கிறது,  தேடுங்கள் தெரியும்.

ஆயிரக் கணக்கில்  விளம்பரங்கள் அவர்களைத் துரத்துகின்றன. இதோ பாருங்கள்:  “ஆளப்பிறந்தவன்டா நீ, உன்கனவுபைக்கை வாங்கிவிட்டாயா ?” வட்டியேவாங்காமல் தவணையில் வண்டிகளைத் தள்ளிவிட மூலைக்குமூலை தூண்டிலில் பிடிக்க கடைகள் காத்திருக்கின்றன.

வாங்கிவிட்டாயா, அப்புறம்என்ன,

“சாகசங்களில்புகுந்துவிளையாடு ! ”

“உனது கால்களுக்கு நடுவே / பரவசத்தைஅடக்கிவை !” போன்றவிளம்பரம் அவர்களுக்காகத்தான்.  “பார்ட்டிஎல்லாம் முடித்து சாலையில்இறங்கு, வீட்டில் முடங்காதே என்றுவரும் விளம்பரமும் அவர்களுக்காகத்தான்.

“நேற்றுவரலாறு, நாளைஒருபுதிர், ஹீரோபோல இன்றே சாலையில் இறங்கு, பற, வண்டி உன்னை ஓட்டட்டும் !”. இப்படிவேறுவிளம்பரம் சுண்டிஇழுப்பதெல்லாம் இளைஞர்களைத்தான். “ஓட்டு, ஊர்சுற்று, உனக்கென்று  எல்லைகள் ( Territory )  போட்டுக்கொள் ” என்பதும் ஒரு விளம்பரம். நாயா, காலைத்தூக்கி எல்லைக்கோடு போட ? மன்னர்களா, சண்டை போட்டு எல்லைகளை விரிவாக்க ?

சிலபேர்பயமுறுத்தலாம், ” பார்த்துப்போ “,  ” பார்த்துப்போ ” என்பார்கள். அதையெல்லாம் தூக்கி வீசுடா என்பதற்காகவே கார்ப்பரேட் விற்பனையாளர்கள் ஒருவிளம்பரம் போடுகிறார்கள். இதை ‘ மந்திரம் ‘ போல வை என்கிறார்கள் . இதோ  அது , ” வேகம்வேகம்மேலேவேகம் / மரணபீதியைவிரட்டும்வேகம் ! ”

உண்மை இப்படி  எல்லாம் நம்மைச் சுற்றிக் கும்மியடிக்கும்போது , வண்டிகள்வாங்கி வீதிகளில்  வரும் இளைஞர்கள் மீதே  மொத்தத் தவறும்  என்று பிடிவாதம் பிடிப்பது என்ன வகை நியாயம் ?

இதையும் படியுங்கள்: ரயில் : மாணவர்களின் சாகசங்களும் பலிகளும்!

நம்ஊர்களில்  ஒழுங்கு கற்றுத்தரத் தொடங்கியபோது  போக்குவரத்துத்துறை விளம்பரத்தகடுகள்  போட்டன; ஓட்டுநர் தேர்வுக்குக்கூட  பயிற்சி வகுப்புகளில்  சொல்லித்தந்தார்கள்; இப்போது கூட ஆர்டிஓ ( RTO )பொறுப்பை எடுத்துவிட்டு  தனியார் பயிற்சிப் பள்ளிகளே காசுவாங்கி “சாலைகளைச்சமாளிப்பதுஎப்படி ? ” என்றுகற்றுக்கொடுத்து ஆன்லைனில் லைசன்ஸ் வழங்கிவிடலாம் என்று சட்டமும் திருத்திவிட  முயலப்பட்டது, ஏதோ ‘நேரம்’ சரிப்பட்டு  வராததால்  தள்ளிப் போயிருக்கிறது ;  வருங்காலத்தில் கார்ப்பரேட் போட்டி நிகழ்ச்சி நிரலில்  ஒரே ஒரு ஆள் முன்னுக்கு வந்து  கதவைத் திறக்கையில்  அதுவும் வெள்ளோட்டத்துக்கு  வந்துவிடலாம்.

எப்படிஇந்தமாற்றங்கள் வந்தன ? ஆட்சியாளர்கள் தாங்களாகவே மாற்றிவிட்டார்களோ ?

அல்ல; துருவி துருவி விசாரித்துப்பார்த்தால் , வாகனக்  கம்பெனிகளின் சந்தைகளே பல விசயங்களையும்   தீர்மானிக்கிறது  என்று  தெரியவருகிறது – உங்கள் உயிரின்விலைஉட்பட !

கார்ப்பரேட்முதலாளித்துவ எசமானர்களின் போட்டிச்சந்தையே விதிகளைத்  தீர்மானிக்கும். அதுவே தீர்மானிக்கும் கடவுள். அதுவே கார்ப்பரேட் ஜீக்களின் பகவத்கீதை !

  •  பீட்டர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here