இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த மோடி தலைமையிலான பாஜக அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதுடன், அங்கு நில உரிமை குறித்தான சட்டங்களையும் மாற்றியது. வெளியில் இருந்து நடக்கும் குடியேற்ற ஆக்கிரமிப்புகளால் காஷ்மீரத்து மக்கள் வெகுவாக பாதிக்கப் படுகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில் யூசுப் கான் என்பவருக்கு ஜம்மு காஷ்மீரின் வருவாய்த் துறையிடம் இருந்து ஒரு நோட்டீஸ் வந்தது. அவரது வீட்டின் முன் உள்ள கடையின் ஒரு பகுதி அரசு நிலத்தில் உள்ளதாகவும், எனவே அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. அரசு நிலத்தை ‘ஆக்கிரமித்து’ உள்ளவர்களை அப்புறப்படுத்த ஜம்மு காஷ்மீர் அரசு எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இது.
கடந்த ஜனவரி 9 அன்று ஜம்மு காஷ்மீரின் நிர்வாகம், யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து துணை ஆணையர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் அரசு நிலத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் ஜனவரி இறுதிக்குள் (மிகக்குறுகிய அவகாசத்தில்) அகற்றப்பட்டதை உத்தரவாதம் செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தது. இருப்பினும் இதுவரை கான் மீது பெரிய அளவிலான பாதக நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. அவரது கடை அகற்றப்படாத நிலையில்தான் உள்ளது. ஆனால் எந்த நேரமும் இடிக்கப்படலாம் என்ற அச்சத்தில் தான் அவர் உள்ளார். “எனது வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படாமல் எப்படி இருக்க முடியும்” என்கிறார் ஸ்ரீநகரின் புறநகரில் வசிக்கும் அவர். (கான் தனது உண்மைப் பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால் அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்றும் தீவிரமான அரசின் செயலானது, மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும், அதே வேளையில் எதிர்ப்புகளையும் தூண்டியுள்ளது. இப்போது தற்காலிகமாக கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தி உள்ளதாகவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைந்த அறிக்கையை நிர்வாகம் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் கவர்னர் மனோஜ் சின்ஹா, சாமானிய ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என உறுதி அளித்தார். ஆனால் அந்த “ஏழைகள்” யார் என்பதற்கான அளவுகோல்களை வகுத்து, முறையான உத்தரவு எதுவும் வெளியிடப்படவில்லை. எனவேதான் கான் போன்ற சிறு வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அவர் 4 மர்லா (0.025 ஏக்கர்) அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக கூறியுள்ளனர். இப்பொழுது அரசின் இத்தகைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முறைப்படுத்தல் கொள்கையை அரசு வகுக்கும் என கான் நம்பினார்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த சட்டங்களின்படி அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள், அதற்கு ஈடாக இரு மடங்கு இடத்தை அரசுக்கு வழங்கலாம். அதாவது கான் ஆக்கிரமித்ததாக சொல்லப்படும் 0.025 ஏக்கருக்கு ஈடாக 0.050 ஏக்கர் நிலத்தை அரசுக்கு அளிக்கலாம். கடந்த காலங்களில் இப்படித்தான் நடந்துள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். காஷ்மீரத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் 2020-ல் இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படாமல் இருந்திருந்தால் கான் போன்றவர்கள் இப்போது பதட்டம் அடைந்திருக்க மாட்டார்கள்.
மாற்றப்பட்ட சட்டங்கள்!
காஷ்மீரத்துக்கான சிறப்பு சட்ட பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ஆகியவை நீக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குப் பின், அக்டோபர் 2020-ல் மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக அங்கு நிலச் சட்டங்கள் தொடர்பான இரண்டு முக்கிய உத்தரவுகள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு இந்தியக் குடிமகனும் நிலம் வாங்க முடியும். 2019 க்கு முன்பு காஷ்மீரத்து குடிமக்கள் தவிர வேறு யாரும் அங்கு நிலம் வாங்க முடியாத நிலை இருந்தது.
ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரைப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டாடப்பட்ட அதே வேளையில், அதன் வரலாற்று சிறப்புமிக்க நிலச் சீர்திருத்த சட்டம் உட்பட 12 மாநில சட்டங்களை இன்றைய மோடி அரசு ரத்து செய்தது. மேலும் புதிதாக 14 சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அப்படி திருத்தப்பட்ட சட்டங்களில், அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பானவையும் அடங்கும். ஜம்மு காஷ்மீர் விவசாய சீர்திருத்த சட்டம் 1976 மற்றும் நில வருவாய் சட்டம் 1996 ஆகியவற்றிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் நிலச் சட்டங்கள் குறித்து நன்கறிந்த வழக்கறிஞர் ஒருவர், “ஏற்கனவே இருந்த விதிகள் மேய்ச்சல் நிலம் அல்லது அரசு நிலத்தில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளை திறம்பட வழங்கி இருந்தது” என்றார். (இவரும் தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என கோரிக்கை வைத்தார்). அப்படி அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக சொல்லப்பட்டவர்கள், அதிகாரிகளின் நோட்டீசைப் பெற்ற பிறகு இரண்டு வழிகளை தேர்வு செய்ய முடியும். ஒன்று, அத்தகைய நிலத்தில் உள்ள கட்டமைப்பை அகற்றுவது அல்லது தனக்கு சொந்தமான நிலத்திலிருந்து பொருத்தமான பகுதியையோ, அதே கிராமத்தில் வேறொரு இடத்தை வாங்கியோ அதை அரசுக்கு வழங்கலாம்.
ஆனால் அக்டோபர் 2020-ல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு இப்படி இருந்த சட்டப்பிரிவுக்கு மாற்றாக புதிய விதியைப் புகுத்தியது. அதன்படி மேலே கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் முற்றிலுமாக மறுக்கப்பட்டன.
பெயர் கூற விரும்பாத வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், “முந்தைய சட்டப்பிரிவுகள் இருந்திருந்தால் இப்போது எடுக்கப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளின் போது அத்தகைய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலம் மாற்ற விண்ணப்பங்கள் குவிந்திருக்கும்” என்றார்.
நிலப் பரிமாற்றம் சாத்தியம் இல்லாமல் போனது!
தற்போதைய ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு முன்கூட்டியே இந்தத் திருத்தங்களுக்கான நடைமுறை அங்கு தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் நிலச் சட்ட திருத்தங்களை தொடர்ந்து, அரசு நிலத்தை ஆக்ரமித்த ஒருவர், தனது சொந்த நிலத்தை மாற்றாக வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தது. வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வசிக்கும் மெஹராஜ் உதின் மாலிக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பரிஸ்வானி கிராமத்தில் உள்ள மேய்ச்சல் நிலத்தின் ஒரு பகுதிக்கு மாற்றாக அதே அளவு நிலத்தை வழங்குவதாக உறுதியளித்தார். அவர் 2017ல் இந்த பரிமாற்றத்திற்காக விண்ணப்பித்தார். வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் மாலிக்கின் நிலம் பரிமாற்றத்திற்குத் தகுதியானதுதான் என்று அறிவித்தார். ஆனாலும் அது நிறைவேற்றப் படாததால் மாலிக் உயர் நீதிமன்றத்தை நாடினார்.
மார்ச் 2020-ல் உயர்நீதிமன்றம், துணை ஆணையரை மூன்று மாதத்திற்குள் இந்த விசயத்தில் முடிவெடுக்குமாறு உத்தரவிட்டது. இந்தச் சூழலில்தான் பரிவர்த்தனை தொடர்பான விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே துணை ஆணையருக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் கூறியது. இதை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுதான் அதிர்ச்சியளிக்கும் விசயம். மாலிக்கின் சட்ட ஆலோசகர் குல்சார் அகமது பட் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
அதில்,”எனது வாடிக்கையாளர் பரிமாற்றத்திற்கு விண்ணப்பித்த போது அது சட்டத்துக்கு உட்பட்டு இருந்தது. அனைத்து சம்பிரதாயங்களும் பூர்த்தியடைந்து அவரது கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் இப்போது திருத்தப்பட்ட சட்டம் பின்னோக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது” என முறையிட்டுள்ளார்.
வரலாற்றை மறுக்கும் மோடி அரசு!
ஜம்மு காஷ்மீரில் மன்னர்களும், அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களும் பல ஆண்டுகளாக மக்களை நிலத்தில் பயிரிட வலியுறுத்தி உள்ளனர். 1846 – ல் டோக்ரா வம்சத்தை சேர்ந்த மகாராஜா குலாப் சிங், ஆங்கிலேயர்களுக்கு 75 லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்ட பிறகு, அவருக்கு மிகப் பெரிய நிலப்பகுதிக்கான உரிமை வழங்கப்பட்டது. “அமிர்தசரஸ் ஒப்பந்தம்” என்று பிரபலமாக அறியப்படும் இதன் மூலம்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உருவாக வழிவகை செய்யப்பட்டது என்று வரலாற்றை நினைவு கூறுகிறார் அந்த வழக்கறிஞர்.
மேலும் மகாராஜாவும் அவரது கூட்டத்தினரும் மட்டுமே நிர்வகிக்க முடியாத அளவுக்கு நிலம் மிகப்பெரிய அளவில் இருந்ததால், சாதாரண நிலமற்ற மக்கள் பரந்த அளவிலான நிலங்களில் பயிரிட ஊக்குவிக்கப் பட்டனர். இத்தகைய அரசு நிலத்தில் விவசாயிகளுக்கு சில உரிமைகளும் வழங்கப்பட்டன. அரசுக்கு வருவாய் ஈட்டுவது முதன்மையான நோக்கமாக இருந்த போதிலும், நிலமற்ற விவசாயிகளும் இதனால் பயனடைந்தனர் என்கிறார் அவர்.
1975 – ல் ஸ்ரீநகரின் லால் சவுக்கில் தேசிய மாநாட்டு கட்சியின் ஷேக் அப்துல்லா உரையாற்றிய போது, 1947 க்கு பிறகு, தான் மேற்கொண்ட “உழவர்களுக்கு நிலம்” எனும் சீர்திருத்தம் நல்ல முன்னுதாரணமாக இருந்தது என்றும் இதன்படி ஜாகிர்தாரி என்ற முறை ஒழிக்கப்பட்டு நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதன் பிறகு எஞ்சிய உபரி நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு, பல பத்தாண்டுகளாக அந்த நிலத்தில் உழைத்து வந்த நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு மறுபங்கீடு செய்யப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
வரலாறு முழுவதும் ஜம்மு காஷ்மீரில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்களிடம் அரசாங்கங்கள் இணக்கமாக இருந்தன, மட்டுமல்லாமல் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அதில் பயிரிடவும் ஊக்குவித்துள்ளன என்று கூறுகிறார் அந்த வழக்கறிஞர். 1948 – ல் அப்துல்லா அரசாங்கம் அறிவித்த “உணவுப் பயிர்களை அதிகமாக விளைவிப்பீர்” எனும் திட்டத்தை எடுத்துக் கொண்டால், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் அரசு நிலத்தில் பயிரிட ஊக்குவிக்கப்பட்டனர். அந்த கொள்கையின் கீழ் ஒருவருக்கு கிடைத்த நிலம் இன்னும் அவர்கள் வசம்தான் உள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகளும் இது குறித்து இத்தனை ஆண்டுகளாக ஏதும் சொல்லவில்லை. எனில் இப்போது அவர்கள் அனைவரும் அத்துமீறி ஆக்கிரமித்தவர்கள் ஆவார்களா? என நியாயமான கேள்வியை அவர் எழுப்புகிறார்.
மேலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து அரசு நிலவுடமையாளர்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் என அழைப்பது சிக்கலானது. இங்கு சிலர் மன்னர் மூலம் தங்களுக்கு கிடைத்த நிலத்தை, தொடர்ந்து பல தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் அந்த நிலத்தை நம்பியுள்ளது. அவர்களை எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என எப்படி அழைக்க முடியும். இப்படி முத்திரை குத்துவதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நில உரிமையின் வரலாற்றையே மறுக்கிறது. அதேபோல முன்னாள் ஆட்சியாளர்கள் மக்களுக்கு ஆதரவாக வழங்கிய நில உரிமையையும் மறுக்கிறது. இந்த வரலாற்றைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையையும் முன்னெடுப்பதற்கு முன்பு அரசு நிலத்தை ஆக்ரமித்ததாக சொல்லப் படுபவர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை அரசு வழங்க வேண்டும் என்கிறார் மற்றொரு சட்ட நிபுணர்.
அங்கிருக்கும் வருவாய் சட்டங்கள் குறித்து நன்கறிந்த வேறொரு வழக்கறிஞர் கூறுகையில், இங்கு எதுவும் தெளிவாக நடக்கவில்லை. இதனால் தான் மக்கள் மத்தியில் பெரும் பீதியும், அச்சமும் நிலவுகிறது. மேலும் அரசாங்கம், மக்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். இயற்கை நீதி மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அவர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை வழங்குகிறது. நாம் ஒன்றும் தாலிபன்களின் கீழ் வாழவில்லை என்கிறார் காட்டமாக.
“காஷ்மீரத்து சிங்கம்” என அழைக்கப்படும் ஷேக் அப்துல்லா கொண்டு வந்த அனைத்து நிலச் சீர்திருத்த சட்டங்களையும் தூக்கி எறிந்து விட்டது மோடி அரசு. காஷ்மீரத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே காரணத்தால், அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதோடு மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதிக்கிறது பாசிச மோடி – அமித்ஷா அடாவடி கும்பல்.
அங்குள்ளப் பலரும் பேசவே அஞ்சுகின்றனர் அல்லது அடையாளத்தை மறைக்கின்றனர். ஒட்டு மொத்த காஷ்மீரத்தையும் சிறைச்சாலையைப் போலத்தான் வைத்துள்ளது பாசிச மோடி கும்பல். மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம்தான் இவர்களுக்குப் பாடம் புகட்ட முடியும்.
செய்தி ஆதாரம்:
https://scroll.in/article/1044085/how-evictions-in-kashmir-are-linked-to-the-loss-of-special-status
தமிழில் ஆக்கம்: குரு