“கற்றது தமிழ்”, “தங்கமீன்கள்” போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு பாணியை கட்டமைத்த இயக்குநர் ராம் அதிலிருந்து வெளியே வந்து வேறொரு பாணியில் எழுதி,இயக்கியுள்ள படம் “பறந்து போ”.
படத்தைப் பற்றிய நேர்காணல்களும், விளம்பரங்களும் அதையே முன்னிறுத்தின. மற்ற இயக்குநர்களின் பார்வையிலும் இது இயக்குனர் ராமின் வேறொரு பாணியிலான படம் என்றே பாராட்டப்பட்டது. அது உண்மையும்கூட.
படம் பெரிதும் தொய்வின்றியே செல்கிறது. கதைக்களத்திற்கேற்ப நடிகர்களின் நடிப்பும் பொருத்தமான இசையும் படத்தைத் தாங்கிச் செல்கிறது. முக்கியமாக, சிறுவன் மிதுல் ரியனின் நடிப்பு.
இயக்குனர் ராம் தன் கதைகளில் சாமானிய மக்கள் வாழ்வில் தனியார்மயம், உலகமயமாக்கம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பேசக் கூடியவர். அவரின் “தங்கமீன்கள்” கல்வியில் தனியார்மயம் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் குறித்துப் பேசக்கூடிய படம்.
தற்போது அவர் இயக்கி வெளிவந்துள்ள “பறந்து போ” படம் – அப்பா- 8 வயது மகன் உறவை மையமாகக் கொண்டுள்ளதால் தங்கமீன்கள் படத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நம்மை தள்ளுகிறது.
தங்கமீன்கள் – மந்தமானவராக கருதப்படும் 8 வயது மகளுக்கும், அவளுக்காக மலைகளைக் கடந்து சென்று நாய்குட்டியை வாங்கி வரும் அப்பாவுக்குமான கதை. மேலோட்டமாக பார்க்கையில் இந்த கதையின் ஓட்டத்தின் பின்னணியில் தனியார் கல்வி கொள்ளை குறித்த ஒரு விமர்சனப் பார்வை முன்வைக்கப்பட்டது. கட்டடமே முடிக்காத பள்ளிக்கூடம் மாணவர்களிடம் கல்விக்கொள்ளை அடிப்பதாக காட்டியது அதன் குறியீடு. தொடக்கத்தில், தனியார் பள்ளியை நம்பும் கதாநாயகன் அரசுப் பள்ளியை நோக்கி தன் பிள்ளையைக் கொண்டு சேர்ப்பான்.
“பறந்து போ” படத்தில் எட்டு வயது மகனுக்கு 3.25 லட்சம் கட்டிப் படிக்க வைக்கும் நாயகன். தன் பிள்ளை அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பணக்காரர்களும் படிப்பது குறித்து பெருமை கொள்கிறான். விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஆன்லைன் கிளாஸ் சேர்த்து விடுகிறான். ஆனால், பைக்குக்கு EMI கட்டாமல் ஓடி ஒளிகிறான்.
இதை சினிமாவாக பார்க்கும் போது லாஜிக் இல்லையே என்று கேள்வி எழுகிறது. ஆனால், இதைவிட கொடூரமானது. மாதம் முப்பதாயிரத்துக்குக் கீழ் வருமானம் உள்ளவர்கூட லட்சங்களில் செலவழித்து பிள்ளைகளைப் படிக்க வைப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
கதையின் நாயகனால் தன் தொழிலை நடத்த கடை ஒன்றைக்கூட அமைக்க முடியவில்லை. வெவ்வேறு மதத்தவரைச் சேர்ந்த நாயகன்- நாயகி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது அவர்களுக்கு வாழ்க்கையின் பாட்டை அதிகரிக்க செய்துள்ளது.
படிக்க:
🔰 சினிமா: பாசிசத்தின் கீழ் கலைஞன் சோதிக்கப்படுகிறான் !
🔰 இளைய தலைமுறையை காட்சி போதைக்குள் ஆழ்த்தும் சினிமாக்கள்!
நாயகனின் பெற்றோர்கள் வீட்டிற்கு இனிவர மாட்டேன் எனச் சொல்லும் சிறுவன். அது ஏன் என்று சொல்ல மாட்டான். ஆனால் அவன் கேட்கும் கேள்வி நமக்கு புரிய வைக்கும்.
அதே சமயம், அப்பாவின் பால்ய கால க்ரஷ் வீட்டுக்குச் செல்லும் சிறுவன், தான் அங்கேயே தங்கிவிட விரும்புவதாக சொல்கிறான். அதற்கு காரணமும் கூறுகிறான். நியாயமான காரணமாக தோன்றினும் அது போல் வாழ்வது சாத்தியமில்லை. அவை இயக்குநர் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள காட்சிப் பிழை என்பதை எதார்த்தம் உணர்த்தும். ஆனால், ஒரு பிரச்சினையைத் தோற்றுவித்துவிடுகிறார் குழந்தை வளர்ப்பு என்பது தனிப்பட்ட பெற்றோர்கள் தொடர்பானது என்ற பிம்பத்தை உருவாக்கிவிடுகிறார்.
மேலும், ஏறத்தாழ ஒரே பிரச்சினைகளை சந்திக்கும் தங்கமீன்கள் நாயகனும், பறந்து போ நாயகனும் பிரச்சினைகளை வெவ்வேறு விதமாக அணுகுபவர்களாக உள்ளனர். தங்கமீன்கள் நாயகன் கோபமாக எதிர்கொண்ட அதே சூழலை பறந்து போ நாயகன் மெல்லிய புன்னகையுடன் கடந்து செல்கிறான். அது பறந்து போ நாயகனாக நடித்துள்ள சிவா பொருத்திப் போவதாகவும் உள்ளது.
படத்தின் ஒரு காட்சியில் காசாவில் நடக்கும் படுகொலைகளை செய்தியாக பார்ப்பான் நாயகன். அந்த காசாவில் உள்ள குழந்தைகள் எப்படி பறந்து போக முடியும் என்ற கேள்வி நம்மை அழுத்துகிறது. இயக்குனரும் அதைத் திட்டமிட்டே வைத்தார் என எடுத்துக் கொள்ள செய்கிறது படத்தில் சில காட்சிகளில் வரும் மைனா கதாபாத்திரம்.
படம் இன்றைய வாழ்க்கையின் பிரச்சினைகளைக் காட்டுகிறது. படத்தின் நோக்கமும் வாழ்க்கையின் துன்ப துயரங்களுக்கு இடையே ஒரு இடைவெளி எடுத்து பறந்து போ, மகன்/ மகளோடு உறையாடு என்பதுதான்.
வாழ்க்கையின் துயர்களை சோகமாகத் தான் சொல்ல வேண்டும் என்றில்லை. சார்லி சாப்ளின் மாடர்ன் டைம்ஸ் நகைச்சுவையாகத் தான் இருக்கும். ஆனால், உள்ளூற முதலாளித்துவத்தின் மீதான விமர்சனம் இருக்கும். இயக்குனர் ராம் அவர்களின் “தங்கமீன்கள்” அழுகாச்சி காவியமில்லையே. பறந்து போ திரைப்படத்தில் அதற்கான களத்தை அமைத்துக் கொண்டாலும் படத்தில் இந்த சமூக கட்டமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்று சிலவற்றை நாமே எடுத்துக் கொண்டாலும் அவை ஆழமாக பதியவில்லை.
விளைவு – வாழ்க்கையின் ஓட்டத்தில் இடைவெளியை உருவாக்கிக் கொண்டு பறந்து போக சொன்ன ராமின் இத்திரைப்படம் இறக்கைகளைக் கட்டிப்போட்டவர்களை நோக்கி கேள்வியெழுப்ப நம்மைத் தள்ளவில்லை. இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள் என்கிறது.
நல்ல பொழுதுபோக்கிற்கான படமாக சுருங்கிப்போனது “பறந்து போ”.
- திருமுருகன்
பொதுவாக திரைப்படங்களின் மீது எனக்கு தனிப்பட்ட நாட்டம் அதிகமாக இருப்பதில்லை. அந்தக் காலத்தில் அதாவது 60-களின் இறுதியில் வெளியான ‘துலாபாரம்’ என்ற படத்தை எனது இளம் பருவத்தில் பார்த்துவிட்டே முதன்முதலாக கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.
ஓர் ஆண்டுக்கு முன்பாக ஒரு நண்பருடன் விடுதலை-2 திரைப்படம் பார்த்தேன். அப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது மட்டுமல்ல ; அது ஒரு புரட்சிகரமான படமாகவும் என் மனதிற்குப் பட்டது. எனவே அப்ப படம் தொடர்பாக இரண்டு பகுதிகளாக விமர்சனம் எழுதினேன். இதுதான் நான் திரைப்படத்திற்கென எழுதிய முதல் விமர்சனம்.
தற்போது ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தின் மீது தோழர் திருமுருகன் எழுதியுள்ள நுட்பமான விமர்சனம் பாராட்டத் தகுந்தது. பல இயக்குனர்களிடம் முற்போக்கான படம் எடுப்பதாக கருதிக் கொண்டு பல விடயங்களில் ஓட்டை விட்டு விடுகிறார்கள் என்பதே இவ்விமர்சனத்தின் சாரமாக புரிந்து கொள்ள முடிகிறது. திரைப்படம் என்பது இச்சமூக அமைப்பில் நாம் விரும்புவது போன்ற தன்மையில் எல்லா அம்சங்களிலும் அடங்கி விட முடியாது என்பது எதார்த்தம் தான். ஏனெனில் ஆளும் வர்க்கம், அதனைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம், தணிக்கத்துறை அவ்விதப் படங்களை அனுமதிப்பதும் இல்லை. ஆனாலும் விடுதலை-1 & 2 ஆகிய படங்களும் வரத்தானே செய்கின்றன. அந்தக் காலத்தில் தெலுங்கில் வரப்பெற்ற ‘மாபூமி’ திரைப்படம் எல்லாம் அன்றைய கால இளைஞர்களை புரட்சிகர மனப்பான்மையை நோக்கி சுண்டி இழுக்கத் தான் செய்தன. அவ்வாறு இருக்கும் பொழுது விமர்சனம் எழுதிய தோழர் குறிப்பிட்டதை போல இயக்குனர் ராம் ‘பறந்து போ’ திரைப்படத்தை பொழுதுபோக்கிற்கு என்று அல்லாமல் சமூக அவலங்களை பட்டவர்த்தனமாக தோலுரித்து விழிப்புணர்ச்சி அடையத்தக்க வகையில் எடுத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் விமர்சனம் அமையப்பெற்று உள்ளதாகவே கருதுகிறேன். தோழருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!