
2022 டிசம்பர் மாதம் இறுதியில் புதுக்கோட்டை மாவட்டம், முத்துக்காடு பஞ்சாயத்தில் உள்ள தலித் மக்கள் வாழும் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது இந்திய சமூகத்தில் நிலவும் சாதி-தீண்டாமையின் மற்றுமொரு கோர வடிவமாகவே பார்க்கப்பட்டது. அதனை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் மக்கள் அதிகாரம், விசிக, திராவிடர் இயக்கங்கள் உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.
தமிழ்நாடு பெரியார் மண், சமூகநீதி மண் என விதந்தோதப்பட்டாலும் தலித் மக்கள் மீதான தீண்டாமை வன்கொடுமைகள், ஆணவப் படுகொலைகள் இந்தியாவெங்கும் நடைபெறுவதைப் போன்று தமிழ்நாட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் நடந்தேறியே வருகிறது. திண்ணியத்தில் தலித் வாயில் மலம் திணிக்கப்பட்டது கடந்த காலத்தில் நெஞ்சை உலுக்கியதைப் போல் சமீபத்தில் சாதிய வன்கொடுமையின் மிகப்பெரும் அடையாளமாக மாறிப் போனது வேங்கைவயல்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி தற்போது புதுக்கோட்டை மாவட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் பட்டியல் இன பிரிவைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் தான் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளியாக்குவதா என்று விசிக, சிபிஐ(எம்), பாஜக எனப் பலரும் சிபிஐக்கு வழக்கை மாற்றக் கோரியுள்ளனர். அந்த மூவரையும் குற்றவாளிகள் எனக் கூறியிருக்கும் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை சிபிசிஐடியால் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞர்கள் குற்றவாளிகளா? இல்லையா? என்பதைவிட இந்த வழக்கு விசாரணையிலும் இந்த பிரச்சினையை அணுகிய விதத்திலும் திமுக அரசும் காவல்துறையும் மோசமான முறையில் நடந்துகொண்டு உள்ளது என்பதே கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன..
படிக்க:
இந்த வழக்கு விசாரணைக்கு இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது மட்டுமல்ல, இந்த வழக்குக்கு அடிப்படையான புகார்தாரருக்கு வழக்கு விசாரணை தகவல்களை தெரிவிக்காமல் இருந்தது, தொடக்கத்திலிருந்தே பட்டியல் இன மக்களை குற்றவாளிகளாக அனுமானித்தே விசாரித்தது, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்தையா செய்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் முறையாக விசாரிக்காதது எனப் பல்வேறு பிரச்சினைகள் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. காவல்துறை விசாரணையைக் கொண்டு சென்ற விதம் அந்த ஊரில் நடக்கும் சாதி-தீண்டாமையைக் கணக்கில் கொள்ளவில்லை
குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக விசாரிக்க சென்ற அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வேங்கைவயல் உள்ள முட்டுக்காடு பஞ்சாயத்தில் சாதி-தீண்டாமை தலைவிரித்தாடியது வெளிப்படையாக தெரிந்தது. முட்டுக்காடு பஞ்சாயத்தில் முக்குலத்தோர், முத்தரையர், பறையர் ஆகிய மூன்று பிரிவு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள இறையூர் கிராமத்தில் அய்யனார் கோயிலுக்குள் பட்டியல் இன மக்கள் நுழைவது தடுக்கப்பட்டு வந்ததும், அந்த கிராமத்தில் இரட்டை குவளை(டம்ளர்) முறை பழக்கத்தில் இருந்ததும் அம்பலமானது.
அதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை காரணமாக பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் அழைத்தச் செல்லப்பட்டனர். அதை எதிர்த்து சாமியாடியபடி இழிவாக பேசிய ஆதிக்க சாதி பெண் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த பஞ்சாயத்தின் தலைவர் பத்மா. பெண்கள் பஞ்சாயத்துத் தலைவராக உள்ள பல கிராமங்களில் நடப்பதுபோலவே அங்கும் நிழல் பஞ்சாயத்து தலைவராக அவரது கணவர் முத்தையாவே உள்ளார். இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர், அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர், முக்குலத்தோர் சாதியைச் சேர்ந்தவர். இவருக்கும் பட்டியல் இன மக்களுக்கும் மோதல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் இருந்தே காவல்துறை இவரை சந்தேகத்துக்குரியவராக பார்க்கவில்லை. பலரும் விமர்சித்த பிறகே பெயரளவிற்கு விசாரிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பட்டியல் இன மக்கள் மீதே குறிப்பாக சில இளைஞர்கள் மீதே டி.என்.ஏ பரிசோதனை, நாட்கணக்கில் விசாரணை, மிரட்டல் ஆகியவை நடத்தப்பட்டது. குற்றத்தை ஒப்புக் கொள்ள சொல்லி சிபிசிஐடி காவல் துறை மிரட்டியதாக ஓராண்டுக்கு முன்பே ஊடகங்களுக்கு அந்த இளைஞர்கள் பேட்டியளித்துள்ளனர்.
படிக்க:
♦ தமிழகத்தில் அதிகரித்து வரும் பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறை! முடிவு கட்டு!
இரண்டாண்டுகள் விசாரணைக்குப் பிறகு, பட்டியல் இன இளைஞர்கள் மூவர் மீது குற்றஞ்சாட்டியது மட்டுமல்லாமல், ஆதாரங்கள் என்று அவர்களின் ஆடியோவையும், காணொளி, புகைப்படங்களையும் ஊடகங்கள் மூலம் கசியவிட்டுள்ளது சிபிசிஐடி காவல் துறை. இப்படி எந்தவித நம்பகத்தன்மையும் கொடுக்காத தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடே விசிக, சிபிஐ (எம்) உள்ளிட்ட ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகள் கூட CBI விசாரணைக் கேட்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
இணைய திமுகவினர் இந்த குற்றப்பத்திரிகை குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு எள்ளல் தொனியில் பதிலளிப்பதும் நிச்சயமாக குற்றச்சாட்டப்பட்ட மூவர்தான் மலம் கலந்த குற்றவாளிகள் என தீர்ப்பு எழுதி முடிப்பதுமாக இருக்கின்றனர். அந்த இளைஞர்கள் பஞ்சாயத்து தலைவரை பழிவாங்க இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் பரப்புகின்றனர். ஆனால், அது உண்மையல்ல என்று அந்த ஊர் மக்கள் தங்கள் பேட்டிகளில் எனத் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் மற்றும் தமிழ்நாடு அரசும், நீதிமன்றமும் இந்த பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது என்கிறார்கள். திமுக அரசு மற்றும் காவல்துறையின் நேர்மையற்ற அணுகுமுறையே இந்த விசாரணையை நம்பத்தகாததாக மாற்றி வருகிறது. அது அரசியல் ரீதியாக கேள்விகளை எழுப்பவே செய்யும்.
இந்த பிரச்சினையில் குற்றச்சாட்டப்பட்ட இளைஞர்கள் அந்த குடிநீர்த் தொட்டியில் காலை 7.30 அளவில் ஏறியதாக குறிப்பிடுகிறது. அவர்கள்தான் அப்போது மலத்தை கலந்தனர் என்று கூறுகிறது. அதேசமயம் அந்த இளைஞர்களும், பேட்டியளிக்கும் ஊர் மக்கள் சிலரும் அந்த இளைஞர்கள் மேலே ஏறிய போது கீழே ஊர் மக்கள் பலரும் இருந்ததாக கூறுகின்றனர். இதன் உண்மைத்தன்மை சரிபார்ப்பதற்கான விவரங்களை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலே இந்த இளைஞர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? எனத் தெரிந்துவிடும்.
ஆனால், அதிகார வர்க்கத்தின் குறிப்பாக, தமிழ்நாடு காவல்துறை ஆதிக்க சாதி சார்பு மனநிலையும், சாதிய வன்கொடுமை பிரச்சினைகளில் அவர்களது நடவடிக்கைகளும் குற்றப்பத்திரிகை விவரங்களுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்ற அனுபவத்தைக் கொடுப்பதாக இல்லை. மாறாக, காவல்துறையின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் மனநிலையையே ஏற்ப்படுத்தி உள்ளது.

ஆளும் திமுக அரசும் தன் ஆட்சி காலத்தில் நடந்த மிகப்பெரும் சாதிய வன்கொடுமை பிரச்சினையாக காணப்படும் ஒன்றைத் தீர்க்க போதிய கவனம் செலுத்தவில்லை. மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டுள்ளது. இது இந்த வழக்கு விசாரணை குறித்த நம்பிக்கையின்மையையே உருவாக்குகிறது.
நேற்று வேங்கைவயலில் முரளிராஜாவின் பாட்டி இறப்பு நிகழ்வுக்குச் சென்ற உறவினர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரை காவல்துறை தடுத்துள்ளது கண்டனத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது. இந்த வேங்கைவயல் வழக்கை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் கையாண்ட விதத்திற்கு எடுத்துக் காட்டு.
ஆணவப் படுகொலை, தலித் மக்கள் மீதான வன்கொடுமை ஆகியவற்றை தடுக்க தமிழ்நாடு அரசின் இத்தகைய செயல்பாடு எந்த விதத்திலும் உதவாது. ஆட்சி மாறினாலும் ஆதிக்க சாதி கொண்ட அதிகார வர்க்கம் மாறுவதில்லை என்று சாமளிப்பது ஏற்புடையதல்ல. பாசிசத்தை வீழ்த்தும் மாற்று என்பது மக்களுக்கு ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாகவும், மக்களை சாதி, மத, பாலின, வர்க்க அடிப்படையிலான ஒடுக்குமுறைகளில் இருந்து காப்பாற்றுவதாகவும் இருக்க வேண்டும். அதற்கு இந்த அரசு கட்டமைப்பைத் தூக்கியெறிந்து ஜனநாயகக் கூட்டரசை உருவாக்க நாம் அணிதிரள வேண்டும்.
- திருமுருகன்