ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அவுட்! ஆர்.எஸ்.எஸ் இன் அடுத்த அதிரடி!

“இந்த போலி ஜனநாயகத்தின் மீதான பிரமை, தேசவெறி, தேச முன்னேற்றம் குறித்த தப்பெண்ணங்கள், சாதி-மதவெறி, ஆணாதிக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆளும் வர்க்கக் கருத்துகளால் மக்கள் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆத்மியில் இருந்து 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

ம் ஆத்மி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி கடந்த பத்தாண்டுகளாக டெல்லியில் ஆட்சியை நடத்தி வருகிறது என்பது மட்டுமின்றி சென்ற தேர்தலில் பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்தது.

பாசிச பாஜக முன்வைக்கின்ற கொள்கைகளை எதிர்த்து போராடுவதில் அக்கறை காட்டுவதை விட ஊழல் ஒழிப்பு என்பதை முன்னிறுத்தி களமாடுகின்ற, ஊழல் என்பதை முன்வைத்து ஏமாற்றிய கட்சியின் மீது, அதன் சொந்தக் கட்சி எம்எல்ஏக்களே ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து திடீரென்று விலகி உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள சூழலில் ஆம் ஆத்மியில் இருந்து 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். த்ரிலோக்புரி எம்எல்ஏ ரோகித், கஸ்தூர்பா நகர் எம்எல்ஏ மதன் லால், ஜனக்புரி எம்எல்ஏ ராஜேஷ் ரிஷி, பாலம் எம்எல்ஏ பாவ்னா கவுர் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் ஏழு பேருக்குமே ஆம் ஆத்மி கட்சி தலைமையினால் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மீது வைத்திருந்த நம்பிக்கை இழந்துவிட்டதாகப் பாலம் எம்எல்ஏ பாவ்னா கவுர், கஸ்தூர்பா நகர் எம்எல்ஏ மதன் லால் ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். கெஜ்ரிவால் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்..

வழக்கம் போல தனது எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை அந்த கட்சியில் இருந்து விலகச் செய்வது கொழுத்த விலை கொடுத்து வாங்குவது இதன் மூலம் அந்த கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்வது என்ற திருவிளையாடலை பாசிச பாஜக கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செய்து வருகிறது என்பதன் தொடர்ச்சி தான் டெல்லியில் தற்போது நடந்துள்ள திடீர் எம்எல்ஏ விலகல் நிகழ்வாகும்.

ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் ட்ரோஜன் குதிரைகளான ஆம் ஆத்மி முதல் தமிழகத்தில் நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் வரை பயன்படுத்தி பல்வேறு சித்து விளையாட்டுகள் மூலம் பாசிச பாஜகவிற்கு எதிரான கருத்து கொண்டவர்களை ஒன்றிணைக்கின்றனர்.

பாஜகவை எதிர்ப்பதாக நாடகமாடிக்கொண்டு அவர்களின் மீது அவர்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கை மீது குறிப்பாக கார்ப்பரேட் ஆதரவு மற்றும் பார்ப்பன பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளை கூர்மையாக எதிர்க்காமல் தங்களையும் பாஜக எதிர்ப்பு அரசியல் கட்சி என்று கூறிக்கொண்டு இப்படிப்பட்ட கட்சிகள் செயல்படுகின்றன.

யார் இந்த ஆம் ஆத்மி.

“இந்த போலி ஜனநாயகத்தின் மீதான பிரமை, தேசவெறி, தேச முன்னேற்றம் குறித்த தப்பெண்ணங்கள், சாதி-மதவெறி, ஆணாதிக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆளும் வர்க்கக் கருத்துகளால் மக்கள் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பதே ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் கடமை. ஆனால், மக்களிடம் பணிவாக நடந்து கொள்ளும் தோரணையில், “மக்களின் சொல்படி” ஆளும் வர்க்கக் கருத்துகளை வழிமொழிகிறது ஆம் ஆத்மி கட்சி.

படிக்க: 

 டெல்லி பாஜகவுக்கு வேலை செய்யும் தேர்தல் ஆணையம்!

♦. மூச்சுத் திணறுகிறது டெல்லி; முதற்காரணம் முதலாளித்துவம்!

வர்க்க அரசியல், மக்கள் அதிகாரம், அமைப்பு முறையை (system) கேள்விக்குள்ளாக்குதல் என்பன போன்ற கம்யூனிச அரசியல் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக, பயங்கரமானதொரு யுத்தத்தை தொடங்கவிருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே, இந்த அரசமைப்புக்கு சலாம் வரிசை எடுத்துக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசு கட்சிகளின் ஆளும் வர்க்க அரசியல் கருத்துகளை வழிமொழிந்து கொண்டே, சாதி-மதம் என்ற சட்டகத்திற்குள் சுழன்று கொண்டிருக்கும் தேர்தல் அரசியலை, அதிலிருந்து நகர்த்திச் சென்று, தண்ணீர், மின்சாரம், சுகாதாரம் என்று மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நோக்கித் திருப்பி சாதனை புரிந்திருப்பதாகவும், இதுதான் வர்க்க அரசியல் என்றும் ஆம் ஆத்மி சித்தரித்துக் கொள்கிறது.

உழைக்கும் வர்க்கத்தின் அன்றாடப் பிரச்சினைகளைப் பேசுவதும் அவற்றில் சிலவற்றை தீர்த்துக் கொடுப்பதுமே வர்க்க அரசியல் அல்ல. (இதை ஆம் ஆத்மியை விட பலநூறு மடங்கு அதிகமாக போலி கம்யூனிஸ்டு கட்சியினர் செய்திருக்கிறார்கள்.) இந்த அரசமைப்பு ஆளும் வர்க்கத்தின் நலனுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்கு எதிராகவும் எந்தெந்த கட்சிகள், கொள்கைகள், நிறுவனங்கள் வழியாக எப்படியெல்லாம் செயல்படுகிறது என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தி, தனது வர்க்கத்தின் நலனுக்காகப் போராடும் ஓர்மையை மக்களுக்கு ஏற்படுத்துவதே வர்க்க அரசியல். சாதி ஒழிப்பு, இந்து மதவெறி எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, தேசிய இன, மொழி உரிமைகளை நிலைநாட்டுதல் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியதுதான் வர்க்க அரசியல்.

தனது வர்க்க நலன் எது என்பதைப் புரிந்து கொள்ளாத, தனது எதிரிகள் யார் என்பதை அடையாளம் காணவியலாத, அதற்கான போராட்டத்தில் ஈடுபடாத மக்களின் கையில் அதிகாரம் கிடைக்குமாயினும், அது ஏற்கெனவே உள்ள சமூக ஆதிக்க சக்திகளின் நலனுக்குத்தான் பணிவிடை செய்யும். ஆம் ஆத்மி முன்வைக்கும் ‘மக்கள் அதிகாரம்’ எனப்படுவதும் மொகல்லா சபாக்களும் அத்தகைய போராட்டத்தின் ஊடாக உருவானவை அல்ல, அப்படிப் போராடுவதும் அவற்றின் நோக்கமல்ல.

மாறாக, அவை இந்த அரசமைப்புக்கு எதிரான போராட்டம் எழும்பாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வால்வுகள். மக்களிடம் மதிப்பிழந்து போன இந்த அரசமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், பஞ்சாயத்து மட்டம் வரை தங்களது நேரடித் தலையீட்டை உத்திரவாதப் படுத்திக் கொள்வதற்காகவும், வேர்மட்ட ஜனநாயகம் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிறுவனங்கள்.

இந்திய அரசியல் சட்டத்தின் 73 மற்றும் 74-வது சட்ட திருத்தங்கள் கூறுகின்ற “அதிகாரப் பரவலாக்கம்” என்ற இட்லி மாவைத்தான் கேஜ்ரிவால் “ஸ்வராஜ்” “மொகல்லா சபா” என்ற பெயர்களில் ஊத்தப்பமாகவும், தோசையாகவும் ஊற்றியிருக்கிறார் என்றும், இதற்காக கேஜ்ரிவாலை “நகர்ப்புற நக்சல்” என்றெல்லாம் சித்தரிப்பது அபாண்டமானதென்றும் மோடி ஆதரவு அதிதீவிர வலதுசாரிப் பத்திரிகையான ஸ்வராஜ்யா சுட்டிக் காட்டுகிறது” என்று ஆம் ஆத்மி கட்சியின் உண்மையான கொள்கையை 2015 ஆம் ஆண்டு எமது இணையதளத்திலும், புதிய ஜனநாயகத்திலும் வெளியிட்டிருந்தோம்.

இப்படிப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆளும் வர்க்கத்தின் அங்கமான குறிப்பாக பாசிச பாஜகவின் பினாமி கும்பலான ஆம் ஆத்மி தற்காலிகமாக சில பின்னடைவுகளை சந்தித்தாலும் பாஜகவிற்கு எப்போதெல்லாம் நெருக்கடி உண்டாகிறதோ அப்போது இப்படிப்பட்ட ஆபத்பாந்தவர்கள் தோன்றி அதன் கொள்கைகளை வேறு வழியில் அமல்படுத்துவார்கள் என்பது தான் நிலைமையாகும்.

ஆனால் தற்போது அந்தக் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் வெளி வருவது போன்றவை கட்சிக்குள் சில முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும் பாஜகவிற்கு எதிராக யாரும் தனித்து நிற்க முடியாது என்ற கருத்தை உருவாக்குவதற்கே பயன்படுகிறது என்பதால் இத்தகைய கருத்துகளை எதிர்த்து முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும்.

  • கணேசன்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here