மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெற்ற உலக ஆடியோ விஷூவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES) 2025 மே 1 ஆம் தேதி தொடங்கி மே 4 ஆம்தேதி வரை நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடியும், தமிழகத்திலிருந்து சினிமா நடிகரான ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
”பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போரில் பிரதமர் மோடிக்கு நாங்கள் துணை நிற்கிறோம். இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் மதிப்பு இன்றைக்கு 28 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்த மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று நம்புகிறேன்” என்று முகேஷ் அம்பானியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மேற்கண்டவாறு பேசியுள்ளார்
இந்த மிகப்பெரும் தொகையை சந்தாதாரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என்று சொல்லப்படுகின்ற இந்திய மக்களின் வருமானத்திலிருந்து கொள்ளையடிப்பதற்கு இந்திய ஊடகங்கள் தயாராகி வந்துள்ளன. 2026 ஆம் ஆண்டில் இந்த துறையின் மூலமாக 54 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானமாக கிட்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
பொழுதுபோக்கு, அரசியல், சினிமா, விளையாட்டு, நெடுந்தொடர்கள், குறுந்தொடர்கள், சினிமா பற்றிய பார்வை, புராணக் கதைகளை ஹைடெக் முறையில் எடுப்பது, ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் ஆபாச சீரழிவு மற்றும் கீழ்த்தரமான சிந்தனை முறைகளை பரப்புவது என்று பல்வேறு தலைப்புகளில் வகை பிரித்துக் கொண்டு இத்தகைய ஊடகங்கள் வானத்திலிருந்து இந்திய மக்களின் மீது தாக்குதலை தொடுத்துக் கொண்டுள்ளனர்.
இதன் உச்சகட்டமாக, கடந்த 7 தேதி அதிகாலை முதல் 10 ஆம் தேதி மாலை வரை நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை நேரடி ஒளிபரப்பு என்றும், சிறப்பு விவாதங்கள் என்றும், சிறப்புப் பார்வை என்றும் பல்வேறு பெயரிட்டு அழைத்துக் கொண்ட இந்திய ஊடகங்கள் நம்ப முடியாத அளவிற்கு பல்வேறு கட்டுக்கதைகளை உண்மை செய்திகளைப் போல இந்திய மக்களின் தலையில் கட்டுவதற்கு முயற்சித்தனர்.
பாகிஸ்தானை முற்றாக அழித்து விட வேண்டும்; அது தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது; காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு துணை போய் உள்ளது; பாகிஸ்தானில் உள்ளவர்கள் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் என்பதால் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையும், வெறுப்பு அரசியலும், தேசபக்தி என்ற போலித்தனமான முயற்சியின் மூலமாகவே உருவாக்கப்பட்டது.
- போர் குறித்து லைவ் ஆக செய்திகளை வழங்கும் கோடி மீடியா வழியாக, போர் ஆதரவு பரப்புரை யுத்தத்தில் பா.ஜ.க வெற்றிகரமாக முன்னேறியது..
- ஜீ நியூஸ் ZeeNews தகவல்படி, “பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத் ஏற்கெனவே இந்தியாவால் கைப்பற்றப்பட்டது!”
- ABP ஏபிபி நியூஸ் தகவல்படி, “பாகிஸ்தான் இராணுவ தலைவர் ஆசிம் முனீர் கைது செய்யப்பட்டார்!”
- ஆஜ்தக் டிவி கராச்சி துறைமுகம் முழுமையாக நாசப்படுத்தப்பட்டதாக தங்களுடைய ஸ்டுடியோவில் இருந்து படம் காட்டினார்கள்.
- DNA ஊடகம் இந்தியா பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தாக்கியதாக செய்தி வெளியிட்டது.
- ஏற்கனவே இந்தியா மீது ராக்கெட் தாக்குதல் என பாகிஸ்தான் ஊடகங்கள் பலமுறை காட்டிய வீடியோவை, ஆஜ்தக் எடுத்துக் காட்டி, இது இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்கள் என்கிறது.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தி டிவி கராச்சியை இந்திய இராணுவம் கைப்பற்றியதாக அறிவித்தது. , பாலிமர் டிவி லாகூர் நகரத்தை இந்திய இராணுவம் கைப்பற்றி விட்டதாக அறிவித்தது. சத்தியம் டிவியோ பாகிஸ்தான் பிரதமரான ஷெரீப் பதுங்கு குழியில் பதுங்கி கிடப்பதாக தகவல் வெளியிட்டது.
மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று வாக்குறுதி கொடுத்த ஊடகங்கள் அதன் சார்பாக செய்தியை வெளியிட்ட ஜியோ குழுமத்தின் அதிபரான திருவாளர் முகேஷ் அம்பானி சில கோடி மீடியாக்களையும் இணைத்துக் கொண்டு, ’வாங்கிய காசுக்கு மேல் கூவுறான்டா..’ என்பதைப் போல போர் நிறுத்தம் அறிவிக்கின்ற வரை கூவிக்கொண்டே இருந்தனர்.
இந்த டிஜிட்டல் ஊடகங்கள் மட்டுமின்றி அச்சு ஊடகங்களில் அவர்கள் போட்ட தலைப்புகளும், வால்பேப்பர்களாக வெளியிட்ட ப்ளோ அப்புகளும், மிகப்பெரிய அளவில் தேச வெறியை உருவாக்குகின்ற வகையில் இருந்தது.
குறிப்பாக தேசிய நாடுகள் என்று கூறிக் கொள்ளுகின்ற இந்து குழுமத்திலிருந்து வெளிவருகின்ற தமிழ் இந்து இந்த தேசபக்தி பஜனையில் முன்னிலை வகித்தது என்று கூறலாம். தினமலர், ’பாக் அத்துமீறினால் பதிலடி’ ’பாகிஸ்தானுக்குள் இறங்கி அடித்த இந்திய இராணுவம்’ என்றும், ’பாக் டிரோன்கள் துவம்சம்’ ’மோடி ராஜ்ஜியத்தின் ராஜ மூளை’ என்றெல்லாம் தலைப்பு போட்டு வாசகர்களை உசுப்பேற்றியது.
பாகிஸ்தானுக்கு எதிராக போர்வெறியை தூண்டுவது என்பது மட்டுமின்றி, இந்தியாவுக்குள் இந்த நேரத்தில் எந்த விதமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றிணைந்து இராணுவத்திற்காக ஒரே குரலில் ஒலிக்க வேண்டும் என்று தேசவெறியை டன் கணக்கில் தூண்டிக் கொண்டிருந்தனர்.
இந்த தேசவெறியின் மற்றொரு பக்கம் தான் பாகிஸ்தானை முற்றாக அழிப்பது என்ற பார்ப்பன கழிசடை ஊடகங்களின் நீண்ட நாளைய விருப்பம். அதற்கு ஏற்ப செய்திகளை வார்ரூமில் இருந்து தயாரித்து கராச்சியை கைப்பற்றி விட்டார்கள் என்பது துவங்கி பாகிஸ்தான் வீழ்ச்சி அடைந்தது என்பது வரை பல்வேறு குரல்களில் பொய் செய்திகளை விடாமல் பரப்பிக் கொண்டிருந்தனர்.
இந்தியாவில் உள்ள ஊடகங்களின் யோக்கியதையை அம்பலப்படுத்திய யூ டியூப் சேனல் நடத்துகின்ற இளைஞரான துருவ் ரத்தி இந்தியா ஊடகங்களை பார்ப்பதை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்ற அளவிற்கு இந்த பொய் செய்திகள் குண்டு மழைகளாக பொழிந்தன.
’தான் கொடுத்த கூலிக்காசுக்காக கோஷமிடுகின்ற நபர்களின் கூச்சலை கண்டு பெருமிதத்தில் மிதக்கின்ற தலைவர்களைப் போல’, கோடி மீடியாக்கள் விசிறி விட்டதில் பாசிச மோடி கும்பல் பெருமிதத்திலும், இந்தியாவை காப்பதில் தாங்கள்தான் முன்னிலையில் இருப்பதாகவும் வானத்தில் மிதந்து கொண்டுள்ளனர்.
இந்த கூச்சல்களுக்கு பின்னால் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 10 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்ற உண்மையையும், இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதத்திற்கும் கீழே வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதையும், இந்திய பங்கு சந்தை மிக மோசமாக அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என்பதையும் மறைத்துள்ளனர்.
இத்தகைய பாதிப்புகளை இனி இந்திய உழைப்பாளிகள், பெரும்பான்மை மக்கள் தலையில் கட்டுவார்கள்; விலைவாசி உயர்வு அதிகரித்துக் கொண்டே செல்லும்; பெட்ரோல், டீசல் முதல் காய்கறி, மளிகை பொருட்கள் வரை அனைத்தின் விலையும் உயர்ந்து வாழ முடியாத பாலைவனமாக இந்தியாவை மாற்றுவதற்கு தான் இந்த போர் பயன்பட்டுள்ளது.
இந்தியா என்றால் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் கொண்டது; வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பதை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு இந்தியா என்றால், ’இந்து நாடு’ என்று அறிவிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச குண்டர்படை பஹல்காமில் நடந்த தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.
படிக்க:
♦ “ கோடி மீடியா க்களால்” சந்தி சிரிக்கும் பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை!
♦ ஆப்ரேஷன் சிந்தூர்: ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்கும் போலி தேசபக்தி – உண்மைப் போர் வெறி!
”பஞ்ச காலத்திலோ, நெருக்கடி காலத்திலோ, மக்கள் சோத்துக்கு வழியில்லை என்று வயிற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, அதனை யோசிக்க விடாமல் அவர்கள் மூளையில் இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை போட்டு நிரப்ப வேண்டும்” என்று ராஜபுத்திர மன்னர்களுக்கு ஆலோசனை கூறினானாம் சாணக்கியன்.
இன்று பல ஊடக சாணக்கியர்கள் களத்தில் குதித்துள்ளனர். மக்களின் மூளை காலியாக இருக்கிறது என்பதைப் பற்றி சிந்தித்து விதவிதமான பாகிஸ்தானுக்கு எதிரான போர் பற்றி பொய்ச் செய்திகள், உருப்படாத செய்திகள், பெருமிதங்கள், கட்டுக்கதைகள் ஆகியவற்றின் மூலம் மூளையை இட்டு நிரப்பி வருகிறார்கள்.
இத்தகைய சூழலில் பாட்டாளி வர்க்கத்தின் சார்பில் வெளி வருகின்ற அறிக்கைகள், செய்திகள், போராட்ட நிகழ்வுகள், போர் எதிர்ப்பு பிரச்சாரங்கள் போன்றவை மிகக் குறுகிய அளவிலேயே செல்கின்றன. மீறி இதுபோன்று கருத்துகளைப் பேசினால் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள் என்று எச்சரிக்கின்ற வகையில் புதிதாக திருத்தப்பட்டுள்ள குற்றவியல் சட்டத்தின் நியாய சன்ஷிதா-152 வது பிரிவை ஏவி அடக்குமுறை செலுத்துகிறது பாசிச மோடி அரசு.
இத்தகைய தேசபக்தி பஜனைகளுக்கிடையிலும் பொய்ச் செய்திகள், பித்தலாட்டங்களுக்கு மத்தியிலும் ”போரை நிறுத்து” என்று பாட்டாளி வர்க்கத்தின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டுதான் உள்ளது.
- மருது பாண்டியன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
காஷ்மீர் பஹால்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் அல்லது திட்டமிடப்பட்ட அயோக்கிய கூட்டத்தால் சுட்டு கொலை செய்யப்பட்டதன் பேரில் இந்தியா பாகிஸ்தான் போர் நான்கு நாட்களாக பொய்களையும், புனைச் சுருட்டுகளையும், தேச வெறியையும் – பாசிச மோடி வகையறாவின் ‘வீராதி வீரத்தனத்தையும்’
செய்தி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் எப்படி ஊதிப் பெருக்கி மக்களின் வாழ்வாதார பிரச்சனையை ஆளும்வர்க்கம்
முற்றிலுமாக மடை மாற்றிவிட உதவின என்பதனை கட்டுரையாளர் தோழர் மருது பாண்டியன் சிறப்பாகவே அம்பலப்படுத்தியுள்ளார். இந்தக் கேடுகெட்ட காவிக் கூட்டத்தின் பாசிச கொள்கைகளுக்கு பக்கபலமாக கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களின் கைப்பாவைகளான ஊடகங்களும் பெரு உதவி புரிந்துள்ளன என்பதனையும் தோழர் சிறப்பாகவே எடுத்தியம்பி உள்ளார். சிறப்பு தோழர்.
வாழ்த்துக்கள்.
மோடிக் கூட்டம் தான் இப்படி சாசகச் செயல்களில் முன்னணியில் நிற்பதாக ஓலமிட்டுக் கொண்டிருக்கையில் இந்தியா கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த போலி தேச பக்தி
வெறியாட்டத்தில் கரம் கோர்த்து தமது புரியாதனமான கூச்சலை எழுப்பியது குறித்தும் கட்டுரையில் சாடி இருக்கலாம்.
மோடிக் கூட்டம் தான் இப்படி சாசகச் செயல்களில் முன்னணியில் நிற்பதாக ஓலமிட்டுக் கொண்டிருக்கையில் இந்தியா கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த போலி தேச பக்தி
வெறியாட்டத்தில் கரம் கோர்த்து தமது புரியாதனமான கூச்சலை எழுப்பியது குறித்தும் கட்டுரையில் சாடி இருக்கலாம்..