‘மதச் சார்பற்ற(?) சமூக (அ)நீதி வெற்றுக் கூட்டணி’ எனப் பெயர் சூட்டி இருக்கலாம்!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்துள்ளார் என்ற வழக்கு நீதிமன்றத்தில் மட்டுமல்ல; விஜய்யை ஆட்டுவிக்கும் அமித்ஷா கரங்களில் கோப்புக்கள் குவிந்து கிடக்கின்றன.

4

2026 செப்டம்பர் 9 மாலை 4 மணியளவில் சென்னையில் நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்ற சில கட்சி(?)களின் கூட்டுக் கூட்டத்தில் ‘மதச் சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ என்ற ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்களாம். கூட்டத்தில் விஜய், மாணிக்கத் தாகூர், வைகோ, தொல் திருமா, காதர் மொய்தீன் முதலானோர் பங்கேற்று உள்ளனர். இக்கூட்டத்தில் அரசுக்கு ஆதரவு தரும் சிபிஐ, சிபிஐஎம் கட்சிகள் கூட்டணியில் பங்கேற்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். பங்கேற்றவர்களில் விஜய்யின் அமைச்சரவையில் இரண்டு இடங்களை அபகரித்துக் கொண்டவர்களான காங்கிரசின் மாணிக்கத் தாகூர்,  ஆளுக்கொரு இடம் பிடித்துக் கொண்ட தொல் திருமா மற்றும் காதர் மைதீன் இவர்களோடு, தமக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இல்லாமல் போனதால் அமைச்சரவையில் இடம்பெறாத வைகோவும் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில்தான் நடிகர் விஜய் தலைமையில் ‘மதச் சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’(?) உருவாக்கம் செய்யப் பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட ‘முற்போக்குத் தலைவர்கள்’, விஜய்யை வானளாவப் புகழ்ந்து பேசி உள்ளனர்.  இதுவரை யாரும் தந்திராத ஊழலற்ற – சிறப்பான நிர்வாக நடைமுறை – நேர்மை – வெளிப்படைத்தன்மை – மதச் சார்பின்மை – தந்தை பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா வழியில் பயணிக்கும் விசாலமான பார்வை… எனப் பன்முகத் தன்மை கொண்ட தலைவர் விஜய் என்பதாக இந்த நால்வரும் மற்றும் ஆதவ், அருண்ராஜ் முதலான தவெக சங்கிகளும் புகழ்ந்து தள்ளி உள்ளனர்.

கூட்டம் முடிந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த மேற்கண்ட ‘மாபெரும் தலைவர்கள்’ தங்களது நேர்காணல் கருத்துக்களில் அவற்றை உறுதிப்படுத்தினர். இதில் வேடிக்கை இப்படி புதிய ஒரு கூட்டணி அமைத்த பிறகு வழக்கமாக ஊடகவியலாளர் களைச் சந்திக்கின்ற பொழுது அமைக்கப்பட்ட கூட்டணியின் தலைவர் பிரதானமாக இருந்து விளக்கிக் கூறுவதே வழமையான ஒன்று. ஆனால் விஜய் வழக்கம்போல் ஓடி விட்டார். ஊடகவியலாளர்கள் தான் அவருக்கு மிகப் பெரும் அலர்ஜி – மற்றும் அச்சத்திற்கு உரியவர்கள் ஆயிற்றே! எழுதிக் கொடுக்கும் வசன சீட்டு இல்லாமல் அவரால் எவரோடும் பேசுவதற்கான திராணியை பெற்றவர் இல்லையே! அதனால் தான் ‘தூய்மைக்குப் பெயர் போனவர்கள்’- ஆன ஆதவ் மற்றும் அருண்ராஜ் அவருக்குப் பதிலாகப் பங்கேற்றதைப் பார்த்தோம்.

புகழுக்கு உரியவரா விஜய்? தமிழ்நாட்டில் நடப்பது ஜனநாயக பூர்வ அரசாங்கமா?

எழுதிக் கொடுக்கும் வசனங்களைத் திரைப் படத்தில் வாந்தி எடுப்பது; சண்டைக் காட்சிகளில் வில்லன்களை தனி மனிதனாக நின்று போரிட்டு வெல்வது; மக்கள் நலக் காவலனாகத் தோன்றி சில படங்களில் திட்டமிட்டு கருத்துக்களைப் புகுத்துவது; பெரும் கூட்டமாய் உருவெடுத்துள்ள இருபால் Genz இளசுகளை சுண்டி இழுக்கத்தக்க – அரைகுறை ஆடை அணிந்த நடிகைகளுடன் குத்தாட்டம் போடுவது; ஈர்அர்த்தம் உடைய வார்த்தைகளை – வசனங்களைப் பிரயோகிப்பது; விரசமான எண்ணற்ற காட்சிகளில் தோன்றுவது; அப்படிப்பட்ட பாடல் வரிகளைப் பாடுவது, பெண்களை இழிவு படுத்துவது…இவை போன்ற எண்ணில் அடங்கா அசிங்கங்களை அரங்கேற்றி சினிமா கவர்ச்சி வாத மோகத்தின் அடிப்படையில் தமக்குப் பின்னால் ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார் விஜய் என்பதைத் தவிர

நடைமுறை ரீதியாக அவரிடம் பிரத்யேகமான மக்கள் நலன் சார்ந்த ஒரே ஒரு கொள்கையை கண்டுபிடித்து எவராவது சொல்ல முன் வந்திட முடியுமா? வெட்டித்தனமாக ‘அண்ணா எம்ஜிஆர் என்டிஆர் விஜய்’ என தாமாகவே முழக்கமிட்டுக் கொள்வதால் மட்டும் இவர் மாபெரும் தலைவராக உருவாகி விட்டார் எனக் கொண்டாட முடியுமா? சினிமா நடிகர்கள் எம் ஜி ஆர், என் டி ஆர் போன்றோர் கூட சினிமா கவர்ச்சிவாதத்தால் அரசியலில் அரங்கேறியவர்களே!

மேலும் படிக்க: கவர்ச்சி மோக பொறுக்கி அரசியலும் நடிகர் விஜய் பதவியேற்பும்!

வேலையில்லாத் திண்டாட்டம், பசி பஞ்சம் பட்டினி, தொழிலாளர்கள் போராட்டம்,  விவசாயிகள் போராட்டம், வடமாநிலங்களில் சிறுபான்மையினர் – தலித்துகள் அழித்து ஒழிக்கப்படும் கொடுமைகள், இந்தி சமஸ்கிருத மொழி திணிப்பு, காவிமயமாதலை எதிர்த்தல், சனாதனப் பார்ப்பனப் பண்பாட்டை எதிர்த்தல், மாணவர்களின் ’நீட்’டுக்கு எதிரான போராட்டங்கள், மாணவ மாணவியர் தற்கொலைகள், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது, பாலியல் வன் கொடுமைகள் …(இதுகுறித்து ஏற்கனவே எண்ணற்ற உதாரணங்கள் விளக்கப்பட்டுள்ளன)…இப்படி மக்களின் எண்ணற்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் எவை பற்றியும் இவர் வாய் திறந்து குரல் கொடுத்திருப்பாரா? வீதியில் இறங்கிப் போராடி இருப்பாரா? அதற்காக கைதாகி இருப்பாரா? சிறை சென்றிருப்பாரா?

தியாகங்கள் புரிந்திருப்பாரா? இவை எதிலும் பங்கேற்காத – அதே வேளையில் இதற்கு முந்தைய பத்திகளில் விவரிக்கப்பட்டுள்ள கேவலமான திரைப்படத் துறை சார்ந்த ஆபாச ‘பின்புலத்தை’த் தவிர இவரைப் புகழ்ந்து பேசத்தக்க வகையிலான ஏதேனும் உருப்படியான ஒன்றையாவது எவராலும் கூற முடியுமா?

இவரது சினிமா பாணி செயல்களுக்கு எடுத்துக்காட்டாக அவரது பொதுக்கூட்ட மேடைப் பேச்சுக்களும், சட்டமன்றத்தில் அவரது பேச்சுக்களும், நடிப்புக்களும், சைகைகளும், உடல் மொழி அசைவுகளும் அனைவரும் கண்டு காரி உமிழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம்!

திருச்சியில் ‘வெற்றி விழா’ பொதுக் கூட்டத்தில் ‘வாயில நல்லா வருது; வேணாமுன்னு பாக்கிறேன்’ என்றும், 2025 செப்டம்பர் 27 அன்று கரூர் கூட்டத்தில் மக்கள் செத்து மடிந்து கொண்டிருந்த பொழுது ‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்’ பாடலை விடாமல் பாடிக் கொண்டிருந்தவர் தான் இந்த விஜய்! (இப்போது உத்தமபுத்திரன் ஆட்சியில் பாட்டிலுக்கு இருபது ரூபாய் என ஏறிவிட்டது).

இதில் ஸ்டாலின் செய்த மாபெரும் தவறு கரூர் கூட்டத்தில் 41 பேர் மரணமாகக் காரணமான குற்றவாளி எண்.1 விஜய், குற்றவாளி எண்.2 ஆதவ் அர்ஜுனா, குற்றவாளி எண்.3 புஸ்ஸி ஆனந்த், குற்றவாளி எண்.4 நிர்மல் குமார், குற்றவாளி எண்.5 அருண்குமார் இவர்களைத் தொடர்ந்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு அவர்களைத் தப்பிக்க விடாமல் கூண்டோடு அன்றே கைது செய்து சிறையில் தள்ளி இருக்க வேண்டும். வழக்கு தொடுத்து இருக்க வேண்டும். அதனுடைய விளைவும் மற்றும் ஒன்றிய பாசிச பாஜகவின் தயவும் ரத்தப் பாசமும் இருந்ததால் இந்த சன்டப்பிரசன்ட விஜய் இந்த ஆட்டம் போட்டிருக்க மாட்டார்.

சட்டமன்றத்தில் கண்களுக்கு மேல் நெற்றியில் வலது கையை வைத்துக் கொண்டு அப்பாவைத் தேடுகின்ற அசிங்கங்களைப் (அதாவது ஸ்டாலினைத் தேடுகிறாராம்) பார்த்தோம்! கொளத்தூரில் தமது ஐந்து நிமிட பேச்சாலேயே ஸ்டாலினை மக்கள் கொத்துப் புரோட்டா போட்டு விட்டார்களாம்! திமிர்வாதத்தில் துள்ளிக் குதிக்கிறார் குதிரை பேரம் மூலம் மட்டுமே ஆட்சிக்கட்டிலை அபகரித்துக் கொண்ட கயமை உள்ளம் படைத்த விஜய்! அதே நாளிலேயே சபாநாயகரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு வெறி …யாய் உரத்துக் கத்தினார்! உடல் மொழியிலும் நடித்துக் காண்பித்தார். பொதுவாக அவரது செய்கைகள் யாவும் ‘மெண்டல் கிராக்கி’ எனப் பலராலும் பேசப் படுவதுபோல் இருப்பதை ஊடக வெளிச்சங்களில் மக்கள் நன்றாகவே பார்த்தார்கள்.

முதல் முறையாக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறுவிதமான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்ற பொழுது செப்டம்பர் 3 அன்று சட்டமன்றத்தில் நிகழ்ந்ததையும் செப்டம்பர் 7 அன்று சட்டமன்றத்தில் நிகழ்ந்ததையும் உலகம் முழுவதும் விஜய்யின் செயல்களை மக்கள் கண்டு காரித் துப்பினார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அன்று!

செப்டம்பர் 3-ல் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது. பிரதானமாக தமிழ்நாட்டில் 116 நாட்கள் விஜய் ஆட்சியில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், காவல் நிலைய மரணங்கள், சிறை மரணங்கள், ஆணவப் படுகொலைகள், மாணவர் தொழிலாளர் போராட்டங்கள் ஒடுக்கப்படுதல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்புகின்றனர். 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

சொந்த புத்தியுடன் இந்த முதலமைச்சர் செயல்படுகிறார் என்றால் எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு, கேள்வி நேரத்திலேயே ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லும் திராணியைப் பெற்றிருக்க வேண்டும்! அப்படிப்பட்ட திறமை தான் ‘நம்ம நடிகரிடம்’ துளியும் என்றும் இருந்த தில்லையே! அதனால்தான் எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினாக்களை கடைசிவரையில் இருந்து கேட்பதற்கு கூட வக்கின்றி ஏதோ வெட்டி முறிக்கப் போவது போல சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே வெளியில் ஓடுகிறார்! சட்டமன்றம் நடந்து கொண்டு இருக்கும் பொழுது அவர் வெளியேறுகிறார் என்றால் எவ்வளவு பொறுப்பற்ற மனிதனாக இருப்பார்? அதைவிடப் பெரிய வேலை வேறு என்ன இருக்க முடியும் அவருக்கு? அதிலும்  (மூன்று நாள் கழித்து) ‘திங்கள் கிழமை வந்து (செப்.7) பதில் சொல்கிறேன்; யாரும் வெளியில் ஓடிராதீங்க’ என்று கேவலத் தனமாக வீராப்பு பேசிவிட்டு இவரோ ஓடு… ஓடு…ஓடு… என்று காத தூரம் ஓடினார்.

சரி, மூன்று நாள் கழித்து, செப்டம்பர் 7-ல் காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான எதிர்க் கட்சிகளின் அனைத்துக் கேள்வி களுக்கும் ஒன்றன்பின் ஒன்றாக பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தால், எந்த உருப்படியான கேள்விகளுக்கும் நேரடியாகப் பதில் கூறாமல் மூன்று நாட்கள் இடைவெளியில் சினிமா பாணியில் தயாரித்துக் கொடுக்கப்பட்ட ஒன்றுக்கும் ஆகாத விவரங்களை மனப்பாடம் செய்து வந்து வாந்தி எடுத்தார். அல்லது பார்த்து படித்து வெறி …யாய் கத்தியதை பார்த்தோம். 50 ஆண்டுகளுக்கு முந்தைய கலைஞர் கருணாநிதி சம்பந்தப்பட்டிருப்பதாக சர்க்காரியா கமிஷனை இழுத்து வந்து கொண்டு உதார் விடுகிறார். அது கடந்த காலங்களிலேயே விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத ஒன்றாகி குப்பை மேட்டுக்குப் போய்விட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதைத்தான் பெரிய கெட்டிக்காரரைப் போல ‘சேம்பிலுக்கு ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன்’ என்று மார் தட்டினார் இந்த அணில்.

மிசா (MISA) என்றால் என்னவென்றாவது தெரியுமா விஜய்க்கு?

மிசா காலத்தில் விஜய்க்கு 1 ½ வயது கூட ஆகி இருக்காது. மிசா (Maintenance of Internal Security Act) என்றால் என்ன என்றே இந்த தற்குறிக்குத் தெரியாது. 1976-களில் இந்திராவின் அவசரநிலைப் பிரகடனக் காலத்தில் இடதுசாரிகள், புரட்சியாளர்கள் மட்டுமின்றி தனது பாசிச நடவடிக்கைகளுக்கு ஒத்தூதாத முதலாளித்துவக் கட்சிகளின் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை இந்திராவின் காங்கிரஸ் மற்றும் போலீஸ்.

1976 ஜனவரி 31 அன்று மெரினா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட திமுக பொதுக்கூட்டத்தில் கலைஞர் மு கருணாநிதி அவசரநிலை பிரகடனத்தை வன்மையாகக் கண்டனம் செய்தார். எதிர்த்து முழக்கமிட்டார். எதிர்ப்பு போராட்டம் நடத்த மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்! இதன் காரணமாகவே  ‘அரசியல் சட்ட விதி 356 இன் கீழ் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகினர் என்பதை மறுப்பதற்கு இல்லை. சிட்டிபாபு எம்பி அப்படித்தான் சாகடிக்கப் பட்டார் சிறையில்! அப்படி சித்திரவதைகளுக்கு உட்பட்டவர்களில் மு க ஸ்டாலினும் ஒருவரே.

சிறை கொட்டடியில் தொழுநோய் நோயாளிகள் அடைக்கப்பட்ட அறையில் ஸ்டாலினும் அடைக்கப்பட்டார் என்பதுவும், அனைவருமே ஒரே பானையில் தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற கேவல நிலையை காங்கிரஸின் அன்றைய பாசிச ஆட்சி இழிவாக நடைமுறைப் படுத்தியது என்பதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. பெரும் தாக்குதலில் ஸ்டாலினின் நாடையில் காயத் தழும்பு ஏற்பட்டது என்பதும் உண்மையே. அதன் பாதிப்பு இன்றுவரை அவருக்கு இருக்கிறது என்பதும் உண்மையே.

இதைத்தான் செப்டம்பர் 7-ல்  சட்டமன்றத்தில் நாடையில் கை வைத்து காண்பித்து உடல் மொழியில் ஏளனம் செய்தது இந்த சர்க்கஸ் பிராணி விஜய்! இதே போல பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தொண்டர்கள் இந்திராவின் சர்வாதிகாரத் திமிரினால் நாடு முழுவதும் அடக்குமுறைகளுக்கு உட்பட்டார்கள்; கொன்றொழிக்கவும் செய்யப்பட்டார்கள். பின்னர் உணர்ந்தது போல் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு அவசர நிலைப் பிரகடனத்தைத் திரும்பப் பெற்றார் பாசிச இந்திரா.

இந்த வரலாறு எதுவுமே இந்தத் தற்குறிக்குத் தெரியாது. அந்த வகையில் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதை நக்கல் அடித்து ஒருவன் பேசுகிறான் என்றால் எவ்வளவு திமிர்த்தனம் இருக்க வேண்டும்? அதனைக் காவல் துறை மானியக் கோரிக்கையின் போது இழிவுபடுத்தி பேசுவது எந்த வகையில் நியாயம் என்பதை விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ள  பிழைப்புவாத மேதாவிகள் எடுத்துரைக்க வேண்டும்.

விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் போன்றோர் விஜய்யின் இழி செயல் குறித்து கடுமையாக விமர்சனத்தை முன்வைத்த பின்னர் சிலேடையாக தொல் திருமாவை சாடியதால் மட்டுமே, மிகக் காலங் கடந்து (சிபிஐ சிபிஎம் போன்ற கட்சிகள் உடனடியாக விமர்சித்த பின்னர்) விசிக தலைவர் தொல் திருமா மெது… மெதுவாக  ‘அப்படிப்பட்ட உடல் மொழி கண்டனத்திற்கு உரியது’ என்று மட்டும் மிகச் சாதாரணமாக கூறிவிட்டு அடுத்த வினாடியே தமது இன்னொரு சகாவான ‘மாண்புமிகு அமைச்சர்’ வன்னியரசு மனம் குளிர – ஏன், தமது விருப்பத்தின்படி விஜய் கூட்டிய செப்டம்பர் 9 ‘புதிய கூட்டணி உருவாக்க’க் கூட்டத்தில் மன மகிழ்ச்சியோடு பங்கேற்கச் சென்று விட்டார்! விஜய்யின் உடல் மொழிப் பாவனை தவிர திருமாவிற்கு காவல்துறை மானியம் மீதான விஜய்யின் பதிலுரையில் குற்றம் காண முடியவில்லை போலும். மாணிக்கத் தாகூர், வைகோ, காதர் மைதீனுக்கு அந்தப் பண்பும் கூட இல்லாமல் போயிற்று.

எதற்காக சட்டமன்றத்தில் அப்படிப்பட்ட காட்டு மிராண்டித்தனமான வெறி நாய்க் கூச்சலை இழிவான உடல் மொழிகள் பாவனையுடன் அரங்கேற்ற வேண்டும் இந்த தற்குறி விஜய்? இது சட்டமன்றமா? காலிகளின் கூடாரமா? அல்லது பன்றிகளின் தொழுவமா?

விஜய்யின் கரங்கள் ஊழல் கறை படியாதவையா?

புதிதாக கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள விஜய்யின் சகாக்கள் விஜய்க்கு ஒளிவட்டம் ஏற்படுத்த துடியாய்த் துடிக்கிறார்கள். தமது உல்லாசப் பயணங்களுக்காக இந்த ‘ஏழைப் பங்காளன்’ விஜய் 2005 ஆம் ஆண்டு பி.எம்.டபிள்யூ.எக்ஸ்5 (BMW X5) என்ற மிக விலை உயர்ந்த காரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தார்.

அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து “ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls-Royce Ghost) என்ற மிக விலை உயர்ந்த காரை இறக்குமதி செய்தார். இந்த இரண்டு கார்களுக்கும் நுழைவு வரி (Entry Tax) செலுத்தாமல் அரசை ஏமாற்றி விட்டார். இதன் காரணமாக பிரச்சனை சென்னை உயர்நீதி மன்றம் வரை சென்று கோடிகளுக்கும் மேற்பட்ட வரியைச் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டதும் நாடறிந்த உண்மை.

மேலும் படிக்க: தமிழகத்தில் ஊழல்- லஞ்சம் குறைந்து வருகிறதாம்! நம்புங்கள், “பரலோக சாம்ராஜ்யம்” சமீபத்தில் இருக்கிறது.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் ‘நீண்ட இடைவெளிக்கு பின் வழக்குத் தொடரப்பட்டுள்ளது; எனவே இதிலிருந்து தனக்கு விலக்களிக்க வேண்டும்’ என்று மேல்முறையீடு செய்கிறாரெனில் எவ்வளவு பெரிய கில்லாடியாக இருக்க வேண்டும் இப்பேர்வழி? இதுதான் இந்த உத்தமபுத்திரன் விஜய்யின் யோக்கியதாம்சம். இவை யெல்லாம் ஊழல் குற்றச்சாட்டில் அடங்காதோ? ஒளிவட்டம் பாய்ச்சும் கூட்டணி தலைவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்துள்ளார் என்ற வழக்கு நீதிமன்றத்தில் மட்டுமல்ல; விஜய்யை ஆட்டுவிக்கும் அமித்ஷா கரங்களில் கோப்புக்கள் குவிந்து கிடக்கின்றன. அதனால் தான் காவிகளின் வழிகாட்டுதல்படி புதிய கட்சி உருவாக்கி ‘வெற்றிக்கனி’யை சுவைத்துக் கொண்டு இருக்கிறார். மற்ற கட்சிகளை விட தமக்கு எந்நேரமும் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்க கூடிய திமுக-வை வீழ்த்தி விட்டோம் என்ற களிப்பில் திளைக்கின்றனர் பாசிச மோடி – அமித்ஷா கும்பல்!

இந்த உண்மைகள் எல்லாம் விஜய், ஆதவ், அருண்ராஜ், நிர்மல் குமார், கீர்த்தனா, செங்கோட்டையன் போன்ற பிராணிகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் மாணிக்க தாகூர், வைகோ, காதர் மைதீன் போன்றோருக்கு தெரியவில்லையே ஏன் என்பதுதான் கேள்வி? அனைத்தையும் விட தம்மைப் புரட்சியாளர் என பலரையும் நம்பச் செய்து ஏமாற்றிய விசிக தலைவர் தொல் திருமா இவை எது குறித்தும் அறியாதவரா என்ன? என்றைக்கு வன்னியரசு & கோ பேச்சுக்களைக் கேட்டு தொல் திருமா விஜய்யின் பக்கம் சாய்ந்தாரோ அன்று முதல் அவரது முகம் வெளுத்துப் போய் விட்டது – சாயம் கரைந்து போனது என்பதே உண்மை!

விஜய் மட்டுமல்ல; விஜய்யின் அமைச்சர்கள் அவையில் வலது கரமாகவும் இடதுகர மாகவும் பின்னிப் பிணைந்து அனைத்துக்கும் வழிகாட்டுபவர்களாக விளங்கக்கூடிய கள்ள லாட்டரி புகழ் ஆதவ், பாண்டிச்சேரி புஸ்ஸி, விஜய் கட்சி துவங்க  முக்கிய புள்ளியாக இருந்த முன்னாள் IRS அதிகாரி

Additional Income Tax Officer (லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி பீகார் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு – அடித்த கொள்ளை போதும்-என வேலையை ராஜினாமா செய்து விட்டு அமித்ஷா வழிகாட்டலில் தவெகவில் இணைந்தவர்), முன்னாள் ஆர் எஸ் எஸ் காக்கி டவுசர்காரர் புளுகுமுட்டைகளை அவிழ்த்து விடுவதற்கு என்றே உருவான ஐ.ட்டி. விங் புகழ் நிர்மல் குமார், இன்னொரு ஆர் எஸ் எஸ் முகம் கீர்த்தனா, வாசாத்தி புகழ் முன்னாள் வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிழைப்புவாத நோக்கில் கட்சி மாறிய விஜயபாஸ்கர்கள், கட்சி மாறிகள் என எண்ணற்ற ஊழல் பேர்வழிகளை தம்மோடு ( அமித்ஷா  வழிகாட்டலில் ) இணைத்துக் கொண்டிருக்கக் கூடிய விஜய்யை ஊழல் கரை படியாதவர் என நம்மை நம்பச் சொல்கிறார்கள்  மேதாவித் தனமான‘முற்போக்காளர்கள்’!

சொல்லட்டுமே விஜய்! தான் நடித்த திரைப் படங்களில் வெள்ளைப் பணத்தைத் தவிர கருப்பு பணமே வாங்கவில்லை என்று!? சொல்லட்டுமே பிளாக்கில் ஆயிரக் கணக்கான தொகையில் டிக்கெட்டுகள் விற்கப்படவே இல்லை என்று! உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான அசையும் அசையா சொத்துக்கள் வாங்கிப் போடவில்லை என்று உதார் விடட்டுமே விஜய்! இப்படிப்பட்டவரை தான் ஊழல் கரை படியாதவர் என இந்த ‘முற்போக்காளர்கள்’ நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

கடந்த தேர்தலின் போது மட்டும் இவர்கள் தத்தம் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்காளருக்கும் கொடுத்த தொகை எவ்வளவு என்பதனை அத்தொகுதி மக்களை கேட்டாலேயே நாறிப்போகும்.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகும் கூட கனிம வளத்தில் கொள்ளையிட விஷ்னு ரெட்டி, அவரது மச்சான் சுஜய் ரெட்டி, இவர்களின் தொழில் பார்ட்னர் அனில் ரெட்டி ஆகிய மூன்று ரெட்டிகளும் தமிழ்நாட்டின் சுரங்க வளங்களை சூறையாட அனுமதித்து (தேவகோட்டை அருகில் இருமதி எனும் கிராமத்தின் சாதி வெறியனும், பெரிய ‘கலகக்காரனுமாக’ உழைக்கும் மக்களால் அறியப்பட்ட மக்கள் விரோதி, சாதாரண பிற்படுத்தப்பட்ட நாடார் இன மக்களை செங்கல் கால்வாய் நடத்துவதில் பெருந்தொல்லை கொடுத்தவனும், பல்வேறு அமைப்பினரால் தமக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காரணமானவனும் ‘பல்தொழில் வித்தகன்’னுமான கருணாநிதியின் அருந்தவப் புதல்வனான) அமைச்சர் பிரபு தனது கையாட்கள் மூலம் விஜய்க்கு அள்ளித்தட்டும் தொகைகள் எவ்வளவு என்பதனை யாரும் அறிய முடியாது என கனவு காண்கிறார்கள்.

இப்படித்தான் எல்லாத் துறைகளிலும் ஊழல் நிரம்பி வழிகிறது. கட்சியின் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் பலரும் இந்தக் குறுகிய காலத்திலேயே, அரட்டி, உருட்டி, மிரட்டிக் கொள்ளையடிக்கிறார்கள். ஊழலில் மட்டுமல்ல; ஒவ்வொரு பகுதியிலும் ரவுடிகள் சாம்ராஜ்யத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தவர்கள் அமைச்சர்களாகவும் எம்எல்ஏக்களாகவும் ஒன்றிய மாவட்ட செயலாளர்களாகவும் பவனி வருகிறார்கள் என்பது இந்த முற்போக்காளர்களுக்கு தெரியாமல் போனது ஏன்? இந்த கேடுகெட்ட விஜய்யா ஊழலை ஒழிக்க போகிறவர்? நேர்மையான ஆட்சியை – நிர்வாகத்தை வழங்கப் போகிறவர்?

எழில்மாறன்

4 COMMENTS

  1. ‘வெட்டிக் கூட்டணி’ என்பதை ‘வெற்றுக் கூட்டணி’ எனப் பயன்படுத்துவதே சரி.

    1. ‘வெட்டி’ எனும் சொல்லின் வரலாற்றுப் பின்னணியும் சாதிய அடக்குமுறையும்

    வெட்டியான் / வெட்டி: சமூகத்தில் இறந்தோரின் பிணங்களை அடக்கம் செய்வதும், மயானங்களைப் பராமரிப்பதும், நிலப்பிரபுத்துவக் காலத்தில் ஊர் வேலைகளைச் செய்வதும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த (தலித்/பஞ்சமர்) மக்களிடம் கட்டாயப் பணிகளாகச் சுமத்தப்பட்டன.

    ஊதியமில்லாச் சுரண்டல் (Unpaid Labor): நிலவுடைமைச் சமூகத்தில் இத்தகைய உழைப்புக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படாமல், “வெட்டி வேலை” (வெறும் வேலை அல்லது ஊதியமில்லா உழைப்பு) என்ற பெயரிலேயே கட்டாயப்படுத்தி வாங்கும் வழக்கம் இருந்தது.

    தொழில் இழிவும் தீண்டாமையும்: பிறப்பால் மனிதர்களைப் பிரித்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் பிணம் எரிக்கும்/அடக்கம் செய்யும் வேலைக்குத் தள்ளி, அதை “இழிவான வேலை” என முத்திரை குத்தியது சாதியக் கட்டமைப்பு.

    2. மொழியில் நிலவும் சாதிய ஆதிக்கம்

    இன்றைய அன்றாடப் பேச்சில், ஒருவர் பயனற்ற காரியத்தைச் செய்தால் அல்லது சும்மா இருந்தால் அவரை “வெட்டிப் பயல்” என்றோ, அவர் செய்வதை “வெட்டி வேலை” என்றோ மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தும் போக்கு நிலவுகிறது.

    மதிப்பீடற்ற உழைப்பு: சமூகத்தின் மிக முக்கியமான மற்றும் கடினமான ஒரு களப் பணியைச் செய்வோரின் தொழிலையும் உழைப்பையும் “பயனற்றது” அல்லது “மதிப்பற்றது” எனக் கொச்சைப்படுத்துவது இதன் பின்னால் உள்ள சாதிய மனோபாவம்.

    தீண்டாமையின் வடிவம்: இச்சொல்லை ஏளனமாகவும் வசைச்சொல்லாகவும் பயன்படுத்தும்போது, அதில் அந்தத் தொழிலைச் சார்ந்த மக்கள் மீதான தீண்டாமையும், தொழிலை வைத்து மனிதனை மதிப்பிடும் வர்க்க/சாதிய இழிவும் இயல்பாகவே வெளிப்படுகிறது.

    -3. மொழித் தூய்மையும் முற்போக்குச் சிந்தனையும்

    மார்க்சிய-பெரியார்-அம்பேத்கர் சிந்தனைப் பார்வையில், அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, மொழியும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.

    ஆணாதிக்கத்தையும் சாதியியலையும் கடத்தக்கூடிய “சண்டாளி”, “புலையன்”, “வெட்டியான்”, “பரதேசி” போன்ற பல சொற்கள் வசைகளாக மாற்றப்பட்டதன் பின்னே ஆளும் வர்க்கத்தின் சாதிய மனோபாவமே உள்ளது.

    இத்தகைய சொற்களின் பின்னுள்ள வர்க்க/சாதியச் சுரண்டலை உணர்ந்து, அவற்றை அன்றாடப் பேச்சிலிருந்தும் எழுத்திலிருந்து புறக்கணிப்பதே ஒரு முற்போக்குச் சமூகத்தின் அடையாளமாகும்.

    “வெட்டி” என்று ஒருவரைத் திட்டுவது வெறும் சொல்லாடல் அல்ல; அது தீண்டாமையையும் தொழில் இழிவையும் இயல்பானதாகக் கருதும் சாதியச் சிந்தனையின் எச்சமே! இத்தகைய மொழியியல் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சமூகநீதிக்கானப் பயணத்தில் மிக முக்கியமானது.

    • மொழியாற்றல் மற்றும் புரிதலில் எனக்குள்ள குறைபாடுகளை உணர்கிறேன். ஆழமான உதாரண விவரங்களுடன் தவறுகளைச் சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி தோழர்.

      உடனடியாக தலைப்பில் மாறுதல் செய்யக்கோரி உரிய இடத்திற்குத் தகவல் தெரிவித்து விட்டேன் தோழர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here