முந்தைய பாகம்: ‘மதச் சார்பற்ற(?) சமூக (அ)நீதி வெற்றுக் கூட்டணி’ எனப் பெயர் சூட்டி இருக்கலாம்!
மதச்சார்பற்றவரா இந்த விஜய்?
திருச்செந்தூருக்கு காவடி தூக்குவதும், வேளாங்கண்ணியில் ஜெபம் நடத்துவதும் தர்காக்களில் குல்லா போட்டுக் கொண்டு தொழுகை செய்யும் வேடம் கட்டுவதும் ‘சர்வ மதக் காவலராக’ விளங்கும் இந்த கிறித்தவர் ஜோசப் விஜய் கரங்களிலே பல வண்ணக் கயிறுகளை கட்டிக்கொண்டு பவனி வருவதையும் கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு ஒன்றரை கிலோ வெள்ளி வேல் அளித்ததையும் பார்க்கின்றோம்! இன்னொருபுறம், எண்ணற்ற அரசியல் மற்றும் அதிகார முக்கியப் பதவிகளில் கிறித்தவர்களை நியமித்திருப்பதும், சட்டமன்றத்தில் சபாநாயகர் உட்பட பைபிள் வாசகங்களைப் படிப்பதும் எந்த வகை மதச்சார்பின்மை என்பதனை இந்த முற்போக்காளர்கள் விளக்கட்டும்!
தற்போது நெல்லை – பாளையங்கோட்டை மேலப்பாளையத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழும் இஸ்லாமியர் பகுதியில் அங்குள்ள இஸ்லாமியர்களை காவல் நிலையங்களுக்கு வரவழைத்து கண் விழிகளை படம் பிடிப்பதும், கைரேகைகளை பதிய வைப்பதும், பெயர்கள் முகவரிகளுடன் பட்டியல் தயாரிப்பதும் எந்த வகையிலான மதச்சார்பின்மையை இந்த கூத்தாடி விஜயின் தவெக அரசு பின்பற்றுகிறது என்பதனை இந்த முற்போக்காளர்கள் சொல்லட்டும்! குறிப்பாக காதர் மைதீன் சொல்லட்டும்!
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் நடக்கும் கொடுமைகளும் லாலி பாடும் ’முற்போக்காளர்களும்’!
2026 மே மாதம் தமது ஆஸ்தான ஜோதிடரான வெற்றிவேல் என்ற ரிக்கி ராதன் பண்டிட்டுக்கு ஐஏஎஸ் அதிகாரிக்கு இணையான ‘முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி’(Officer on Special Duty – OSD – Political) என்ற உத்தரவு வழங்கப்பட்டத என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராதது. தமிழ்நாடு முழுவதும் உருவான எதிர்ப்பலையால் 24 மணி நேரத்திற்குள் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டதும் விஜய் ஆட்சியின் அலங்கோலங்களில் ஒன்று.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பல்லாண்டு காலங்களாக அந்த கோவிலின் தர்மகர்த்தாக்களில் ஒருவரான மறைந்த பி டி ஆர் பழனிவேல்ராஜன் முன்னோர் காலம் தொட்டு அக்கோவிலின் அறங்காவல் பணிகளில் முன்னிலை வகித்தவர்கள் என்ற வரிசையில் அவரது துணைவியாரின் பெயர் கோவில் சார்பாக வெளியிடப்படும் அழைப்பிதழில் இடம் பெறும். அக்கோவில் விழாக் காலங்களில் உரிய மரியாதைகள் வழங்கப்படும்.
ஆனால் இம்முறை அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மாறாக சைவ கோயிலான மீனாட்சி அம்மன் கோவில் அழைப்பிதழில் வைணவக் கோவிலுக்குச் ‘சொந்தக்காரரான’ காஞ்சி சங்கராச்சாரியார் பெயரையும், சம்பந்தமே இல்லாத பிள்ளையார்பட்டி தரம் கெட்ட பிச்சை குருக்கள் என்பவன் பெயரையும் இடம்பெறச் செய்து இருக்கிறார்கள்.
இதற்கு மூல காரணம் விஜய் அரசும், பிரதானமாக RSS-காரனும், கலகக்காரனுமான ‘அமைச்சர்’ நிர்மல் குமார், காவிக் கும்பல், ஒரு சில RSS சார்பு அறநிலையத்துறை அதிகாரிகள், அறநிலையத்துறை அமைச்சரான ரமேஷ் பார்ப்பனனுமே காரணம். முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இப் பிரச்சினையை உயர் நீதிமன்றத்திற்கு அண்மையில் கொண்டு சென்ற பின் விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் அமர்வு கோவில் நிர்வாகத்தின் இத்தகைய தவறான செயற்பாடுகளுக்குப் பலமான கொட்டு வைத்தது மட்டுமின்றி எதிர்வரும் கும்பாபிஷேக நாளில் பி டி ஆர் பழனிவேல் ராஜன் துணைவியாருக்கான அனைத்து மரியாதைகளையும் வழங்கல் வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் நமது சமூக அரசியல் பார்வை வேறுவிதம் கொண்டது எனினும், இழிந்த சனாதானப் பார்ப்பனியமும், காவிப் பாசிஸ்டுகளான RSS பாஜக இந்துத்துவக் கும்பலின் குறுக்குப் புத்திக்கு சாட்டையடி கொடுக்கப்படல் வேண்டும் என்பதே நமது நோக்கம். நிலைமை இவ்வாறு இருக்கின்ற பொழுது இந்த தற்குறி விஜய்யா மதச்சார்பற்ற கொள்கைக்குத் தலைவராக இருக்க முடியும்?
இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது, ‘தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், காமராஜர் வழியில் நடை போடும் தலைவர் விஜய்’ என்று ஆதவ் மட்டும் அல்ல; மாணிக்க தாக்கூர், தொல். திருமா, வைகோ, காதர் மைதீன் போன்றோர் சிலாகிப்பது மகா அசிங்கம் என்பதாக அவர்களுக்குப் புரியாத வகையில் கண்கள் மறைக்கப்பட்டு இருப்பது எதனால்? இவர்கள் இனி முற்போக்கு பேசுவதற்கு என்ன தகுதியைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். விஜய் பாணியில் கூக்குரலிடுவதால் மட்டும் பயன் இல்லை. பிழைப்புவாதத்தன்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது; விஜய்க்கு முட்டுக் கொடுக்கும் அனைவரது வேடங்களும் கலையத் தொடங்கிவிட்டன.
பாஜகவை தமது கொள்கை எதிரியாகப் பாவிப்பவரா கூத்தாடி விஜய்?
நாம் பலமுறை சொல்லிவிட்டோம். RSS பாஜக இந்துத்துவ கும்பல் பெற்று போட்ட கள்ளக் குழந்தையே விஜய்யின் தவெக என்பதை..! தமிழக உரிமைகள் அனைத்தையும் நசுக்கக் கூடிய பாஜக; பேரிடர் நிதி முதல், ஜிஎஸ்டி நிதி உட்பட மாநிலங்களுக்கான பகிர்வு நிதிகளில் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்யும் பாஜக; வந்தே மாதரம் பாடலை பாடக் கோரும் கெடுபிடி; இந்தி – சமஸ்கிருதம் மொழி திணிப்பில் தீவிரம் காட்டும் பாஜக; ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி. ஒரே மதம், ஒரே கல்வி கொள்கைப் போன்ற மாநிலங்களை இல்லாதொழிக்கும் பாஜகவின் அராஜகப் போக்குகள்; வட மாநிலங்களில் சிறுபான்மையினரையும் தலித்களையும் அடக்கி ஒடுக்குதல் – அழித் தொழித்தல், பெண்களை மானபங்கப் படுத்துதல்; நிர்வாணமாக ஊர்வலம் விடுதல்; பாலியல் பலாத்காரம் செய்தல் இவற்றை ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ கும்பல் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது; அராஜகம் புரிகிறது; இந்து மத வெறி பிடித்து கோரத்தாண்டவம் ஆடுகிறது!
இப்படி எண்ணற்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் விஜய்யின் ‘கொள்கை எதிரி பாஜக’ அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கும் வேளையில் ஒரே ஒரு வார்த்தை கண்டனம் செய்து பேசி இருக்கிறாரா இந்த பிழைப்புவாதி விஜய்? நாட்டின் பேரபாய சக்தியான பாஜக தானே பாசிசக் கொள்கையை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது! அதைத்தானே காங்கிரஸ் விசிக ஐ யூ எம் எல் மதிமுக எதிர்ப்பதாக படம் காட்டுகின்றனர்.
மேலும் படிக்க:தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும்
அந்த மதவெறி பாசிச சர்க்காரை எதிர்க்கத் தானே இப்போது புதிய கூட்டணியை (ம.ச.வெ.கூ.) உருவாக்கி இருக்கிறார்கள். அப்படியானால் இந்தக் கூட்டணியின் தலைவர் விஜய் ஏன் பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தைகூட விமர்சித்துப் பேச அல்லது எதிர்த்துப் பேச மறுக்கிறார்? என்பதனை தவெக தவிர்த்த இப்புதிய கூட்டணியின் மற்றைய தலைவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்!
ஏன், கூட்டணியிலும் இல்லை; ஆட்சியிலும் பங்கு பெறவில்லை-என்று சொல்லிக் கொண்டாலும் ‘விஜய் பாஜக எதிர்ப்பு சக்தி’ எனக் கருதிக் கொண்டு விஜய் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் இடதுசாரிகள் என சொல்லப் படுவோரும் பதில் கூற கடமைப்பட்டு இருக்கிறார்கள்! தோல்வி அடைந்து விட்ட எதிர்க்கட்சியாக உட்கார்ந்து இருக்கக்கூடிய திமுக மட்டும் தான் விஜய்க்கு எதிரியாகத் தெரிகிறது. அதனால் தான் திமுகவை மட்டுமே குறிவைத்து தாக்குகிறார் இந்த தற்குறி விஜய். அதற்கு ஆமாம் சாமி போடுகிறார்கள் விஜய்க்கு முட்டுக் கொடுப்பவர்கள்!
திமுகவில் குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால் உள்ளபடியே ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ கொள்கைகளையும் அவர்களது பாசிச அடாவடித்தனங்களையும் திமுக எதிர்க்கின்ற அளவிற்கு தவெக எள்ளின் முனை அளவேணும் எதிர்க்கின்றதா என்பதனை விஜய் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்து நிற்கக்கூடிய அனைத்து கட்சிகளும் பதில் கூற கடமைப்பட்டு இருக்கிறார்கள். இது எந்த வகை நாடக அரங்கேற்றம்?
எதற்குத் தெண்டமாக ரூ.1200 கோடி செலவில் புதிய சட்டமன்ற கட்டிடம்? பரந்தூர் நிலை என்ன?
இவர்கள் கிழிக்கின்ற கிழிக்கு – அடிக்கின்ற கும்மாளம் கூத்துக்களுக்கு ஏற்கனவே உள்ள சட்டமன்ற கட்டிடம் போதுமானதாக இல்லையாம்! புதிதாக ரூ.1200 கோடி செலவில் பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்போரை அப்புறப்படுத்திவிட்டு, மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அபகரித்துவிட்டு 25 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சட்டமன்ற கட்டிடம் பல லட்சம் சதுர அடிகளில் கட்டப் போகிறார் களாம். எதற்கு? கடந்த ‘சுதந்திர தின நாள்’ அன்று முந்தைய காலங்களில் தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்துத் திரிந்த நடிகை திரிஷாவிற்கு வீரவணக்க சல்யூட் ஒன்றினை விஜய் மேற்கொண்டது போல் புதிய சட்ட மன்றத்திலும் உள்ளே அழைத்து வந்து சல்யூட்டு அடிப்பதற்கா? முக்கியமான மக்கள் நலத் திட்டங்களுக்கெல்லாம் கஜானா காலியாக உள்ளது என்போர் இதற்கு மட்டும் எங்கிருந்து மக்கள் வரிப்பணத்தை கொட்டி அழ முற்படுகிறார்கள்?
மக்களிடம் வாக்குகளை அபகரிக்க ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள், மகளிர்க்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை, தமிழ்நாட்டின் அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவச (கட்டணமில்லா) பயணம், வேலையில்லாதோருக்கு மாதம் ரூபாய் 4000, தாலிக்குத் தங்கம், தாய் மாமன் சீர், அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாகப் பயிர் கடன் ரத்து, மகளிர் பாதுகாப்பு, சிங்கப் பெண் படை சீறிப்பாயப் போவது… என்பது போன்ற என்னென்னவோ வாயில் வந்த அனைத்தையும் வாக்குறுதிகளாக அள்ளித் தெளித்தார் விஜய். ஆனால் அவை அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டன. ஒன்றிரண்டு வார்த்தை அளவில் அரைகுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
காவல் நிலைய மரணங்கள், பாலியல் பலாத்காரங்கள், ஆணவப் படுகொலைகள், குற்றச்சம்பவங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக திமுக ஆட்சி காலத்தில் நடந்த பொழுது, ‘என்ன ஸ்டாலின அங்கிள்? சட்ட ஒழுங்கு துறையை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்கின்றீர்கள்? உங்களுக்கு முதலமைச்சர் பதவி எதற்கு? ஸ்டாலின் சார், உங்களுக்கு முதலமைச்சர் நாற்காலி எதற்கு தேவைப்படுகிறது…?’ என்றெல்லாம் வக்கணையாக வாய் கிழிய பேசினீர்களே விஜய், இன்று 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள் என்று கேள்வி எழுப்பினால் சட்டமன்றத்தில் பாடம் நடத்துகின்றீரோ? சினிமா பாணியில் நடித்துக் காண்பிக்கின்றீரோ? இதற்குத்தான் இருக்கின்ற சட்டமன்ற கட்டிடம் போதாது என்று புதிய சட்டமன்ற கட்டிடம் உங்களது பங்களாவுக்கு அருகிலேயே கட்டுவதற்கு எத்தனிக்கின்றீர்களோ? அப்பொழுது தானே உங்களது பங்களா மவுசும் கூடும்! அப்பகுதியில் விலைகளும் ஏறும்!
புதிய சட்டமன்ற கட்டிடம் தேவையே இல்லை. தேவை என எண்ணினால் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு 2010ல் திறக்கப்பட்ட சட்டமன்ற கட்டிடத்தை ஜெயலலிதாவால் கொழுப்பெடுத்துப் போய் வீம்பிற்காக மருத்துவமனையாக மாற்றிய கட்டடத்திற்கு சட்டமன்றத்தை கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சி செய்யட்டும். அதைவிடுத்து எங்குமே விவாதிக்கப்படாமல் பட்டினப்பாக்கம் பகுதியில் – அப்பகுதி மக்களின் கருத்து அறியாமல் விதி 110-ன் கீழ் 25 ஏக்கர் நிலப் பரப்பை கையகப்படுத்தி உத்தரவிட்டது எந்த வகையிலும் சரியானது அல்ல.
‘வச்சாக் குடுமி; செரெச்சா மொட்டை’ என்பது போல் இந்தக் குதிரை பேர சிறுபான்மை அரசை வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் ஆடுகின்றனர் விஜய் மற்றும் அணில் விசில் குஞ்சுகள்! ஓமந்தூரார் அரசினர் தோட்டக் கட்டிடம் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கட்டிடம் தான். மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றி செல்க! அக்கட்டிடத்தை சட்ட மன்றத்திற்கு ஏற்ற வகையில் மறு ஒழுங்கமைவு செய்தால் மட்டும் போதும்.
எனவே பட்டினப்பாக்கம் பகுதி மக்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களும் விஜய்க்கு முட்டுக்கொடுக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் சட்ட மன்றத்தை மக்கள் வரிப்பணத்தில் இருந்து ரூ.1200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கம் பகுதிக்கு மாற்றி கட்டமைப்பு செய்ய எத்தனிக்கும் விஜய் அரசுக்கு எதிராக களம் இறங்கிப் போராடுவோம்!
பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் கைவிடுதல் என்ற அரசின் நிலைப்பாடும் கேலிக் கூத்தானதாக இருக்கிறது. பரந்தூரில் விமான நிலையம் தேவை இல்லை; உழைக்கும் விவசாயிகள் பாதிக்கப்படவே கூடாது என்று அன்று விவசாயிகள் போராடிய பொழுது நீலிக்கண்ணீர் வடித்தது உண்மை என்றால் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களை அம்மக்களிடமே திருப்பி ஒப்படைப்பதே நாணயமான செயலாகும்.
ஆனால் விஜய்யும் தொழில அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் கீர்த்தனாவும் தற்போது நிலங்களை விவசாயிகளுக்குத் திரும்பத் தரப்போவதில்லை; கார்ப்பரேட்டுகளுக்கும் மற்றும் சிப்காட் அமைவதற்கும் பரந்தூர் விவசாய நிலங்களை ஒப்படைப்போம் எனில், அதற்கு விமான நிலையத்திற்கு எடுத்ததாகவே இருந்து விட்டுப் போய் இருக்கலாமே? சினிமாக்காரன் என்பதை ஒவ்வொரு நடவடிக்கையிலும் மெய்ப்பித்துத் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். எனவே, இதற்கு எதிராகவும் மக்கள் போராட வேண்டும்.
இந்தியா கூட்டணியில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ இணையுமா?
‘விஜய் பாசிச பாஜக எதிர்ப்பாளர் என்பதில் அய்யமில்லை; இந்தியா கூட்டணியில் தவெக எதிர்காலத்தில் இணையும் என்பதிலும் அய்யமில்லை; தற்போது ஏன் தவெக இந்தியா கூட்டணியில் இணையவில்லை என்றால் தவெக சார்பான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லாதது தான் காரணம். வரும் 2029 பாராளுமன்ற தேர்தலை ஒட்டி கண்டிப்பாக தவெக இந்தியா கூட்டணியில் இடம்பெறும் என்பதில் எவருக்கும் சந்தேகம் தேவையில்லை…’ என்று மக்களை எல்லாம் முட்டாள்களாகக் கருதிக் கொண்டு அனைவரது காதுகளிலும் பூ சுற்றுகிறார்– காங்கிரஸின் தமிழ் மாநிலத் தலைவர் மாணிக்க தாகூர்.
தற்போது இந்தியா கூட்டணியில் (ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத) இடம் பெற்றுள்ள கட்சிகள் பட்டியல் இதோ:-
- அசாம் தேசிய பரிஷத் (Assam Jatia Parishad)
- ராய்ஜோர் தளம் (Roijor Dal – RD)
- அஞ்சலி கண மோர்ச்சா (Anchalik Gana Morcha – AGM)
- மகா தல்(Mahan Dal – UP)
- கோவா பார்வேர்ட் கட்சி (Goa Forward Party – GFP)
- அனைத்து இந்திய பார்வர்டு பிளாக் (All India Forward Bloc – AIFB) – மேற்குவங்கம் / தமிழ்நாடு.
- பூர்வாஞ்சல் லோக் பரிஷத் (Purbanchal Lok Parishad – PLP) அசாம்.
- அனைத்துக் கட்சி மலைத் தலைவர்கள் மாநாடு (All Party Hill Leaders Conference -APHLC)
- ஹம்ரோ கட்சி (Hamro Party – HP) மேற்கு வங்கம் (டார்ஜிலிங்)
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத மேற்கண்ட கட்சிகளை இந்தியா கூட்டணியில் இணைத்துக் கொண்டது எப்படி என்பதனை தமிழ்நாட்டில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ அமைந்தபின் பேட்டியளித்த இந்த ‘மாபெரும் தலைவர்கள்’ மாணிக்கத் தாக்கூர், தொல் திருமா, வைகோ, காதர் மைதீன், ஆதவ், அருண்ராஜ் போன்றோர் பதில் சொல்வார்களா? எதற்காக முழுப் பொய்யைப் பரப்புகின்றீர்கள்? எதற்காக இந்தப் பம்மாத்து?
விஜய்யின் கூட்டணி ஆட்சி நீடித்து நிலைக்க எந்த அளவிற்கு பாஜக வழிகாட்டு நெறிமுறை களை வகுத்துக் கொடுத்துள்ளதோ அந்த அளவிற்கு மட்டுமே நடிகர் விஜய்யால் நாடக அரங்கேற்றம் செய்ய முடியும். அதற்கு மேல் அவரது நடவடிக்கைகள் நீளுமேயானால் பாஜக விஜய் மீதும் அவரது கட்சியினர் மீதும் தனது ஏவல் படையை ஏவிவிடும் என்பதனை விஜய் நன்றாகவே உணர்ந்துள்ளார். அப்படி ஏவி விடப்பட்டால் 15 நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க மாட்டார் இந்த கோழை விஜய்! அவர் மட்டுமல்ல; தவெக-வில் தம்மை நுழைத்துக் கொண்டுள்ள காக்கி டவுசர் சங்கிகளுக்கும் இவை யாவையும் நன்றாகவே தெரியும்.
எனவே செப்டம்பர் 9 அன்று விஜய் தலைமையில் கூடிய கூட்டத்தில் உருவாக்கப்பட்ட ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ என்பதனை, ‘மதச்சார்பற்ற சமூக அநீதி வெற்றுக் கூட்டணி’ என்பதாக பெயர் மாற்றிக் கொள்வதே கூட்டணிக்கு சாலப் பொருத்தமான பெயராக அமையும்.
தமிழ்நாட்டு மக்கள் இந்த ஒட்டுமொத்த அவலங்களுக்கும் முடிவு கட்ட சரியான புரட்சிகர அரசியல் வழித்தடங்களை தேர்வு செய்யுங்கள்! அதன் பின்னே அணிவகுங்கள்!
எழில்மாறன்







