
இந்தியாவின் முக்கிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக விளங்கி வரும் உ.பி மாநிலம் நொய்டாவில் சுமார் 12,000 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் சுமார் 13 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இங்கு ஆயத்த ஆடைகள், மின்னணுப் பொருட்கள் முதல் வாகன உதிரி பாகங்கள் வரை பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய பிரம்மாண்டமான தொழிற்பேட்டையில் உள்ள சில நிறுவனங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஊதிய உயர்வு மற்றும் பணிச் சூழலை மேம்படுத்த வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே ஹரியானாவின் மனேசர் மற்றும் பானிபட்டில் நடந்த தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து இங்கும் போராட்டம் வெடித்தது. ஹரியானாவில் குறைந்தபட்ச ஊதியம் சுமார் 35 % உயர்த்தப்பட்டதால், தங்களுக்கும் அப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் பலரது மாத சம்பளம் 11,000 முதல் 14,000 வரை மட்டுமே இருந்தது. இதை 20,000 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி சுமார் 40,000 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களில் பெரும்பாலோர் புலம் பெயர்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆவர். ஈரான் மீதானப் போரின் விளைவாக உயர்ந்த விலைவாசி உயர்வும் இவர்களை வாட்டி வதைத்து வந்தது குறிப்பிடத் தக்கது.
போராட்டத்தின் வீச்சை சமாளிக்க முடியாத யோகி ஆதித்யநாத்தின் உ.பி அரசு, திறனற்ற தொழிலாளர்களுக்கான மாத ஊதியத்தை 13,690 ஆகவும், பகுதி திறன் உள்ளவர்களுக்கு 15,059 என்றும், திறனுள்ள தொழிலாளர்களுக்கு 16,868 என்றும் உயர்த்தி அறிவித்தது. இது சுமார் 20 சதவீத ஊதிய உயர்வாகும். கோரிக்கை முழுமையாக ஏற்கப்படாத நிலையிலும், இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனாலும் தனது ஆட்சியில் இப்படியான போராட்டம் நடந்ததை சகித்துக் கொள்ள முடியாத பாசிச யோகி அரசு தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை ஏவியது. அவர்களின் முன்னணியாளர்கள் சுமார் 350 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டங்களை உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு எதிரானதாகவும், நக்சல் அச்சுறுத்தலை மீண்டும் கொண்டு வருவதற்கான சதி என்றும் யோகி கூறினார்.
இந்த சதித்திட்டத்தை முன்னின்று அரங்கேற்றியதாக கைது செய்யப்பட்ட 8 பேர் தொடர்ந்து சிறையில் உள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக ஏப்ரல் 13 அன்று போராட்டத்தில் வன்முறை வெடித்தபோது, தற்போது சிறையில் உள்ள ஆர்வலர்கள் போராட்டக் களத்தில் இருக்கவில்லை. அவர்களில் நான்கு பேர் ஏப்ரல் 11 அன்றே கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆயினும் அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் பணியில் இருந்த காவல்துறையினருக்கு கடுமையான காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த எட்டு பேரில் ஒவ்வொருவர் மீதான வழக்கின் தன்மையை சுருக்கமாகப் பார்ப்போம்.
படிக்க:
♦ தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் அறிக்கை!
♦ நொய்டாவில் தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச பாஜகவின் டபுள் எஞ்சின் சர்க்கார்!
01. ஆதித்யா ஆனந்த்
மென்பொருள் பொறியாளரான இவர் தொழிலாளர் உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் தனது அலுவலகப் பணியுடன் ஏழைக் குழந்தைகளுக்கான வகுப்புகள், பயிலரங்குகள் மற்றும் ஒரு சிறுவர் நூலகத்தையும் நடத்தி வருகிறார். தொழிலாளர் உரிமைகளுக்காக தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார். போராட்டத்தை ஆவணப்படுத்துவதற்காக ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் நொய்டா சென்றார். நொய்டா தொழிலாளர் போராட்டத்தின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள இவர் தமிழ்நாட்டின் திருச்சி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவரும் இவருடன் கைதாகி உள்ள ரூபேஷ் ராயும் தொழிலாளர்களிடையே உரையாற்றும் போது, போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துமாறு வலியுறுத்திய காணொளி இருப்பதாக அவரது சகோதரர் கேஷா கூறுகிறார். இந்தக் காணொளியை காவல்துறை பார்க்கவில்லையா எனவும் கேள்வி எழுப்புகிறார். ஆனந்த் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 8 அன்று தனது சகோதரர் காவல் துறையால் சித்திரவதை செய்யப்பட்டு, கைகள் கடுமையாக வீங்கி இருப்பதாக கேஷா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
2. ஆக்ரிதி சவுத்ரி
டெல்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்று, இப்போது சட்டம் பயின்று வரும் சட்ட மாணவியாகவும், முற்போக்கு கலைஞர்கள் சங்கத்தில் நாடகக் கலைஞராகவும் உள்ளார். குழந்தைகளுக்கான பயிலரங்குகளை நடத்தி வருகிறார். ஏப்ரல் 11 அன்று கைது செய்யப்பட்ட இவர், ஏப்ரல் 13 அன்று நடந்த வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டி, தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் (எவ்வித விசாரணையுமின்றி 12 மாதங்கள் தடுப்புக் கவலையில் வைக்க முடியும்) சிறை வைக்கப் பட்டார். இந்த தேதி முரண்பாட்டை அவரது வழக்கறிஞர் அலி ஜியா கபீர் சுட்டிக்காட்டினார். செப்டம்பர் 1 அன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன் தலைமையிலான அமர்வு, இவர் வன்முறையைத் தூண்டியதற்கான ஆதாரங்களை காவல்துறையிடம் கோரியது. அது சமர்ப்பிக்கப்படாததால் செப்டம்பர் 2 அன்று அவர் மீதான தேசியப் பாதுகாப்பு தடுப்புக் காவலை ரத்து செய்துள்ளது. மேலும் இவருக்கு ஐந்து லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆக்ரிதியின் தந்தையான அருண், “என் மகளைப் பற்றி எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவள் மிகவும் துணிச்சலானவள் மற்றும் அவளுடன் கைதானவர்கள் இன்றைய பகத்சிங்குகள். மற்றவர்களுக்கு எதிரான அநீதிகளை எனது மகள் ஒருபோதும் சகித்துக் கொண்டதில்லை. ஏழைகளுடன் பணியாற்றுவதையும், பொதுமக்களுக்காக நாடகங்கள் நடத்துவதையும் அவள் மிகவும் விரும்புவாள்” என்றார். இவர் மீதும் 11 எஃப்ஐஆர் கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
3. ரூபேஷ் ராய்
நொய்டாவைச் சேர்ந்த 44 வயதுள்ள ஆட்டோ ஓட்டுநரான இவர், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். தொழிலாளர்கள் தங்கள் போராட்ட நிலவரங்களை பகிர்ந்து கொண்ட ஒரு வாட்ஸ் அப் குழுவை நிர்வகித்து வந்தார். “ரிச்சா குளோபல்” என்ற அந்தக் குழுவில் உதவி ஆய்வாளர் பீனா கவுர் என்பவரும் உறுப்பினராக இருந்துள்ளார். ரூபேஷ் கைது செய்யப்பட்டதிலிருந்து அவரது குடும்பம் உறவினர்களையும் நண்பர்களையும் சார்ந்து வாழ வேண்டி உள்ளது. ரூபேஷ் மீதும் 11 வழக்குகள் புனையப்பட்டுள்ளன.
4. சத்யம் வர்மா – மூத்த பத்திரிகையாளர்
65 வயதான இவர் 1991 முதல் 2004 வரை யுஎன்ஐ செய்தி நிறுவனத்தில் பணியாற்றினார். சமீபத்தில் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் குறித்த ஒரு நூலை எழுதியுள்ளார். இவரை காவல்துறையினர் எந்த பிடியாணையும் இன்றி லக்னோவில் உள்ள ஒரு நூலகத்திலிருந்து அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை நொய்டாவில் கைது செய்ததாக காவல்துறை புளுகி உள்ளது. மே 13 அன்று இவர் மீதும் தேசியப் பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டு உள்ளது. நீரிழிவு, தைராய்டு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு 48 மணி நேரத்திற்கு எந்த மருந்தும் வழங்கப்படவில்லை என்று அவரது நண்பர் குற்றம் சாட்டினார்.
5. சிருஷ்டி குப்தா
காட்சிக் கலைஞரான இவருக்கு வயது 28. சாந்தி நிகேதன் பட்டதாரியான இவரை சாதாரண சீருடையில் இருந்த காவலர்கள் கைது செய்தனர். அப்போது பெண் காவலர்கள் யாரும் இல்லை என்றும், கைதுக்கான பிடியாணையோ, குறிப்பாணையோ இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் கபீர் சவுத்ரி கூறினார். இவரோடு ரூபேஷ் ராய், சௌத்திரி மற்றும் சவுகான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 12 அன்று காவல்துறை அதிகாரிகள் ரூபேஷ் ராயை தடிகளால் தாக்கியதை நேரில் பார்த்ததாக இவர் கூறினார். நீதிமன்றக் காவல் அறிக்கையில் இவரது கைது தேதி ஏப்ரல் 15 என்றும், குற்றப்பத்திரிக்கையில் ஏப்ரல் 26 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் சிறையில் அடைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இவரது கைது சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இவருக்கும் ஆக்ரிதி சவுத்ரிக்கும் ஆதரவாக, அவர்களை விடுதலை செய்யக்கோரி மனு அளித்துள்ளனர். இவர் கலையை சமூகத்திற்காக கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
6. மனிஷா சௌஹான்
பீகாரைச் சேர்ந்த 25 வயதான இவர் மீது போராட்டங்களுக்கு தொழிலாளர்களை அணிதிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர் நொய்டா தொழிற்ப்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து மாதம் 22,000 சம்பாதித்து வந்தார். இவரது 60 வயதான தந்தை பொருளாதார ரீதியாக சவுகானையே சார்ந்து இருக்கிறார். கைது செய்யப்பட்ட 8 பேரில், அங்குள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் இவர் மட்டுமே.
7. ஷிமான்ஷு தாக்கூர்
டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று அறிஞரான 24 வயதுள்ள இவர் முனைவர் பட்டத் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, ஏப்ரல் 18 அன்று அவரது அறையில் இருந்து கைது செய்யப்பட்டார். “ஜாமியா பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வுப் படிப்புக்கான நேர்காணலுக்கு செல்ல இருந்த போது இப்படி ஆகிவிட்டது. ஒரு நாளைக்குப் பிறகுதான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது” என்கிறார் அவரது சகோதரி நேகா. ஷாலிமார் பாக் காவல் நிலையத்தில் அவனை போலீசார் அடித்து உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இடதுசாரி மாணவர் அமைப்புடன் தொடர்புடையவராக இருந்ததுடன், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.
8. யோகேஷ் மீனா
23 வயதான இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவர் ஆவார். ரிச்சா குளோபல் தொழிற்சாலை தொழிலாளர்களின் whatsapp குழுவில் வன்முறையைத் தூண்டும் வகையில் செய்திகளை அனுப்பியதாக கூறி மே- 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார். “அக்குழுவில் குரல் பதிவுகளை இவர் அனுப்பியதற்கான ஸ்கிரீன் ஷாட்களை போலீஸ் ஆதாரமாக காட்டுகிறது. ஆனால் அதில் உண்மையில் என்ன சொன்னார் என்பதைக் காட்டும் குரல் பதிவின் எழுத்து வடிவம் குற்ற பத்திரிக்கையில் இல்லை” என்று அவரது வழக்கறிஞர் தெரிவிக்கிறார். கேஷா ஆனந்தின் கூற்றின்படி அந்தக் குழுவில் மீனா அனுப்பிய செய்திகள் காவல்துறையின் துண்டாடும் சதியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தும், நாம் நமது வேலை நிறுத்தத்தை அமைதியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தான் இருந்தன என்கிறார்.
இவர்கள் 8 பேர் மீதும் கலவரத்தை தூண்டுதல், தீவைப்பு, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 11 தனித்தனி எஃப்ஐஆர்- கள் போடப்பட்டுள்ளதால், அனைத்து வழக்குகளிலும் பிணை கிடைக்கும் வரை சிறையில்தான் வாட வேண்டிய நிலை உள்ளது. அனைவரது கைது விபரங்களில் உள்ள முரண்பாடுகள் இவை புனையப்பட்ட வழக்குகள் தான் என்பதை நிரூபிக்கின்றன. இவர்களைத் தவிர வன்முறையில் ஈடுபட்டது, கல் வீச்சில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் 350 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் காவல்துறை கைது செய்தது. இவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு இதுவரை பிணை கிடைத்துள்ளது.
தங்களின் வாழ்வாதாரத்துக்கான ஊதிய உயர்வு, மேம்பட்ட பணிச்சூழல் போன்ற பிரச்சினைகளுக்காகப் போராடியவர்கள் மீதும், அதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரித்தவர்கள் மீதும் எண்ணற்றப் பொய் வழக்குகளை புனைந்து சிறையில் அடைத்து வதைக்கிறது பாசிச யோகி ஆதித்யநாத்தின் அரசு. பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகள் சிறையில் துன்பப்பட வேண்டியிருந்ததைப் போல, தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட செயற்பாட்டாளர்களையும் முடக்க நினைக்கிறது யோகியின் அரசு. தொழிலாளர்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளைக் கூட காலில் போட்டு நசுக்க முயலும், போராட்ட உணர்வையே மழுங்கடிக்க நினைக்கும், பாசிச பாஜக அரசை வரும் தேர்தலில் வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
- குரு





