70களில் இந்தியாவின் சமுதாயப் பொருளாதார கட்டுமானங்களை ஆய்வு செய்த மார்க்சிய லெனினிய அமைப்புகள் இந்திய சமுதாயப் பொருளாதாரக் கட்டமைப்பு அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ பொருள் உற்பத்தி முறையின் மீது அமைந்துள்ளது என்ற முடிவுக்கு வந்தது.
அதிலிருந்து உற்பத்தி முறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்ற மாபெரும் புரட்சிகர கடமையை புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதை என்று முடிவு செய்து அதற்காக அடிப்படை வர்க்கங்களான விவசாயிகள் மத்தியில் பிரதான கவனம் செலுத்துவதாகவும், விவசாயிகளின் தோழமை சக்திகளான தொழிலாளர்கள் மத்தியில் இரண்டாம் பட்ச கவனம் செலுத்துவதாகவும் தனது வேலை முறையை அமைத்துக் கொண்டது.
மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி வட்ட்த்தில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில் இந்த அரசியல் அமல்படுத்த துவங்கியதால் நக்சல்பாரி என்ற பெயரையும் பெறத்துவங்கியது. ஆயுதந்தாங்கிய எழுச்சியின் மூலமாக நிலவுகின்ற அரசு கட்டமைப்பை தகர்த்தெறிவது; பாராளுமன்ற பாதைக்கு வெளியில் மக்களை திரட்டுவது என்று பாதையை வகுத்துக் கொண்ட நக்சல்பாரிய இயக்கங்கள் ஆளும் வர்க்கத்தினாலும், அதன் அடக்குமுறை கருவிகளான ராணுவத்தினாலும், போலீசினாலும் கடுமையாக வேட்டையாடப்பட்டது.
ஆயுதந்தாங்கிய போராட்டத்தை துவக்குவதற்கு முன் நிபந்தனையாக அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதை முன்வைத்து மக்கள் திரள் பாதை என்று தோழர் மாவோ வழிமுறையில் செயல்படத் துவங்கியது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
மக்கள் திரள் வழி என்ற சமூக விஞ்ஞான கோட்பாட்டை அமல்படுத்துவதற்கு போர் தந்திரங்களையும், செயல்தந்திரங்களையும் வகுத்து படிப்படியாக மக்களை அரசியல்படுத்தத் துவங்கியது. மக்களின் சொந்த அனுபவத்தின் மூலமாக நிலவுகின்ற அரசு கட்டமைப்பு தூக்கி எறியப்பட வேண்டும் என்ற உணர்வை உருவாக்குவதற்கு செயல்தந்திர அரசியலின் கீழ் மக்களை திரட்டி வருகின்ற மகத்தான பணியை 90களில் இருந்து செய்யத் துவங்கியது.
90களில் இந்திய மக்களையும், நாட்டையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சி போக்காக முன்னிலை பெற்ற மறுகாலனியாக்கம் மற்றும் பார்ப்பன பாசிசம் ஆகியவற்றை எதிர்த்து அரசியல் செயல்தந்திரத்தை வகுத்து அந்த செயல்தந்திர அரசியலின் கீழ், முழக்கங்களை முன்வைத்து மக்களைத் திரட்டத் துவங்கியது.
பாபர் மசூதி இடிப்பதற்காக இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று ஆர்எஸ்எஸ் பாஜக சங் பரிவார கும்பல் நாடு முழுவதும் உள்ள உழைப்பாளிகளை, ’இந்து’ என்ற போர்வையின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சித்த காலத்தில், ’இந்து’ என்றால் யார்? பார்ப்பனர்களைத் தவிர இந்துக்கள் யாரும் இல்லை என்று எதிர்க் கேள்வி எழுப்பியது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
கருவறைக்குள் நுழைகின்ற அதிகாரமும், உரிமையும் பெற்றவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதால் இந்து மதத்தில் பார்ப்பனர்களை தவிர வேற யாருக்கும் மரியாதை கிடையாது, அதனால் அயோத்திக்கு செல்லவும் வேண்டாம், இந்து என சொல்லவும் வேண்டாம் என்பதை மையப்படுத்தி, திருச்சி ஸ்ரீரங்கநாதன் கோவிலில் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது.
கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்திய போது இந்திய பொருள் முதல்வாத பாரம்பரியத்திற்கு எதிராக அடக்குமுறைகளை ஏவிவந்த பார்ப்பனியம் என்ற கருத்துமுதல் வாதத்திற்கு எதிராக போராடி வந்த சித்தர்கள் முதல் புத்தர், பெரியார்,, அம்பேத்கர் வரையிலான பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கின்ற வகையில் பெரியாரையும், அம்பேத்கரையும் தமிழகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் மத்தியில் புதிய கோணத்தில் கொண்டு சென்று கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது.
பெரியாரையும், அம்பேத்கரையும் முன்வைத்து போராடியதன் காரணமாகவே திராவிட இயக்கங்கள் ”இப்போதாவது கம்யூனிஸ்டுகள் எங்களை புரிந்துக் கொண்டார்கள்: ஒரு வழிக்கு வந்திருக்கிறார்கள்; இந்திய மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பது பெரியார், அம்பேத்கரை தவிர்த்து முடியாது என்பதை புரிந்து கொண்டார்கள்’ என்று கூறிக் கொண்டார்கள்.
படிக்க
♦ மக்கள் அதிகாரம் மாநாடு – கருத்தரங்கம் | நிகழ்ச்சி நிரல்
♦ மக்கள் அதிகாரம் கருத்தரங்கம் மாநாடு கலைநிகழ்ச்சி மே 17, 2025
அதே காலகட்டத்தில் நக்சல்பாரி அரசியலை உயர்த்திப் பிடிப்பதாக கூறிக் கொண்ட மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், மக்கள் யுத்த குழு போன்ற அமைப்புகளும், ”அகில இந்திய புரட்சி சாத்தியமில்லை, தமிழ்நாட்டை முதலில் விடுதலை செய்வோம்” என்று கிளம்பிய புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகியவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலைப் படை, தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி போன்ற தமிழினவாத அமைப்புகள் போன்றவை புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளைப் பற்றி, ’மார்க்சியத்தில் இருந்து விலகி விட்டார்கள்; சீர்திருத்தவாதத்தில் விழுந்து விட்டார்கள்; அவ்வளவுதான் இனி இவர்களை கம்யூனிஸ்டுகள் என்று கூறமுடியாது’ என்றெல்லாம் ஆருடங்களையும், அனுமானங்களையும் அவதூறுகளாக பரப்பத் துவங்கினர்.
திராவிட இயக்கத்தினரின் விருப்பத்தையும் சரி; ’இடது சந்தர்ப்பவாத புரட்சியாளர்களின்’ விருப்பத்தையும் சரி; எப்போதும் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஏற்றுக் கொண்டதில்லை.
புதிய ஜனநாயகப் புரட்சி, ஆயுதப் போராட்டப் பாதை என்பதையே கிளிப் பிள்ளைகளைப் போல திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் மக்களை அரசியல்படுத்தி விட முடியும் என்று மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானத்திற்கு எதிரான பார்வையைக் கொண்டிருந்த, ’இடது சந்தர்ப்பவாதிகள்’, நக்சல்பாரி அமைப்புகள் சாருமஜூம்தார் போன்ற பார்ப்பனத் தலைமையின் கீழ் செயல்படும் அமைப்புகள்தான் என்ற பெரியாரிச அமைப்புகள் போன்றவற்றின் அவதூறுகள், வசவுகள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து விட்டு அரசியல் செயல்தந்திரத்தின் கீழ் மக்களை திரட்டுவது; அதன் நீட்சியாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பது என்ற மக்கள் திரள் பாதையை முன்வைத்து செயல்பட துவங்கி ஏறக்குறைய 40 ஆண்டுகள் ஆகிறது.
கையளவேயான ஒரு சிலரைக் கொண்டு துவங்கப்பட்ட புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இன்று தமிழகத்தின் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும், கேரளாவில் சில பகுதிகளிலும், தமிழக மற்றும் கர்நாடகத்தின் எல்லை பகுதிகளிலும், தமிழகம் மற்றும் ஆந்திராவின் எல்லைப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் செயல்படுகின்ற மக்கள் இயக்கமாக பரிணமித்துள்ளது.
பல்வேறு அடக்குமுறைகள்; சிறைவாசங்கள்; வேலை இழப்புகள்; உயிரிழப்புகள்; ஓரிடத்தில் வாழ முடியாமல் வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தங்கள் போன்ற அனைத்தையும் எதிர்கொண்டு கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக மக்கள் திரள் பாதையில் செயல்தந்திர அரசியல் வழியில் மக்களை திரட்டி முன்னேறி வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
2008- ஏற்பட்ட ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியானது, உலகம் முழுவதும் வலதுசாரி சக்திகள் என்று அழைக்கப்படுகின்ற பாசிச பயங்கரவாதிகள் இனியும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகளை கையாண்டு ஆட்சி நடத்த முடியாது என அறிவித்தனர். பாசிச சர்வாதிகார முறையில் ஆட்சியைக் கைப்பற்றுகின்ற புதிய அரசியல் போக்கு உருவானது. அது இந்திய சமூகத்தில் கார்ப்பரேட் பாசிசமாகவும், காவி பாசிசமாகவும் வெளிப்படுவதை அவதானித்து 2020 காலகட்டத்தில் கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக செயல் தந்திரத்தை வகுத்து அதனை வீழ்த்த செயல்பட்டு வருகிறது.
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவுவது என்பதை இடைக்காலத் தீர்வாகவும், ’தற்காலிக புரட்சிகர அரசாங்கத்தின்’ அரசியல், பொருளாதார, பண்பாட்டு திட்டமாகவும் முன்வைத்து செயல்பட்டு வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
இந்த கார்ப்பரேட் – காவி பாசிச பயங்கரவாதமானது அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாடு ஆகிய அனைத்து துறைகளிலும் வெவ்வேறு அளவுகளில் மக்களின் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ள இந்திய ஒன்றியத்தில் மொழி வழி அமைந்த மாநிலங்களை முற்றாக ஒழித்துக் கட்டுவது, ”ஒரே நாடு-ஒரே சந்தை” என்ற அடிப்படையில் அதிகாரத்தை குவித்து கொள்வது என்று செயல்படுகிறது.
இதனை எதிர்த்து முறியடிப்பதற்கு கடந்த மூன்று மாத காலமாக, ”ஒன்றிய அதிகாரக் குவிப்பை தடுத்திடு! மாநில தன்னாட்சிக்குப் போரிடு!” என்ற முழக்கத்தை முன்வைத்து விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியிலும், கிராமப்புற பகுதிகள், தொழிற்சாலை பகுதிகள், நகர்புறங்களில் உள்ள மக்கள் கூடும் இடங்கள், பேருந்துகள், கடைவீதிகள் என்று லட்சக்கணக்கான மக்களை தனது துண்டறிக்கைகளின் மூலமும், பிரச்சாரங்களின் மூலமும் சென்றடைந்தது.
மக்களை அரசியல் கோரிக்கைகளுக்காக அணி திரட்டுவதன் மூலமாக பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்க முடியும் என்ற அடிப்படையில் சென்னையில் காமராசர் அரங்கத்தில் கருத்தரங்கம் மற்றும் மாநாடு ஒன்றை புதிய ஜனநாயகத்தின் தோழமை அமைப்பான மக்கள் அதிகாரம் 17-5-2025 அன்று நடத்தி முடித்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வாகனங்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் அணி திரட்டப்பட்ட மக்கள் அரங்கை நிறைத்தனர்.
தமிழக அரசியலில் மார்க்சிய லெனினியத்தை அங்கீகரித்து செயல்படுகின்ற சமூக செயல்பாட்டாளர்கள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள் மற்றும் தமிழ் தேசியவாதிகள் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட தனி நபர்கள் உள்ளிட்டு பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்களும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக தன்னாட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மாநாட்டில் திரண்டனர்.
பொதுவாக புரட்சி, சமூக மாற்றம், ஆயுதப் போராட்டம், நக்சல்பாரி அரசியல் என்று பேசிக்கொண்டு 10, 20 பேர் ஒரு குழுவாக செயல்படுவது; எப்போதாவது மக்கள் மத்தியில் சென்று வேலை செய்வது; மீதமுள்ள காலங்களில் சமூக வலைதளங்களில் புரட்சிகர அரட்டை அடிப்பது; ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் தாங்கள்தான் மொத்த சமூக அமைப்பிற்கும் தலைமை தாங்க போகிறோம் என்ற தன்னகங்காரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பது ஆகிய போக்குகள் தலைவிரித்தாடும் சூழலில் மக்களை திரட்டி மார்க்சிய – லெனினிய அரசியலை பருண்மையான சூழலில் பருண்மையாக கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியது மக்கள் அதிகாரம்
.
”செயல்தந்திர அரசியலின் கீழ் மக்களை திரட்டுவது என்பது புரட்சிக்கு தலைமை தாங்கும் விஞ்ஞானக் கலையின் முக்கியமான அம்சம்” என்கின்றார் தோழர் ஸ்டாலின். அரசியல் மற்றும் ராணுவ பாதைகள் ஆகிய இரண்டிற்கும் அரசியல் போர் தந்திரம் மற்றும் அரசியல் செயல் தந்திரம் தான் வழிகாட்டும் மாலுமியாக செயல்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசியல் போராட்டங்கள் நடத்தியும், ஆயிரக்கணக்கான மக்களை அவர்களின் சொந்த கோரிக்கைகள், தனித்தனி வர்க்கக் கோரிக்கைகளுக்கு அப்பால் அரசியல் கோரிக்கைகளுக்காக ஒன்று திரட்டியும் முன்னிலை வகுத்து வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள். இதில் இன்னமும் சாதிக்க வேண்டியதும், கடக்க வேண்டிய தூரமும் அதிகம் என்பதையும் உணர்ந்தே உள்ளது.
இத்தகைய அனுபவங்கள் எதுவும் இல்லாமல் மக்கள் மத்தியில் சென்று வேலை செய்வதை தவிர்த்து, ரகசிய சதிக் குழுக்களாகவும், சாகச வழிமுறைகளை மேற்கொள்கின்ற அராஜகவாதிகளாகவும் சீரழிந்துள்ள ’இடது சந்தர்ப்பவாதிகள்’ முதல் பாராளுமன்ற பாதையின் மூலமாகவே புரட்சியை நடத்தி முடித்து விட முடியும் என்று கெட்டிதட்டிப் போயுள்ள சீரழிந்த வலது சந்தர்ப்பவாதிகள் வரை இத்தகைய முயற்சிகளை புரிந்து கொள்ள முடியாமல் வெவ்வேறு அலைவரிசைகளில் தமது அரசியல் அறியாமையை வெளிப்படுத்தத் துவங்கி விட்டனர்.
ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முன்னதாகவே விடுதலைப்புலிகள் மேற்கொண்ட இராணுவ ரீதியில் கிரமமான போர் வழிமுறையை கைவிட்டு மீண்டும் கொரில்லா வழிமுறைக்கு திரும்ப வேண்டும் என்பதை புதிய ஜனநாயகம் வலியுறுத்தியது. ஆனால் ஈழப் போரை வழி நடத்தி வந்த விடுதலைப்புலிகள் உள்ளிட்ட அமைப்புகள் இத்தகைய வழிமுறைகளை துச்சமாக கருதி நிராகரித்தனர்.
அதேபோல அரசியல் செயல்தந்திரவழி மூலம் மக்களை அரசியல் படுத்துவது; நிலவுகின்ற அரசு கட்டமைப்பு-அரசு அதிகாரம் ஆகியவற்றை தூக்கி எறிவதற்கு சொந்த அனுபவங்களை பெற்றுத் தருவது; புரட்சியை செயல்தந்திர அரசியலின் வழியாக படிப்படியாக முன்னேற்றுவது என்பதை கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக மக்கள் யுத்தக்குழு அதன் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்துள்ள மாவோயிஸ்டுகள் ஆகியவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், தற்போதைய ஆபரேஷன் காகர் வரை இத்தகைய வழிமுறைகளை நிராகரித்துதான் செயல்பட்டு வருகிறார்கள்.
மன்மோகன் காலத்தில் நியாம்கிரி மலையை வேட்டையாடுவதற்கு வேதாந்தாவிற்கு கொடுக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு எதிராக போராடிய மாவோயிச அமைப்புகள் மீது தொடுக்கப்பட்ட, ”ஆபரேஷன் கிரீன் ஹண்ட்” என்பதற்கு எதிராக குரல் கொடுத்து எவ்வாறு போராடியதோ, அதேபோல தற்போதும் ”ஆப்ரேஷன் காகருக்கு” எதிராக போராடி வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
’இழப்புகள், தியாகங்கள் இல்லாமல் புரட்சி ஒருபோதும் முன்னேறாது,’ ’துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ போன்ற முழக்கங்களை கொச்சையாகவும், துண்டு துண்டாகவும் புரிந்துக் கொண்டு தனது சாகச நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்ற ’இடது சந்தர்ப்பவாத’ போக்குகளுக்கு எதிராக மக்கள் திரள் பாதையில் முன்னேறுவோம். அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்களுக்கு இடையிலான உறவை சரியான முறையில் புரிந்துக் கொண்டு மக்களை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரட்டுவோம்.
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு போராடிக் கொண்டிருக்கும்போதே இடைக்கட்டமாக தோன்றியுள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு செயல்தந்திர வழியில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை கட்டியமைப்பதையும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியை கட்டியமைப்பதையும் குறிக்கோளாக கொண்டு படிப்படியாக அரசியல் முழக்கங்களின் கீழ் மக்களை திரட்டுவோம்.
◾ ஆல்பர்ட்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
90க்கு பிறகு செய்த வேலைகளை குறிப்பிட்டுள்ளீர்கள். 90களுக்கு முன்பு செய்த வேலைகள் என்ன?
//தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வாகனங்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் அணி திரட்டப்பட்ட மக்கள் அரங்கை நிறைத்தனர்.// சிறக்கு. ஆனால் எவ்வளவு பேர் கலந்துக் கொண்டனர் எண்ணிக்கையை குறிப்பிட்டால் தானே தெரியும்???