தூத்துக்குடியில் 15 உயிர்களை கொன்று குவித்த ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்படப் போவதாக அதன் அதிபர் அனில் அகர்வால் மீண்டும், மீண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு உரிய திமிர் தெனாவெட்டுடன் அறிவிக்கிறார்.

தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள 30 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்கும் கொடூரனாகவும், ஒட்டுமொத்த இந்திய நாட்டின் எதிரியாகவும் உள்ள அனில் அகர்வால் எப்படி துணிச்சலுடன் இவ்வாறு அறிவிக்க முடிகிறது என்று பார்த்தால் வலுவாக கட்டப்பட்டுள்ள அதன் பின்னனியை புரிந்து கொண்டால் மட்டுமே இந்த திமிரான அறிவிப்புகளை எதிர்த்து முறியடிக்க முடியும்.

பார்ப்பன (இந்து) மதத்தின் முக்கிய சித்தாந்தங்களில் ஒன்றான வேதத்தின் அந்தத்தை விளக்குகின்ற வகையில் வேதாந்தா என்ற பெயருடன் களம் இறங்கியுள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் இந்தியாவிலுள்ள தேசங்கடந்த தரகுமுதலாளிகளில் முன்நிலையிலுள்ள கொடூரமான கொலைகார கார்ப்பரேட் நிறுவனமாகும்.

வேதத்தின் ‘அந்தமும்’, நிதிமூலதனத்தின் ‘காந்தமும்
இணைந்த வேதாந்தா!

இந்தியாவில் இயங்கும் வேதாந்தா குழுவின் அதிபரான அனில் அகர்வால் 1972 இந்த நிறுவனத்தை நிறுவினார். 40 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண இரும்புக்கடை வியாபாரியாக இருந்த அனில் அகர்வால் இந்த நான்கு தசாப்தங்களில் படிப்படியாக முன்னேறி இந்தியாவில் உள்ள சுரங்கம் மற்றும் பெட்ரோல் உற்பத்தி உள்ளிட்ட கனிமவள உற்பத்தியில் ‘முடிசூடா மன்னராக’ திகழ்கிறார். இரும்பு வியாபாரத்தில் துவங்கிய அனிலின் ’உலோகத் திருட்டு’ பின்னர் 1976-ஆம் ஆண்டு ஷம்ஷர் ஸ்டெர்லிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் சட்டப்பூர்வமானது..

2019 ஆம் ஆண்டு மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற போது “பிரதமர் மோடியின் வெற்றி ஒரு ஜனநாயகத்தின் வெற்றி! வளர்ச்சிக்கு வாக்களித்த மக்களுக்கு பெருமை சேர்க்கும் வெற்றி! அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான இன்னிங்சை நோக்கிய அவரது பார்வை இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு பாய்ச்சல்” என்று திருவாய் மலர்ந்தார்.

“பிஜேபி அரசின் செயல்பாடுகள் குறித்து இயற்கை வள ஆதாரங்களின் மீது கவனம் செலுத்தும் பிஜேபி அரசால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அரசாங்கத்திடம் இருந்து இப்படி ஒரு ஆதரவு கனிமவள நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளில் கிடைக்காத ஆதரவு இது” என்று மோடியின் கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தை பச்சையாக வெளிப்படுத்தினார்.

இதற்கு பிரதிபலனாக மோடி கும்பல், வேதாந்தா குழுமத்திற்கு தமிழகத்தில் மட்டும் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் அகழ்ந்தெடுக்க, இயற்கை வளங்களை வாரிக் கொடுத்துள்ளார். நிலப்பகுதி, ஆழமற்ற கடல் பகுதி என 1794 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு 116 எரிவாயு கிணறுகளை அமைக்க அனுமதியும் வழங்கியுள்ளது. இந்த உற்சாகத்தில் நாடு முழுவதும் 55 ஆயிரம் கோடி முதல் 60 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக 2019 ஆம் ஆண்டிலேயே அறிவித்தார் அனில் அகர்வால்.

கார்ப்பரேட்டுகள் நாட்டை சூறையாட வசதியாக சட்டங்களை திருத்திய மோடியை “இந்தியா கனிம வளத் துறையில் பின்தங்கியுள்ள நிலையில் கனிம வளத் துறைக்கு என தனி அமைச்சகம், எண்ணெய் மற்றும் எரிவாயு (oil& gas) எடுக்க வெவ்வேறு விதிகள், கனிமங்களை எடுக்க வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி (Forest and Environment clearences) மற்றும் சுய சான்றிதழ் (Self Certification) போன்றவற்றை பெறுவதில் மிகப் பெரும் தடை உள்ளது. அதை நீக்கி மூன்று மாதத்திற்குள் அனைத்தையும் வழங்க மோடி ஏற்பாடு செய்துள்ளார்கள்” என்று புகழ்ந்து தள்ளினார்.

2019 ஆம் ஆண்டு துப்பாக்கி சூடு நடத்தி அதன் இரத்த வாடை காயாத நிலையில், 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் “இந்தியாவின் கடலோர பகுதியில் ரூ 10,000 கோடியில் புதிய தாமிர உருக்காலை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு உகந்த வகையில் சாலைப் போக்குவரத்து, கப்பல் வசதி, இரயில் போக்குவரத்து வசதிகளுடன் கடலோரத்தில் 1,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது” என்று வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்ப்பரேட்டுக்கு சலுகை! மக்களுக்கு சாவு!
இதுதான் மோடி (ராம) ராஜ்ஜியம்!

அனில் அகர்வால் இந்த சலுகைகள் மற்றும் சுரண்டல், லாப வெறியுடன் கூடிய நிதிமூலதனத்துடன் 2022 ஆம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிக்கை ஆய்வின்படி, சுமார் 300 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள தேசங்கடந்த தரகு முதலாளி. இந்தியாவில் டாப் 100 முதலாளிகள் பட்டியலில் 63 வது இடத்தை பிடித்துள்ளார். பிரிட்டனில் உள்ள லண்டனை தலைமையிடமாகக் கொண்டு துத்தநாகம், ஈயம், வெள்ளி, தாமிரம் இரும்புத்தாது, அலுமினியம் மற்றும் மின்உற்பத்தி, எண்ணெய் & எரிவாயு ஆகிய அனைத்திலும் உலகைச் சூறையாடுகின்ற பகாசுரக் கம்பெனியின் முதலாளி.

உலக அளவில் பல்வேறு நாடுகளில் சுரங்கங்களை கையகப்படுத்தி சூறையாடி வருகின்ற கொலைகார நிறுவனமாகும். இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோகங்களை குறி வைத்து செயல்படுகிறது. ஆஸ்திரேலியா, ஜாம்பியா, நமீபியா, தென்னாப்ரிக்கா மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளிலும் இதற்குக் கிளைகள் உள்ளது. அதே சமயம் இதனுடைய பெரும் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தான் அமைந்துள்ளது.

இந்தியாவில் மும்பையில் தலைமையிடமாகக் கொண்டு சுரங்கத் தொழிலில் அதிக கவனத்தை செலுத்துகின்ற கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ், கோவா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் ஒரிசா போன்ற மாநிலங்களில் இரும்புத்தாது, தங்கம் மற்றும் அலுமினிய சுரங்கங்களைக் கைப்பற்றி சுரண்டிக் கொழுக்கிறது.

 

2001-ஆம் ஆண்டு இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான அலுமினிய உற்பத்தியில் ஈடுபடும் பால்கோ (BALCO) நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்கியது. 2002-ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (HZL) நிறுவனத்தின் 65% பங்குகளை வாங்கியது. இந்த இரண்டு நிறுவனங்களும், பாஜகவின் பிரதமராக இருந்த வாஜ்பாய் அரசால் செயல்பாடு இல்லாத நிறுவனங்கள் என்ற பெயரில் விற்கப்பட்டது. முதன் முதலில் பொதுத்துறைகளின் பங்குகளை விற்பனை செய்யவே ‘டிஸ் இன்வெஸ்மெண்ட்’ என்று தனி அமைச்சகம் ஏற்படுத்தியது ‘தேசபக்தி’ பாஜக. லாபமீட்டாத நிறுவனங்கள் என பெயரிட்டு பொதுத்துறைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது.

இந்த இரு சுரங்கங்களை ஆதாரமாகக் கொண்டு லண்டன் பங்குச் சந்தையில் 2003-ஆம் ஆண்டு பட்டியலிட்டு வேதாந்த ரிசோர்சஸ் என்ற பெயரில் பங்குகளை வெளியிட்டது. மக்களிடமிருந்து நிதியை பங்கு சந்தை மூலம் ஒன்று திரட்டி 876 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுருட்டியது.

அதன் பிறகு 2006 வேதாந்தா ஸ்டெர்லைட் கோல்ட் என்ற நிறுவனத்தை துவங்கி தங்க சுரங்க அகழ்வுகளை துவங்கி சுரண்டும் பணியில் இறங்கியது. 2007-ஆம் ஆண்டு வேதாந்தா ரிசோர்சஸ் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு தாது உற்பத்தி நிறுவனமான சேசா நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்கி கோவாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது.

2008-ஆம் ஆண்டு வேதாந்தா செம்பு சுரங்க தொழிலில் இறங்கி, அசர் கோ என்ற நிறுவனத்தின் சொத்துக்களை கைப்பற்றியது. 2010-ஆம் ஆண்டு ஆங்கில-அமெரிக்க கூட்டு நிறுவனமான ஜிங்க் மைன் சொத்துக்களை விழுங்கியது.

2011-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய தனியார்துறை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான கெய்ர்ன் நிறுவனத்தின் பங்குகளை 59.5% வாங்கி அந்த நிறுவனத்தை விழுங்கியது. 2012-ஆம் ஆண்டில் சேசா கோவா மற்றும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸின் ஒருங்கிணைப்பை அறிவித்தது. இதன் மூலம் பல லட்சம் கோடி நிதி மூலதனத்துடன் உலோக உற்பத்தி மாற்றும் விற்பனை சந்தையில் இறங்கியது.

இந்த இணைப்பின் அடிப்படையில் உருவானதுதான் வேதாந்தா நிறுவனமாகும். இது 2018 இந்தியாவின் மிகப்பெரும் உற்பத்தி நிறுவனமான எலக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் 90 சதவீத பங்குகளை வாங்கி அதனை கட்டுப்படுத்த துவங்கியது.

வேதாந்தாவின் இந்த வளர்ச்சி திடீரென்றோ, அனில் அகர்வாலால் அரும்பாடுபட்டோ உருவாக்கப்பட்டதல்ல. பாஜகவினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகும். வாஜ்பாய் பிரதமராக இருந்த 2001-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிபிஎல், வீடியோகான் ஆகிய நிறுவனங்கள் பங்கு சந்தை மோசடியில் ஹர்ஷத் மேத்தா உடன் இணைந்து மோசடி செய்தது என்று செபி இவர்களின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

1993-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் இருந்து மக்களால் விரட்டப்பட்ட, குஜராத், கோவா, மகாராஷ்டிரா அரசுகளால் தாமிர தயாரிப்பின் போது அதிக சுற்றுச்சூழல் நாசமடையும் என்ற காரணத்தினால் அனுமதி மறுக்கப்பட்ட இந்த கொலைகார நிறுவனமானது, 1997-ஆம் ஆண்டு தூத்துக்குடியை தலைமையகமாகக் கொண்டு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது.

தொடக்கத்தில் நாளொன்றுக்கு 391 முதல் 900 டன் உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் கொஞ்சம் கொஞ்சமாக தனது உற்பத்தியை பெருக்கி 2006-ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 1200 டன்கள் உற்பத்தித் திறன் கொண்டதாகவும் 2009-ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 2400 டன்கள் உற்பத்தி திறன் கொண்டதாகவும் மாறியது. தன்னால் 40,000 டன் வரை உற்பத்தி செய்ய முடியும் என்று மார்தட்டுகிறது.

வேதாந்தாவின் சட்ட விரோத செயல்களுக்கு
சட்ட அங்கீகாரம் கொடுக்கும் அரசு கட்டமைப்பு!

இந்த ஆலையில் செம்பு தவிர செம்பு குச்சிகள், செம்பு கம்பிகள், கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக விளங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் செம்பு உற்பத்தியானது சிவப்பு பட்டியலின் கீழ் வரும் தொழில்களில் ஒன்று என்பதால் அந்த ஆலை சட்டப்படி மக்கள் வாழ்கின்ற பகுதிக்கு வெளியில் சிறப்பு தொழிற்சாலை மற்றும் இடர் விளையும் பகுதியில் அமைய வேண்டுமே தவிர மக்கள் நடமாடும் பகுதியில் அமையக் கூடாது என்று அரசாணை உள்ள போதிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் கிராமத்தில், பொது மக்கள் வாழும் இடத்தில்தான் தற்போது இழுத்து மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் அமைந்துள்ளது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்ற வகையில் காப்பர் என்று சொல்லப்படும் செம்பு கழிவுகள் 3,50,000 டன்கள் ஆலையை சுற்றியுள்ள தனியார் நிலங்களில் சேமிக்கப்பட்டது. இதைத்தவிர ஆலையிலிருந்து வெளியேறிய பழைய கழிவுகள் 7 லட்சத்து 47 ஆயிரத்து 327 மெட்ரிக் டன்கள் அகற்றப்பட்டதாக வேதாந்தா குறிப்பிட்டாலும் அந்த கழிவுகள் அனைத்தும் ஆலைக்கு வெளியில் உள்ள 10 இடங்களில் கொட்டப்பட்டுள்ளது இவற்றின் எடை மட்டும் ஏறக்குறைய சுமார் 5 லட்சத்து 37 ஆயிரத்து 765 மெட்ரிக் டன்கள் ஆகும்.

2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு அங்கு கிடைக்கும் நிலத்தடி நீர் குடிதண்ணீருக்கு பயன்படுத்த முடியாதபடி ஆகிவிட்டது. 2011-ம் ஆண்டு கள ஆய்வில் அப்பகுதி மக்கள் தங்களுக்கு கண்ணெரிச்சல், மூச்சுத்திணறல் ஆகியன விடியற்காலை 4 முதல் 6 மணி வரை நிகழ்வதாகவும் அந்த நேரத்தில் மாசு ஏற்படுத்தும் வாயு காற்று மண்டலத்தில் கலந்து தான் அவ்வாறு நிகழ்கிறது எனவும், கழிவுகள் அனைத்தும் நீரோடைகளில் கலப்பதால் அதைக் குடிக்கும் கால்நடைகள் இறந்து போவதாகவும் 2011ம் ஆண்டு மாவட்ட நிர்வாகமே நீதிமன்றத்தில் பதிவு செய்தது.

இதைவிட கொடூரமாக ஸ்டெர்லைட் ஆலையே கொடுத்த தகவலின்படி, செம்பு உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் பாதரசம் எனும் நச்சு தன்மை கொண்ட உலோகம் கழிவாக வெளியேறும் எனவும், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையின்படி பாதரசம் மற்றும் கோபுரம் அமைக்கப்பட்டு இருக்கவேண்டும் எனவும், அதனால் அந்த பாதரசம் கழிவாக மாறி வளிமண்டலத்திலுள்ள காற்றோடு காற்றாக கலந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கும் எனவும் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த வகை பாதரசத்தின் அளவானது குறைந்து 25.91 மெட்ரிக் இருக்குமெனவும் மதிப்பிடப்படுகிறது.

இதுமட்டுமின்றி மீறி 2005-ஆம் ஆண்டு வழங்கிய சுற்றுச்சூழல் தணிக்கை அறிக்கையின்படி நிலத்தடி நீரில் ஆர்சனிக் மற்றும் காட்மியம், குரோமியம், செம்பு, ஈயம் போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள 40 ஏக்கர் ஜிப்சம் குட்டையில் ஒரு லட்சம் டன் ஜிப்சம் சேமிக்கப்பட்டு உள்ளது. இது தவிர நான்கு லட்சம் டன்கள் பழைய ஜிப்சம் அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜிப்சம் குட்டைக்கு வெளியில் இருந்த கண்காணிப்பு கிணறுகளில் இருந்து எடுத்த தண்ணீரின் தரம் மிக குறைவாகவும், அதில் நச்சு தன்மை மிகுந்து இருப்பதையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் புகைப்படத்துடன் அறிக்கையாக வெளிப்படுத்தியது இவை அனைத்தும் நீதிமன்றத்திற்கு தெரியும். ஆனாலும் மேல்முறையீடு என்று வரும் போது ஒன்றையும் புடுங்குவதில்லை. நீதித்துறையின் யோக்கியதையை நாடே அறியும்.

2004-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தனது தொழிற்சாலைகளில் உருவான ஆயிரக்கணக்கான டன் ஆர்செனிக் மற்றும் கண்டக்டர்கள் கசடுகளை கொட்டியது என்று இதன் மீது வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. 2005-ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் பழங்குடி மக்களை கூலிப்படைகளைக் கொண்டு விரட்டியடித்துவிட்டு பாக்சைட் சுரங்கத்தை அமைக்க முயன்றது.

இந்தியாவில் மட்டுமின்றி தென்னமெரிக்க நாடான ஜாம்பியா நாட்டில் ஓடும் காஃப்யூ நதியில் அபாயகரமான கழிவுகளை கொட்டியது, அதன் செப்பு சுரங்கத்தினால் பாதிக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிகள் 2000 பேர் இதன் மீது வழக்கு தொடுத்தனர்.

இந்த வரிசையில் வந்ததுதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை. சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி தனது கொலைகார நிறுவனத்தின் புதிய கிளையை துவங்குவதற்கு 2018-ஆம் ஆண்டு முயற்சித்தபோது அதற்கு எதிராக உருவான ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மூலம் தொடர்ந்து போராடி வருகின்றனர். அமைதியாக போராடிய மக்க்ளின் மீது வேதாந்தா மற்றும் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் ஒன்றிணைந்து 2018 மே 22 துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தனர். ஆனால் இந்த  கொலைகார்கள் மீது சிபிஐ வழக்கு எதுவும் பதியவில்லை. மாறாக அமைதியாக போராடிய மக்களின் மீதே வழக்கு போட்டு கார்ப்பரேட் பாசிசத்தை நிலைநாட்டியுள்ளனர்.

கார்ப்பரேட் திருடனுக்கு
வள்ளல்பட்டம்!

கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தில் இந்தியாவில் உள்ள தன்னார்வ குழுக்களுடன் இணைந்து சுமார் 1,796 கோடி ரூபாயை வழங்கியுள்ளார். போராடுகின்ற மக்களை பணத்தாசை காட்டி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது என்ற கீழ்த்தரமான வழியை கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி (CSR) என்ற அடைமொழியின் கீழ் கார்ப்பரேட்டுகள் அமல்படுத்து கின்றன.

தனது உற்பத்தியை துவக்கிய சில ஆண்டுகளுக்குள் 1992-ஆம் ஆண்டு முதல் அனில் அகர்வால் குழுமம் வேதாந்தா அறக்கட்டளையை உருவாக்கி மக்களின் உணர்வுகளை காயடிக்கும் சமூக நலத்திட்டங்களை அமல்படுத்துவது என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை நாசம் செய்து விட்டு 4.1 மில்லியன் டாலர் ரூபாயை சூழலியல் பாதுகாப்பு என்ற பெயரிலும், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய வியாதிகளை மக்களுக்கு வழங்கிவிட்டு வேதாந்தா அறக்கட்டளை மூலம் 49 மில்லியன் டாலருக்கு மருத்துவமனையையும் கட்டி மக்களை ‘ஈர்த்து’ வருகிறது.

பில்கேட்ஸ் போன்றவர்களே தனக்கு முன்னுதாரணம் என்று பெருமை பீற்றும் அனில் அகர்வால் தனது சொத்துக்களில் 75 சதவீதத்தை இல்லாதவர்களுக்கு எழுதி வைக்கப் போவதாக அன்புடன் மிரட்டியுள்ளார். இதற்காக இன்னும் என்னென்ன திருவிளையாடல்களை நடத்தப்போகிறாரோ அந்த ஆர்.எஸ்.எஸ் -மோடிக்கே வெளிச்சம்!

கொலைகாரனுக்கு உத்தமர் பட்டம் எதற்கு?
உத்தமர் முகத்திரையை கிழிப்போம்!

இப்படிப்பட்ட கேடுகெட்ட கொலைகார நிறுவனமான வேதாந்தா மற்றும் அனில் அகர்வாலுக்கு எக்கனாமிக் டைம்ஸ் 2012-ஆம் ஆண்டு ‘பிசினஸ் லீடர்’ என்ற விருதையும், 2009-ஆம் ஆண்டு மைனிங் ஜெர்னல் இதழ், ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது ஒன்றையும், 2008-ஆம் ஆண்டு ‘சிறந்த இளம் தொழிலதிபர்’ என்ற விருதையும், 2016-ஆம் ஆண்டு ஆசிய விருதுகள், ஆண்டின் ‘சிறந்த தொழில் முனைவோர்’ என்ற பட்டத்தையும், ‘ஒன் குளோப் ஃபோரம்’ விருது சிறந்த சமூக தாக்கத்தை உருவாக்கியவர் என்ற காரணத்திற்காகவும், 2013-ஆம் ஆண்டு ‘டாக்டர் தாமஸ் கேங்கன் லீடர்ஷிப்’ விருது, ஃபேக்கல்டி ஆஃப் மனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்- இன்ஸ்டியூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட் – ஜெய்பூர் மூலம் வழங்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு ஆசிய சாதனையாளர் விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அனைத்தும் வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நாமும் சில பட்டங்களை வழங்குவோம். தூத்துக்குடி மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களில் வசிக்கும் 30 லட்சம் மக்களுக்கு எதிரி! அவர்களின் வாழ்க்கையை பறிக்கும் கொலைகார நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் துவங்கி கொள்ளையடிக்க விரும்பும் கொள்ளைக்காரன்!. மே-22, 2018 ஆம் ஆண்டு 15 உயிர்களை துடிக்க துடிக்க கொன்ற கொலைகாரன்! திமுக உள்ளிட்டு அனைத்துக் கட்சிகளையும் தனது கார்ப்பரேட் கக்கத்தில் அடக்கி வைத்து, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும், பாசிச முறையிலான ஒடுக்குமுறையையும் ஏவும் கொடிய மிருகம் என்று பட்டமளிப்போம்.

40 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு கடை வைத்திருந்த அனில் அகர்வால் அதிகார வர்க்கத்தின் துணையோடு, ஆளுகின்ற ஆட்சியாளர்களின் கார்ப்பரேட் ஆதரவுக்கொள்கைகளை பயன்படுத்திக்கொண்டு, உலகின் மிகப்பெரும் பணக்காரனாகவும், பல நாடுகளை தமது நிதி மூலதன ஆக்டோபஸ் கரங்களால் இறுக்கிப் பிடித்து சூறையாடுகின்ற கொலைகாரனாகவும் வளர்ந்துள்ள நிலையில், வேதாந்தா நிறுவனத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவது மட்டும் போதாது.

இத்தனை ஆண்டுகாலம் பல லட்சம் மக்களின் உயிரை துச்சமாகக் கருதி மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை உருவாக்கி பிணமாகவும், நடைப்பிணமாகவும் மக்களை மாற்றியுள்ள அனைத்து கொடும் குற்றங்களை இழைத்ததற்கு தண்டணையாக வேதாந்தாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம். அதனை தூத்துக்குடி மக்களுக்கு வழங்கி அவர்களின் நட்டத்தை ஈடுகட்டுவோம்.

கடலில் மூழ்கி முத்தெடுத்து ‘முத்து நகர்’ என்று பெயர் பெற்ற தூத்துக்குடியின் கடற்கரை வேதாந்தாவின் தாமிர கழிவு, அணுக்கழிவு, மின் உற்பத்தி கழிவு, இரசாயன உர ஆலைகளின் கழிவு போன்ற அனைத்தாலும் அழிந்து கிடக்கிறது. பாரம்பரியமிக்க உப்பு தொழிலை அழித்து, மீன்பிடித் தொழிலை ஒழிந்து வீதியில் வீசப்பட்டுள்ள மக்களின் வாழ்வுரிமையை கார்ப்பரேட்டுகளின் கொள்ளையில் இருந்து பாதுகாப்பதற்கு, மீண்டும் ஒரு மக்கள் திரள் எழுச்சியை உருவாக்குவதன் மூலம் உத்தரவாதம் கொடுப்போம்..

• சீராளன்

புதிய ஜனநாயகம் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here