
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரமான பயங்கரவாத இன அழிப்பு தாக்குதல்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தற்காலிகமாக போர் நிறுத்தம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் இஸ்ரேலுக்கு எதிரான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்; சுதந்திர பாலஸ்தீனத்தை வலியுறுத்தி நடந்த பல்வேறு போராட்டங்கள்; ஐரோப்பிய நாடுகளில் நடந்த மாணவர்களின் எழுச்சிகள்; உலகம் முழுவதும் உள்ள இடதுசாரிகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்; ஜனநாயக சக்திகளின் போர் எதிர்ப்பு போராட்டங்கள் ஆகியவை அனைத்தும் இஸ்ரேலை தற்காலிகமாக பின்வாங்க வைத்தது.
ஆனால் உலக மேலாதிக்க போர் வெறி பிடித்த அமெரிக்காவின் இளைய பங்காளியான இஸ்ரேல் நேர்மையாக போர் நிறுத்தத்தை கடைபிடிக்கவில்லை. மாறாக காசாவின் மீதும், பாலஸ்தீனத்தின் இதர பகுதிகளின் மீதும் ஏவுகணை தாக்குதல் முதல் ட்ரோன் தாக்குதல் வரை அனைத்தையும் நடத்தி பல ஆயிரக்கணக்கான உயிர்களை இனப்படுகொலை செய்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 11 லட்சம் மக்கள் குறுகிய நெதரிம் நிலப்பரப்பில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இன அழிப்பு காசா – கடைசிக் கட்டம்
“இது கடைசிக் கட்டமே. இனப்கொலையின் இரத்தம் தோய்ந்த இறுதி அத்தியாயம். இன்னும் சில வாரங்களில் இது முடிவடையும். இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இடிபாடுகளின் மத்தியில் அல்லது வெட்டவெளிகள் நிற்கதியாய் கிடக்கிறார்கள். தினசரி இஸ்ரேலின் குண்டுகள், ஏவுகணைகள், ட்ரோன்கள், வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தும் செத்தும் குவிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்குத் தூய்மையான குடிநீர், மருந்துகள் மற்றும் உணவுகள் இல்லை. அவர்கள் உடல், மனம் என எல்லாம் சிதைந்த நிலையில் உள்ளது. நோயுற்றவர்கள், காயமடைந்தவர்கள், பயந்தவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், ஏழ்மையில் தவித்தவர்கள், பசித்து இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், நம்பிக்கையிழந்தவர்களை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நாமும் தான், நானும் தான்.
இந்தக் கொடூரக் கதையின் இறுதி பக்கங்களில், இஸ்ரேல் பசித்துத் தவிக்கும் பாலஸ்தீனர்களை உணவின் வாக்குறுதிகளால் ஈர்க்கிறது. அவர்கள் எகிப்தின் எல்லையை ஒட்டியுள்ள ஒன்பது மைல் நீளமான நெரிசலான பகுதிக்குள் அழைக்கப்படுகிறார்கள். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மொசாத் அமைப்பால் நிதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் “காசா ஹியூமனிடேரியன் ஃபவுண்டேஷன்” (GHF) எனப்படும் அமைப்பின் பெயருள்ள ஒற்றை நிறுவனம் தான் இந்த மக்களின் பசிக்கான இறுதி நம்பிக்கை. பசியையே ஒரு ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது.
உணவு தரப்போவதாகக் கூறி பாலஸ்தீனர்களை ஈர்க்கின்றது. உண்மையில் உணவு போதுமான அளவில் இல்லை, உதவிக்கூடங்கள் போதுமானதாகவும் இல்லை. நோக்கம் உணவளிப்பதல்ல. நோக்கம் அவர்களை நெருக்கமான காவல் முகாம்களில் திணித்து வைத்து, பிறகு அவர்கள் நிலத்தை விட்டு வெளியேற்றுவதுதான்.
உணவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி வைத்து அந்த சிறிய ஒன்பது மைல் ரிப்பன் வடிவ நிலம் எனக்குப் பெரிய சவப்பெட்டி போல் காட்சியளிக்கிறது, நேற்று இரவு முழுவதும் வாசிக்கையில் என் கண்களிலிருந்து கண்ணீர் அல்ல ரத்தம் சொட்டத் தொடங்கியது.” என்று பாலஸ்தீன மக்களின் அவல நிலையை, துயரம் நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்துள்ளார் தமிழகத்தின் முற்போக்கு எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்…
சமகாலத்தில் நடக்கின்ற இந்த இன அழிப்பு படுகொலையை எதிர்த்து போராடுவதில் இந்திய சமூக அமைப்பு பின்தங்கியே உள்ளது. இந்திய ஒன்றிய அரசாங்கத்தை ஆண்டு வருகின்ற, பாசிச பயங்கரவாத கும்பலான ஆர்எஸ்எஸ் பாஜக தனது சக பாடியான பாசிச பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு ஆதரவளித்து வருவது மட்டுமில்லாமல், இந்த கொலைகார இஸ்ரேல் நாட்டின் ராணுவத் தயாரிப்புகளை வாங்கி உள்நாட்டு மக்களின் மீது போர் தொடுத்து வருகிறது.
பாலஸ்தீன மக்கள் இவ்வாறு தண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல், உணவு இல்லாமல், குடியிருக்க வீடுகள் இல்லாமல் தெருக்களில் திறந்தவெளிகளில் வானத்தையே கூரையாக கொண்டு தனது இறுதி காலத்தை நோக்கி வாழ்ந்து வருவதை சகிக்க முடியாமல் உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி மனிதாபிமான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளனர்.
படிக்க:
🔰 காசாவில் சாவின் விளிம்பில் 14,000 குழந்தைகள்!
🔰 காசா முதல் காஷ்மீர் வரை ஊடகவியலாளர்களின் செயல்பாடு?
2006 ஆம் ஆண்டில் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் குறிப்பாக காசா மக்களுக்கு உதவுவதற்கு உருவாக்கப்பட்டது தான் ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா இயக்கம் தற்போது இத்தகைய முயற்சிகளில் இறங்கியுள்ளது.
அது 2006 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளையும் மீறி பலமுறை பாலஸ்தீனத்திற்கு உதவி செய்துள்ளது.
இந்த தடவையும் அதேபோல சூழலியல் போராளி கிரேட்டா துன்பர்க் மற்றும் அல்ஜசீராவின் பத்திரிக்கையாளர் உமர் ஃபயாத், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹாசன் ஆகியவர்கள் அடங்கிய குழு படகு ஒன்றில் நிவாரண பொருட்களுடன் பாலஸ்தீனத்தின் கரையை அடைவதற்கு முயற்சித்த போது இஸ்ரேல் ராணுவத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டு, இந்த தன்னார்வலர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
உலகம் முழுவதும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கொடூரமான லாப வேட்டைக்கும் மனித இனத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை குறைப்பதற்காக நடத்தப்படுகின்ற இதுபோன்ற இன அழிப்பு போர்கள் மனசாட்சி உள்ளவர்கள் மற்றும் நேர்மையான பத்திரிகையாளர்கள் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் மனசாட்சியை உலுக்கி வருகின்றது.
தமிழகத்தில் எதிர்வரும் 13-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் மரணத்தில் விளிம்பில் நின்று கொண்டுள்ள பாலஸ்தீன மக்களுக்காகவும் குரல் எழுப்புகின்ற வகையில் சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆவின் கேட் வாசல் அருகில் என் எஸ் சி போஸ் சாலையில் ஒன்று குவிந்து போராட உள்ளனர்.
ஐரோப்பாவின் தலைநகரங்கள் துவங்கி தமிழகத்தின் தலைநகரான சென்னை வரை விரிந்து பரவியுள்ள இந்த போராட்டங்களின் மூலம் அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கும், அதன் கூட்டாளியான இஸ்ரேலின் பயங்கரவாத, இனவெறி பிடித்த நெதன்யாகு அரசுக்கும் எதிராக பாட்டாளி வர்க்கத்தின் போர்க்குரலை ஒலிக்கச் செய்வோம்.
சமகாலத்தில் நடக்கின்ற இன அழிப்பு படுகொலைக்கு எதிராக செய்திகளை பார்த்துவிட்டும், கேள்விப்பட்டுக் கொண்டும் வழக்கமாக கடந்து போவதை கைவிட்டு பாலஸ்தீன மக்களுடன் இணைந்து வீதிகளில் திரண்டு நிற்போம்.
◾கணேசன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி