
‘மரத்தமிழர்களை’ உருவாக்கும் சீமான்!
“காடுகள் இருந்தால் தான், அங்கிருக்கும் மரங்கள் மழை பொழிய வைக்கும். மரங்கள் இல்லை என்றால், உலகில் எந்தவொரு உயிரினமும் இருக்காது. மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில், பருவமழை பெறும் மழை கிடையாது. வெறும் புயல் மழை மட்டும் இருக்கும். புவி வெப்பமாவதால், பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.” திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அருங்குளம் வனப்பகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த மரங்களின் மாநாட்டில் எழுச்சி உரையாற்றிய திருவாளர் சீமான் பேசியுள்ளார்.
“முழு பொய்களைக் காட்டிலும் ஆபத்தானது முக்கால் உண்மைகள்” என்பதைப் போல புவி வெப்பமயமாவதற்கு பிரதான காரணமாக உள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் இருந்து வெளியேற்றப்படுகின்ற தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வாயுக்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றி பேசாமல், காடுகள் அழிவதால் மழை குறைகிறது என்றும், புவி வெப்பமயமாகிறது என்றும் அரைகுறை உண்மையை, தனது அறிவியல் அறிவைக் கொண்டு முன் வைத்துள்ளார் திருவாளர் சீமான்.
பருவநிலை மாற்றத்திற்கும் புவி வெப்பமயமாவதற்கும் பிரதான காரணியாக உள்ள பசுமை குடில் வாயுக்கள் அதிக அளவு வெளியேற்றப்படுவதன் காரணமாக சூழலியல் சமநிலை தகர்த்தெறியப்பட்டு புவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பசுமைக்குடில் வாயுக்கள் என்றழைக்கப்படும் நீராவி, கார்பன்-டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் மற்றும் மேகங்கள் போன்றவை, ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்த போது அவை நமக்கு நன்மையளித்தன. இப்போது, நமது வாழ்க்கை முறைகளின் மூலம் இவற்றின் அளவு பெருமளவு அதிகரித்ததே உலகம் வெப்பமயமானதற்கு காரணம்.
இங்கே நமது வாழ்க்கை முறை சூழலியலுக்கு எதிரான லாபவெறி பிடித்த ஏகாதிபத்திய முதலாளித்துவ, மிருகங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதைபடிவ எரிபொருள்கள் – நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு – உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகின்றன, இது உலகளாவிய பசுமை குடில் வாயுக்களான வெளியேற்றத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமாகவும், அனைத்து கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்திலும் கிட்டத்தட்ட 90 சதவீதமாகவும் உள்ளது.
வாகனங்களாலும், தொழிற் சாலைகளாலும், குளிர் தரும் சாதனங்களாலும் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. இதை கிரகிக்கும் அளவுக்கு பச்சைத் தாவரங்கள் போதிய அளவு இல்லை என்பதுதான் உண்மை.
உலகம் முழுவதும் புதைப்படிவ எரிபொருளை பயன்படுத்துகின்ற வாகனங்கள் உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்ற வாகனங்கள் கனரக சரக்கு போக்குவரத்துகளை கொண்டு செல்கின்ற வாகனங்கள் என்ற அனைத்தும் அதன் உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கத்திற்காக ஒவ்வொருவர் தலையிலும் ஏதாவது ஒரு வகையில் இந்த வாகனங்கள் திணிக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் தொழில்துறை அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில், இந்திய கார் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 4 மில்லியனுக்கும் அதிகமான கார்கள் விற்பனையானது. இவை தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து விதமான வாகனங்களும் தனது பங்கிற்கு கார்பன் டை ஆக்சைடை உமிழ்ந்து கொண்டே செல்கிறது.
இத்தகைய வாகன உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளும் தனது பங்கிற்கு “பசுமை இல்ல வாயுக்கள்” (Greenhouse gases) வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றிக் கொண்டே உள்ளது. இவையெல்லாம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்ற அம்சங்கள் தான் என்ற போதிலும் இவற்றில் ஒரே ஒரு பிரச்சனையை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு திருவாளர் சீமான் மரங்களை கட்டிப்பிடித்து, ‘கட்டிப்பிடி வைத்தியம்’ நடத்துவதும், மரங்கள் மாநாடு என்று நடத்தி தனது கட்சி தம்பிகளை ஏய்ப்பது மட்டுமின்றி தமிழக மக்கள் தலையிலும் மிளகாயை அரைக்க துடிக்கிறார்.
அதுமட்டுமின்றி அந்த மாநாட்டில், “நான் ஆட்சிக்கு வந்தால், மரத்தின் ஒரு கிளையை வெட்டினாலும், ஆறு மாதம் சிறை தண்டனை வழங்குவேன். மேலும், மாணவர்கள் 100 மரக்கன்றுகள் நட்டால் பொதுத்தேர்வில் 10 மதிப்பெண், 1,000 மரக்கன்றுகள் நட்டால், அரசு பணிக்கான தேர்வில் 10 மதிப்பெண் வழங்குவேன். 10,009 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு, அவர்களின் இறுதி சடங்கு, அரசு மரியாதையுடன் செய்யப்படும்” என்று வழக்கம்போல பல சவடால்களை அடித்துள்ளார்.
படிக்க: மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய கோமாளி சீமான்!
தமிழ் இலக்கியங்களில் முன்வைக்கப்படும் ‘மறத்தமிழர்கள்’ என்பதை தவறாக புரிந்து கொண்டு, ‘மரத்தமிழர்கள்’ என்று களமாட துவங்கியுள்ள சீமானின் அபத்தங்களுக்கு முடிவு கட்டியாக வேண்டும்.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தில் சுரண்டல் மற்றும் ஆதிக்கம், லாபவெறி பிடித்த கொள்ளை ஆகியவற்றுக்கு எதிராக வர்க்க போராட்டத்தை தீவிரமாக நடத்துவதற்கு கம்யூனிஸ்டுகள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்காக மக்களை அணி திரட்டி வருகிறார்கள்.
இந்த வர்க்க போராட்டத்தை திசை திருப்புவதற்கு, மக்களின் பாதிப்புகளில் பிரதானமான அம்சத்தை கண்டுபிடித்து அதற்கு எதிராக போராடி முரண்பாட்டை தீர்ப்பதற்கு பதிலாக ஏகாதிபத்திய முதலாளித்துவம் உருவாக்குகின்ற சிக்கல்கள் மூலம் உருவாகின்ற விளைவுகளுக்கு எதிராக போராடுவது, அதையே தனது சாதனையாக காட்டிக் கொள்வது என்பதை சீமான் போன்ற தமிழ் பாசிச கும்பல் துணிந்து நடத்திக் கொண்டுள்ளது.
ஏற்கனவே ஆடு, மாடு மாநாடு நடத்தியது; தற்போது மரங்கள் மாநாடு என்று அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கு சென்றுள்ளது. இதன் வளர்ச்சிப் போக்கில் வனவிலங்குகள் மாநாடு, காட்டுயிரிகள் மாநாடு, பல்லுயிரிகள் மாநாடு என்றெல்லாம் திருவாளர் சீமான் படம் காட்டுவதற்குள் அவரது தலைமையின் கீழ் சிக்கியுள்ள இளைஞர்களையும் தமிழக மக்களையும் காப்பாற்றுகின்ற பொறுப்பு பாட்டாளி வர்க்கத்திற்கு உள்ளது.
◾கரட்டுப்பட்டியான்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







புதிதாக தேர்தல் அரசியல் களத்திற்கு வந்து இளைஞர்களை மடைமாற்றும் சீமான் ,விஜய் உள்ளிட்ட யாராக இருந்தாலும் தனியார் மையம், தாராள மையம், உலக மையம் என்ற முதலாளித்துவ கொள்கையை வீழ்த்த வேண்டும் என்ற கொள்கை இல்லாமல் அதற்காக போராடாமல் தற்கால பிரச்சனைகளை மட்டும் எடுத்து ஊழல் ஒழிப்பு ,வன பாதுகாப்பு ,இயற்கை நேசிப்பது என்று குறுகிய கண்ணோட்டத்தில் ஆளுக வர்க்கத்தின் கைக்கூலியாக செயல்பட்டு அடுத்த தலைமுறை இளைஞர்கள் சீரழிக்கிறார்கள். புதிதாக வரும் இளைஞர்களை சிந்தனைய அளவில் ஆக்கப்பூர்வமாக போராடுவதற்கு நாம் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டி உள்ளது.