கிண்டி ஆளுநர் மாளிகை என்பது சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த சோலை போன்ற பகுதியில் அமைந்துள்ளது. அங்கே ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் எவர் நியமிக்கப்பட்டாலும், மாளிகையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும், இன்ன பிற எண்ணற்ற செலவினங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தால் தமிழ்நாடு அரசே செலவு செய்கிறது.

ஆனால் மற்ற எல்லோரையும் விட ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற நாள் முதல் ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் –  பாஜக – சங் பரிவார் – மதவெறி கூட்டத்தின் தலைமையகமாக மாற்றிக் கொண்டு செயல்படுவதை பல்வேறு அவரது செயற்பாடுகள் மூலமாக அவதானித்தே வருகிறோம். அதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும். அதனை கட்டுரையின் பிற்பகுதியில் சுருக்கமாகக் காணலாம்.

ஆனால், கடந்த 25-11-2025 அன்று ஆளுநர் மாளிகையில் ‘கலியுகம் பற்றிய கல்வெட்டுகள்’ என்ற ‘கல்வெட்டு ஆராய்ச்சியாளர்- வரலாற்று ஆசிரியர்’ எனப் புனையப்படும் எம்.எல்.ராஜா எழுதிய நூலை வெளியிட்டு சனாதனப் பார்ப்பனக் கொழுப்பும் – IPS என்ற அதிகார வெறியும் – RSS, பாஜக சங்பரிவார் இந்து மத வெறி போதையும் ஒருங்கிணைந்து உலக மானுடத்திற்கே விடியல் தத்துவங்களை வடித்துச் சென்ற ஆசான் கார்ல்மார்க்ஸ் பற்றி நாக்கில் நரம்பின்றி கீழ்க்கண்டவாறு திமிர் எடுத்துப் பேசி இருக்கிறார்:

‘நான் படித்த காலத்தில் பள்ளியிலும், வீட்டிலும், ஊரிலும் சொல்லப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருந்தது. அவை உண்மையிலிருந்து ரொம்பத் தூரம் விலகி இருந்தது என்பதை என்னால் காண முடிந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உயிருடன் இருந்தனர். ஆனால் எதிர்பாராவிதமாக ஆங்கிலேயர் ஆட்சி நன்றாக இருந்தது அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று வரலாற்று புத்தகங்களில் எழுதி உள்ளனர்…

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆங்கிலேயர்களின் பிரதிநிதிகள் தான் ஆட்சி நடத்தினர்; கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூலில் ‘ஏகாதிபத்திய கொள்கைக்கு நான் எதிரானவன்; ஆனால் இந்தியாவுக்கு ஏகாதிபத்தியம் தேவை’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். சுதந்திரத்திற்குப் பிறகு கார்ல் மார்க்ஸைப் பின்பற்றியவர்கள் நமது நாகரீகத்தையும், கலாச்சார வரலாற்றையும் அழித்துவிட்டனர்…

ஆனால், இங்கு வெளியிடப்பட்ட நூலின் ஆசிரியர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள், நமது வரலாற்றை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். இந்தியா தற்போது விழித்துக் கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில் இன்னும் கலியுகத்தை நம்புகிறார்கள்;

ஆனால் கல்லூரி மாணவர்கள் படிக்கும் பாட புத்தகங்களில் அது ஒரு புனைவுக் கதையாகவே சித்தரிக்கப்படுகிறது; 900-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் நம் நாட்டை தாண்டியும், பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன; நாட்டின் வரலாற்றை புரிந்து கொள்வதில் இந்நூல் முக்கியப் பங்கு வகிக்கும்; நம் உண்மையான வரலாறு குறித்து மாணவர்களும் ஆய்வில் ஈடுபட வேண்டும்…’

– இவைதான் ஆளுநர் ஆர். என். ரவி ஆளுநர் மாளிகையில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சின் சாரமாகும்.

மார்க்ஸ் குறித்துப் பேசுவதற்கு இந்தத் தற்குறிக்கு ஏது தகுதி?

மார்க்ஸ் கூறியதாக ஆர்.என்.ரவி மேலே கூறியவை அனைத்தும் பொய்யும் புனைச்சுருட்டும் ஆகும் என்பது தெள்ளத் தெளிவு.

இதுபற்றி நாம், மார்க்ஸ் இந்தியா பற்றி என்ன சொன்னார் என்பது குறித்து ஆழமாக விளக்குவதற்கு முன்,  ஆரியன் ஆர்.என்.ரவி வெளியிட்ட ‘கலியுக கல்வெட்டுகள்’  பற்றிய ஏ.எல்.ராஜாவின் நூலை நாம் படிக்காமல் அந்த நூலைப் பற்றி கருத்துப் பதிவிட முடியாது. வாய்ப்பு கிட்டும் பொழுது படிக்கலாம். அது ஒரு புறம் கிடக்கட்டும்.

ஆனால், கலியுகம் போற்றும் நூலாக இருப்பதால், யுகங்களை பற்றி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

படிக்க:

 சகமனிதனைக் கொல்லும் பார்ப்பன (இந்து) மதவெறி! மனித நேயத்தை பரப்பும் சுத்த சன்மார்க்க நெறி!! மீள்பதிவு

 மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தமிழக கவர்னர் ஆர் என் ரவி பிதற்றல்!

இந்து புராண இதிகாசங்களின்படி 4 யுகங்கள் உள்ளனவாம். இந்த நான்கு யுகங்களின் சுழற்சி ஒரு ‘மகாயுகம்'(Magayuga)-மாம். தற்போது நாம் வாழ்வது ‘கலியுகம்’-என்ற காலக் கட்டத்திலாம்.

நான்கு யுகங்களும் அதன் கால அளவுகளும் கீழ்க்கண்டவாறு வரையறுத்து நம்மை தலை சுற்ற வைத்திருக்கிறார்கள் சனாதனப் பார்ப்பனீய இந்துத்துவவாதிகள். கீழே பாருங்கள்:

1.சத்திய யுகம்

(Krita yuga) = 17,28,000
(17.28) லட்சம் ஆண்டுகள்.

  1. திரேதாயுகம்

(Dhretha yuga) =12,96,000
(12.96)லட்சம் ஆண்டுகள்.

  1. துவாபர யுகம்

(Dhuvabarayuga)= 08,64,000
(8.64)லட்சம் ஆண்டுகள்.

  1. கலியுகம்

(Kali yuga)= 04,32,000
(4.32)லட்சம் ஆண்டுகள்.

இந்த நான்கு யுகங்களின் மொத்தக் கால அளவு 43,20,000 (43.2) லட்சம் ஆண்டுகள் ஆகுமாம். அதாவது இதுதான் ஒரு மகாயுகத்தின் கால அளவாகும். இது சுழற்சி முறையில் வந்து கொண்டிருக்குமாம்.

இந்த மகா யுகம் எத்தனையாவது சுழற்சியில் தற்போதைய கலியுகத்தை அடைந்திருக்கிறது என்ற கேள்விகளை எல்லாம் ‘முட்டாள்தனமாக’ நாம் எவரும் கேள்வி கேட்டு விடக்கூடாது. ஆனால் ‘அது எங்கள் நம்பிக்கை சார்ந்த உண்மை; அதனை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்; கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாது; இல்லையேல், எரித்து சாம்பலாக்கி விடுவோம்’ என்கிறது சனாதன பார்ப்பனீயக் கூட்டம்.

தற்போது நடக்கும் கலியுகம் ‘லார்ட் கிருஷ்ணா’ மறைந்த பிறகு துவங்கப்பட்ட காலக்கட்டமாம். அதாவது கலியுகம் துவங்கி ஐந்தாயிரத்து சொச்சம் ஆண்டுகளைக் கடந்துள்ளதாம். இன்னும் நான்கு லட்சத்து சொச்சம் ஆண்டுகள் பாக்கி உள்ளனவாம்.

‘லார்ட் ராமன்’, அவனது அப்பன் ‘தசரதன்’ & கோ. போன்றோர் வாழ்ந்த காலக் கட்டம் என்பது கலியுகத்திற்கு முந்தைய துவாபர யுகத்திற்கும் முந்தைய திரேதா யுகம் என்ற காலக் கட்டமாம். ஏறத்தாழ 15  லட்சம் முதல் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். இதை நாம் நம்ப வேண்டும்.

இங்கே நாம் விஞ்ஞானபூர்வமாக கவனிக்க வேண்டியது யாதெனில், பரிணாம வளர்ச்சித் தத்துவப்படி “உயிரினங்களின் தோற்றம்” (On the Origin of Species)  விஞ்ஞானக் கண்ணோட்டத்திலான ஆய்வு உண்மையை அறிவியல் மேதை சார்லஸ் டார்வின் (1809-1882) வெளி உலகிற்கு வெளிப்படுத்திய நாள் 24-11-1859 ஆகும். இவரது மகத்தான கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்பது விஞ்ஞான ரீதியான பரிணாம வளர்ச்சிப் போக்கின் இறுதியில், மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்ற இறுதி முடிவுக்கு வருகிறார். அவ்வாறு விஞ்ஞான ரீதியாக கணக்கீடு செய்து பார்க்கின்ற பொழுது சமூகவியல் விஞ்ஞானிகள் மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய காலக் கட்டம் என்பது தற்போது வரை சுமார் 30,000 (முப்பதாயிரம்) ஆண்டுகள் மட்டுமே என்பதை அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கிறார்கள். இந்தக் கால அளவில்தான் மனித இனம் காட்டுமிராண்டி காலம் தொட்டு பல்வேறு படிநிலைகளை பரிணாம வளர்ச்சியின் மூலமாகக் கடந்து இன்று வரை வந்துள்ளது மட்டுமின்றி இனியும் மாறிக்கொண்டே இருக்கப் போகிறது.

படிக்க:

 திருவள்ளுவர் தொடர்ந்து அவமதிப்பு: தமிழ் மண்ணில் இருந்து R.N. ரவி விரட்டியடிக்கப்படல் வேண்டும்!

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உச்சந்தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்த உச்சநீதிமன்றம்!

அப்படியெனில் மேற்கண்ட நான்கு வகை யுகங்கள் சம்பந்தப்பட்ட பார்ப்பனீய இந்து புரட்டல்வாதிகள் எவ்வளவு கேவலங்கெட்ட தனமான புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை மடமையில் மூழ்கடித்து உள்ளனர் என்பது மட்டுமல்ல; இப்படித்தான்… பிறந்து வாழாத கற்பனைப் பாத்திரமான ராமனுக்காக பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி, பல நூறு மக்களை கொன்று குவித்து அந்த ரத்தச் சுவட்டிலேயே ராமன் கோயிலையும் கட்டி விட்டார்கள் இந்தக் கலவரக்காரர்கள். இன்னும் தொடர்ந்து அதே பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். அதை வைத்தே அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மோசடிகள் பலவும், கொலைபாதக செயல்கள் பலவும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு சாட்சியம் தான் ஆளுநர் மாளிகையை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் ஆர்.என். ரவியின் செயற்பாடுகள் ஆகும்.

சார்லஸ் டார்வினின் ஆராய்ந்து முன்வைத்த பேருண்மையை  சமூகவியல் விஞ்ஞானிகளான ஆசான்கள் கார்ல் மார்க்ஸும், பிரெடெரிக் எங்கெல்ஸும் அலசி ஆராய்ந்து  ஏற்றுக் கொண்டனர். அது மட்டுமல்ல; “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைக்காலத்தில் உழைப்பின் பாத்திரம்” என்ற அரிய நூலை ஆசான் ஏங்கெல்ஸ் படைத்தார். ஆசான் மார்க்ஸ்,  மூலதனம் படைத்தது மட்டுமல்ல; சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்திலிருந்து… மனிதனாக உருவெடுத்த காலம் முதல் முற்றுப்பெறும் அல்லது தொடரும் காலம் வரை எப்படி மனித சமூகம் மாறிக்கொண்டே வரும் என்பதனை இயக்கவியல் பொருள் முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள் முதல்வாதம் வழியே  மானுட உலகத்திற்கு தெள்ளத் தெளிவாக எண்ணிலடங்கா புரட்சிகரத் தத்துவ படைப்புக்களை –  சமத்துவ சமுதாயம் சென்றடைவதற்கான தத்துவங்களை வழங்கிச் சென்றார். அவர் ஜெர்மெனியில் பிறந்திருந்தாலும் அவர் ஜெர்மனியராக வாழவில்லை. அவர் கண்டுபிடித்த தத்துவங்கள் யாவும் முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய வல்லூறுகளுக்கு பேராபத்தானது என்பதனை உணர்ந்த சுரண்டும் கூட்டம் அவரை குடும்பத்தோடு ஒவ்வொரு நாடாக நாடு கடத்தி எண்ணிலடங்கா கொடுமைகளுக்கு உள்ளாக்கியது. எனவே அவர் ஒரு சர்வதேச பிரஜை. அத்தத்துவங்களைப் பற்றி எல்லாம் இந்த தறிகெட்ட ஆர்.என்.ரவியிடம் எடுத்துச் சொல்லி புரிய வைப்பதற்கென நாம் காலத்தை வீணடிப்பது வீண்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்துத்துவ ஆன்மீக வெறி பிரச்சாரங்கள் கட்டுக்கடங்காமல் உள்ளன. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்று இவரும் பல்வேறு விதமான ஆன்மீகம் சார்ந்த – RSS-க்கு இயைந்த படு மட்டமகரமான கலவரங்களைத் தூண்டும் இவரது ‘ஆன்மீக யுக்திகளை’ பல்வேறு தருணங்களில் கண்டிருக்கிறோம்.

“ஆறுதல் தருதலும் நியாயம் கற்பித்தலும் மதத்தின் சர்வ வியாபாகத் தன்மைகளாகும். மனித சாரம் உண்மையில் நிஜமாக இல்லாததால், அதுவே மனித சாரத்தை அதீத கற்பனையில் நிஜமாக்குகிறது. அதே நேரத்தில் சமய உலகில் வெளிப்படும் துன்பம்,  உண்மை உலகில் காணப்படும் துன்பத்தின் வெளிப்பாடுதான். உண்மை உலகில், துன்பத்தின் எதிர்ப்புக் குரலும் ஆகும். மதம் என்பது அடக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகும். இதயமற்ற உலகத்தின் இதயமாகும். ஆன்மா அற்ற நிலையில் உள்ள ஆன்மா ஆகும். மக்களை மயக்கும் அபினி ஆகும் மதம்”

இவ்வாறு மார்க்ஸ் மதம் பற்றி வரையறுத்துக் கூறுகிறார். அவர் குறிப்பிடுவது – சாடுவது குறிப்பிட்ட மதம் சார்ந்தது மட்டுமல்ல; எல்லா மதங்களுக்கும் பொதுவானது. துரதிஷ்டவசமாக மதங்களில் ஆக கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் கொண்டது இந்திய நாட்டில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கிய – அதற்கு அடித்தளமிட்ட சனாதன பார்ப்பனீய ‘இந்து மதம்’ என்பதை மறுப்பதற்கு இல்லை. அதனிடம்தான் இந்த ஆரியன் ஆர்.என்.ரவி சரணாகதி ஆகிக் கிடக்கிறார். இந்த லட்சணத்தில் ஆசான் காரல் மார்க்ஸின் செருப்பு தூசுக்கு கூட பெருமானம் இல்லாத இந்த நபர் அவரைப் பற்றி துடுக்காக துணிந்து பொய் பேசுவதை கம்யூனிஸ்டுகள் என்றும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அதற்கான விலையை அவர் அனுபவித்தே தீருவார்.

பாஜக கும்பல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இப்படிப்பட்ட கேடுகெட்ட ஆளுநர்களை நியமனம் செய்து அம்மாநில மக்களையும், மாநில அரசுகளையும் பழிவாங்கும் கண்ணோட்டத்துடனேயேயும், அம்மாநில மக்களின் நலனுக்கெதிராகவும் அனைத்து வகைகளிலும் செயல்பட வைக்கிறது மோடி அமித்ஷா கும்பல்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் எண்ணற்ற மசோதாக்களை தன் நாற்காலிக்கு அடியில் போட்டு வைத்துக்கொண்டு வேண்டுமென்றே கால நீட்சி செய்கின்ற கடைந்தெடுத்த – வடிகட்டிய அயோக்கியத்தனத்தை – அதிகார வெறியை மற்ற எவரையும் விட காட்டுகிறார் RN.ரவி.

‘தான் கையெழுத்துப் போடவில்லை என்றால், அல்லது தாமதிக்கிறேன் என்றால் அந்த மசோதா செத்துப் போனதற்கு சமம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்’ – என்று இறுமாப்புடன் பேசுகிறார் என்றால் இவரை தமிழ்நாட்டில் எவ்வளவு காலத்திற்கு வைத்துக் கொண்டிருப்பது? இத்தகு இவரது கொடுஞ்செயல்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு சென்றால் நீதிபதிகள் பர்திவாலா- மகாதேவன் அமர்வு அத்தி பூத்தாற் போல தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக கடந்த ஏப்ரல் 8 அன்று ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து காலம் நிர்ணயம் செய்து, குடியரசு தலைவருக்கும் கூட கால நிர்ணயம் செய்து பத்துக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு முன் தேதியிட்டு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டாத பாசிச பாஜக மோடி அரசு நேரடியாக மேல் முறையீடு செய்ய வக்கற்று -துணிவற்று, ஜனாதிபதி மூலமாக 14 கேள்விகளை எழுப்பி, அதாவது ஆளுநர், ஜனாதிபதி போன்றோருக்கு கால நிர்ணயம் செய்யலாமா? என்பது உட்பட பற்பல கேள்விகளை திரௌபதி முர்மு கேள்விகளை அடுக்கினார்.

மனுஷன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து கடந்த நவம்பர் 23இல் ஓய்வு பெற்ற பி.ஆர்.கவாய் ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் காவிக்கும்பலுக்கு சாதகமான தீர்ப்பை அளித்து ஆளுநருக்கு வரம்பற்ற அதிகாரத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆளுநரால் பிரச்சனை இருந்தால் அவ்வப்பொழுது நீதிமன்றங்களை நாடிக் கொள்ள வேண்டியதுதான் என்று மொன்னையான தீர்ப்பினை வழங்கி,  அம்பேத்கர் உணர்வுகளுக்கே வேட்டு வைத்தார் கவாய்.

இதுதான் பாராளுமன்ற ஜனநாயக, நீதிமன்ற பரிபாலன, தேர்தல் ஆணைய ஒருதலை சார்பற்ற, நடுநிலையாக செய்தி வெளியிடுவதாக காண்பித்துக் கொள்ளும் ஊடகங்கள், இன்ன பிற அதிகார வர்க்க தூண்கள்… அனைத்துமே செல்லரித்து இற்று விழும் நிலைக்கு வந்து விட்டன.

“நடவு செய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும்;

உடலுழைப்பு இல்லாத செல்வர் உலகை ஆண்டு உலாவலும்;

கடவுள் ஆணை என்றுரைத்த கயவர் கூட்டம் மீதிலே கடவுள் என்ற கட்டறுத்து தொழிலாளரை ஏவுவோம்”

“ஓடப்பராய் இருக்கும் ஏழை யப்பர் – உதையப்பர் ஆகிவிட்டால் – ஓர் நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ”

என்ற பாரதிதாசனின் வீர வரிகளை ஆர்.என். ரவியே யாரிடமாவது படிக்க கேட்டு அதன் அர்த்தம் புரிந்து கொள். எச்சரிக்கையாக நடமாட முடிவெடு!

மக்கள் எழுச்சி பெற வேண்டிய தருணம் இது; மக்களுக்கு வழிகாட்டி என்ஜினாக இருந்து இழுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் புரட்சிகர இயக்கங்களுக்கும் உரியதாக அமைந்துள்ளன. அதனை அறிந்து அனைவரும் களமாடுவோம்! சதிராட்டம் போடும் RSS ரவி போன்றோரின் வாலை ஒட்ட நறுக்கித் தள்ளுவோம்!

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here