எதிர்க்கட்சிகள் மீது மோடி அரசின் பாசிச தாக்குதல்!


ருகின்ற 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 18-வது பொதுத் தேர்தலுக்கான செயல் உத்திகளை பாஜக வகுத்து செயல்பட த்தொடங்கியுள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சிகளே இல்லாத அல்லது எதிர்க்கட்சிகளை பலவீனம் அடையச் செய்து தேர்தலை எதிர்கொள்வது என்ற அடிப்படையில் திட்டம் வகுத்து வேலைகளைக் கொண்டு செல்கிறது.

பாசிச மோடி அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கான செயல் தந்திரமாக ரெய்டுகளை பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்து கைதுகளும், சம்மன்களும் இந்தியாவின் எதிர்க் கட்சிகளை நோக்கியதாகவே உள்ளது.

இதற்காக, அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate), வருமான வரித்துறை (Income Tax Department), மத்திய புலனாய்வு அமைப்பு (CBI), தேசிய புலனாய்வு முகமை (NIA) போன்ற பல்வேறு அரசு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது.

மக்களால் தேர்வு செய்யப்படாத, அரசின் இந்த அதிகார அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களை தங்களது அரசியல் வேலைகள் மூலம் மக்களிடம் செல்வாக்கு பெற விடக்கூடாது என்பற்காக எலும்புத் துண்டிற்காக காத்திருக்கும் நாய்களைப் போல எதிர்க்கட்சித் தலைவர்களையே சுற்றி வருகின்றனர். ஏதேனும் சிறு துரும்பை அரசுக்கு எதிராக நகர்த்தினாலும்  உடனடியாக கைது, சிறை, வழக்கு என்ற நடவடிக்கையைத் தொடங்கி எதிர்க்கட்சிகளை முடக்குகின்றனர்.

அதிகார வர்க்க அமைப்புகள்!
பாசிசத்தின் ஆயுதங்கள்!

பாசிச மோடி அரசு எதிர்க்கட்சிகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் முதலில் மத்தியக் குற்றப்புலனாய்வு முகமை மூலம் ஒரு வழக்கைப் பதிவு செய்யும். இதன் பிறகு மேற்கண்ட வழக்கில் அமலாக்கத்துறை தலையிட்டு பண மோசடித் தடைச் சட்டத்தை (PMLA – Prevention of Money Laundering Act) பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளும். பண மோசடித் தடைச் சட்டத்தின் விதிகள் மிகவும் மோசமானவையாகும்.

அதாவது, இச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்து, அவர் வீட்டைச் சோதனை செய்வதற்கும், அவரைச் சிறையில் அடைத்து வைப்பதற்கும், சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கும் அமலாக்கத்துறையினருக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்குகிறது. இச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பிணையில் வெளிவருவது கடினமானது.

அமலாக்கத்துறை மற்றும் மத்தியக் குற்றப்புலனாய்வு முகமை ஆகியவற்றை இரு விதங்களில் மோடி அரசு பயன்படுத்துகிறது. ஒன்று, எதிர்க்கட்சிகளின் முக்கியமான தலைவர்களை நீண்ட காலத்திற்கு எவ்வித விசாரணையோ அல்லது தண்டனையோ இன்றி சிறையில் அடைத்து வைக்கப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் அன்றாட அரசியல் நிகழ்வுகளை முடக்குகிறது.

இரண்டு, பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள மறுக்கும் எதிர்க்கட்சிகளை உடைத்தும், அக்கட்சியிலேயே சிலருக்கு வலைவீசி, தங்கள் கட்சியில் சேரச் செய்வதற்கு, மத்தியக் குற்றப்புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையின் மூலம் ரெய்டு நடத்தி அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022 வரை அமலாக்கத் துறை 3010 ரெய்டுகள் நடத்தியுள்ளது. இது 2004 முதல் 2014 வரை நடந்த ரெய்டுகளை விட 27 மடங்கு அதிகம். அதேபோல், 2011ஆம் ஆண்டு முதல் 2020 வரை 1569 விசாரணைகள் மேற்கொண்டதில் 09 விசாரணைகள் மட்டுமே தண்டனையை நோக்கி நகர்ந்து உள்ளது.

சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வில், பாசிச மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட ரெய்டு, வழக்குப் பதிவு, விசாரணை மற்றும் கைது செய்யப்பட்ட மொத்த அரசியல்வாதிகளில்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 121 பேரில் 115 பேர் அதாவது 95% எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு எதிரான தனது பாசிச நடவடிக்கையின் ஆயுதமாக அமலாக்கத் துறை, வருமானவரித்துறை மத்திய குற்றப்புலனாய்வு முகமை ஆகிய அதிகார வர்க்க அமைப்புகளைப் பயன்படுத்துகிறது பாசிச மோடி அரசு.

எதிர்க்கட்சிகள் மீதான சமீபத்திய வழக்கு!
மோடி அரசின் பாசிசம்!

மார்ச் 11ஆம் தேதி பாரத ராஷ்டிர சமிதியின் தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வரின் மகளுமான கவிதாவிடம், டெல்லி மதுக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதனையொட்டி அந்தக் கட்சி இது ED சம்மன் அல்ல. மோடியின் சம்மன் எனவும், எதிர்க்கட்சிகள் மீது காழ்ப்புணர்ச்சியில் மோடி அரசு செயல்படுவதாகவும் விமர்சனம் செய்துள்ளனர்.

டெல்லியின் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) முக்கிய தலைவருமான மணீஷ் சிசோடியா, இதே மதுபான வழக்கில் ஊழல் செய்ததாகக் கூறி மத்திய புலனாய்வு அமைப்பால் (சிபிஐ) சென்ற பிப்ரவரி மாத இறுதியில் கைது செய்யப்பட்டார்.

மோடி அரசின் பாசிச தாக்குதல்!

ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியைச் சேர்ந்த பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி நில மோசடி வழக்கில் சிபிஐயால் விசாரிக்கப்பட்டார். அதே சமயம் அவரது மகன் தேஜஸ்வி யாதவும் சிபிஐ சம்மன் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

மோடியை திருடன் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறினார் என, இப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் எம்பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

இவைகள் கடந்த இரண்டு மாதத்தில் நடந்த கைது – விசாரணைகள் ஆகும். அரசுத் துறைகள் முழுவதையும் எதிர்க்கட்சிகள் மீதான வழக்குப் போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறது பாசிச மோடி அரசு.

பாஜகவில் இணை!
உடனே கிடைக்கும் பிணை!

மத்திய புலனாய்வு முகமை மூலம் ரெய்டு நடத்தி பல்வேறு எதிர்க்கட்சிகளில் உள்ள தலைவர்களை நிர்ப்பந்தம் செய்தும், மிரட்டியும், ஆசை காட்டியும் தன் பக்கம் இழுத்து வருகிறது பாஜக. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் இருந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது சாரதா ஊழல் வழக்கில் மத்தியக் குற்றப்புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டு வந்தார். திடீரென பாஜக-வில் இணைந்தார் உடனே வழக்கு கிடப்பில் போடப்பட்டது. தற்போது அஸ்ஸாம் முதலமைச்சராக உள்ளார்.

அதே போன்று, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்த சுவெந்து அதிகாரி வழக்கும் ஊத்தி மூடப்பட்டது. சிவசேனா கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய நாராயண் ரானே என்பவர் மீதான வழக்குகளும் மத்திய குற்றப் புலனாய்வு முகமையால் கைவிடப்பட்டது.

மேலும், மகாராஷ்டிராவில் சிவசேனைக் கட்சியில் பிளவினை ஏற்படுத்தி ஆட்சியில் இருந்த  மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி (மகாராஷ்டிரா விகாஷ் அகாதி) அரசாங்கம் வீழ்வதற்கு அமலாக்கத் துறையை மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு வேலை செய்ய வைத்தது. குறிப்பாக, சிவசேனைக் கட்சியில் இருந்த எம்எல்ஏ-க்களான பிரதாப் சர்நாயக், யாமினி ஜாதவ், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான பவனா கவாலி போன்றவர்கள் மீது அமலாக்கத்துறையினர் வழக்குகள் பதிவு செய்து, அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ததை அடுத்து அவர்கள் ஏக்நாத் ஷிண்டேயின் பக்கம் சாய்ந்தனர். உடனே இவர்கள் மீதான விசாரணை நிறுத்தப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரசில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மீது மத்திய புலனாய்வு முகமை விசாரணைக்கு சம்மன் அனுப்பியதால் அவர் தனது ஆதரவாளர்கள் 22 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கலைந்தது.

இவ்வாறு எதிர்க்கட்சிகளில் உள்ள தலைவர்கள் மீது ரெய்டுகளை நடத்தி, சொத்துக்களைப் பறிமுதல் செய்து தனது கட்சியில் இணைத்துக் கொள்ளும் வேலையும் செய்து எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சிகள் மீதான
ஊடக தாக்குதல்!

பத்திரிக்கைகள், காட்சி ஊடகங்கள் என அனைத்தையும் மிரட்டியும், விலை கொடுத்து வாங்கியும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கருத்துருவாக்கம் செய்தும் வருகிறது.


இதையும் படியுங்கள்: கார்ப்பரேட்- காவிகளின் பிடியில் ஊடகங்கள்! மாற்றாக சுதந்திர ஊடகத்தை உருவாக்குவோம்!

கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சத்தில் இருந்த சமயத்தில், பிற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களோடு ஒப்பிடும் போது நரேந்திர மோடிக்கு நான்கில் மூன்று பங்கு அளவுக்குக் கவரேஜ் கிடைத்துள்ளது. மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. மேலும், செய்திகளின் மூலம் அரசியல் ரீதியிலான கருத்துருவாக்கம் செய்யும் போக்கும் பிற நாடுகளை விட இந்தியாவில் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தற்போதும் மோடிக்கே அதிக கவரேஜ் தரப்படுவற்கான வகையில் அனைத்து மைய ஊடகங்களையும் கட்டுப்படுத்தி விட்டது பாசிச மோடி அரசு.

அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா!
என்ன செய்ய போகிறோம்?

தனித்தனி மொழி – பண்பாடு – கலாச்சாரம் –  வாழ்க்கை நெறி கொண்டுள்ள பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்திய ஒன்றியத்தை ஒரே நாடு என்றும், தேசிய இனங்களின் மாநிலங்களின் உரிமைகளை மறுத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மோடி அரசு முயற்சித்தது. இது முடியாததால் எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதற்குப் பதிலாக, ஒரே கட்சி – ஒரே தலைவர் என்கிற அதிபர் ஆட்சி முறையை நோக்கி நகர்கிறது. இதற்காகத்தான் எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கியும் பலவீனப்படுத்தியும் வருகிறது.

எனவே, பாசிசத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லையெனில் 2024 மீண்டும் பாசிச பாஜக எதிர்க்கட்சிகளே இல்லாத ஆட்சியை அமைக்கும். எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு என்பது வெறும் தேர்தல் கூட்டணி கண்ணோட்டத்தில் இல்லாமல் பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணியாக ஒன்றிணைய வேண்டும்.

ஐக்கிய முன்னணி மூலம் அமையும் அரசு, வானளாவிய அதிகாரம் கொண்ட அதிகார வர்க்க அமைப்புகளை தடை செய்ய வேண்டும். ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்க வேண்டும். இத்தகைய திட்டங்கள் கொண்ட ஐக்கிய முன்னணியே பாசிசத்தை வீழ்த்தும். இதனை முன்னெடுப்பதே எதிர்க்கட்சிகளின் உடனடி கடமை.

  • தயாளன்

புதிய ஜனநாயகம் (ஏப்ரல் 2023)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here