2014 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் நிலக்கரியை வாங்கி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு (TANGEDCO) விற்பனை செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்பது இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் “ஃபினான்சியல் டைம்ஸ்” என்னும் பத்திரிக்கை இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்தப் பத்திரிக்கை உலகப் புகழ் பெற்றது; நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டது. அதன் நம்பகத்தன்மையும் அதிகம்.
இந்த பத்திரிக்கையில், அதானி நிலக்கரி வாங்கி விற்றதில் ரூ. 12,000 கோடி ஊழல் செய்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் சென்ற ஆண்டு செய்தி வெளிவந்து நாடு முழுக்க நாறியது.
அதே பத்திரிக்கை மூலமாகத்தான், இப்பொழுதும், அதானி 2014ல் செய்த நிலக்கரி ஊழலும் வெளிவந்துள்ளது.
அதானியின் நிலக்கரி பாதையில் நாம் சென்று பார்த்தால்தான்
இந்தோனேசியாவில் இருந்து வாங்கப்படும் நிலக்கரியில் எப்படி ஊழல் செய்யப்படுகிறது என்பதை அறிய முடியும்.
இந்தோனேசியாவில் உள்ள சுரங்க குழுமமான ஜான்லின் (Indonesia mining group Jhonlin) நிலக்கரியை தமிழகத்திற்கு ஏற்றுமதி செய்கிறது. நிலக்கரி இந்தோனேசியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு நேரடியாக வந்து விட்டது.
அந்த நிலக்கரி தமிழகத்தை வந்து அடைவதற்குள், சுப்ரீம் யூனியன் இன்வெஸ்டார்ஸ் லிமிடெட் (Supreme Union Investors Ltd) என்ற வேறொரு நிறுவனத்திற்கு இந்த நிலக்கரி விற்கப்பட்டது போல இந்த நிலக்கரிக்கான ஆவணங்கள் (பில்கள் போன்றவை) அனுப்பப்பட்டன. இந்த நிறுவனம் வரியில்லா சொர்க்கமான பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்திடம் இருந்து அதானி குளோபல் PTE சிங்கப்பூர்(Adani Global PTE Singapore) நிறுவனம், நிலக்கரியை வாங்கியது போன்று ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இறுதியாக இந்த நிலக்கரியை அதானியின் இந்த நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு (TANGEDCO) நிலக்கரியை விற்றுள்ளது என்று அதானியின் நிலக்கரி ஊழல் பாதை முடிவடைகிறது.
இந்தோனேசியா கம்பெனியிடமிருந்து சுப்ரீம் யூனியன் இன்வெஸ்டார்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் நிலக்கரி வாங்கிய பொழுது கொடுக்கப்பட்ட பில்லில் நிலக்கரியின் விலை (ஒரு மெட்ரிக் டன்னுக்கு) 28 அமெரிக்க டாலர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த பில்லில் ஒரு கிலோ நிலக்கரியை எரிக்கும் பொழுது எவ்வளவு கலோரி வெப்பம் கிடைக்கும் என்ற விபரம் குறிப்பிடப்படவில்லை. இந்த நிறுவனம் மிகவும் குறைந்த அளவிலான கலோரி வெப்பத்தை வெளியிடும் நிலக்கரியைத் தான் விற்று வருகிறது என்பதும் அந்த நிலக்கரிக்கான விலையில் தான் இந்த நிலக்கரியும் விற்கப்பட்டுள்ளது என்பதும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கது.
அதே நிலக்கரியை சுப்ரீம் யூனியன் இன்வெஸ்டார்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் (ஒரு மெட்ரிக் டன்னுக்கு) 33.75 அமெரிக்க டாலர் என்ற விலையில் அதானி நிறுவனத்திற்கு நிலக்கரியை விற்றதாகவும் அதன் வெப்ப ஆற்றல்
ஒரு கிலோவுக்கு 3500 கலோரி (இது தரமற்ற நிலக்கரிக்கான அளவு) என்பதாகவும் பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திடம் இருந்து நிலக்கரியை வாங்கி தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு (TANGEDCO) விற்றதாக அதானி நிறுவனம் பில் போடும் பொழுது (ஒரு மெட்ரிக் டன்னுக்கு) 91.91 அமெரிக்க டாலர் என்றும் அதன் வெப்ப ஆற்றல்
ஒரு கிலோவுக்கு 6000 கலோரி (இது தரமான நிலக்கரிக்கான அளவு) என்பதாகவும் பில் போடப்பட்டுள்ளது.
படிக்க:
♦ ரூ.12,000 கோடி ஊழல்: இந்தியர்களின் தலையில் நிலக்கரியை அரைத்த அதானி
♦ நிலக்கரி பற்றாக்குறை: மோடி ஆதரவு கார்ப்பரேட் கும்பல் உருவாக்கும் செயற்கை தட்டுப்பாடு!
இதில் இருந்து நமக்குத் தெரிய வருவது என்ன? ஜான்லின் என்ற இந்தோனேசிய நிறுவனத்திடம் இருந்து நேரடியாக வாங்கிய நிலக்கரியை வேறொரு நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாக கணக்கெழுதுவதன் மூலம் அதானி நிறுவனம் நிலக்கரியின் விலையை 200சதவீதம் உயர்த்தியுள்ளது. மேலும் தரமற்ற நிலக்கரியை தரமான நிலக்கரி என்றும் கணக்கு காட்டி உள்ளது. இதன் மூலம் சுமார் 3,000 கோடி ரூபாய் அதானி நிறுவனம் ஊழல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த ஊழல் காரணமாக மின் உற்பத்திக்கான செலவு அதிகரித்து அந்தச் சுமை பொதுமக்களின் மின்சார கட்டணத்தின் வழியாக பொது மக்களின் தலையில் தான் இறங்குகிறது. அது மட்டுமா? தரமற்ற நிலக்கரியை எரிப்பதன் மூலமாக அதிக சாம்பலும் அதிக காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இது பொதுமக்களின் உடல் நலத்தை மிகப்பெரும் அளவில் பாதிக்கிறது. அதன் மூலம் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதையும் கவனத்தில் கொண்டால் தான் இந்த ஊழலின் கொடூரத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
இப்படிப்பட்ட ஊழல்களை செய்து ,சொத்துக்களை குவித்து வரும் அதானியின் மீது அமலாக்கத்துறையோ இந்திய புலனாய்வுத் துறையோ பாயுமா? அதானியின் நண்பர் நரேந்திர மோடி ஆட்சியில் உள்ளவரை அது நடக்க வாய்ப்பு இல்லை. அந்த திமிரில் தான் அதானி நிறுவனத்தின் CFO ஜுகுவிந்தர் சிங் “கிரேட் பிரிட்டன் ஏன் 1757 கி.பி.யில் இந்தியாவைக் காலனித்துவப்படுத்தியது என்பது பற்றிய ஒரு முக்கிய புலனாய்வு அறிக்கை, FT, BBC மற்றும் பலர். புலனாய்வு அறிக்கையின் கண்டுபிடிப்பு: அதானி குழுமத்தை உருவாக்குவதை நிறுத்துவது. இப்போது நீங்கள் எல்லாம். (sic)” என்று X தளத்தில் பதிவிட்டு நக்கலடிக்க முடிகிறது. இது Financial Times, BBC போன்ற பத்திரிகைகளை கேலி செய்வது மட்டுமல்ல, இந்திய மக்களை கேலி செய்வதாகும். அதற்கு பின்னால் ஹிண்டர்பர்க் அறிக்கை மாபெரும் ஊழலை அம்பலப்படுத்திய போதும் தன் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்ற அகங்காரமும் இருக்கிறது.
மோடி ஆட்சி நீடித்தாலும், மோடி தோற்று இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தாலும் அதானி போன்ற பெரும் கார்ப்பரேட் ஊழல்வாதியை தண்டிக்க மக்கள் போராட்டங்கள் இன்றியமையாதது என்பதே வரலாற்று அனுபவம்.
— குமரன்