
கடந்த 2014 ஆம் ஆண்டு குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சகாயத்தை நீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து அவர் 1990ஆம் ஆண்டு முதல் சுமார் 24 ஆண்டு காலமாக நடந்து வந்த முறைகேட்டை வெளியே கொண்டு வந்தார்.
அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ரூ 1 லட்சம் கோடி ரூபாய்க்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இவ்வாறு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகுவதற்கு அச்சப்படுவதாகவும் ஏற்கனவே தனக்கு இரண்டு முறை கொலை மிரட்டல்கள் விடப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞருக்கு கடிதமாக எழுதி உள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியின் கீழ் உள்ள போலீசு, கிரிமினல் குற்ற கும்பல்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிக் கொள்கிறது. சட்டரீதியாக பிடித்து தண்டிக்க முடியாத அளவிற்கு கிரிமினல் குற்ற கும்பல்களாக சுற்றி வரும் ரவுடிகள், கிரிமினல்களுக்கு எதிராக என்கவுன்டர்கள் மூலம் பதிலடி கொடுத்து வருவதாக போலீசு உயர் அதிகாரிகள் மார்தட்டிக் கொள்கின்றனர்.
ஆனால் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து மணல் குவாரி கொள்ளை, கிரானைட் குவாரி கொள்ளை போன்றவற்றையும் எதிர்த்து அம்பலப்படுத்திய ஐஏஎஸ் சகாயம் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அரசு வழக்கறிஞருக்கு கடிதம் எழுதுகின்ற அளவிற்கு தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது.
அது மட்டுமல்ல இது போன்ற மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை உள்ளிட்ட இயற்கை வளங்களை சூறையாடுகின்ற கிரிமினல் கும்பல்களையும், அதற்கு துணை போகின்ற அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துகின்ற சமூக செயல்பாட்டாளர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தி கொலை செய்யப்படுகிறார்கள்.
அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த ஜகபர் அலி கொலை, நெல்லையில் நடந்த ஜாகீர் உசேன் கொலை போன்றவை இது போன்ற சட்டவிரோத கொள்ளைகளை அம்பலப்படுத்தி சமூக வலைதளங்களில் பேட்டியளித்தனர். உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு முறை மனு கொடுத்தனர் என்பதாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதிலிருந்து இது போன்ற சமூக செயல்பாட்டாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
அதிகார வர்க்கத்தில் நேர்மையாக பணியாற்றுவது, சட்டத்தை சரியான முறையில் பயன்படுத்துவது என்பவற்றுடன் நீதிமன்றங்களில் முறையாக வழக்கு தொடர்ந்து நீதிபதிகள் பரிபாலனத்தின் கீழ் மேற்கண்ட சமூக விரோத கிரிமினல் குற்ற செயல்களை தடுத்து நிறுத்த முடியும் என்று முன்வைத்து சகாயம் அரசியல் பேரவை என்ற கட்சியையும் துவங்கி தேர்தலிலும் போட்டியிட்டார்.
ஆனால் அவர் முன்வைக்கின்ற வழிமுறைகள் ஒருபோதும் கதைக்கு உதவாது என்பதை அம்பலப்படுத்தி “நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைக்கு எதிராக தமது சொந்த பலத்தால், மாபெரும் மக்கள் எழுச்சியும் புரட்சியுமில்லாமல் தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வு காண முடியாது. ஆனால், அவ்வாறான மாற்றுப் பாதையை கையிலெடுக்கும் நேர்மையும் துணிவுமில்லாத பல குட்டி முதலாளிய அரசியல் குழுக்களும், அறிவுஜீவிகளும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் அவ்வப்போது சகாயம், சுப.உதயகுமாரன், கேஜ்ரிவால் போன்ற தலைமையை முன்னிறுத்தி தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகாணும் வழிமுறையின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைக்கச்சொல்லுகிறார்கள். அவசியமான, சரியான பாதையையும் தீர்வையும் நோக்கிச் சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டுவதற்குத் துணிவு கொள்வதற்குப் பதிலாக, ஒன்றுமில்லாததற்கு இதையாவது ஆதரிப்போம் என்ற மாயையில் மக்களை ஆழ்த்துகிறார்கள்.” என்று ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு புதிய ஜனநாயகத்தின் தோழர் ஆர்கே எழுதியிருந்தார்.
படிக்க:
♠ இயற்கை வளங்களை சூறையாடும் திமுக அரசு!
♠ மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் கொலைகளை எதிர்த்துப் போராடுவோம்!
“ சகாயம் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்தவர் அல்ல. அரசு நிர்வாகப் பணி தேர்வில் வெற்றிபெற்று, அதற்கான முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர். அரசு நிர்வாகப் பணியின் சூட்சுமங்களையும் அதன் இன்றைய போக்குகளையும் கற்றுத் தேர்ந்தவர். தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதை அவரது சொந்த அனுபவங்களே உணர்த்தியிருக்கும். இருந்தாலும் அவ்வாறானதொரு நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார் என்றுதான் விமர்சிக்கிறோம்.” என்றும் புதிய ஜனநாயகம் இதழில் எழுதியிருந்தோம். அவர் முயற்சி செய்த வழிமுறைகள் தோல்வி அடைந்து விட்டது என்பதை அவரே இன்று ஏற்றுக் கொண்டுள்ளார்.
இன்றைக்கு நாடு முழுவதும் இயற்கை கனிம வளங்கள், கடல் வளம், காட்டு வளங்கள் விவசாய விளை நிலங்கள் உள்ளிட்ட அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காக அகல திறந்து விடப்படுகிறது.
சொல்லிக் கொள்ளப்படும் சட்டங்களில் இது போன்ற கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக உள்ள தடைகள் அனைத்தும் சட்டப்படியே திருத்தங்களின் மூலம் சரி செய்யப்படுகிறது.
கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் இந்திய மக்களின் சொத்துக்கள் நாட்டின் சொத்துக்கள் வரைமுறையின்றி சூறையாடப்பட்டு வருகிறது.
ஐஏஎஸ் சகாயம் முன் வைத்துள்ள நிலைமை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவும், வட மாநிலங்களில் உயிரைப் பறிக்கும் படுகொலைகள் பிரச்சனையாகவும் தலை விரித்தாடுகிறது.
இத்தகைய சூழலில் பாசிசமயமாகியுள்ள அரசு கட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் மீண்டும் போராடுவதும், அரசியலமைப்புச் சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் போன்றவைகள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதும் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதையே தமிழகத்தில் நிலவுகின்ற சூழல் குறித்து சகாயம் அரசு வழக்கறிஞருக்கு கொடுத்துள்ள கடிதம் நமக்கு அறிவிக்கின்றது.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
- மருது பாண்டியன்.