ந்தியாவின் மத்திய பகுதியான ஒரிசா, பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் மாவோயிஸ்டுகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதாக இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

அமெரிக்க மேல்நிலை வல்லரசாலும், ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளாலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆதிக்க சாதிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் சுரண்டலாலும் பாதிக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வருகின்ற பெரும்பான்மை இந்திய மக்களை விடுவிப்பதற்கு புதிய ஜனநாயக புரட்சி ஒன்று தான் தீர்வு என்பதை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறது மாவோயிஸ்ட் அமைப்பு.

இவ்வாறு புரட்சியை முன்வைத்து செயல்படுகின்ற காரணத்திற்காகவே எவ்வித விசாரணையும் இன்றி போலி மோதல் கொலைகளின் மூலம் நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவோயிஸ்டுகளை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்கள் மட்டுமல்ல, மாவோயிஸ்டுகளின் மீது ஏன் இவ்வாறு கொடூரமான தாக்குதல்களை நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகின்ற மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் ஜனநாயக சக்திகள் அனைவரின் மீதும் வரைமுறையற்ற பாசிச ஒடுக்கு முறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது பாசிச பாஜக அரசு.

2024 ஜனவரி 1 முதல் ‘நக்சலிசத்திற்கு எதிரான போர்’ என்ற போர்வையில் மாவோயிஸ்ட் அமைப்புகளை முற்றிலுமாக துடைத்தெறிவது என்ற கண்ணோட்டத்தில் ஆபரேஷன் ககர் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது.

போலி மோதல் கொலைகளில் பலியாகின்ற மாவோயிஸ்ட் அமைப்பினர்!

காங்கிரசு ஆட்சியின் போது பஸ்தார் பிராந்தியத்தில் குவிந்து கிடக்கும் கனிம வளங்களையும், காட்டு வளங்களையும், கார்ப்பரேட்டுகளும் இந்தியாவில் உள்ள வேதாந்தா போன்ற பெரிய தரகு முதலாளித்துவ நிறுவனங்களும் சூறையாடி கொண்டு செல்வதற்கு எதிராக குரல் கொடுத்து வரும் போராடிவரும் மாவோயிஸ்டுகள் மற்றும் தங்களின் நிலங்களில் இருந்து விரட்டியடிக்க முயற்சிக்கின்ற இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக போராடிவரும் பழங்குடி மக்கள் அனைவரையும் மாவோயிஸ்டுகள் என்ற போர்வையில் முத்திரை குத்தி தேச விரோதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து நரவேட்டையாடுவதற்கு உரிமையை எடுத்துக் கொண்டுள்ளது பாசிச பாஜக அரசு.

இதன் காரணமாகவே ஆபரேஷன் ககர் துவங்கியது முதல் 800-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர் சரணடைந்து விட்டதாகவும் இதனால் மாவோயிச அமைப்பிற்கு தோல்வி என்றும், பின்னடைவு என்றும் ஆளும் வர்க்க ஊடகங்கள் தொடர்ந்து ஊளையிட்டு வருகின்றன.

இந்தியாவை கார்ப்பரேட் கொள்ளைக்கும், எவ்விதமான நிபந்தனையும் இன்றி தேசத்தின் சொத்துக்களை சூறையாடிக் கொண்டு செல்வதற்கும் பொருத்தமான சட்ட திட்டங்களை உருவாக்குவது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் அனைவரின் மீதும் கொடூரமான தாக்குதல்களை நடத்துவது, பார்ப்பன பாசிசத்தை முன்வைத்து இந்து மதத்தை ஆதிக்கம் செலுத்துகின்ற மதமாக மாற்றுவது, ‘ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே மதம்’ என்று முன்வைத்து பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளர் ஆர் எஸ் எஸ் பாஜக குண்டர் படையினர்.

செப்டம்பர் 9: தோழர் மாவோ நினைவு தினத்தில் உறுதி ஏற்போம்!

இதை எதிர்த்து போராடுகின்ற கம்யூனிச புரட்சியாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரையும் கொடூரமான முறையில் ஒடுக்கி வருகிறது பாசிச பாஜக.

புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் மாவோயிச அமைப்புகள் முன்வைக்கின்ற வழிமுறைகளில் எமக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் மாவோயிஸ்டுகளை விசாரணை இன்றி, போலி மோதல் கொலைகளின் மூலம் ஒழித்துக் கட்ட முயற்சிப்பது மாவோயிஸ்டுகளை ஆதரிப்பவர்களை கைது செய்து நீண்ட காலம் சிறையில் வைத்து சித்திரவதை செய்வது போன்ற ஜனநாயக விரோத பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

கடந்த அக்டோபர் 4 சத்திஸ்கர் மாநிலத்தில் அபுஜ்மத் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 36 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்த சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

இந்த படுகொலைகளின் மூலம் கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்துப் போராடும் புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளுக்கு சவால் விட்டுள்ளது மோடி அரசு. இந்தக் கொடூரமான படுகொலைகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராடுவோம். போலி மோதல் கொலைகளுக்கு முடிவு கட்டுவோம்.

  • சீராளன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here