இன்று பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் ஆசான் காரல் மார்க்சின் பிறந்த தினமாகும்.
உலகில் சூரிய வெளிச்சத்திற்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பரவிய ஒரே சித்தாந்தம் கம்யூனிசம் மட்டும்தான். மனிதர்களின் அவலங்களை போக்குவதாக கூறிக்கொள்கின்ற மதங்கள் அது உலகம் முழுவதும் பரவியுள்ள கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி! இஸ்லாமிய மதமாக இருந்தாலும் சரி! பௌத்த மதமாக இருந்தாலும் சரி! இந்திய சூழலில் சொல்லிக் கொள்ளப்படும் பார்ப்பன (இந்து) மதமாக இருந்தாலும் சரி! இவை எதுவும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களின் கவனத்தை ஈர்த்தது கிடையாது.
கம்யூனிசம் ஒரு மதம் இல்லை. ஆனால் உலகில் உள்ள மிகச் சிறிய பிரிவினர் சுரண்டலின் மூலம் பெரும் பணக்காரர்களாகவும், பெரும்பான்மை மக்களான மற்றொரு பிரிவினர் உழைத்து, உழைத்து ஓடாய் தேய்ந்து ஏழ்மையில் உழல்பவர்களாகவும் திகழ்வதற்கு காரணத்தை கண்டுபிடித்து முன்வைத்த அறிவியல் பூர்வமான தத்துவமாகும்.
இந்த அடிப்படையில் தான் 1848 இல் முன் வைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை பற்றி கீழ்க்கண்டவாறு முன்வைக்கின்றது.
“பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வது தான், ஜனநாயகத்திற்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான் தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியின் முதலாவது படி” என்பதை முன் வைக்கின்றார்கள் மார்க்சும், ஏங்கெல்ஸ்சும்.
அவ்வாறு பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வது எவ்வாறு என்பதையும் அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு விளக்குகின்றனர்.
“பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்தி கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒரு சேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்.
ஆரம்பத்தில் இந்த பணியினை சொத்துடைமை உரிமைகளிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளிலும் எதேச்சதிகார முறையில் குறுக்கிட்டுச் செயல்படுவதன் மூலம் தான் நிறைவேற்ற முடியும்.
அதாவது, பொருளாதார வழியில் போதாமல் வலுக்குறைவாகவும் தோன்றும் நடவடிக்கைகளாய் இருப்பினும், இயக்கப் போக்கின் போது தம்மை மிஞ்சிச் சென்றுவிடுகிறவையும் பழைய சமூக அமைப்பினுள் மேலும் குறிப்பிடும்படியான அவசியத்தை உண்டாக்குகின்றவையுமாகிய நடவடிக்கைகள் மூலம் தான், பொருளுற்பத்தி முறையைப் புரட்சிகரமாய் அடியோடு மாற்றியமைத்திடும் பாதையில் தவிர்க்க முடியாதவையாகிய இந்நடவடிக்கைகள் மூலம் தான் இந்தப் பணியினை நிறைவேற்ற முடியும். இந்த நடவடிக்கைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறானவையாகவே இருக்கும்” என்பதையும் தீர்க்கதரிசனத்துடன் முன்வைக்கின்றார் காரல் மார்க்ஸ்.
இந்த உண்மையை புரிந்துக் கொள்வதில்தான் கம்யூனிஸ்டுகள் மத்தியில் வேறுபாடுகளும், சமூகத்தில் நிலவுகின்ற எதார்த்தத்தை இயக்கவியல் கண்ணோட்டத்தில் அணுகுவதற்கு பதிலாக தனது அகநிலை விருப்பத்துடன் அணுகி சமூகப் புரட்சியில் தோல்வியடைகின்றனர்.
1848 இல் முன் வைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையானது வெறும் கற்பனையாக மட்டுமில்லாமல், உண்மையான சமூக விஞ்ஞானமாக பரிணமித்து 70 ஆண்டுகளில் ரஷ்யாவில் புரட்சியை சாதித்துக் காட்டியது. அது முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற நாடுகளின் ஒரு வகை மாதிரி என்று எடுத்துக் கொண்டால் முதலாளித்துவம் வளராத அரை நிலப்பிரபுத்துவ சமூகங்களில் புதிய ஜனநாயகம் என்ற வேறொரு வகையிலான புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை சாதித்துக் காட்டியது சீனா.
உலகில் இந்த இரண்டு வகையிலான போக்குகளைத் தவிர வெவ்வேறு வழிகளிலும் புரட்சி முன்னேறி செல்லலாம் என்பது குறித்து சமீப பத்தாண்டுகளில் இந்தியாவில் உள்ள மார்க்சிய லெனினிய இயக்கங்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வரை மேற்கண்ட இரண்டு நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சியும், அரைக்காலனிய, அரைநிலப் பிரபுத்துவ எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியும்தான் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை முன்வைக்கின்ற கலங்கரை விளக்கங்களாக உள்ளது.
இந்திய மண்ணில் புதிய ஜனநாயகப் புரட்சி நடத்துவதற்கு ஏற்றுக் கொண்டுள்ள மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வேலை செய்து வருகின்ற போது சமுதாய பொருளாதார படிவங்களில் நிகழ்கின்ற உற்பத்தி மாற்றங்கள், மற்றும் உற்பத்தி உறவுகளுக்குள் ஏற்படுகின்ற வேறுபாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அதற்கு பொருத்தமான இடைநிலை வடிவங்களை மேற்கொள்கின்றன.
மார்க்சியத்தை வறட்டு சூத்திரமாக புரிந்து கொண்டு இன்னமும் ஏன் அந்தக் கட்டத்தை நாம் அடையவில்லை என்று பிதற்றிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் சமூகத்தின் எதார்த்த நிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் மார்க்சியத்தை பருண்மையான சூழலில் பருண்மையாக பிரயோகிப்பதற்கு மார்க்சிய லெனினியத்தைப் பற்றிய ஆழங்கால்பட்ட அறிவும், விசாலமான பார்வையும் தேவை.
படிக்க:
♠ மார்ச் 23 ஆளுநர் மாளிகை முற்றுகை! | புமாஇமு
♠சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது இடையில் மக்களை ஒடுக்குவதில் மிகப்பெரும் கொடுமையான சக்தியாக உருவெடுத்து உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும், உற்பத்தி உறவுகளில் புதிய சமன்பாட்டையும் உருவாக்குகின்ற சூழல் ஏற்படும் போது அதனை கணக்கில் கொண்டு அதற்கு பொருத்தமான அரசியல் அதிகார வடிவத்தை முன்வைக்க வேண்டும் என்பதை தான் மார்க்சியம் நமக்கு போதிக்கின்றது.
இதனையே, “பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் பெறுவது வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு தன்மையில் உள்ளது” என்று முன்வைக்கின்றனர் பாட்டாளி வர்க்கத்தின் ஆசான்களான மார்க்சும், ஏங்கெல்ஸ்சும்.
2008 ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் மீள முடியாத நெருக்கடி உலகில் பல்வேறு நாடுகளில் ஆட்சி செய்து வந்த முதலாளித்துவ ஆட்சி முறை, தாராளவாத ஜனநாயக ஆட்சி முறை போன்றவற்றிற்கு முடிவு கட்டிவிட்டு அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை ஆட்சி வடிவமாக முன் தள்ளி வருகிறது.
அது இந்திய சூழலில் கார்ப்பரேட் காவி பாசிசமாக உருவெடுத்து உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது என்பதை புரிந்துக் கொண்டு அதனை உடைத்தெறிந்து சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்வதற்கு பொருத்தமான, சமூக விஞ்ஞான தீர்வு ஒன்றை மார்க்சிய லெனினிய அமைப்புகள் முன்வைக்கின்றன. அதனையே ஜனநாயக கூட்டரசு என்ற வடிவத்தில் முன்வைக்கின்றன.
ஏற்றத்தாழ்வான வளர்ச்சி கொண்ட இந்திய சூழலிலும் சரி, உலக சூழலிலும் சரி, ஒரே மாதிரியான புரட்சி வகையினங்களை வைத்துக்கொண்டு எந்திரகதியில் கையாள்வது பற்றி மார்க்சியம் எப்போதும் விமர்சித்து வருகிறது என்பதைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்து கூறப்பட்டுள்ள நீண்ட மேற்கோள் நமக்கு உணர்த்துகிறது.
பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரத்தை தவழ வைப்பதற்கு தற்போதைய சூழலில் ஜனநாயக கூட்டரசு ஒன்றை உருவாக்குவதை நோக்கி முன்னேறுவோம்.
அரசியல் அதிகாரத்தில் இருந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களையும் கொடும் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்ற கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம் என்பதையே காரல் மார்க்ஸின் பிறந்த நாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதியேற்பாக அறிவிப்போம்.
- ஆல்பர்ட்