நிலக்கரி பற்றாக்குறை: மோடி ஆதரவு கார்ப்பரேட் கும்பல் உருவாக்கும் செயற்கை தட்டுப்பாடு!

ஆஸ்திரேலியாவில் உள்ள அதானிக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்திலிருந்து ஏற்றுமதி இப்போதுதான் துவங்கியுள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை: மோடி ஆதரவு கார்ப்பரேட் கும்பல்
உருவாக்கும் செயற்கை தட்டுப்பாடு!
புதிய ஜனநாயகம்


ந்தியாவின் 70 சதவீத மின் தேவை இங்குள்ள 173 அனல் மின் நிலையங்கள் மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது. இவற்றில் மின் உற்பத்திக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலக்கரி கடந்த அக்டோபரில் இருந்து பற்றாக்குறையாக உள்ளது. அப்போது மழைக்காலம் என்பதால் பாதிப்பு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இப்போதைய கோடைகாலத்தில் மின் தேவை  அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். இதை ஈடு செய்யும் வகையில் மின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட வேண்டும்.

மின் உற்பத்தி நிலையங்களில் வழக்கமாக இருக்கவேண்டிய குறைந்தபட்ச அளவான 24 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு என்பது ஒன்பது நாட்கள் எனவும் சில இடங்களில் நான்கு நாள் கையிருப்பு எனவும் மிக மோசமாக சரிந்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் குறைவாகும். இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் முடங்கியிருந்த தொழில்துறை இப்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. எனவே மின் தேவையும் கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகரித்துள்ளது.

நாட்டின் 80 சதவீத நிலக்கரி உற்பத்தியை மேற்கொள்ளும் கோல் இந்தியா (Coal India) நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவில்லை, அதற்கான தேவையும் எழவில்லை. ஆனால், இப்போது வழக்கத்தை விட கூடுதலாக 8 % தேவை அதிகரித்துள்ள நிலையில் கோல் இந்தியா நிறுவனத்தால் உற்பத்தியைக் கூட்ட முடியவில்லை. 4.6 % உற்பத்தியை பெருக்க திட்டம் இருப்பினும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த சூழலில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியை அதிகரிக்க வேண்டும். ஆனால், ரசியா – உக்ரேன் போர்ச் சூழலால் நிலக்கரியின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளதால் இறக்குமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது.

படிக்க:

♦  நிலக்கரி தட்டுப்பாடு-மின் தடை! மின் விலையேறும் அபாயம்!

மொத்தமுள்ள 173 அனல் மின் நிலையங்களில், 150 மின் உற்பத்தி நிலையங்கள் இந்திய நிலக்கரி உற்பத்தியை மட்டுமே நம்பியுள்ளன. எஞ்சியவை இறக்குமதி செய்து வந்த நிலையில் கடும் விலை ஏற்றத்தால் அவையும் கூட உள்நாட்டு உற்பத்தியை நாடும் சூழல் எழுந்துள்ளது.  கையிருப்பில் உள்ள நிலக்கரியை கொண்டு சேர்ப்பதற்குக் கூட போதுமான போக்குவரத்து வசதியை (பெரும்பாலும் ரயில்கள் மூலம்) ஒன்றிய அரசு செய்யவில்லை.

இந்தியா உலகின் நிலக்கரி இறக்குமதியில் இரண்டாம் இடத்திலும், நிலக்கரி இருப்புகளைக் கொண்ட நாடுகளில் 4 வது இடத்தில் உள்ளது. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு நீடிப்பதால் மின் உற்பத்தி குறைகிறது. அதை தவிர்க்க, நிலக்கரியை அனல் மின் நிலையங்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுத்து வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மின்பற்றாக்குறையும், இதனால் மின்சாரத்தின் கொள்முதல் விலை அதிகரிப்புமே நடைமுறை உண்மையாக உள்ளது.

மின்சாரம் என்பது அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் அத்தியாவசிய தேவை என்பதால் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி குறைந்து பொருளாதார வீழ்ச்சி அடையவும் அதிக வாய்ப்புள்ளது. ஆந்திரா, குஜராத், மராட்டியம், பீஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின்தட்டுப்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் மின்பற்றாக்குறை 8.7% ஆக உள்ளது. நிலக்கரி வரத்து குறைவதால் மின் பற்றாக்குறை மேலும் அதிகரித்து பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது.

Also read:

♦  மோடியின் புதிய (அதானி) இந்தியா!

தமிழகத்திலும் முன்னெப்போதையும் விட அதிகமாக மார்ச் இறுதியில் 17,196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது வழக்கத்தை விட 15 சதவீதம் அதிகமாகும். நிலக்கரி தட்டுப்பாட்டால் தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல்மின் நிலையங்களில் அவ்வப்போது மின்னுற்பத்தி 80% வரை பாதிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் பெரிதாக மின்வெட்டு இல்லை என்றாலும் கிராமப்புறங்களில் இது தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய தொகுப்பில் இருந்து திடீரென மின்சாரம் வராததே காரணம் என்றும் எப்படியும் இதை சரி செய்து மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையை தமிழகம் எட்டும் என்றும் திரும்பத் திரும்ப நம்பிக்கை வார்த்தைகளைக் கூறுகிறார். மறுபுறம் மத்திய அரசு வழங்கும் நிலக்கரியின் அளவு குறைந்துள்ளதால் அதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. இந்த சூழலை பயன்படுத்தும் அடிமை ஆதிமுக கும்பல் திமுக ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டு அதிகரிக்கும் என்று ஊளையிடுகின்றன.

ஒன்றிய அரசின் மின்துறை அமைச்சகம், மின்நிலையங்கள் தங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ள வேண்டும் என இப்போது அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இதை ஜனவரியிலேயே சொல்லியிருக்க வேண்டும். இறுதி நேரத்தில் சொன்னதால் நிறுவனங்களோ மாநில அரசுகளோ கையறு நிலையில்தான் உள்ளன. அக்டோபரில் தட்டுப்பாடு வந்த போதே விழிப்படைந்து போதிய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திருக்க வேண்டும்.

Also Read

♦  அதானியின் எழுச்சி! இந்திய மக்களுக்கு வீழ்ச்சி!!

இப்போது நிலவும் நிலக்கரி தட்டுப்பாட்டை வேண்டுமென்றே உருவாக்கினார்களோ என்ற அய்யம் ஏற்படுகிறது. காரணம், ஆஸ்திரேலியாவில் உள்ள அதானிக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்திலிருந்து ஏற்றுமதி இப்போதுதான் துவங்கியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான NTPC, 1 மில்லியன் டன் நிலக்கரியை அதானியின் நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. மோடி மத்தியில் ஆட்சிக்கு வரும் வரை சாதாரண தொழிலதிபராக இருந்த குஜராத்தின் அதானி, இந்த எட்டு ஆண்டுகளில் உலகப் பணக்காரர் வரிசையில் சேர்ந்து விட்டார் என்பதை சேர்த்து புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அடுத்து, நிலக்கரியை பெருமளவில் பயன் படுத்துவதால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் விதமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற வகையில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்திக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கான தனி அமைச்சகமே இந்தியாவில் உள்ளது. இருப்பினும் இந்தத் துறைகளிலும் கார்ப்பரேட்டுகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அம்பானி, அதானி, டாடா போன்ற நிறுவனங்கள் காற்றாலைகள் மற்றும் சூரிய மின் தட்டுகளை அரசின் மானியத்தோடு பெருமளவில் வங்கிக் கடன்களைப் பெற்று அமைக்கின்றன. உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதிக விலைக்கு விற்பது ஒருபுறம் இருக்க, இறுதியில் வங்கிக் கடன் தள்ளுபடி என்ற சலுகையையும் பெற்று கொழுத்த இலாபம் அடைகின்றனர். ஆக, இந்த காவிகளின் ஆட்சியானது அனைத்து வகையிலும் கார்ப்பரேட் நலனை முன்னிறுத்துவதாகவே உள்ளது.

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் சுரண்டல் கொள்ளைக்கு பூமிக்கு அடியிலுள்ள கனிமங்களை அகழ்ந்து உறிஞ்சிக் கொள்வது என்ற வெறியுடன் கிளம்பியுள்ள நிலையில் ஒருபுறம் சுற்றுச் சூழல் பாதிப்பு நிலக்கரி பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என்று கூச்சலிட்டுக் கொண்டே உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நிலக்கரியை அகழ்ந்து முற்றாக காலி செய்வது, அதுவும் கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்கு தக்கபடி நிலக்கரி சுரங்கங்களை விற்பது ஒன்றே ஒரே தீர்வாக முன் தள்ளுகின்றனர். இதன் விளைவு செயற்கையான நிலக்கரி தட்டுபாடு மற்றும் மின் விலை ஏற்றம் என்பது நாட்டின் உழைக்கும் மக்க்ளின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.

  • அன்புச்செல்வன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here