“சந்தி சிரிக்கும் அரசியல் வா(வியா)திகள்” ராமதாசும் – அன்புமணியும்!

உங்கள் நிலையோ ஒவ்வொரு தேர்தலிலும் நிறத்தை மாற்றிக் கொண்டு,  அணி மாறி சூட்கேஸை மாற்றிக் கொண்டு ஆற்றுகின்ற 'பெரும் பணியை' எண்ணும் பொழுது 'மெய் சிலிர்க்கிறது' அய்யாமார்களே!

1

” ‘பாட்டாளி’ மக்கள்கட்சி” (பா.ம.க.) என்று ‘புரட்சிகர’மான பெயரைத் தாங்கிக் கொண்டு வலம் வருபவர்கள் ராமதாஸ் அன்புமணி & கோ. அவர்கள் ‘வலம்’ வருகிறார்கள் என்று சொல்வதை விட ‘வளம்’ பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வார்த்தையே சரியானதாக இருக்க முடியும்.

பாட்டாளி என்ற சொல் மார்க்சிய-லெனினிய கோட்பாட்டுவாதிகளுக்கான புரட்சிகர பதம்! ‘சமூக நீதி’ என்ற வார்த்தை கூட சமத்துவத்தை குறிக்கும் முற்போக்கு வடிவம் கொண்டதாகும். இந்த இரண்டையுமே பயன்படுத்தத் துளியளவும் தகுதியற்றவர்கள் ராமதாஸ் அன்புமணி அண்ட் கோ!

ஆணவப் படுகொலையாளர்கள் இவர்கள்!

ஆம்! இவர்கள் அரசியல் கட்சி நடத்தவில்லை. சாதி கட்சியின் பிதாமகர்கள் இவர்கள்! சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களை ஆணவப் படுகொலைகள் செய்யும் ஆதிக்க சாதி வெறி பிடித்த முதலைகள் இவர்கள்! பட்டியலின இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் கூலிங் கிளாஸ் மாட்டிக் கொண்டு வன்னிய சாதி இளம் பெண்களை ஈர்த்து காதல் மணம் புரிகிறார்கள் – என தன் சாதி இளம் பெண்களையே வெட்கமின்றி கொச்சைப்படுத்தி பேசியவர்கள் தான் இந்த ராமதாஸூம் அன்புமணியும்.

ஒட்டுமொத்த பாட்டாளி மக்களுடைய நலன்களை பிரதிபலிக்காமல் – அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தாமல் ‘அனைத்து சலுகைகளுமே தன் சாதிக்கு மட்டுமே’ என்ற வடிகட்டிய முட்டாள்தனமான –  கண்ணோட்டத்தில் அணுகுவது மட்டுமே இவர்களின் பண்பாடு!

மோடியை எதிர்க்க ராமதாஸ் அன்ட் கோவிற்குத் துணிவு உண்டா?

சரி,  அப்படியே வைத்துக் கொள்வோம். உன் சாதி எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கிறது என்றால் இட ஒதுக்கீடு பெற சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது சரியே எனக் கொள்வோம்!

ஆனால் நீதிமன்றங்களில் இக்கோரிக்கை நிராகரிக்கப்படாமல் இருக்க அப்பனும் மகனும் ஏன் நீங்கள் கூட்டணி வைத்து கூடிக் குலாவுகின்ற வாரியணைத்து முத்தம் கூட கொடுத்துக் கொண்ட உங்கள் பாசிச மோடி தலைமையிலான ஒன்றிய அரசினை வலியுறுத்தி போராட முன்வரக்கூடாது? அய்யா…போராட வேண்டாம்; காலில் விழுந்தாவது ஏன் சாதித்துக் கொள்ளக் கூடாது?

காவி(லி)க் கூட்டமான அவர்களைக் கண்டு ஏன் அச்சப்படுகின்றீர்கள்?

‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்ற நாட்டுப்புற சொல் வழக்கு போல தமிழ்நாடு அரசையே – திமுகவையே சீண்டுவதும், குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடனேயே மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதும் ஏன்? அதுவும் எப்படி?

ஸ்டாலின் மைனாரிட்டி இன கீழ் சாதிக்காரன்… என்ற பார்வையே ராமதாஸின் பார்வை!

‘உன் கூட்டம்(சாதி) பத்தாயிரம் பேர் கூட இருக்க மாட்டீர்கள்; நீ ஒரு ஆள்; நீயெல்லாம் ஒரு முதலமைச்சர்; உன்னைத் தேடி நான் தலைமைச் செயலகம் வந்து சந்திக்க வேண்டும்… கோரிக்கை வைத்துப் பேச வேண்டும் என்ற நிலையே எனக்கு அவமானமாக இருக்கிறது; வெட்கமாக இருக்கிறது…’ என்ற பாணியில் ஒரு மாநிலத்தின் ஏகோபித்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை நோக்கி ஒருமையில் மிகவும் தரக்குறைவாக பேசினார் என்றால் அவருக்குரிய ஆதிக்க சாதித் திமிரை என்னவென்று உரைப்பது?

திமுகவோ, ஸ்டாலினோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நாம் கூற முனையவில்லை. ஆனால் அது அரசியலின் பாற்பட்டதாக இருக்க வேண்டும்; நியாயமான கோரிக்கைகளின் பாற்பட்டதாக இருக்க வேண்டும்! அதை விடுத்து ‘நாம் சாதியால் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம்; இவன் (ஸ்டாலின்) மைனாரிட்டி சாதியைச் சேர்ந்தவன்; எனவே இவனை எப்படி வேண்டுமானாலும் – அவன் ஏகோபித்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருந்தாலும் கீழ்த்தரமாக பேசியே தீருவேன்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு பேசித் திரிகிறார் ராமதாஸ். அதற்கு ஒத்து ஊதுகிறார் அன்புமணி. அதற்கு ஜால்ரா தட்டுகின்றனர் சில அப்பாவி வன்னியர்கள்.

இந்த அப்பனையும் மகனையும் நம்பினால்,  உழைக்கும் மக்களான வன்னியர் சாதி மக்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிட்டுப் போய்விடுவர். கடந்த கால வரலாறு அதுதான்.

அதனால் தான் எண்ணற்றோர், பிராணி சீமான் கட்சியிலிருந்து கரைவது போல் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்தும் கரைந்து கொண்டிருக்கிறார்கள்.

ராமதாஸ் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்!

உண்மையில் இப்படிப்பட்ட மிகக் கேவலமான அவதூறான ராமதாஸின் பேச்சுக்கு தமிழ்நாடு அரசு அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்கச் செய்திருக்க வேண்டும்.

அதனுடைய விளைவினை இன்று ராமதாஸ் அன்புமணி மூலமாகவே காண்கின்றோம். ராமதாஸ் இப்படி ஒரு அறிக்கை வெளியிடுகிறார் ‘அதானியும் ஸ்டாலினும் ரகசியமாக சந்தித்துப் பேசி உள்ளனர்…’ என்ற பாணியில் ஒரு கட்டுக் கதையை அவிழ்த்து விடுகிறார். இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஸ்டாலினிடம் விளக்கம் கோருகின்றனர்.

அதற்கு ஸ்டாலின் ‘இவருக்கு வேறு வேலை இல்லை; எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்; இதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை…’ என்ற பாணியில் ஒரு சில வார்த்தைகளை நாகரீகமாகச் சொல்லிவிட்டு கடந்து செல்கிறார்.


படிக்க: சாதி இந்திய சமூகத்தின் கொடிய நோய். அதுவே பாசிச பாஜகவின் அடித்தளம்!


உடனே அப்பனுக்கும் மகனுக்கும் பொத்துக் கொண்டு வந்து விட்டது ஆவேசம்! ‘சாமி வந்து தான் ஆடவில்லை!’ ‘பெரியவருக்கு (ராமதாசுக்கு) வயது 86. அவரைப் போய் ஸ்டாலின் மரியாதைக் குறைவாக பேசுவதா? விட்டேனே பார்! என்று வெகுண்டெழுந்து இதற்காக ‘ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்; மறியல் செய்வோம்; பேருந்துகளின் கண்ணாடிகளை உடைப்போம்; இல்லையேல் நவம்பர் 29-ல் விழுப்புரத்தில் சமூக நீதி மணி மண்டபம் திறக்க வரும் ஸ்டாலினுக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்…’ என்ற பாணியில் மிகவும் ஆவேசமாக மகன்காரர் அன்புமணி எச்சரிக்கிறார்.

இவர்களின் ஆவேசங்களைக் கூட பாஜக உட்பட சில பிழைப்புவாதக் கட்சிகள் ஆமோதித்து பக்கவாத்தியம் வாசிக்கின்றன!

ஒன்றிய அரசின் முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பாமக ஏன் எதிர்க்கவில்லை?

இந்தியாவில் மூன்று சதவீதமே இருக்கக்கூடிய பார்ப்பனர்கள் மாநில அளவில் ஒன்றிய அளவில் எத்தனை சதவீதம் சாதாரண பதவிகள் முதல் உயர் பதவிகள் வரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி இந்த ராமதாஸ் அன்புமணி & கோ வாய் திறந்து பேசியது உண்டா? பார்ப்பனர்கள் உள்ளிட்ட OC என்று சொல்லக்கூடிய முற்பட்ட வகுப்பினருக்கு ஆர்எஸ்எஸ் தூண்டுதலின் பேரில் மோடியின் பாஜக அரசு பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தியிருக்கக்கூடிய சூழலில் இன்றளவும் இந்த ‘சமூக நீதிக் காவலர்கள்’ வாய் திறந்தது உண்டா?

ராமதாஸிற்கு முற்போக்கு ஒளி வட்டம் சூட்டியவர்கள் எங்கே?

இதே ராமதாசை, ‘தம்மை இடதுசாரி முற்போக்காளர்கள்’ என சிலாகித்துக் கொண்ட சிலர்,  இவரை ஆரம்ப காலத்தில் உயர்த்தி பிடித்து ஒளிவட்டம் சூட்டினார்கள்!திண்டிவனம் தைலாபுரம் பண்ணை வீட்டிற்கே சென்று விருந்துண்டு, வெட்டிப் பேச்சுப் பேசி வானளாவ உயர்த்தி விட எத்தனித்தார்கள்!  ‘வன்னியர் சாதிக் கட்சி’யை ‘பாட்டாளி மக்கள் கட்சி’ என்று உருமாற்றி கொடுத்தவர்கள் இவர்கள்தான். இவற்றை சிலாகித்து பக்கம் பக்கமாய் எழுதியும் குவித்து தொலைத்தார்கள்!  அந்த தலைக்கனம் தான் இன்று வரை ராமதாஸ் வகையறாவை மிதப்பில் கிடக்கச் செய்துள்ளது.


படிக்க: கல்வி வள்ளல்கள் நடத்தும் ஆங்கில வழி கல்வி நிறுவனங்களின் அக்கிரமங்கள்!


நாடு முழுமைக்கும் வானளாவிய கட்டிடங்களை எழுப்பி கொள்ளை லாபம் அடிக்கும் ‘கல்வி வள்ளல்’களுக்கும் கல்விக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்க முடியுமா? அதுபோலவே இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகள் பலரை சாதி ரீதியில் திரட்டி வைத்துக் கொண்டதாலேயே ‘பாட்டாளி’ மக்கள் கட்சியை உருவாக்குவதற்கான தகுதியைப் பெற்றிடுவார்களா இந்த ராமதாஸும், அன்புமணி ராமதாஸும்?

ஆனால் ராமதாஸின் இன்றைய நிலை என்ன?

இந்நாட்டில் பாசிச பார்ப்பன – ஆர்.எஸ்.எஸ் – பாஜக – இந்துத்துவ – காவிக் கூட்டத்தின் நான்கு வர்ணம் 4000 சாதி என்ற சாதியப் படிநிலைகளை ஒப்புக் கொண்டுள்ள மனுஸ்மிருதி – பகவத் கீதை உள்பட எண்ணற்ற புராண இதிகாசக் குப்பைகளை தூக்கிப் பிடிக்கும் கும்பலோடு சேர்ந்து கொண்டு ‘சமூக நீதி’ பற்றி பேசுகிறார் இந்த சளக்கர்!

வடநாட்டில் மாட்டுக் கறி சாப்பிடுவோரை கொலை செய்கிறார்கள்; பொதுக் குளத்தில் குளிக்கும் பட்டியலின மக்களை கொன்று குவிக்கிறார்கள்; கடந்தாண்டு பஞ்சாப் –  அரியானா விவசாயிகள் தாம் விளைவித்த விவசாயப் பொருட்களுக்கு நியாயமான ஆதார விலை கோரி குளிரிலும், வெயிலிலும், பனியிலும், மழையிலும் துவளாமல் ஓராண்டாகப் போராடிய போது ராணுவம்,  போலீஸ் முதலானவற்றை வைத்து கடுமையாக அடக்கி எழுநூறு பேரை கொன்று குவித்தது பாஜக அரசு; நாடு முழுவதும் சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிராகக் கடும் வெறுப்புணர்ச்சியை மக்களிடத்தே உருவாக்கி அவர்களைக் கொன்று குவிப்பதே பணியாக எடுத்துக் கொண்டது ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்;


படிக்க: உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்! தீர்வு கம்யூனிசம் மட்டுமே!


அவர்களின் பல நூற்றாண்டு கால வழிபாட்டுத் தளங்களை இடித்து தரைமட்டமாக்கி ”இந்து”க்களின் உரிமை ஆக்கிக் கொண்டன இந்தக் காவிக் கூட்டம்; இஸ்லாமியர்களை நாட்டை விட்டே விரட்டு வதற்காகத் திட்டமிட்டே கொண்டுவரப் பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக ராஜ்யசபை உறுப்பினராக இருந்த பாமகவின் அன்புமணிராமதாஸ் அதிமுக-வுடன் இணைந்து அந்தக் கேடுகெட்ட மசோதா நிறைவேற ஆதரவளித்து வாக்களித்தார்;

தற்போது மணிப்பூரில் மலைவாழ் பழங்குடியினரான கிறித்தவ ‘குக்கி’யின சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் வகையில் பாஜக-வின் திட்டமிடப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மெய்தி என்ற பிற்படுத்தப்பட்ட மக்களைத் தூண்டிவிட்டு மோதச் செய்து நூற்றுக்கணக்கான குக்கி இன மக்கள் செத்து மடிவதற்கும், பல்லாயிரம் பேர் புலம்பெயர்வதற்கும், முகாம்களில் தஞ்சம் புகுவதற்கும், இளம் குக்கி இனப் பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கூட்டத்திற்கு பக்க பலமாயிருந்தோரே பாஜக கும்பல்; ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூரில் நடக்கும் இந்தக் கொலை பாதகச் செயல்களுக்கு கண்டனமும் தெரிவிக்கவில்லை; ‘உலகம் சுற்றும் வாலிபரான’ இந்த மோடி, மணிப்பூருக்குநேரில் சென்று இன்று வரை பார்வையிடவும் இல்லை! அனைத்திற்கும் காரணம் உங்கள் ஆஸ்தான தலைவர் மோடி என்பதை நினைவில் கொள்ளுங்கள் Mr. ராமதாஸ்!

குஜராத் பிரச்சனையாகட்டும், காஷ்மீர் பிரச்சனையாகட்டும், புல்டோசர் புகழ் உ.பி., ம.பி., ராஜஸ்தான்,  அரியானா, பீகார் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் சிறுபான்மையின- பட்டியலின மக்களை கொன்று குவித்ததில் – குவிப்பதில் முழுமுதற் காரணமானோர் இந்த சங்கிகளே….! இவ்விதம் எண்ணற்ற மக்கள் விரோத பாசிசக் கொடுங்கோன்மையை பாஜக நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய சூழலில் எள்ளின் முனையலவாவது ‘சமூக நீதி’ பேசும் ‘சமூக நீதி காவலர்’ ‘அய்யா’ ராமதாஸோ, ‘சின்ன அய்யா’ அன்புமணி ராமதாஸோ வாய் திறந்தது உண்டா? அவர்களோடு கூட்டணி வைத்துக் கொள்வதில் உங்களுக்கு கடுகளவேனும் வெட்கமாக இல்லை?  “விலக்குமாற்றுக்குப் பெயர் ‘பட்டு குஞ்சம்’ ” என்பது போல பாட்டாளிகளின் முழு முதல் எதிரிகளான கட்சிக்குப் பெயர் ‘பாட்டாளி மக்கள் கட்சி’ ! இவர்களுக்கு இந்த பெயரை சூட்டிய அக்கால முற்போக்கு இடதுசாரிகளை தேடிப் பார்த்துச் சொல்லுங்கள்!

அதானியின் உற்ற தோழன் யார்?

மோடி தனது பதவிக்காலம் முழுமையும் – உலகம் முழுமையும் எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தாரோ அந்தந்த நாடுகளுக்கெல்லாம் தன்னோடு பிணைத்து இழுத்துக் கொண்டு சென்றார் அதானியை – என்பதனை நாடறியும் உலகறியும்! அங்கெல்லாம் அதானி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் தொழில் துவங்க பட்டுக்கம்பளம் விரித்துக் கொடுத்தவர் மோடி; அதற்கு இந்திய வங்கிகளில் இருந்து பல லட்சம் கோடிகளை அதானிக்கு கடனாக கொடுத்ததும், கொடுத்த பணத்தை திரும்பச் செலுத்த ‘வக்கில்லை’ என்ற காரணம் காட்டி பல லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்ததும் இதே மோடி! ஹிண்டன்பர்க் அறிக்கை, செபி விவகாரம், தற்போது அமெரிக்க நீதிமன்றத்தின் மூலமாக பல்லாயிரம் கோடி லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானிக்கு ஜோடி மோடி! இவ்வளவு விடயங்கள் அம்மணமாகத் தெரிகின்றபோதும், அதானி குறித்து அவரது ரகசியங்கள் குறித்து மோடியை நோக்கி கேள்வி எழுப்ப வக்கில்லாமல், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்ப உங்களுக்கு வெட்கமா இல்லையா Mr.ராமதாஸ்? உங்களுக்கு வெட்கமா இல்லையா Mr. அன்புமணி ராமதாஸ்?


படிக்க: மின் ஒப்பந்தங்கள் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த அதானி!


ஸ்டாலினின் திமுக அரசில் விமர்சிக்கத்தக்க சில பொது பிரச்சனைகள் இருந்திட்டாலும், ஒரு பொதுப் புத்தியில் ஆர்எஸ்எஸ் – பாஜக இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான ‘இந்தியா கூட்டணி’யில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கக் கூடியவராக தகவமைத்துக் கொண்டுள்ளார்! அந்தக் கூட்டணியில் சில குறைபாடுகள் இருக்கலாம்; நாம் மறுப்பதற்கில்லை. அதுவே சர்வரோக நிவாரணியாக எக்காலத்திலும் நீடித்திருக்கப் போவதில்லை. ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே தேசிய கல்வி, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு – தேர்தல்களில் தில்லுமுல்லு மோசடி செய்து வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ளுதல் என்ற பாணியில் தலைவிரித்தாடும் பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக இந்த அளவேனும் அவர்கள் களம் காண்பதற்கு நாம் ஆதரவு தரத்தான் வேண்டும்!

ஆனால் உங்கள் நிலையோ ஒவ்வொரு தேர்தலிலும் நிறத்தை மாற்றிக் கொண்டு,  அணி மாறி சூட்கேஸை மாற்றிக் கொண்டு ஆற்றுகின்ற ‘பெரும் பணியை’ எண்ணும் பொழுது ‘மெய் சிலிர்க்கிறது’ அய்யாமார்களே!

இன்று நாட்டில் தனியார் மயம் – தாராள மயம் – உலக மயம் – என்ற  மறுகாலனியாக்கல் போக்கும், நாட்டின் இறையாண்மையையே காவு கொடுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் போக்கும், இத்தகையோருக்கு வெண்சாமரம் வீசி பட்டுக்கம்பளம் விரித்துக் கொடுத்து வரவேற்று அரவணைத்து கொள்ளை லாபம் ஈட்டிக் குளிர் காய்ந்து கொண்டு,  உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையே பறித்தெடுக்கும் பார்ப்பன ஆர் எஸ் எஸ் பாஜக மதவெறி கூட்டம், மொத்த பிரச்சனை களையும் மடைமாற்றி மதக் கலவரங்களையும்,  சாதிக் கலவரங்களையும் உருவாக்கி அதன் திசைவழியில் மக்களைப் பழக்கப்படுத்தி தன்னை உத்தமபுத்திரர்களாகக் காண்பித்துக் கொள்ள முனைகிறது காவிக் கூட்டம்.

இந்நிலையில் இதனைப் பற்றி எல்லாம் அடிச்சுவடி கூட தெரியாத இந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் போன்ற அப்பட்டமான பிழைப்புவாதிகளிடம்,  உழைக்கும் மக்கள் துளியளவும் ஏமாந்து விடாமல் அவர்களை முற்றும் முழுதாக தனிமைப் படுத்த வேண்டும்.

நாட்டின் அபாயகரமான சூழல் கருதி, மக்கள் நலன் பேண, சரியான அரசியல் வழித்தடத்தில் கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்தவும், அதற்கான சரியான ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்பி களம் கண்டு ஜனநாயகக் கூட்டரசை நிறுவவும், மக்களை சகல வழிகளிலும் அணி திரட்டித் தடம் பதிப்போம்! முன்னேறுவோம்!

  • எழில்மாறன்.

1 COMMENT

  1. தமிழகத்தில் பாஜக சங்க பரிவார் கும்பல் ஆழமாக வேரூன்றுவதற்கு கடந்த 10 ஆண்டுகளில் பக்கபலமாய் இருந்து வேலை செய்ததில் பாமகவின் பங்கு அதிகம் பாமக எப்படி ஒரு சாதிவெறி கட்சியோ அதுபோல பாஜக ஒரு மதவெறிக் கட்சி. சாதிவெறி மதவெறி கட்சிகளிடையே ஏற்பட்ட கூட்டணி மக்களை பிளவுபடுத்துவதில் இணைந்து வேலை செய்கிறது. பாமகவில் உள்ள சாதி வெறியர்கள் மதவெறியர்களாக மாறுவதும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. பணத்திற்காக தனது சமூக மக்களை பலியிடும் கேடுகெட்ட தனமான வேலையை தான் ராமதாஸ் கும்பல் செய்துக்கொண்டு இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் விதத்தில் கட்டுரை சிறப்பாக எழுதியுள்ள தோழருக்கு வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here