தேர்தல் மோசடி மன்னனும், ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் கைக்கூலியுமான இந்திய ஒன்றியத்தின் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களை நீக்குவது; ஈவிஎம் மிஷினை பயன்படுத்தி தேர்தலில் தில்லுமுல்லுகளை செய்வது; தனக்கு வேண்டிய வேட்பாளர்கள் பட்டியலை முன்னரே தேர்வு செய்து வெற்றி பெறச் செய்வது; எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் எதிர்க்கட்சி தலைவர்களையே படுதோல்வி அடைய வைப்பது போன்ற சகலகலா ஜித்து வேலைகளை செய்து வருகிறார்.
அவருடன் பணியாற்றுகின்ற சக ஆணையர்களே அவரின் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன் வைத்த பிறகும் கூட, இந்திய ஒன்றிய அரசாங்கம் அவரின் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது மட்டுமின்றி, அது குறித்து எந்த விசாரணையையுமே நடத்தவில்லை என்பதிலிருந்து மேற்ச்சொன்ன அனைத்தும் உண்மை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
இந்த சூழலில் இந்தியா கூட்டணியில் ஒன்றாக உள்ள காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற இடதுசாரிகள் ஆகிய இருவரும் பாசிச பாஜகவை எதிர்த்து முறியடிப்பதற்கு குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் ஒற்றுமையுடன் செயல்படுவதில்லை. மாறாக ஒருவர் மீது ஒருவரும் விமர்சனம் வைத்துக் கொள்வது என்ற நிலையிலிருந்து, கேரளத்தில் காங்கிரஸ் குண்டர்கள் சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ மாணவர்கள் மீது வெறித் தாக்குதல் நடத்துகின்ற அளவிற்கு முன்னேறியுள்ளது.
கேரளத்தின் சட்டமன்றத் தேர்தலில் ஏற்கனவே ஆண்டு வந்த சிபிஎம் கட்சி படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள வி.டி.சதீசன் ஒரு அரசியல் ரவுடி என்பதை அந்த கட்சியைச் சார்ந்தவர்களே அம்பலப்படுத்துகின்றனர். காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தியோ, “கேரளத்தில் உள்ள சிபிஎம், சிபிஐ கட்சிகள் பாசிச பாஜகவின் எடுபிடிகளை போல செயல்படுகிறார்கள் என்றும். அவர்களுக்கு சிஜேபி என்று பெயர் வைத்தும்” தேர்தல் பரப்புரை செய்கிறார். இவ்வாறு நேர் எதிராக செயல்படுகின்ற இரண்டு கட்சிகளும் தேசிய அளவில் ஒற்றுமை, மாநில அளவில் பகைமை என்ற சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க தேர்தல் மோசடி மன்னன் ஞானேஷ்குமாரையும், அவருக்கு ஆதரவாக செயல்படுகின்ற அமித்ஷாவையும் அம்பலப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தப் போகிறோம் என்று கேரளாவின் இளைஞர் காங்கிரஸ் கிளம்பியது.

இங்குள்ள பாஜக பிற மாநிலங்களைப் போல அல்லாமல் முறையான பயிற்சி பெற்ற குண்டர் படையாக இருப்பதால் அவர்களிடம் நேராக வாலாட்ட முடியாத காங்கிரஸ் சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பு அதிகமாக செயல்படுகின்ற கேரள பல்கலைக்கழகத்தில் விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள் உச்சகட்டத்தை அடைந்து வளாகத்தில் உள்ள பல்வேறு பொது சொத்துகளை சேதம் விளைவிப்பது; மாணவர்கள் மீது கொலை வெறியாட்டம் நடத்துவது என்ற அளவிற்கு மூர்க்கத்தனமாக நடைபெற்றுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த கொடூரமான தாக்குதல்களை கண்டித்து கேரளத்தின் முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் கீழ்க்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, நேற்று இரவு இளைஞர் காங்கிரஸ் நடத்திய தீப்பந்த ஊர்வலத்தின் உண்மையான இலக்கு பல்கலைக்கழக விடுதியும், இந்திய மாணவர் சங்கமும் (SFI) தான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் திருப்திப்படுத்தவும், மாநில அரசின் நிர்வாகத் தோல்வைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வன்முறைச் சம்பவமே இது.
படிக்க:
♦ கேரள உள்ளாட்சித் தேர்தலில் சிபிஎம்-ன் தோல்வியும், பாஜகவின் வளர்ச்சியும்!
♦ கேரளாவில் சிபிஎம் செயலாளர் ஆர்எஸ்எஸ் கும்பலால் படுகொலை – 4 பேர் கைது
மத்திய அரசுக்கு எதிராகவோ, சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராகவோ ஒரு வார்த்தைகூடப் பேசமாட்டோம் என்ற பிடிவாதமான போக்கில் கேரளாவின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசும், முதலமைச்சரும் செயல்பட்டு வருகின்றனர்.
அமித் ஷாவுக்கு எதிராக நடைபெற்ற கறுப்புக்கொடி போராட்டத்தின் காணொளியைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சரின் பதிவை, முதலமைச்சரே தலையிட்டு நீக்கச் செய்தார். இதனால் ஏற்பட்ட அவமானத்தை மறைப்பதற்காகவே நேற்று இளைஞர் காங்கிரஸ் போராட்டம் என்ற பெயரில் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (DCC) அலுவலகம் தாக்கப்பட்டபோதும், தங்களது சொந்த அமைச்சர்களே வழிமறிக்கப்பட்டபோதும், சங்பரிவாருக்கு எதிராகப் பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களோ, பிற மக்கள் பிரதிநிதிகளோ, இளைஞர் காங்கிரஸ் அமைப்பினரோ முன்வரவில்லை. பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்கள்தான் அவர்களது உண்மையான இலக்கு என்பதை இது நிரூபிக்கிறது.
மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு, ஆதரவாளர்களின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் பயணங்களில் நிலவும் மர்மங்கள், கல்வித்துறையில் காவிமயமாக்கல், வெள்ளப் பேரிடர் நிவாரணப் பணிகள் முடங்கிக் கிடப்பது உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்க முடியாத நிலையில் அரசு உள்ளது.
படிக்க:
♦ தி கேரள ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது சங்கிகள் கொண்டாட்டம்!
♦ மர்யம் பெயர்க் குற்றம்! | கனகராஜ் கருப்பையா
இதற்கு மேலாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சந்தித்த பின்னடைவுகளும் சேர்ந்துள்ளன. மிகக் குறுகிய காலத்திலேயே அனைத்துத் துறைகளிலும் முழுமையான தோல்வியைச் சந்தித்துள்ள இந்த அரசு, இப்பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே, கட்சிக் குண்டர்களைக் களமிறக்கி, திட்டமிட்டு பல்கலைக்கழக விடுதியில் வன்முறையை அரங்கேற்றியுள்ளது.” என்று கண்டித்துள்ளார். இது சரியானதே.
நீண்ட காலமாக கேரளத்தில் காங்கிரசுக்கும், நாடாளுமன்ற இடதுசாரிகளுக்கும் இடையில் நடக்கின்ற மோதலைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்எஸ்எஸ் படிப்படியாக வளர்ந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட பார்ப்பனர் மற்றும் நாயர்கள், நம்பூதிரிகள் உள்ளடக்கிய மேல் சாதி கும்பலும், பிற சாதிகளில் உள்ள கருப்பு பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து கிராமப்புறங்களில் படிப்படியாக ஆர்எஸ்எஸ் பாஜகவை வளர்த்து வருகின்றனர். இதற்கு நிகராகவே கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாசிச பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி படிப்படியாக காலூன்றி வருகிறது.
இந்திய ஒன்றியத்திலேயே கேரளாவில் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்த நாடாளுமன்ற இடது சாரிகளின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, இந்தியா முழுவதும் எங்குமே இடதுசாரிகளின் ஆட்சி இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
இவை அனைத்தும் சிபிஎம் கட்சியின் தலைமைக்கு நன்றாகவேத் தெரியும் என்ற போதிலும் மீண்டும், மீண்டும் ஒரே திசையில் பயணித்து வருகின்றனர். மார்க்சிய லெனினிய அமைப்புகள் பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு கொள்கைகளையும், அதன் தன்மையை கார்ப்பரேட் காவி பாசிசம் என்று வரையறை செய்து அதை வீழ்த்துவதற்கு குறைந்தபட்ச செயல்திட்டமாக ஜனநாயக கூட்டரசை அமைக்க வேண்டும் என்று முன் வைப்பதை விவாதிக்க முன் வர வேண்டும். இடதுசாரிகள் பாசிச எதிர்ப்பு அரசியலை முன் வைத்து புரட்சிகர அமைப்புகளுடன் ஒன்றிணைய வேண்டும். அதன் மூலமாகவே பாசிச குண்டர்களின் தாக்குதல்களையும். காங்கிரசு குண்டர்களின் தாக்குதலையும் எதிர் கொள்ள முடியும்.
- மருது பாண்டியன்.
புதிய ஜனநாயகம் தினசரி






