71 வது தேசிய விருது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஷாருக்கான் உட்பட பலர் தேசிய விருது பெற்றுள்ளனர். தமிழில் பார்க்கிங் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளது. கேரளாவில் பரபரப்பு கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி படம்’ இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தேசிய விருது கொடுத்தது இந்திய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
சங்பரிவார் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட கேரளா ஸ்டோரி!
கதையை சுருக்கமாக கூற வேண்டுமானால் “இந்து பெண்கள் லவ் ஜிகாத் மூலம் இஸ்லாமிய மதமாற்றம் செய்யப்பட்டு பின்னர் ஐஎஸ்ஐஎஸ்(ISIS) போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு சேர்க்கப்படுகிறார்கள்” என்ற பின்னணியில் இஸ்லாமியர்களை டார்கெட் செய்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் போல சங்பரிவார் கும்பலால் உருவாக்கப்பட்டது தான் ‘தி கேரளா ஸ்டோரி’.
அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்கள், ஆர்எஸ்எஸ் – பாஜகவின் மைய அரசியலை புரிந்து கொள்ளாதவர்கள் இந்த படத்தை உண்மை என்று நம்புவதற்கு வாய்ப்பு அதிகம். குறிப்பாக கூற வேண்டுமானால் இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை திட்டமிட்டு காதலித்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு அனுப்புவதாக பொது புத்தியில் திணிக்கிறது இந்த படம்.
கேரளா ஸ்டோரி உண்மை கதை அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக சங்பரிவார் கும்பலால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. அதாவது 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்க்கப்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லாமல் சமூகத்தில் பதட்டத்தையும் பரபரப்பையும் உருவாக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இது உண்மையானது என்பதற்கான எந்த சான்றுகளும் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை.
படிக்க: காஷ்மீர் ஃபைல்ஸ்: முஸ்லிம்கள்தான் பண்டிட்டுகளைப் பாதுகாத்தார்கள்- உளவுத்துறை முன்னாள் தலைவர்.
இந்தப் படத்தை வெளியிட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் வெளியாகி மக்களிடையே மதவெறுப்பை உருவாக்கியது. நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியானதால் உலகம் முழுவதும் இந்த பொய்யையும் மதவெறுப்பையும் பரப்பும் கேரளா ஸ்டோரி இஸ்லாமியர்கள் மீதான தப்பெண்ணங்களை உருவாக்கி இருக்கும். சங்பரிவார்கும்பலின் நோக்கமும் அதுதான்.
சினிமா துறையை கேடாக பயன்படுத்தும் பாசிச கும்பல்
வருடத்திற்கு ஒரு படமாவது இஸ்லாமிய வெறுப்பை கக்கும் விதமாக மத வெறியை உருவாக்கும் விதமாக உருவாக்கப்படுகிறது. தி காஷ்மீர் ஃபைல்ஸ்(2022), தி கேரளா ஸ்டோரி(2023), ரசாக்கர்(2024), சாவா(2025) இப்படங்கள் அனைத்தும் மதவெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கும் படங்களாக பாசிச கும்பலின் துணையோடு உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படங்களுக்கு வரி விலக்கும் சலுகைகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தேசிய விருது!!
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருது கிடைத்ததையொட்டி, திரைப்பட குழுவினருக்கு இந்து முன்னணி பாராட்டுகளையும் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது..
தேசிய விருது பெற்றுள்ள இத்திரைப்படத்தை தமிழகத்திலும்… pic.twitter.com/NSi8hZLMCJ
— Hindu Munnani (@hindumunnani_tn) August 2, 2025
தி காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி போன்ற படங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்க எடுக்கப்பட்ட குப்பை படங்கள் பட்டியலில் சேர்த்து விட முடியாது. மக்களின் உணர்வறிந்து தீய கருத்தை பரப்பும் நோக்கத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட படம். இப்படங்களை சென்சார் ஃபோர்டுகள் பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் காட்சிகளும், பாசிச கும்பலை அம்பலப்படுத்தும் காட்சிகளும் இதே சென்சார் போர்டுகளால் வெட்டி வீசப்படுகின்றன. அதற்கு ஏற்ப சென்சார் போர்டுகளில் சங்பரிவார் கருத்துக் கொண்ட நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: “எம்புரான்” சேட்டன்களை மிரட்டும் சங்கிகள்!
விருதுகள் மூலம் ஊக்குவிக்கப்படும் கலவர சினிமாக்கள்!
மக்கள் கருத்தை தாங்கி நிற்கக்கூடிய சமூகப் பிரச்சனையை பேசக்கூடிய சினிமாக்களை தேசிய விருது குழு கண்டுக் கொள்வதில்லை. மாறாக விஷ கருத்துக்களை பரப்பக்கூடிய, இந்துத்துவாவிற்கு வலு சேர்க்கும் கேரளா ஸ்டோரி போன்ற திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் இப்படியான கலவர சினிமாக்களை தயாரிப்பவர்களும் இயக்குபவர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதனால்தான் வருடத்திற்கு ஒரு படம் சங்பரிவார் கும்பலின் ஏகோபித்த ஆதரவுடன் வெளியிடப்படுகிறது.
கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டதை சங்கிகள் கொண்டாடுகிறார்கள். விருதுகள் வழக்கப்படுவதன் மூலம் மதவெறுப்பு கருத்துக்கள் நிறைந்த படங்களை ஒன்றிய மோடி அரசு அங்கீகரிக்கிறது. அடுத்த ஆண்டு தேசிய விருது பட்டியலில் “சாவா” படம் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவற்றை படைப்பு சுதந்திரம் என்று கடந்து விடாமல் ஜனநாயகத்தை நேசிக்கும் கலைஞர்களும் வெகுமக்களும் உறுதியான எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும்.
- நந்தன்







மத வெறுப்பு படங்களுக்கு தேசிய விருது கொடுத்து இந்து மதவெறி ஊட்டி வளர்கிறது ஆர் எஸ் எஸ், பா.ஜ.க. கும்பல்.
கலை துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் தன்னுடைய ஆட்களை கொண்டு இந்துத்துவா கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. இந்து மதவெறி ஊட்டி நாட்டில் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாக்கி கொண்டே இருக்கிறது.
இதை உழைக்கும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் கட்டுரை உள்ளது.