கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராய சாவு அல்லது படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன
யாரெல்லாம் குற்றவாளிகள் ?
தற்போது வரை 59 பேர் பலியாகி உள்ளனர். 150 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் என தமிழக அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும், பணியிட மாற்றம் செய்தும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மூட்டை என்றழைக்கப்படும் விஷச் சாராய பாக்கெட்டுகளை கள்ளக்குறிச்சியில் மொத்தமாக காய்ச்சியவர்கள், மாவட்டம் முழுவதும் விற்பனை செய்தவர்கள், சில்லறை விற்பனை செய்து பரப்பியவர்கள் என பலரையும் கைது செய்துள்ளது காவல்துறை.
இவர்கள் கள்ளக்குறிச்சியில் வாழ்ந்து வரும் நேரடி குற்றவாளிகள் மட்டுமே. இந்த படுகொலையில் மறைமுக கூட்டாளிகளும் உள்ளனர். அவர்கள் யார்? அதையும் பார்ப்போம்.
தவறுசெய்ய தூண்டுபவனும் குற்றவாளியே !
தலைமுறை தலைமுறையாக போதைப்பழக்கம் தொடர்ந்து கடத்தப்பட்டு, தற்போது அதுவே சமூக பழக்க வழக்கமாக, அதாவது நவீன நாகரீக கலாச்சாரமாக மாற்றப்படுவதில் யாரெல்லாம் பங்கு வகிக்கிறார்கள்? இது நம் பரிசீலனைக்குரிய ஒன்று.
நம் குல தெய்வங்கள் கள், சாராயத்தை குடிக்கின்றன. பக்தர்கள் சுருட்டுடன் பாட்டிலையும் படைத்து வழிபடுவதன் மூலம் போதை கலாச்சாரம் பரவுகிறது என சங்கிகள் குறிப்பாக ஆளுநர் ரவி நமக்காக கவலைப்படுகிறார்.
இது முழு உண்மை அல்ல நாம் முழு உண்மைகளை தேடிப்பிடிப்போம்.
சச்சின் செய்தது என்ன?
கிரிக்கெட்டின் கடவுளாகவே கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் முதல் தோனி, விராட் கோலி வரை அனைத்து ஜாம்பவான்களும் தமது வெற்றி கொண்டாட்டத்தில் ஷாம்பெய்ன் பாட்டில்களை குலுக்கி திறந்து பீய்ச்சி அடித்து மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.
கிரிக்கெட்டை நேசிக்கும் கோடிக்கணக்கான இளம் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும், தமது செயல்கள் மூலம் சரக்கு அடிப்பது தவறல்ல சந்தோஷத்தை சரக்கடித்துக் கொண்டாட வேண்டும் என்று மறைமுகமாக கற்பிக்கின்றனர் கிரிக்கெட் ஜாம்பவான்கள்.
நேரலையில் மது பாட்டிலோடு நடக்கும் கொண்டாட்டத்தை பார்த்து ஏங்கும் கிராமப்புற ஏழை சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் தமது கையில் உள்ள காசுக்கு ஏற்ற போதையை நாடவே செய்கின்றனர். அப்படி இன்று கள்ளக்குறிச்சியில் பலியானவர்களில் சிலர் கிரிக்கெட்டால் போதைக்கு பழக்கமானவராகவும் இருக்கக்கூடும். எனவே போதையை விளம்பரப்படுத்தும் உயர்த்திப் பிடிக்கும் கேடுகெட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இப்போது படுகொலையின் மறைமுக கூட்டாளிகள் தான்.
படிக்க:
♦ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய படுகொலைகள்: பூரண மதுவிலக்கு ஒன்றே தீர்வு!
♦ ‘கண்ணீர் விடுங்கள்!’ லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் 44 சதவீதம் குறைந்துள்ளதாம்.!
சிறுவர்கள் இளைஞர்களை ஈர்ப்பது விளையாட்டு மட்டும் அல்ல; சினிமாவும் தான் . தற்போது தமிழகத்தில் தமிழில் எடுக்கப்படும் படங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் அல்லது ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படம் கூட டப்பிங் செய்யப்பட்டு பட்டி தொட்டி எங்கும் திரையிடப்படுகிறது.
இதில் தமிழ் திரைப்பட கதாநாயகர்களை தமது வழிகாட்டிகளாகவே பலரும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் முன்னணி ஹீரோக்களில் பலரும் தமது திரைப்படங்களில் சரக்கு அடிப்பவராகவும், புகைப்பிடிப்பவராகவும் விதவிதமாக நடித்து கல்லா கட்டுகின்றனர். தமக்கு பிடித்தமான ஹீரோ செய்வதை போலவே தானும் செய்ய, அது போல் வாழ்க்கையை அனுபவிக்க தமது ரசிகர்களை மறைமுகமாக தூண்டுகின்றனர்.
இப்படிவிளையாட்டு வீரர்களும் சினிமா கதாநாயகர்களும் நாட்டு மக்கள் தமது சுக துக்கங்களை எப்படி கடைபிடிக்க வேண்டும் என கற்றுத்தரும் கலாச்சார முன்மாதிரிகளாகவே மாற்றப்படுகின்றனர். ஐபிஎல் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புகள் மற்றும் விளம்பரங்கள் மூலமும், சினிமாக்கள் மூலமும் கார்ப்பரேட் மீடியாக்களால் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது கார்ப்பரேட் நுகர்வு போதை கலாச்சாரம்
நாடெங்கும் நடக்கும் விஷச்சாராய, நல்ல சாராய சாவு அல்லது படுகொலைகளுக்கும், போதையால் சாலைகளில் ஏற்படும் விபத்து மற்றும் மரணங்கள் உள்ளிட்டவைகளுக்கும் யார் பொறுப்பேற்பது? போதையை விற்பவர்கள் மட்டுமல்ல; போதையை பரப்புவோர்களும், போதையை பரப்புவதற்காக காசுக்கு நடிப்பவர்களும் கூட சேர்ந்தே தான் பொறுப்பெடுக்க வேண்டும்.
எனவே பாட்டிலும் கையுமாக காட்சி தந்த அனைவருமே கள்ளச்சாராய, விஷச்சாராய படுகொலையின் மறைமுக குற்றவாளிகள் தான்.
நம் இளம் தலைமுறைக்கு விளையாட்டை ரசிக்கவும், சினிமாவை ரசிக்கவும் கற்றுத் தருவோம். சமூகப் பொறுப்புத் துளியும் இல்லாத விளையாட்டு வீரர்களோ சினிமா கதாநாயகிகளோ காசுக்காக செய்யும் கீழ்த்தரமான வேலைகளை அம்பலப்படுத்தி எச்சரித்து வளர்ப்போம்.
இளமாறன்.