தமிழகத்தை உலுக்கிக் கொண்டுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய படுகொலைகள் மது போதைக்கு எதிரான ஆத்திரத்தையும், உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்து வருகிறது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்று பேசினால், அதனை மறுப்பது போல் நாடு முழுவதும் போதை தலைவிரித்தாடுகின்ற போது தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்றும், பூரண மதுவிலக்கு என்று அறிவித்துள்ள குஜராத், பீகார் மற்றும் மீசோரம், நாகாலாந்து, யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகள் போன்ற மாநிலங்களில் கள்ளச்சாராய சாவுகள் நடந்து கொண்டுதான் உள்ளது என்றும் வாதங்கள் வைக்கப்படுகிறது.
மதுவிலக்கும், மது ஆதரவும்
சுருக்கமான பார்வை!
இந்தியாவில் பிரிட்டன் ஆட்சி காலத்தில் குடிப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லாமல் இருந்தது. அதே சமயத்தில் சரக்கு ஒஸ்தியாக இருக்க வேண்டும் என்பதும், குறைந்த விலையில் மது என்ற பெயரில் தரமற்ற மது விற்பனை செய்யக்கூடாது என்பதுதான் பிரிட்டனின் கொள்கையாக இருந்தது.
அப்போதைய காங்கிரஸ் கட்சியும், காந்தியும் இந்த கொள்கைக்கு எதிராக ’கள்ளுக்கடைகளை மூடு’ என்று போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்தக் கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டங்களில் தமிழகத்தை பொறுத்தவரை ராஜாஜி காந்திக்கு ஆதரவாகவும், சத்தியமூர்த்தி காந்திக்கு எதிராகவும் செயல்பட்டார். குறிப்பாக, ”குடிகாரர் இல்லாத அடிமை நாட்டில் வாழ்வதைவிட, குடிகாரர்கள் வாழும் சுதந்திர நாட்டின் பிரஜையாக இருக்கவே விரும்புகிறேன்” என்று பிதற்றினார் சத்தியமூர்த்தி.
காங்கிரசின் தொடர் போராட்டங்களின் காரணமாக 1937 முதல் இரண்டாம் உலகப் போர் துவங்கிய 1939 வரை இந்தியாவில் மதுவிலக்கு அமலில் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் இந்திய மக்களை ஈடுபடுத்தியதால் பல்வேறு மாகாணங்களில் முதல்வர்கள் பதவி விலகினர். இதனால் மதுவிலக்கு கொள்கையும் தளரத் துவங்கியது.
தமிழகத்தில் 1947 இல் நடந்த சென்னை மாகாண தேர்தலில் மதுவிலக்கு கொள்கை பிரச்சாரமாக மேற்கொள்ளப்பட்டது. 1947-ல் ஓமந்தூர் ராமசாமி முதல்வராக பதவி ஏற்ற பிறகு 1948-ல் பூரண மதுவிலக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் சென்னை மாகாணத்தில் பூரண மதுவிலக்கு அமலாகி தமிழ்நாட்டின் முதல் முதல்வரான திமுகவின் அண்ணாதுரை ஆட்சிவரை ஏறக்குறைய 21 ஆண்டுகள் இது நீடித்தது.
நாடு முழுவதும் ஒரே சீரான மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த முடியவில்லை என்ற காரணத்தினால் காங்கிரஸ் கட்சி, 1963 ஏப்ரல் மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நீதிபதியான தேக் சந்த் மூலம் இதற்கு பொருத்தமான கொள்கை ஒன்றை வகுத்து தருமாறு கோரினர். அவர் அளித்த பரிந்துரையின்படி, 1970 ஆம் ஆண்டு காந்தி நூற்றாண்டுக்குள் இந்தியாவில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது.
1969 அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி வருவாய் பற்றாக்குறையை காரணம் காட்டி 1971 இல் மதுவிலக்கு ஒழிப்பை அமல்படுத்தினார். அப்போது இது தற்காலிகமானது தான் என்றும் 1973-ல் கள்ளுக்கடை மூடப்படும் என்றும், 74-ல் சாராயக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். அதன்படி அவை மூடப்பட்டது. அதன் பிறகு வந்த எம்ஜிஆர் ஆட்சியிலும் அது தொடர்ந்தது.
கள்ளச்சாராய சாவுகள் பெருகவே, சாவுகள் மற்றும் அரசின் நிதி பற்றாக்குறை இரண்டையும் காரணம் காட்டி 1981 எம்ஜிஆர் ஆட்சியில் கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டு தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு மதுபானங்களை போலவே சீமை சரக்கு தயாரிக்க, சாராய உடையார் போன்ற 10-க்கும் மேற்பட்ட தனியார் சாராய ஆலை அதிபர்களுக்கு அனுமதி தரப்பட்டது. அன்று முதல் சாராய ஆலை அதிபர்கள் கட்சி வேறுபாடின்றி சாராய சாம்ராஜ்யத்தை கட்டவிழ்த்து விட்டனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம், விஷச்சாராயம் போன்றவற்றின் மூலம் நடந்த கொத்துக்கொத்தான சாவுகளுக்கு பிறகு, மக்கள் மீதான ’அக்கறையுடன்’, எம்ஜிஆர் அரசு கண்டுபிடித்தது தான் டாஸ்மாக் மூலம் சாராய விற்பனை நடத்துவது என்ற அரிய கண்டுபிடிப்பு. சாராய விற்பனையை ஏற்று நடத்துவதற்கு டாஸ்மாக் என்ற நிறுவனத்தை 1983 எம்ஜிஆர் நிறுவினார். இதன் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி மலிவு விலை மது என்று பாக்கெட் சாராயத்தை அறிமுகப்படுத்தினார். அது பெண்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது என்பதால் பின்னர் வந்த ஜெயலலிதா ஆட்சியில் அது நிறுத்தப்பட்டது என்றாலும், பாசிச ஜேயாவின் ஆட்சியில்தான் அரசே நேரடியாக சாராய விற்பனை நடத்துவதற்கு 2003 ஆம் ஆண்டு முதல் ஏற்றுக் கொண்டது.
அதன் பிறகு ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு மாதமும் டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு தீர்மானிப்பதும், அதற்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பணிப்பது என்ற வகையில் அரசே சாராயம் விற்று வருகிறது. தற்போதைய திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டுக்கு 50000 கோடி டாஸ்மாக் விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு தீர்மானிக்கப்பட்டது. டாஸ்மாக் துவங்கிய 1983-ல் 128 கோடியாக இருந்த அரசின் வருமானம் 2023-24 ஆண்டில் ரூ 45,886 கோடியாக உயர்ந்துள்ளது.
டாஸ்மாக் துவங்கியது முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டுக்கு எத்தனை கோடிக்கு மதுபான விற்பனை செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்து பெண்களின் தாலியறுத்து வருகின்றனர் என்பதுதான் மது ஆதரவு மற்றும் மதுவிலக்கு ஒழிக்கப்பட்டது பற்றிய சுருக்கமான வரலாறு ஆகும்.
பூரண மதுவிலக்கு கள்ளச் சாராயத்தை அதிகரிக்குமா?
டாஸ்மாக் விற்பனைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படும் காரணங்களில் ஒன்று டாஸ்மாக் மூடப்பட்டால் கள்ளக்குறிச்சியில் தற்போது விற்பனை செய்யப்பட்ட விஷச் சாராயம் போல கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்றும், இது மக்களின் உயிரை கொத்துக் கொத்தாக குடித்து விடும் என்ற கேடான பார்வைதான்.
அன்றாடம் உடலுழைப்பில் ஈடுபடுகின்ற உழைக்கும் மக்கள் தொடங்கி உல்லாச ஊதாரித்தனத்திற்காகவும், வார இறுதிநாட்கள் கொண்டாட்டங்களில் மனஅழுத்தத்தை குறைப்பதற்கும் குடிபோதையில் மிதப்பது என்ற மேட்டுக்குடி கும்பல் வரை போதை கலாச்சாரம் தொடர்ந்து ஊக்கப்படுத்தப்படுகிறது.
சாராய விற்பனை மட்டுமின்றி மற்றொருபுறம் கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதை பொருட்கள் துவங்கி பான்பராக், குட்கா வரை பல்வேறு பெயர்களில் இந்த போதை பொருட்கள் நடமாடுகின்றன. இந்த போதைப் பொருட்கள் நடமாட்டத்திற்கும், அரசாங்கத்தின் அரசியல் பொருளாதாரக் கொள்கைக்கும் நெருக்கமான உறவு உள்ளது என்பதை தொடர்ந்து புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தி வருகிறது.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளினால் சமூக ரீதியாக பாதிக்கப்படுகின்ற மக்கள் அதற்கு எதிராக போராடுவதற்கும், விழிப்புணர்வு பெறுவதற்கும் தடையாக இந்த போதைப் பழக்கத்தை மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசாங்கமாக இருந்தாலும் திட்டமிட்டே நடத்தி வருகிறது என்பதுதான் உண்மை.
படிக்க:
♦ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து செத்த உழைப்பாளிகள்! தடுக்கவே முடியாதா?
♦ கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி! திமுக அரசின் அலட்சியமே காரணம்!
தனது வறுமைக்கும் கொடுமைக்கும், தான் சந்திக்கின்ற பல்வேறு நெருக்கடிகளுக்கும் உண்மையான காரணத்தை கண்டுபிடித்து அதற்கு எதிராக போராடுவதற்கு பதிலாக தற்காலிகமாக அந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு குடிக்க துவங்குவதிலிருந்து வாழ்வு, சாவு, கொண்டாட்டங்கள் போன்ற அனைத்திலும் போதைப் பழக்கம் தடையின்றி அமுலாகிறது. இதனால் தொடர்ச்சியான குடிப்பழக்கத்திற்கு ஆளாகி குடி நோயாளிகளாகின்ற மக்களுக்கு மாற்றாக போதைப் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான சிகிச்சைகள் மற்றும் புதிய ஆலோசனைகள் வழங்குவது போன்றவற்றின் மூலம் படிப்படியாக அந்த பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஆனால் சாராய ஆலை அதிபர்களாகவும், கள்ளச்சாராய சாம்ராஜ்யத்தை நடத்துகின்ற மாபியா கும்பலின் புரவலாகவும் இருக்கும் அரசியல் கட்சிகள் இத்தகைய கோரிக்கைகளை நியாயமாக பரிசீலித்து நடந்து கொள்ளாது என்பது மட்டுமின்றி, இது அவர்களின் இருப்புக்கே ஆபத்தாகிவிடும் என்பதுதான் உண்மையான நிலவரமாகும்.
அரசாங்கத்திற்கும், தனிநபர்களாக போதை சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்கின்ற கிரிமினல் மாபியாக்களுக்கும் பல்லாயிரம் கோடி வருமானம் கிடைக்கின்றது என்பதால் இந்த போதை பழக்கத்தை தடுக்கின்ற மதுவிலக்கை ஒருபோதும் ஆதரிக்கவோ அல்லது வரவேற்கவோ மாட்டார்கள் என்பது தான் உண்மை.
நாடு முழுவதும் போதை தலைவிரித்தாடுகிறது என்பதால் தமிழகத்தில் மட்டும் தடுக்க முடியாது என்பது தவறு. இதனைதான் முதலில் மதுவிலக்கை ஒழித்த போது கருணாநிதியும் கூறினார். ”கொழுந்துவிட்டெரியும் நெருப்பு வளையத்திற்கு நடுவில் கொளுத்தப்படாத கற்பூரத்தை எப்படி பாதுகாக்க முடியாதோ அதுபோலதான் மதுவிலக்கும்” என்று தனது ’நாவன்மையை’ காட்டினார். நாடு முழுவதும் நடக்கிறது, நாமும் அதனை அனுமதிக்கலாம் என்பது சமூக விஞ்ஞான அடிப்படையிலும் சரி, அறிவியல் பூர்வமான அடிப்படையிலும் சரி தவறான வாதமாகும். சாராயம் உள்ளிட்டு நாடு முழுவதும் பல்வேறு கேடான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து நமது மாநிலத்தையோ அல்லது மக்களையோ பாதுகாக்க அனைத்து வகையிலும் போராடுவதே சரியானது
பூரண மதுவிலக்கே தீர்வு என முழங்குவோம்.
கள்ளக்குறிச்சி சாராய படுகொலைகளுக்கு நிரந்தர தீர்வு பூரண மதுவிலக்கு தான் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் முன்வைத்துள்ளார் என்பது மட்டுமின்றி 24 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர்.
தமிழகத்தை ஆளும் திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள இந்த விஷச்சாராய படுகொலைகள் பற்றி பேசினாலோ அல்லது எழுதினாலோ அது திமுக அரசுக்கு எதிராக செயல்படுகின்ற பாஜக, அதிமுக போன்ற பாசிச கும்பலுக்கு வலுவை உருவாக்கி விடும் என்ற வாதம் அடிப்படையிலேயே மிகவும் மோசமானது.
திமுக மட்டுமல்ல, பாசிச எதிர்ப்பு எண்ணம் கொண்ட புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மத்தியில் தவறுகள் நிகழ்ந்தாலும் அதனை நேர்மையாக சுட்டிக்காட்டி அதற்கு எதிராக போராடுவதும், கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவதும் தான் சரியான மார்க்சிய லெனினிய அரசியல் பாதையாகும்.
இந்த அடிப்படையில்தான் 2015 ஆம் ஆண்டு எமது அமைப்புகள் குறிப்பாக மக்கள் அதிகாரம் சார்பில் ’ஆள அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு’ என்ற செயல்தந்திர முழக்கத்தின் கீழ் மூடு டாஸ்மாக்கை என்ற இயக்கத்தை தமிழகத்தில் கொண்டு சென்றது.
அந்த இயக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதரவளித்ததும், பெண்கள் நிம்மதியாக வாழ்வதற்கு டாஸ்மாக்குகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையே மிகச் சரியானது என்று ஆதரவளித்ததற்கும் காரணம் மதுபோதையால் குடும்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமே மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது என்பதுதான்.
எனவே, தமிழகத்தில் தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கொடூரமான இந்த கள்ளச் சாராய சாவுகளுக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுப்பதற்கு பூரண மதுவிலக்கை அமல்படுத்து என்று போராடுவதே காலத்தின் கட்டாயம்.
- மருது பாண்டியன்.