தேர்தல் திருட்டு: தேர்தல் ஆணையத்தில் ஆழமாக ‘அகழாய்வு’ செய்ய வேண்டும்! அனைத்துக் குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும்!

இந்திய பாராளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறைகளில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் தேர்தல் திருட்டு – தில்லுமுல்லு மோசடிகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தத்தம் கருத்துக்களை பதிவிட்டு வந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். நாம் மிகவும் ஆழமாகவும் துல்லியமாகவும் கடந்த காலங்களில் இந்த பாராளுமன்ற மோசடிகள் குறித்து பல்வேறு கட்டுரைகளைப் படைத்திருக்கிறோம். போராடியும் இருக்கிறோம்.

தற்போது இப்பிரச்சினை சூடு பிடித்துள்ளது என்பது உண்மைதான். நாடே போராட்டக் களம் பூண்டுள்ளது என்பதும் உண்மைதான்! ஆம்! டாக்டர் சுக் பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோசி ஆகிய இரண்டு தேர்தல் ஆணையாளர்களும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போர்க் கொடி தூக்கி அம்பலப்படுத்தியுள்ள  விவரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் புலனாய்வுப் பிரிவு ஊடகவியலாளர் “ரித்திகா சோப்ரா” என்ற பெண்மணி மூலம் முதலில் வெளி உலகிற்கு வரலாயிற்று.  அதனைத்  தொடர்ந்து  பிபிசி, தி வயர், டைம்ஸ் ஆப் இந்தியா இந்த ஊடகங்களும் பெரிய அளவில் விவாதப் பொருளாக்கி மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்த்தன.

தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட இரண்டு ஆணையர்களும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப (IT) அமைப்புகளின் மேலாண்மை தொடர்பான தீவிர கவலைகள் காரணமாக, அவர்கள் இருவரும் தனித் தனியாக ஒன்றிய உயர்பதவியான மத்திய அமைச்சரவைச் செயலாளர் (Cabinet Secretary) T.V. சோமநாதன் என்பவரை அணுகி தங்களின் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6-ல் செய்யப்பட்ட முறையற்ற மாற்றங்கள் மற்றும் தரவு மையப்படுத்தல் (Data Centralization) போன்ற தங்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக, (இதில் EVM தில்லு முல்லு மோசடிகள் முன்வைக்கப் படவில்லை என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்) கடந்த பத்து மாதங்களில் 14 முறை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு தங்களின் ஆட்சேபணைகளை (Formal Objections on Record) அவர்கள் முறைப்படி பதிவு செய்து அனுப்பியுள்ளனர். அதாவது இவையாவும் நாட்டின் மிக உயரிய பதவியான மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி. சோமநாதனுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த உண்மைகள் யாவும் மேற்கண்ட ஊடகங்கள் மூலமே தேர்தல் ஆணையத்தின் – குறிப்பாக தலைமை தேர்தல் ஆணையரின் நிர்வாணக் கோலத்தை பட்டவர்த்தனமாக வெளி உலகிற்கு கொண்டு வந்து சேர்த்தன. அதனால் தான் தற்போது பெரும் போராட்டப் புயல் கிளம்பியுள்ளதுடன், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படவும் காரணமாக அமைந்து விட்டன.

அனைத்திலும் மோடி – அமித்ஷா – RSS காவிக் கும்பலின் சதிகள் பின்புலமாக இருந்துள்ளன!

மோடி தலைமையிலான பாஜக கும்பல் ஒன்றிய ஆட்சியில் அமர்ந்தது 2014-ல்தான். அதற்கு அன்னா ஹசாரே, கேஜ்ரிவால் போன்ற ‘பித்துக்குளி’களின் பெருத்த பங்களிப்பும், இந்தியத் தலைமைக் கணக்காயர் (CAG) ஆக அன்று பதவியில் இருந்த வினோத் ராய்(Vinoth Rai)-ன் தொலை தொடர்பு தொடர்பான பித்தலாட்டப் பொய் மூட்டைகள் கட்டவிழ்த்துக் கொட்டப்பட்டதும் காரணம் என்பதுவும் கடந்த கால வரலாறு. அதைப் பெரிதும் பயன்படுத்தி அறுவடை செய்து கொண்டவர்கள் இந்தக் காவி அராஜகவாதக் கும்பல் தான். அப்படித்தான் பதவி ஏறியது பாசிச காவிக் கும்பல்.

2019 நாடாளுமன்ற தேர்தல் காலத்திலேயே பாசிசக் காவிக் கும்பல் தங்களின் தேர்தல் தில்லுமுல்லு மோசடிகளை ஆரம்பித்து விட்டதாக பல்வேறு புலனாய்வுச் செய்திகள் இப்போது உறுதிப்படுத்துகின்றன. எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்விக் கொள்கை, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு போன்ற பல்வேறு நாசகாரக் கொள்கைகளின் மூலம் தமது தாய் அமைப்பான RSS வழிகாட்டுதலின்படி இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரா’-வாக மாற்றி அமைக்க சதித்திட்டம் தீட்டியது பாசிச பாஜக இந்துத்துவக் கும்பல்.

அதனை நிறைவேற்ற அவர்களுக்கே உரித்தான மதவெறிக் கலவரங்கள், கொலைகள், பாலியல் வன்முறைகள் சாதி தீண்டாமை கொடுமைகள், மாற்று வழிபாட்டு தளங்களை, வீடுகளை  இடித்துத் தரை மட்டமாக்குதல் போன்றவற்றை பின்பற்றுதல் ஒருபுறம் இருந்திட்டாலும், பாராளுமன்ற ‘ஜனநாயக’ வழிமுறைகள் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ளவும் சதித் திட்டம் தீட்டினர்.

ஆம், காவிக் கும்பலின் சதிகளை பாராளுமன்ற வழியில் நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டியதும், அப்படி நீடிப்பதற்கு தேர்தல் தில்லுமுல்லு மோசடிகளை நிறைவேற்றியாக வேண்டும் என்பதும் சதி கொள்கைகளாக – திட்டங்களாகத் தீட்டப் பட்டன. அதன் பரந்து விரிந்த மோசடிகளை 2024 தேர்தல் காலகட்டத்திலேயே தீட்டிவிட்டார்கள்.

2024 இல் தான் ஒன்றிய கூட்டுறவுத் துறையில் செயலாளராக இருந்த ஞானேஷ்குமார் தேர்தல் ஆணையாளராக உள் நுழைகிறார். (கூட்டுறவுத்துறை அமித்ஷா வசம் உள்ள துறை என்பது குறிப்பிடத் தகுந்தது) ஞானேஷ் குமார் இளம்பிராயத்தில் RSS ஈடுபாட்டில் இருந்தவர் என்பதும் அவர் யோகி ஆதித்யநாத்தின் உ.பி. மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. அதன் துணிச்சலில் தான் 2024 தேர்தலில், தமது கட்சி 400 இடங்களைப் பிடிக்கும் என அமித்ஷா ஓங்கி ஒலித்ததைக் கண்டோம். ஆனால் தில்லு முல்லு மோசடிகளில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் இல்லாததால் சதி திட்டங்களை மீண்டும் விரிவு படுத்தத் துவங்கியது காவிக் கும்பல். அதன் தொடர்ச்சியாக இன்று அம்பலப்பட்டுப் போய் நிற்கிறது காவிக் கும்பல்.

ஞானேஷ் குமார் எப்படித் தலைமை தேர்தல் ஆணையாளரானார்? அவரது யோக்கியதை என்ன?

IAS அதிகாரிகளுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆகும். ஞானேஷ் குமார் பிறந்த தேதி 27-01-1964 ஆகும். அப்படியெனில் இவர் 27-01-2024-ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அதாவது ஒன்றிய கூட்டுறவுத் துறை செயலாளராக இருந்த பொழுதே அவர் ஓய்வு பெற்று விட்டார். அதன்பின் மார்ச் 2024-ல் எப்படி தேர்தல் ஆணையாளராக உள்ளே நுழைந்தார்? அது சட்டத்திற்கு புறம்பானதா? இல்லை. சட்டத்திற்கு உட்பட்டே நியமனம் செய்திருக்கிறது காவிக் கும்பல்.

ஆம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் Article 324-ன்படி ஓய்வு பெற்ற IAS அதிகாரிகளை தேர்தல் ஆணையாளராக நியமிக்கலாம் என்ற சலுகையின் அடிப்படையிலேயே அவர் பதவி நீடிப்பு பெற்றார். (அச்சட்டப்படி தேர்தல் ஆணையாளராக நியமனம் செய்யப்படுபவர் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் நீடிக்கலாம்) முதலில் இந்த அரசியல் சட்ட முறையை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த சலுகையை பயன்படுத்தி ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையத்தில் நுழைவதற்கும் தலைமை தேர்தல் ஆணையாளராக மேல் உயர்வதற்கும் அவரது சங்கித்தனமான சார்பு நிலையும், அதனாலேயே மோடி அமித்ஷா கும்பலின் ஒத்துழைப்பும் காரியவாதமும் மிகுதியாக இருந்துள்ளன என்பதுவுமே உண்மை.

மேலும் ஞானேஷ் குமார் ,கேரளா மாநில ஐஏஎஸ் கேடராக ஒதுக்கீடு செய்யப்பட்டவர். கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் கேரள பொதுப் பணித்துறை செயலாளராக இருந்துள்ளார். அப்போது கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் – அங்கமாலி இடையே சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றன.  உலக வங்கி நிதி உதவியின் கீழ் நடைபெற்ற இப்பணிகளை ஒரு இந்தோ – மலேசிய கூட்டு நிறுவனம் மேற்கொண்டது.

இந்தத் திட்டத்தின் தலைமைத் திட்ட மேலாளராக பணியாற்றியவர் மலேசியப் பொறியாளர் “லீ சி பின்” என்பவர் ஆவார். அவர் இத்திட்டப் பணிகளுக்கான பணம் விடுவிப்பதில் முறைகேடுகள் மற்றும் லஞ்சம் பெருமளவில் தலை விரித்தாடியுள்ளதாக வெளிக்கொணர்ந்து உள்ளார். அதன் பிறகு அவர் மலேசியா சென்று தற்கொலை செய்து கொண்டார் என அறியப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தம்மைக் கேரள அதிகாரிகள் திட்டப் பணிகளுக்கென முறைகேடாக  பணம் விடுவிக்க நெருக்கடி கொடுத்தார்கள் என்பதாகத் தெரிவித்து உள்ளார். அதை தாங்க மாட்டாமலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது கடிதத்தில் தனது சாவுக்கு ஞானேஷ் குமாரும் காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும் படிக்க: தேர்தல் ஆணையர் நியமனம்: ‘ஜனநாயகத்துக்கு’ சாவுமணியடிக்கும் பாசிச பாஜக!

இப்பிரச்சனையை அன்றைய இடதுசாரி கூட்டணி அரசு விஜிலன்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தியதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அன்றே ஞானேஷ் குமார் பணியிட மாறுதலும் செய்யப் பட்டுள்ளார். பின்னர் எந்தெந்த வகையிலான குறுக்குச்சால் ஓட்டப்பட்டதாலோ அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இப்பொழுது அந்த விஜிலன்ஸ் வழக்கு கேரள ஆளும் காங்கிரஸ் கவனத்திற்கு வேணுகோபால் என்பவரால் கொண்டு செல்லப்படவே உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதை ஞானேஷ் குமாரின் யோக்கியதைக்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

‘சமூகத்தின் கட்டமைப்பு நெருக்கடி’ என்பது அனைத்தையும் தகர்த்து மறு ஒழுங்கமைவு செய்யக் கோருகிறது!

இந்தியாவில் நிலவும் கார்ப்பரேட் காவிப்ப் பாசிசச் சூழல் பாதுகாப்பாக நீடிப்பதற்கு அதன் கட்டுமானங்களான அதிகாரவர்க்கம் – குறிப்பாக நீதிமன்றம், அடியாள்படையான காவல்துறை, பாராளுமன்றம் சட்டமன்றங்கள் இன்ன பிற யாவும் பக்க பலமாக நிற்கின்றன.

முதலாளித்துவக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து எங்கும் எதிலும் ஊழல் நிறைந்து வழிகின்றன. அது எந்தக் கட்சி ஆனாலும் சரி; வாக்கிற்குக்கூட பணம் கொடுக்கும் பெரும் கேவலம் நீடிக்கவே செய்கின்றன. கையறு நிலையில் வாழும் மக்களும் சரி; பணத்தாசை பிடித்த மக்களும் சரி; வாக்குக்கு பணம் பெறுவது கேவலம் என்று கருத மறுக்கிறார்கள். இன்னும் கொடுமை; பணம் அளிக்கும் எல்லா கட்சிகாரர்களிடமும் பணம் பெறுகிறார்கள். வட மாநிலங்கள் உட்பட ஏனைய மாநிலங்கள் மட்டுமல்ல; இது தந்தை பெரியார் பிறந்த மண்; சுயமரியாதை மண் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளப்படும் பூமியிலும் தான் இந்த அவலம் நிறையவே நிகழ்கின்றன. இத்தகு கேவல நிலைக்கு எவ்வகையிலேனும் முற்றுப்புள்ளி வைத்தேயாக வேண்டும்.

ஆளுங்கட்சியாக இருக்கின்ற பொழுது பல்வேறு தரப்பு உழைக்கும் மக்களின் போராட்டங்கள் காக்கிச்சட்டை ரவுடிகளால் அடக்கி ஒடுக்கப்படுகின்றன. பின்பு எதிர்க்கட்சியாக மாறுகின்ற பொழுது அதே போராட்டங்கள் அவர்களுக்கு இனிக்கின்றன. ஆணவப் படுகொலைகள், காவல் நிலையக்  கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், உரிமைகள் பறிப்பு, மொழி திணிப்பு என எண்ணற்ற பிரச்சனைகள் இச்சமூக கட்டமைப்பில் நிரந்தரம் ஆகிவிட்டன. ஏதோ ஒரு நம்பிக்கைக் கீற்றாக இருந்த பாராளுமன்ற ஜனநாயகம், தேர்தல் ஆணையம் எல்லாம் இன்று கந்தல்கந்தலாக கிழிந்து தொங்குகின்றன.

இப்படிப்பட்ட சூழலில்தான் பாஜக-வின் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டங்கள் புயலெனப் பரவி உள்ளது. போராட்டங்கள் சூடு பறக்கும் பொழுது தேவையற்ற வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு சிலர் கொண்டு செல்கிறார்கள். நீதிமன்றம் என்னவோ பெரிய நியாயவானாக இருந்து விசாரித்து தீர்ப்பளித்துவிடும் என்பதைப் போல…! இது போராட்டப் பாதையை மழுங்கடிக்கவே செய்யும்.

அக்டோபர் 5 அன்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய் மாலயா பாக்ஷி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு கூறியுள்ளது:

“தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்வதில் ஒருதலை பட்சமான இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது; முதலில் தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பதிலைப் பெற வேண்டும்; தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும்; ஆணையத்தின் முடிவுகள் சட்டப் படியே எடுக்கப்படுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம்; த.தே.ஆ. ஞானேஷ் குமார் தன்னிச்சையாக சட்டத்தை மீறி முடிவுகள் எடுத்தது உறுதியானால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். ஆனால் செய்தித் தாள்களில் வரும் செய்திகளை மட்டும் வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது…”

இன்னொருபுறம், தேர்தல் ஆணைய அறிக்கையோ உச்சநீதிமன்றத்தின் அனுமதியோடுதான் படிவம்-6 திருத்தப்பட்டதாக அப்பட்டமாக புளுகியுள்ளது. அதையும் உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.

மேலும் படிக்க: சட்டவிரோதமாக நடந்துகொண்ட ஞானேஷ் குமார் கைது செய்யப்பட வேண்டும்!

…இதிலிருந்து இந்த உச்ச நீதிமன்றத்திடம் பலமான இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? இரண்டு ஆணையாளர்கள் ஞானேஷ் குமார் குறித்து ஒன்றிய அமைச்சரவை செயலாளர் டி.வி. சோமநாதனிடம் புகாரினைத் தனித் தனியே வழங்கி உள்ளனர். ஊடகங்களில் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்து விட்டன. இரண்டு ஆணையாளர்களும் இச்செய்தி பொய்யானது என எவரும் கூறவில்லை.

அப்படி இருக்கும் பொழுது உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புகார் அளித்த இரண்டு ஆணையாளர்களை, புகாரைப் பெற்றுக் கொண்ட ஒன்றிய அமைச்சரவைச் செயலாளர் (Cabinet Secretary) T.V. சோமநாதனை உச்ச நீதிமன்றத்திற்கே அழைத்து உண்மை விவரங்களை அறிவதில் என்ன கேடு வந்தது இந்த நீதிபதிகளுக்கு என்பதுதான் நமது வினா. இவ்வித நீதிமன்ற இழுத்தடிப்பு ஒன்றிய பாசிச பாஜகவுக்கும், ஞானேஷ் குமாருக்கும் கடந்த காலங்களைப் போல சலுகை காட்டுவது அன்றி வேறு என்னவாக இருந்திட முடியும்?

நீதிபதிகள் அமர்வு ‘ஆணையத்தின் முடிவுகள் சட்டப்படியே எடுக்கப்படுகின்றன என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்’… எனக் கூறுகிறது. கடந்த காலங்களில் என்னென்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் ஆணையத்தின் மீது எழுப்பப்பட்டன; அவையெல்லாம் சரிவர விசாரணை மேற்கொள்ளாமல் எப்படி நீதிமன்றத்தால் வழக்குகள் குப்பைத் தொட்டிகளுக்குப் போயின அல்லது இழுத்து மூடப்பட்டன என்பதெல்லாம் நாடறியும்.

எனவே, இந்த சமூக கட்டமைப்பை அடியோடு தகர்த்தெறிந்து, புரட்சிகரமான சமூகமாக மாற்ற, மாற்று அரசுக் கட்டமைப்பை உருவாக்காமல், இருக்கக் கூடிய கட்டமைப்பிலிருந்தே உழைக்கும் மக்களுக்கு விடியலைத் தேடித் தர முடியும் எனக் கருதுவது பாமரத்தனமானதே ஆகும்.

2024-க்குப் பின் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் தொடர்பான பாராளுமன்ற சட்ட திருத்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படல் வேண்டும்!

ஆர் எஸ் எஸ் பாஜக ,இந்துத்துவப் பாசிசக் காவிக் கும்பலின் சுய நலத்திற்காக ஏற்கனவே பாராளுமன்றத்தில் குறுக்கு வழியில் நிறைவேற்றிக் கொண்ட தேர்தல் விதிமுறை தில்லுமுல்லு ‘மோசடித் திருத்தச் சட்டங்கள்’ அனைத்தையும், ஒன்றுகூட விடுபட்டுப் போய் விடாமல் ரத்து செய்யப் படல் வேண்டும். (ஏற்கனவே அவை யாவன என்று விரித்து கட்டுரைகள் இதே தளத்தில் பல வெளிவந்து உள்ளன). எனவே, ஜனநாயகப் படுகொலைவாதி – ஊழல் பெருச்சாளி – தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பிற்கு பெரிதும் கலங்கம் விளைவித்த…

குற்றவாளி ஞானேஷ் குமாரை உடனடியாகக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்.

மோடி அமித்ஷா கும்பல் மீது கிரிமினல் வழக்குகள் தொடர வேண்டும்.

2024 முதல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்தையும்  செல்லாததாக அறிவித்து கலைக்கப்படல் வேண்டும்.

பாராளுமன்றத்திற்கும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் புதிதாக தேர்தல் நடத்தப்படல் வேண்டும்.

SIR மூலம் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் ரத்து செய்யப்பட வேண்டும்.

2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை (Mother Voters’ List) முதன்மையாகக் கொண்டு சேர்த்தல் நீக்கல் (இறந்தோரை நீக்குதல் – 18 வயதுடையோரை சேர்த்தல் – முகவரி மாற்றம் பெற்றோரை உரிய வழிமுறையில் நீக்கி உரிய இடத்தில் சேர்த்தல்) பணிகளை முடித்து புதிய வாக்காளர்கள் பட்டியல் வெளியிட்டு புதிய தேர்தல்கள் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் நடத்தப்படல் வேண்டும்.

EVM வாக்குப் பதிவு முறை அடியோடு ரத்து செய்யப்படல் வேண்டும்.

பழைய வாக்குச்சீட்டு பதிவு முறையில் தேர்தல் நடத்தப்படல் வேண்டும்.

விசாரணை கமிஷன் அமைத்து தேர்தல் ஆணையத்தில் ‘அகழாய்வு’ செய்து அனைத்து குற்றச்செயல்களும் பகிரங்கமாக விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படல் வேண்டும்.

…இந்தக் கோரிக்கைகளுக்காக எந்த வகையிலும் உச்சநீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றங்களையும் அரசியல் கட்சிகளோ, புரட்சிகர இயக்கங்களோ, பிற ஜனநாயக இயக்கங்களோ தன்னார்வலர்களோ, வெகு மக்களோ  நம்பி அணுகக் கூடாது; வழக்கு தொடுக்கக் கூடாது. நம்பவே கூடாது!

ஏனெனில் இத்தகைய கொடும்பாதகச் செயல்கள் பலவற்றை தடுத்து நிறுத்த முற்காலத்திய பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் பாரபட்ச போக்கைக்  கடைபிடித்து உறுதுணையாக இருந்துள்ளது என்பது கடந்த கால வரலாறு. அதன் நீட்சியே இன்றைய இவ்வளவு அவலத்திற்கும் காரணமாக அமைந்துள்ளன.

எனவே, தத்தமக்குள்ள வேறுபாடுகளை புறம் தள்ளிவிட்டு (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யின் வசவுச் சொற்களால் உருவாக்கப்பட்ட) CJP இயக்கம் உட்பட மேற்கண்ட கோரிக்கைகளில் உடன்பாடு கொண்ட அனைத்து இயக்கங்களும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒருங்கிணைந்து வீதிகளில் இறங்கி, உக்கிரமாக வீறுகொண்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்! ஓய்வின்றிப் போராட வேண்டும்! இறுதி வெற்றி பெறும் வரை போராட வேண்டும்!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here