
இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதே தருணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கின்ற கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளனர் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
“இந்திய சமூகத்தில் பாம்பு, பறவைகள் மற்றும் குரங்கு ஆகிய மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் பின் தங்கிய விலங்குகளை கடவுளர்களாக கும்பிடுகின்ற அளவிற்கு அவர்களின் அறிவு வளர்ச்சி உள்ளது. பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த கட்டத்தில் உள்ள மனிதன் குரங்கின் முன்னால் தண்டனிட்டு வணங்குகின்ற அளவிற்கு பார்ப்பன மதம் அவர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளது” என்று பார்ப்பன (இந்து) மதத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார் காரல்மார்க்ஸ்.
இந்தியாவைப் பற்றி காரல்மார்க்ஸ் எழுதி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலாகிறது என்றாலும் இந்திய சமூகத்தில் உள்ள மக்கள் பார்ப்பன (இந்து) மதத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வருவதையே கும்பமேளா துலக்கமாக எடுத்துக்காட்டுகிறது.
திரிவேணி சங்கமம் நாகசாதுக்கள் வழிபடுகின்ற நாளில் குளிப்பது புண்ணியம் என்ற மூடநம்பிக்கையின் பின்னால் 40 முதல் 45 கோடி பேர் திரண்டு உள்ளனர் என்பதும், படிப்படியாக தொடர்ந்து அதில் புனித நீராடி தனது பிறவி பலனை அடைய நினைக்கின்றனர் என்பதும் கடந்த ஒரு மாத காலமாக மைய ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுகிறது.
இந்த விவாதத்தை பார்ப்பனக் கும்பல் முன் நின்று நடத்துவது மட்டுமின்றி தமிழகத்தில் இருந்து கிளம்பி பிரயாக் ராஜ் சென்று வர எவ்வளவு செலவாகும், குழுவாக சென்றால் எவ்வளவு செலவாகும் என்பதை எல்லாம் பட்டியலிட்டு தனது whatsapp குழுக்களில் பரப்பி கும்பமேளாவிற்கு அணி திரட்டுகின்றனர்.
இந்த படுப்பிற்போக்குத்தனம் தலை விரித்து ஆடுகின்ற போதிலேயே மற்றொருபுறம் விண்வெளி ஆராய்ச்சியில் தனது நூறாவது ஏவுகணையை ஏவி சாதனை படைக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை. இந்த ஆராய்ச்சியின் பலன்களை முற்றாக அனுபவிக்க துடித்துக் கொண்டுள்ள கார்பரேட்டுகள் இந்த சாதனை அனைத்து மக்களுக்குமானது என்று கருத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளான என்விஎஸ்-02-வை இன்று விண்ணில் ஏவுகிறது. இந்த மைல்கல் பணி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் நடைபெற்றது. இத்தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கைகோள் விண்ணில் பாய்கிறது.
இந்த செயற்கை கோளில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது
இதன் பலனை லாப வெறியுடன் அனுபவிக்க உள்ள கார்பரேட்டுகள் கும்பமேளாவிற்கு வருகின்ற இந்திய ஒன்றிய அரசாங்கத்தால் திரட்டப்பட்ட 40, 45 கோடி மக்களிடம் தனது பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு விளம்பரப்படுத்தி வருகின்றனர் என்பதும் ஏற்கனவே நாம் அம்பலப்படுத்தி எழுதியுள்ளோம்.
இந்த மோடி வித்தைகளை புரிந்து கொள்ளாமல் கும்பமேளாவிற்கு சென்ற பக்தர்கள் குறிப்பிட்ட தினத்தில் நீராடுவது மேலும் புனிதமானது என்ற கண்ணோட்டத்தில் ஒரே நாளில் பல்லாயிரம் பேர் ஒன்று திரண்டு நெரிசல் உருவாகி பலியாகி உள்ளனர்.
படிக்க:
♦ கும்பமேளாவில் பலிகொடுக்கப்பட்ட அப்பாவி மக்கள்!
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இம்மாதம் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். அதிலும், ஷாஹி ஸ்னான் அதாவது நாக சாதுக்கள் நீராடும் மௌனி அமாவாசை தினமான இன்றைய கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் மட்டும் அங்கே சுமார் 10 கோடி பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்
விஐபிகளுக்கு முன்னுரிமை அளித்து பக்தர்களுக்கு போதுமான ஏற்பாடுகளைச் செய்யத் தவறி விட்டதாக நிர்வாகத்தின் மீது பஞ்சாயத்தி அகாரா ஸ்ரீ நிரஞ்சனி அமைப்பின் தலைவர் பிரேமானந்த் பூரி குற்றம்சாட்டியுள்ளார்.
“நாங்கள் அனைவரும் அகாராக்கள் [பிரிவுகள்] அதை [கும்பமேளாவின் நிர்வாகத்தை] இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். அப்படிச் செய்திருந்தால், இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்காது என்று நான் நினைக்கிறேன், “என்று ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய அவர் கூறினார்.
ஜனவரி 14 மற்றும் ஜனவரி 29 மற்றும் 3 பிப்ரவரி ஆகிய நாட்களில் ஷாஹி ஸ்னான் அதாவது நாக சாதுக்கள் நீராடுவர். இந்த மூன்று நாட்களும் புனித நாட்களாகக் கருதப்படுகின்றன.
அந்த 3 நாட்களிலும் கூட ஜனவரி 29-ம் தேதியான இன்றைய தினம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. கும்பமேளாவில் மிகப்பெரிய அளவில் மக்கள் இன்றைய தினம் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புனித தினத்தை தான் சொர்க்கத்திற்கு செல்லும் குறுக்கு வழியாக கருதிய பக்தர்கள் அப்பாவித்தனத்தில் தனது உயிரை பலி கொடுத்துள்ளனர்.
இந்திய சமூகம் தற்போது எதிர்கொண்டு நிற்கின்ற கார்ப்பரேட் காவி பாசிசம் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையையும் சூறையாடி வருகிறது. விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டியடிக்கின்றது; தொழிலாளர்களை தன்னுடைய ஆலைகளில் இருந்து வீதியில் வீசி எரிகின்றது; வர்த்தகர்களை தன்னுடைய வியாபாரத்திலிருந்து துடைத்து விரட்டியடித்து வருகிறது. இந்த கொடுமைகளை தீர்ப்பதற்கு வர்க்க கண்ணோட்டத்துடன் ஒன்று திரண்டு போராடுவதற்கு பதிலாக குறுக்கு வழியில் சொர்க்கத்தை அடைவதற்கு முயற்சித்த மூடத்தனத்தில் மூழ்கி திளைக்கும் பக்தர்களின் பலியும், அவர்களின் மரணம் நிகழ்ந்த இடத்தை கூட கண்ணில் காட்டாமல் தடுத்து நிறுத்துகின்ற உத்தர பிரதேச அரசின் அயோக்கியத்தனத்தை கண்டும் அமைதியாக கடந்து செல்கின்ற இந்திய சமூக அமைப்பின் கள்ள மவுனமும் வெட்கக்கேடானது.
- பார்த்தசாரதி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி