21 ஆம் நூற்றாண்டின் வளைகுடா போரை ஈரானின் அரசு தலைவர் அயது அலி கொமேனியை கொன்று தொடங்கி வைத்துள்ள அமெரிக்கா, தற்போது ஹார்மோஸ் நீரிணையை முற்றுகையிட்டு கப்பல் போக்குவரத்துகளைத் தனது கட்டுப்பாட்டில் எடுக்க எத்தனிக்கிறது. கடந்த இரு மாதங்களாக நீடிக்கும் போரில் அவமானகரமான பின்னடைவை ஏற்க மனம் இல்லாமல், எதைத் தின்றால் பித்தம் குறையும் என உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்கா தவிக்கிறது.
நேர்மை, நாணயமற்ற அமெரிக்க அரசு!
பேச்சுவார்த்தை என்று நாடகம் ஆடுவதும் பேச்சுவார்த்தைக்கு அடுத்த நாளே தாக்குதலை தொடங்குவதுமே டிரம்ப்பின் வழிமுறையாக உள்ளது. ஓமனில் நடந்த பேச்சுவார்த்தைக்கு அடுத்த நாள்தான் அயது அலி கொமேனி கொல்லப்பட்டார். தற்போது பாகிஸ்தானில் நடந்த பேச்சு வார்த்தைக்கு மறுநாள் தான் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை தொடங்கியும் உள்ளது.
முற்றுகை வெற்றி பெறுமா?
அமெரிக்காவின் முற்றுகை நீடிக்குமா என்பது சந்தேகம்தான். அமெரிக்காவின் மேலாதிக்க வெறி பிடித்த வளைகுடா போருக்கு NATO ஒத்துழைக்க மறுத்து விட்டது. நேற்று வரை அமெரிக்காவிற்கு தனது படைத்தளங்களை நிறுவுவதற்கு இடம் அளித்து, ஆதரவு தெரிவித்து வந்த வளைகுடா நாடுகளும் ஒவ்வொன்றாக மறுப்பு தெரிவிக்கின்றன.
தற்போது மத்திய கிழக்கில் கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்காவை ஆதரிக்கும் ஒரே நாடாக இஸ்ரேல் மட்டுமே உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி- 13 திங்கள் இரவில் டிரம்ப் அறிவித்துள்ள ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகை அறிவிப்பானது வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.
ஈரானின் அடிபணியாத போர்க்குணம்!
ஹோர்மூஸ் நீரிணையில் ஈரானுக்கு “சட்டவிரோதமான சுங்கக் கட்டணத்தைச் செலுத்தும் எவருக்கும் திறந்த கடலில் பாதுகாப்பான பயணம் இருக்காது” என்றும் டொனால்ட் டிரம்ப் கூறினார். அதாவது வளைகுடாவில் இருந்து கச்சா எண்ணெய் எரிவாயு வாங்கும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை பார்த்துதான் இப்பொழுது கொக்கரிக்கிறார்.
படிக்க:
அமெரிக்கா ஏற்கனவே போரில் தோற்கடிக்கப்பட்டது! – பிரவீன் சாஹ்னி!
ஜனநாயகத்துக்காகப் போராடும் ஈரான் மக்கள்! மேலாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் அமெரிக்கா!
“எங்களை தாக்கினால் வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்கள் எதுவும் மிஞ்சாது; அமெரிக்காவிற்கு ஆதரவளித்து வரும் நாடுகளும் தப்பாது” என்று ஈரான் எச்சரித்துள்ளது. அதாவது பேச்சுவார்த்தை நாடகம் ஆடிக்கொண்டு நம்பியவர்களின் முதுகில் குத்தும் அமெரிக்காவின் நயவஞ்சகத்தை ஈரான் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது.
ஹார்மோசுக்குள் நுழையும் அமெரிக்க போர் கப்பலை தாக்குவதற்கு ஈரான் ஏவுகணைகளையும், கடல் கன்னிவெடிகளையும், அதிவிரைவு படகுகளையும் தயார் நிலையில் வைத்து வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. உள்ளே நுழைந்து பொறியில் அகப்படாமல் வெளியிலேயே நின்று, வரும் கப்பல்களை அச்சுறுத்த அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயத்தமாகின்றன.
பாகிஸ்தான், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கப்பல்களை ஈரான் ஹார்மோசில் அனுமதிக்கவே செய்கிறது. இந்நிலையில் ஈரானுக்கு கப்பம் கட்டியோ கட்டாமலோ ஹார்மோசை கடந்து வரும் இத்தகைய நாடுகளின் கப்பல்களை அமெரிக்காவால் தடுக்க முடியுமா? ரசிய, சீன கப்பல்களை தடுத்தால் அவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் (Djibouti) சீனா தனது முதல் வெளிநாட்டு கடற்படைத் தளத்தை அமைத்துள்ளது. இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டும். இங்கிருந்து சீனா தமது வர்த்தக கப்பல்களுக்கான ஆதரவை நிச்சயமாக தரவே செய்யும்.
தனிமைப்படும் அமெரிக்கா!
அமெரிக்கா தனக்கு தொடர்பே இல்லாத, 12 ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி உள்ள வளைகுடாவிற்குள் மூக்கை நுழைக்கிறது. ஹார்மோசை கட்டுப்படுத்துவேன் என கொக்கரிக்கிறது. ஆனால், ஹார்மோசுக்குள் துணிந்து செல்லவும் அமெரிக்க போர்க்கப்பல்கள் அஞ்சி விலகியே நிற்கின்றன.உள்ளே போகும் கப்பலையோ உள்ளிருந்து வெளியே வரும் கப்பலையோ தாக்குவேன் என ட்ரம்ப் அறிவிப்பது மூன்றாவது உலகப் போருக்கான முன்னறிவிப்பே.
இத்தகைய தாக்குதலை அமெரிக்க மக்களே ஆதரிக்க மாட்டார்கள். ட்ரம்பின் சொந்த கட்சியினரே இதை எதிர்ப்பார்கள். தாக்குதலை நடத்த வேண்டிய பென்டகனை சேர்ந்தவர்களே டிரம்பின் காலை வாருவார்கள். அதற்கான காலம் கனிகிறது.
போர்வெறி கொண்டு பாயும் அமெரிக்காவின் தேர்ச்சக்கரத்தில் எந்த நாடும் தமது சங்கிலிகளை இணைக்க மறுக்கிறது. அமெரிக்கா தனியாகத்தான் ஈரான எதிர்த்து மல்லு கட்ட வேண்டிய நிலையில் தவிக்கிறது. தற்போதைய முற்றுகை அறிவிப்பை கூட இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன.
கண்டிக்க துணிவற்ற மோடி அரசு!
இந்தியாவுக்கு எரிவாயுவை ஏற்றிக் கொண்டு வர வேண்டிய சுமார் 18 இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ளன. யுத்தம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள அந்தக் கப்பல்கள் இந்தியாவின் எரிசக்தித் தேவைக்கு மிக முக்கியமானவை. 11 கச்சா எண்ணெய் டாங்கர்கள், 4 எல்பிஜி (LPG) கேரியர்கள் மற்றும் 3 எல்என்ஜி (LNG) கப்பல்கள் ஆகியவை அங்குச் சிக்கியுள்ளன.
ஈரானின் அனுமதியுடன் வெளிவரும் நம் நாட்டுக்கான கப்பல்களை ட்ரம்ப் தாக்கினால், டிரம்ப்பின் விசுவாசி மோடி மௌனம் காப்பாரா?. எரிபொருள் விலை ஏற்றத்தால் அரசின் மீதான நெருக்கடி அதிகரிக்கும். வளைகுடாவிற்கான இந்திய விளைபொருட்களின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போர்வெறிக்கு நமது வாழ்க்கையை ஏன் பலியிட வேண்டும் என மோடி அரசைக் கேள்வி எழுப்ப வேண்டும்.
அதாவது உலக மேலாதிக்க வெறிபிடித்த ட்ரம்பின் ஆட்சிக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராடுகின்றனர். அதே போன்று இந்தியாவிலும் மோடியின் ஆட்சியைத் தூக்கியெறிய இந்திய மக்கள் போராட்டங்களைக் கட்டமைக்க வேண்டும்.
- இளமாறன்







