தான் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சட்ட திருத்தங்கள் மூலமாக நாட்டின் இறையாண்மை மீதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதும் தாக்குதல்களை தொடுத்து வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் பாதுகாப்பான அணு உலைகள் தொடர்பாக ஏற்கனவே நிலவி வருகின்ற சட்டங்களை முற்றாக நீக்குவதற்கும், அணு உலைகளை விற்று கொள்ளையடிக்கின்ற அணு உலை தயாரிப்பு கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கத்திற்காக அணுசக்தி சட்டம் மற்றும் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் ச்ட்டம்-2010 திருத்தம் செய்துள்ளது.
இந்த திருத்தம் ஏற்கனவே இயங்கி வருகின்ற அணு உலைகளையும், புதிதாக இறக்குமதி செய்யப்படப் போகின்ற அணு உலைகளின் பாதுகாப்பையும் மேலும் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று அணுசக்தி துறையைச் சார்ந்த பல்வேறு தேசபக்தியுள்ள விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அணு உலை என்றால் பாதுகாப்பான அணு உலை, பாதுகாப்பில்லாத அணு உலை என்றெல்லாம் வேறுபாடு கிடையாது என்பதும், குறிப்பாக யுரேனியத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்ற அணு உலைகள் எப்போதும் வெடிக்க காத்திருக்கும் எரிமலைகளாக தயாராகவே உள்ளது என்பதை தான் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த அணு உலை விபத்துகளும், கடைசியாக ஜப்பானில் புகுஷுமாவில் நடந்த அணு உலை விபத்தும் நமக்கு நிரூபித்துக் கொண்டுள்ளது.
மக்களின் வாழ்க்கையைப் பற்றியும், உயிரைப் பற்றியும், சுற்றுச்சூழலை பற்றியும் சிறிதும் கவலைப்படாத ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் அணு உலை தொடர்பான சட்டத் திருத்தத்தின் மூலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும், உயிருக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
இவையெல்லாம் ஊடகங்களின் விவாதங்களில் வருவதில்லை. உப்பு சப்பில்லாத விவகாரங்கள், அன்றாடம் பரபரப்பாக பேசப்படுகின்ற அரசியல் கிசுகிசுக்கள் போன்றவற்றை தான் தேசிய நீரோட்ட ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை ரெடிமேட் பேச்சாளர்களை வைத்து விவாதித்து தள்ளுகின்றனர்.
நிலவிவரும் அரசியலமைப்புச் சட்டம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கின்றார்கள் பலர். ஆனால் அரசியலமைப்புச் சட்டம் இருக்கும்போதே அதில் உள்ள பல்வேறு விதமான ஓட்டைகளை பயன்படுத்தி கார்ப்பரேட் நலனுக்காக பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களில் மிகவும் மோசமானது தான் அணு உலை பாதுகாப்பு மசோதா சட்ட திருத்தம் ஆகும்.
இந்த சட்டத்திருத்தத்தை பற்றி புரிந்து கொள்வதற்கு முன்பாக இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள அணு உலைகள், அது கொண்டுவரப்படுவதற்கு காங்கிரஸின் மன்மோகன் சிங் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அணுசக்தி பற்றி பொதுவாக சில அம்சங்களை புரிந்து கொண்டால் தான் இது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து கொள்ளவும் பெரும்பான்மை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.
இந்திய இராணுவ ஒப்பந்தமும் அணுஉலைகளும்!
இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக மன்மோகன் சிங் காலத்தில் போடப்பட்ட 123 ஒப்பந்தத்தில் 2005ம் ஆண்டு காங்கிரசு அரசு கையெழுத்திட்டது. இந்த ஓப்பந்தம் ஒரு அடிமைச்சாசனம் என்பதை வலியுறுத்தி அப்போதே புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை இயக்கங்கள் போராடின. கீழ்க் கண்ட அம்சங்களை முன் வைத்து இந்த தேசத் துரோக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என எதிர்த்து போராடியது.

1)புதிய அணு உற்பத்திக் கூடங்கள் எதையும் கடந்த 30 வருடங்களில் மேற்கு நாடுகள் கட்டவில்லை விற்காத பழைய சரக்கை நம் தலையில் கட்டுகிறார்கள்.
2) உலகிலேயே அதிகமான யுரேனியம் உள்ள நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் மின்சாரம் தயாரிக்க ஒரு அணு உலைகூட கிடையாது.
3) யுரேனியம் அடிப்படையிலான அதி அழுத்த கன நீர் உலைகள் ஏற்கனவே இருப்பவையே போதும், அதற்கு அடுத்தகட்ட தொழில்நுட்பங்களை விரிவாக நாம் நிறுவ வேண்டிய நிலையில் தற்போது உள்ளோம் எனும் போது அமெரிக்காவிடமிருந்து பழைய தொழில் நுட்பத்தை வாங்குவது நமது சுயசார்பை ஒழிக்கும் தந்திரம். அதாவது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் காலாவதியான விசயத்தையே நாம் திரும்ப வாங்குகிறோம் என்பதுதான். அதுவும் 3லட்சம் கோடிக்கு எனும் போது யார் முட்டாள் என்பதை புரிந்து கொள்ளலாம். நமக்கு இனிமேலும் தேவையில்லாத தொழில்நுட்பத்தை வாங்குவதன் மூலம் நமது அணு சக்தி தேவையை அடுத்தக்கட்டத்திற்கு வளர்க்காமல் முடக்குகிறோம், மேலும் நாம் அவர்களை நம்பியிருக்குமாறு செய்துவிடுகிறோம்.
4) அணு சம்பந்தப்பட்ட தொழில் நுட்பம் அனைத்தும் நம்மிடமே உள்ளது. கனநீர் உற்பத்தியிலும், அணு தொழில்நுட்பத்திலும் நாம் ஏற்றுமதி செய்யும் நாடு. இந்த தொழில்நுட்பங்களை நாம் இன்னும் வீரியமாக வளர்த்தெடுக்க இந்த 3 லட்சம் கோடியை பயன்படுத்தலாம்.
5) எதிர்கால, நிகழ்கால மின்சாரத் தேவைகளை அமெரிக்க ஒப்பந்தத்தை நம்பியிராமலேயே இந்திய அணு சக்தி திட்டங்கள் மூலமே சாதிக்க முடியும். இது தவிர்த்து பிற மூல வளங்களை முழுமையாக பயன்படுத்தும் திட்டங்களை நாம் ஆழமாக பரிசீலிக்க வேண்டும்.
6) யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் போன்ற அடிப்படை அணு எரிபொருட்களுக்கு நாம் பிறரை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இல்லை. நம்மிடம் இருப்பதை வைத்தே சமாளிக்க இயலும். ஒருவேளை நமது எதிர்காலத்திற்கு ஆபத்தில்லாத வகையில் யுரெனியம் கிடைத்தால் கொஞ்சம் வசதி அவ்வளவுதான்.
7) நிலக்கரி, இயற்கை வாயு உள்ளிட்டவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க வசதியாக இவற்றை அதிகமாக இறக்குமதி செய்யும் முயற்சிகளில் இந்தியா இறங்க வேண்டும். நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவை மேற்கு நாடுகள் மட்டுமே பயன்படுத்துவதற்க்கான மூல வளங்கள் அல்ல. நாமும் பயன்படுத்தலாம்.
8) ஏற்கனவே அமெரிக்கா இந்தியாவை தனக்கு கீழ்படிய வைக்க 1963 அணு ஒப்பந்தத்தை வைத்து ப்ளாக்மெயில் செய்து மிரட்டியுள்ளது. இந்தியா அடிபணிய மறுத்த பொழுது தாராப்பூர் அணு உலையை கை கழுவி நமக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளது. இன்னிலையில் 3 லட்சம் கோடி முதலீடு செய்து பிறகு நமது காலை வாரிவிட்டால் நமக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மேலும் இதனை ஒட்டி போடப்படுகிற சர்வதேச ஒப்பந்தகளிலிருந்து நாம் எந்த காலத்திலும் விலக முடியாது. ஏனெனில் பிற சர்வதேச ஒப்பந்தங்களை 123 ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது.
இந்த அளவு மோசமான ஒப்பந்தம் மென்மேலும் மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களால் திருத்தப்பட்டு இன்று மிகவும் மோசமான எல்லைக்கு சென்றுள்ளது.

2006-ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் இந்தியா வந்திருந்தபோது, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு அவருடன் நடத்திய நேர்காணலை பிரம்மாண்டமாக வெளியிட்டிருந்தது. அதன் முதல் பக்கத்தின் கால் பகுதியை ஒரே ஒரு கேள்வியே நிறைத்திருந்தது: “டாய் டு புஷ் [புஷ் இடம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கேள்வி]: இந்தியாவை ஒரு பொறுப்பு மிக்க அணுசக்தி வல்லமையுள்ள நாடாகக் கருதுகிறீர்களா?” பதில்: “ஆம், கருதுகிறேன்” இது மற்ற முதல் பக்கத் தலைப்புச் செய்திகளைப்போல் நான்கு மடங்கு பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது! இப்பதில் சந்தேகமில்லாமல், டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆசிரியர்களையும், இந்திய நிறுவனத்தின் பிற அங்கங்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
ஏமாந்த மக்கள் அதிகம் உள்ள இந்தியா போன்ற காலனிய நாடுகளில் தாங்கள் விரும்பும் வகையில் சட்டத்திருத்தம் செய்கின்ற அடிமைகளைவும், விசுவாசிகளையும் பெற்ற மகிழ்ச்சியில் அமெரிக்க அதிபர் இந்தியாவுடன் அணு உலைகள் தொடர்பான ஒப்பந்தங்களைப் போட்டுவிட்டுச் சென்றார்.
பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலை 2014 இல், பிரதமரான மோடி, அணுசக்தி திறனை 2024 ஆம் ஆண்டுக்குள் 17 GWe ஆக மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் என்று அணுசக்தித் துறையை வலியுறுத்தினார். “அணு எரிபொருள் சுழற்சியில் இந்தியாவின் தன்னம்பிக்கை மற்றும் உள்நாட்டு உலைகளின் வணிக வெற்றியை” அவர் பாராட்டினார். மற்ற சுத்தமான எரிசக்தி ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது அணுசக்தியின் வணிக நம்பகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மார்ச் 2017 இல், 2024 ஆம் ஆண்டுக்குள் 14.6 GWe அணுசக்தி திறன் இலக்கு பராமரிக்கப்படுவதாகவும், அப்போது 6.7 GWe (மொத்த) கட்டத்துடன் இணைக்கப்பட்டதாகவும் நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.
மார்ச் 2018 இல், அரசாங்கம் அணுசக்தி திறன் 2031 ஆம் ஆண்டுக்குள் சுமார் 22.5 GWe ஆக இருக்கும் என்று கூறியது , இது முந்தைய இலக்குகளை விட மிகவும் குறைவாக இருக்கும் (கீழே காண்க). இந்த திருத்தப்பட்ட இலக்கை டிசம்பர் 2022 இல் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் , பிப்ரவரி 2025 இல் அணுசக்தித் துறையும் மீண்டும் உறுதிப்படுத்தின. டிசம்பர் 2023 இல் பாசிச பாஜக அரசாங்கம் விக்சித் பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது . இதன் மூலம் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. ஜூலை 2024 இல் நாட்டின் 2024-25 பட்ஜெட்டில் பாரத் சிறு அணு உலைகளை அமைப்பது குறித்து குறிப்பிடப்பட்டது.
பிப்ரவரி 2025 இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விக்சித் பாரதத்திற்கான அணுசக்தி திட்டத்தை அறிவித்தார், மேலும் 2033 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் வகையில் குறைந்தது ஐந்து இந்திய-வடிவமைக்கப்பட்ட SMR-களை உருவாக்குவதற்கு போதுமான நிதியை ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளார்.
படிக்க:
🔰 ஒப்பந்தப்படி செய் என மிரட்டும் அமெரிக்கா; விசுவாசத்துடன் அணுமின் நிலையம் அமைக்கும் மோடி அரசு!
🔰 புதிய ஜனநாயகம் மே 2025 இதழின் உள்ளே!
அத்துடன் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அதே பட்ஜெட்டில், “2047 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 100 GW அணுசக்தியை உருவாக்குவது நமது எரிசக்தி மாற்ற முயற்சிகளுக்கு அவசியம். இந்த இலக்கை நோக்கி தனியார் துறையுடன் ஒரு தீவிர கூட்டாண்மைக்கு, அணுசக்தி சட்டம் மற்றும் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் “ என்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் இருந்து பாதுகாப்பற்ற அணு உலைகளை இறக்குமதி செய்வதை உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் உள்ள அணு உலைகளின் நிலைமை என்ன? இந்தியாவில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) அணுசக்தித் துறையின் (DAE) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது, அதன் வசதிகளை அது ஒழுங்குபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புகுஷிமாவுக்குப் பிறகு, பொதுமக்களின் போராட்டங்களுக்கு அடிபணிந்து, DAE 2012 இல் ஒரு சுயாதீன ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது, அதை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு ஆராய்ந்து அதை வலுப்படுத்த பல தொலைநோக்கு பரிந்துரைகளை வழங்கியது. இன்றுவரை அந்த பரிந்துரைகளை DAE இன்னும் பின்பற்றவில்லை.
அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் படி, 2050 ஆம் ஆண்டுக்குள் அணுசக்தியை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் என்று 22 நாடுகள் அழைப்பு விடுத்திருப்பது யதார்த்தத்தை விட கற்பனையானது: “சிறந்த சூழ்நிலையிலும் கூட, அடுத்த இரண்டு தசாப்தங்களில் அணுசக்தியில் அதிக அளவில் முதலீடு செய்வதற்கான மாற்றம் உண்மையில் காலநிலை நெருக்கடியை மோசமாக்கும், ஏனெனில் அதிக விலை கொண்ட, மெதுவாகப் பயன்படுத்தக்கூடிய அணு உலைகளுக்கு மலிவான, விரைவான மாற்றுகள் புறக்கணிக்கப்படுகின்றன.” (அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின், டிசம்பர் 13 , 2023) இருப்பினும் அணு உலைகள் இறக்குமதி அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்திய அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்ட அணுசக்தி மற்றும் அணு உலைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தும் பாசிச பாஜகவின் ஆட்சியில் பல மடங்கு வேகம் எடுத்துள்ளது.
மின்சார தேவைக்காகவே அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது என்ற பித்தலாட்டம் பலமுறை அம்பலப்படுத்தப்பட்ட பிறகும் மீண்டும் மீண்டும் அதனையே முன்னிறுத்தி வருகின்றனர் 2047 ஆம் ஆண்டு 100 மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அணு உலைகள் தான் தேவைப்படுகிறது என்றும் அறிவித்து வருகின்றனர்.
அணு உலைகள் தொடர்பாக சர்வதேச அளவில் கடுமையான எதிர்ப்புகளும், ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளிலேயே புதிதாக அணு உலைகள் கட்டுவதற்கு தடைகள் இருக்கின்ற சூழலில் இந்தியா அதனை போட்டி போட்டுக் கொண்டு வாங்குவது இந்திய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த மனித குலத்திற்கே எதிரானது.
ஒரு எடுத்துக்காட்டாக அணுக்கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெடி குண்டுகளைக் கொண்டு ஜப்பானின் ஹிரோசிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட புளூட்டோனியம்-239 குண்டு 6.4 கிலோதான். இதிலிருந்து வந்த சக்தி 21 கிலோடன் டிஎன்டிக்கு இணையாக இருந்தது. உருவான வெப்பம் 3900 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் 1005 கிமீ/மணி. உடனடி அழிவு 1.6 கிமீ சுற்றளவிலும், இதனால் ஏற்பட்ட தீ 3 கிமீ சுற்றளவுக்கு பரவியது. இந்த இரண்டு குண்டு வெடிப்பிலும் உடனடியாக இறந்தவர்கள் லட்சங்களில். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு அடுத்த சில மாதங்களில் இதே அளவில் இறந்தார்கள். இது தவிர்த்து இதன் கதிரியக்க விளைவுகள் இன்று வரை கூட தொடர்கின்றன.
தற்போது இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் உறவுகள் சீர் கெட்டு உள்ள சூழலில், இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை போருக்கு பயன்படுத்துவோம் என்று மிரட்டி வருகின்ற சூழலில் அணுசக்தி தொடர்பான சட்டத் திருத்தம் மற்றும் அது மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கும், ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிரானது என்பதை முன்வைத்து போராட வேண்டிய தேவை முன்னிலைக்கு வந்துள்ளது.
- செல்லப்பன்
புதிய ஜனநாயகம் (மே 2025 இதழ்)