புலன் உணர்வு என்றாலே நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது கண் பார்வை, செவிகளின் கேட்கும் திறன், சுவை உணர்ச்சிகள் குறித்தே அன்றி வலி, வெட்ப நிலை மற்றும் தொடு உணர்வு தோற்றுவிக்கும் உணர்ச்சிகள் பொதுவில் கவனத்திற்கு வருவதில்லை. ஆனால் இத்தகைய உணர்ச்சிகளின் முக்கியத்துவத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுமட்டுமல்ல வலி, வெட்ப நிலை மற்றும் தொடு உணர்ச்சி குறித்த அறிவியல் புரிதல்களும் மிக சமீபத்தில் தான் ஆய்வுக்குட்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டிற்கான மருத்துவதுறை நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் டேவிட் ஜூலியஸ் மற்றும் நரம்பியல் விஞ்ஞானி ஆர்டெம் படபூட்டியனுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

David Julius, Ardem Patapoutian

டேவிஸ் மற்றும் ஆர்டெம் குழுவினரது ஆய்வுகள் மூலம் உடலின் வெட்பநிலை மற்றும் தொடு உணர்வுகளை (Temperature, pressure) எவ்வாறு மூளை உணர்ந்துக் கொள்ள உதகிறது என்பதையும், நரம்பு மண்டலம் செயல்படுவதனை பற்றிய ஆராய்ச்சியின் வாயிலாக உடலியலை அறியத் தந்துள்ளனர்; இதன் மூலம் வலிகள் பற்றி இது நாள் வரை இருந்த புரிதல்களை விட மேம்பட்ட புரிதலுக்கு வித்திட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் மூலம் நாட்பட்ட வலிகளுக்கான சிகிச்சைகளுக்கு பேருதவியாக உள்ளதை அங்கீரிக்கும் விதமாகவே நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது.

1997 முதல் நடைபெற்ற ஆய்வின் மூலம் எந்தெந்த புரதம் உடலின் வெப்பநிலைக்கும், தொடுதல் மற்றும் இயக்கம் குறித்த பதிவுகளை உணர்திறனுடையவையாக இருக்கும் என்பதும், அதற்குரிய மரபணு எது என்றும் ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர். இவர்களின் முடிவுகளில் இருந்து வலிகள் குறித்த மேம்பட்ட கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளது என்றும், வலிகளை பகுப்பாய்வு செய்து சிகிச்சை அளிக்க உதவும் என்ற அறிவியல் உண்மையை நிலைநாட்டியுள்ளனர். இத்தகைய அறிவியலின் பலனை இந்த மனித சமூகம் அடைந்திருக்கிறதா? என்பதனை கேள்வி எழுப்பி பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது?

25 வயதை கடந்த 10 பேரிடம் மிக எளிதாக இப்படி ஒரு கேள்வியை எழுப்பி பாருங்கள்? உங்களுக்கு இப்ப கழுத்து, முதுகு, கால் மூட்டு வலி இருக்கிறதா என்று? பத்து பேரில் ஒரு நபராவது ஆம் என்று பதிலளிக்க கூடும் அவர்களிடம் அதற்கு என்ன சிகிச்சை எடுத்துக்கொண்டீர்கள் என்று கேட்டால் மிகப்பெரும்பாலானோர் மருந்துக் கடையில் வலி மாத்திரை வாங்கி சாப்பிட்டேன் என்ற பதிலே கிடைக்கும். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை ஏனென்றால் உழைப்பாளிகளின் நிலைமை இதுதான். இப்ப இந்த ஆராய்ச்சியின் பலனிற்கு வருவோம்.

இந்தியா போன்ற நாடுகளின் நிலை என்ன?  வலிக்கென்று நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், வலிகள் உண்டாக்க கூடிய பிரதான தனி சிறப்பான மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் 5 நாட்களுக்கான மருந்து மற்றும் அடிப்படை ஆய்வு கட்டணத்திற்கு ரூபாய் 2000 கழன்றுவிடும், அதிலும் வட்டார அரசு மருத்துவமனைகளில் அத்தகைய சாத்தியமில்லை? மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ள தனி சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது என்பது குதிரைக்கொம்பு தான்? இதில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளின் மூலம் மருத்துவரை தெரிவு செய்தால், அதில் தேர்வாகி படித்து வரும் மருத்துவர்களின் சமூகபற்று மற்றும் விளைவுகள் பேரிடியாக இருக்கப்போவது என்பது அதைவிட கொடியது.

இப்படி எங்கும் செல்ல இயலாத நிலையை நிரூபிக்கும் விதமாக 2015 லேயே AIMS   மருத்துவ குழு நடத்திய நாட்பட்ட வலிகள் (Chronic Pain) குறித்த ஆய்வு ஒன்றில் ஆண்டொண்டிற்கு 13% பேர் நாட்பட்ட வலியால் அவதிப்படுவதாகவும், அதில் ஒரளவிற்கு தாங்ககூடிய வலி 37% பேரும், மீதம் 63 சதவீதம் நபர்கள் மிக அதிகபடியான வலியால் அவதியுறுவதாகவும் தெரிவித்துள்ளனர். நாள் பட்ட வலியினால் அவதிப்படும் இந்த 13% பேரில், 68% பேருக்கு முதுகு, கால் மூட்டு வலியால் அவதிப்படுவதாகவும், அவர்களில் 95% பேர் மருந்துகடைகளில் மருத்துவரின் ஆலோசனையில்லாமலேயே NSAID என்று சொல்லக்கூடிய அழற்சி தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். (குறிப்பு: இந்தியா போன்ற நாடுகளில் நாட்பட்ட வலிகள் மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்வதற்கு மிக முக்கிய காரணம் உடனடி வலிகளுக்கு பெரும்பாலான மக்கள் சிகிச்சை பெறுவதில்லை. நாட்பட்ட வலிகளுக்கும் சிகிச்சைக்கு அணுகுவதற்கு முக்கிய காரணம் உடல் செயல்பாடு முடக்குப்படுகிறது என்பதினால்தான். இதன் பின்னணியில் இருப்பது இந்தியாவில் உள்ள ஏற்றத் தாழ்வான சமூக-பொருளாதார அமைப்பு என்பதனை சொல்லி புரிய வேண்டியதில்லை)

Non-medical items may soon disappear from chemist shops | Latest News India - Hindustan Times

உலகில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் நாட்பட்ட வலியின் காரணமாக 6 மாதத்திற்கு ஒருமுறை 8 நாட்கள் வரைவிடுப்பு எடுப்பதாகவும், அவர்களில் 22% பேர் ஆண்டுக்கு 10 நாட்களுக்கு மேல் தொடர்விடுப்பு எடுக்க நேரிடுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. (ஆண்டொண்டிற்கு வலிக்கு ஆட்படுவதில், வளர்ந்த நாட்டில் 37% பேரும், வளரும் நாடுகளில் 41% பேரும் உள்ளனர் என்று Global Burden of Disease study – ன் தகவல் தெரிவிக்கிறது.) இதன் மூலம் ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டல் முறையும் ஒரே மாதிரியாக இல்லை என்பதும் நிரூபணமாகிறது.

இந்தியாவில் அதுவும் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டிலேயே ஒருங்கிணைக்கப்பட்ட துறையிலேயே 75%-மானவர்கள் தினக்கூலிகளாக வேலை அமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் 8 மணி நேர வேலை (சமீபத்திய தமிழக அரசின் கடைகளில் பணியாளர்களுக்கு நாற்காலி வழங்க வேண்டும் என்ற உத்தரவிற்கு நக்கீரனில் தொழிலாளர்களின் கருத்து காணொளியில் வெளிப்படுத்தியிருப்பர்), வார விடுமுறை நாள், மருத்துவ விடுப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு போன்றவை கேள்விக்கு அப்பாற்பட்ட விசயம். இதனால் ஏற்படும் உடல் மற்றும் மன வலிகளுக்கு ஆட்படும் தொழிலாளி வேலை நாட்களை மட்டும் இழப்பதில்லை வேலைத்திறனையும் இழக்கிறான். இத்தகைய கொடூர சூழலில் இருந்து தனக்கான சிகிச்சையை பெற விரும்பும் தொழிலாளியை முதலாளித்துவ சமூக மருத்துவத்துறை, பணம் கொழிக்கும் சந்தையாக பார்ப்பதில் ஏதாவது அறம் உள்ளதா என்ன?

இன்றைய உலகில் வலிகளுக்கு பிரதானமாக பயன்படுத்தப்படும்    அழற்சி   எதிர்ப்பு மருந்துகளின் ஆண்டு சந்தை மதிப்பு மட்டுமே 1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாகும். இந்த சந்தை மதிப்பு மேலும் ஆண்டொண்டிற்கு 6% வளர்ச்சியடைய வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளனர். இன்று நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ள வலி பற்றிய புதிய கண்டுபிடிப்புகளும், நோபல் பரிசுகள் தரும் ஊக்கமும் யாருக்கு பயன்படப் போகிறது. என்றால் கண்டிப்பாக கார்ப்பரேட் கொள்ளையர்களுக்குதான்.

இப்படி வலிகளுக்கான குறிப்பான சிகிச்சையில் இருந்து பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் முதலாளித்துவ சமூக அமைப்பால் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதில் எங்காவது மருந்துக்கும் நாம் கண்ட அறிவியல் வளர்ச்சியின் பயனை கண்டோமா? இல்லையே, வசதி படைத்தவன் நம்மை சுரண்டும் பணத்தில் அப்பல்லோக்களும், மியாட்களும், குளோபல்களும் செழித்து வளரவும், நாம் மட்டும் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நாடி செல்வதுமான நிலையை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா? மருத்துவ அறிவியல் கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்கு பயன்படுத்தும் வகையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் போராடுவோம். நமது உடனடி தேவை உழைக்கும் மக்களின் சமூக விரோதியாய் உள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்துகின்ற வகையில் எதிர்த்து போராடுவது தான்.

  • தமிழ்மாறன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here