
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி என்ற அரசுத் துறையின் மூலமாக அரசு வேலைக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதைப் போல உத்தரப்பிரதேசத்தில் ‘Uttar Pradesh Public Service Commission (UPPSC)’ என்ற துறையின் மூலமாக உத்தரப்பிரதேச அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
உத்திரப் பிரதேசத்தில் அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ள UPPSC அலுவலகத்தை முற்றுகையிட்டு சுமார் 15,000 இளைஞர்கள் இரவு பகல் என்று பாராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை பாசிச பாஜக — யோகி ஆதித்யநாத் அரசு தடியடி நடத்தி முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து தோற்றுப் போய் உள்ளது.
சுமார் 15,000 பேர் ஒரு இடத்தில் கூடி நின்று ஒரே நேரத்தில் தங்களது கைபேசியில் விளக்குகளை ஒளிரவிட்டு போராட்டம் நடத்துவது என்பது ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது.
இந்தப் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நியாயமானவை, எளிமையானவை.
ஒரு அரசு பணியிடத்திற்காக நடத்தப்படும் தேர்வு என்பது தேர்வு எழுதும் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதுதான் சரியானது.
ஆனால், ஆய்வு அதிகாரி – உதவி மறுஆய்வு அதிகாரி (Review Officer-Assistant Review Officer) (RO-ARO) பணியிடத்திற்கான முதற்கட்டத் தேர்வுகள் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூன்று ஷிப்டுகளிலும், மாகாண சிவில் சர்வீசஸ் (Provincial Civil Services) (PCS) பணியிடத்திற்கான முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரண்டு ஷிப்டுகளிலும் நடைபெறும் என்று, கடந்த வாரம், UPPSC அறிவித்தது.
படிக்க: வேலையின்றி தவிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள்: இந்தியாவில் உயிர் வாழ்வதே கடினம்!
ஒரே தேதியில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளிலேயே வினாத்தாள் கசிவது, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது போன்ற அயோக்கியத்தனங்கள், பாஜக ஆளும் மாநிலங்களில், ஏராளமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இரண்டு மூன்று நாட்களாக தேர்வுகளை நடத்துவது; அதிலும் பல சிப்டுகளாக பிரித்து போட்டியாளர்களை தேர்வு எழுத வைப்பது என்பது மாபெரும் முறைகேடுகளுக்கு எளிதாக வழி அமைத்துக் கொடுக்கும் செயல்.
எனவே, இந்த அறிவிப்பால் கொதித்து எழுந்த இளைஞர்கள் “அனைவருக்கும் ஒரே தேதியில், ஒரே நேரத்தில் (single-day, single-shift schedule) போட்டித் தேர்வு நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த திங்கட்கிழமையில் இருந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பாஜகவினரின் ஆட்சியில் உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் நடக்கும் அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளிலும் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளிலும் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது குறித்த செய்திகள் அடுத்தடுத்து, ஆதாரப்பூர்வமாக வெளிவந்து நாறிக் கொண்டிருக்கின்றன.
“இத்தகைய தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவோம்” என்று பாஜக தனது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதியாக கொடுக்கும் அளவிற்கு பாஜகவின் ஆட்சியில் இந்த முறைகேடுகள் பூதாகரமாக வெடித்து கிளம்பியுள்ளன.
இந்த நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது போராட்டக்காரர்களின் கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்பது புரியவரும்.
தேர்தல்களில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்வது, வாக்கு எந்திரத்தையே மாற்றி விடுவது உட்பட பல்வேறு அயோக்கியத்தனங்களின் மூலமாக தேர்தல் முடிவுகளை திருடித்தான் பாஜக தற்பொழுது ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.
அத்தகைய பாஜக அரசு போட்டி தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த விரும்பாது. எனவேதான் போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த கூறும் போராட்டக்காரர்களின் மீது தடியடி நடத்திக்கொண்டு இருக்கிறது.
— குமரன்
செய்தி ஆதாரம்: The Indian express