பாதிரியார் ஸ்டேன்ஸ் சுவாமி சிலைக்கு அனுமதி மறுப்பு: திமுக அரசு இழைக்கும் அநீதி!

பீமா கோரகானில் கலவரத்தை தூண்டியதற்கான ஆதாரமும் மாவோயிஸ்டுகள் உடனான இவரது தொடர்புக்கான ஆதாரமும் இவரது மடிக்கணினியில் உள்ளதாக பாஜக அரசு கூறிவந்தது.

1
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி

மிழகத்தில் அரியலுார் மாவட்டத்தில் விரகனூர் கிராமத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தவரான ஸ்டேன்ஸ்வாமி பிலிப்பைன்ஸில் தனது உயர்கல்வியை முடித்தவர்.

கிறிஸ்தவரான இவர் பாதிரியார் ஸ்டேன்ஸ் சுவாமி என்று மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

பழங்குடியின மக்களின் துயர் துடைப்பதற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின மக்களுடன் மக்களாக காடுகளிலும் மலைகளிலும் தங்கி, அம்மக்கள் விழிப்புணர்வு பெருவதற்காகவும் உரிமைகள் பெறுவதற்காகவும் பணியாற்றிய மாமனிதர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மலைகளில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்கான வசதிகளை, பழங்குடியின மக்களை அந்த நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கான முன்னெடுப்புகளை இந்திய அரசு மேற்கொண்ட பொழுது ஸ்டேன்ஸ் சுவாமி அதை மிகக் கடுமையாக எதிர்த்தார்.

கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்கு எதிராக இருப்பதாலேயே, ஸ்டேன்ஸ்சுவாமி மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என்று பாஜக அரசால் முத்திரை குத்தப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், எல்கர் பரிசத் அல்லது பீமா கோரகன் நிகழ்வின்போது கலவரத்தை தூண்டியதாகவும், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என்பதாகவும் கூறி ஸ்டேன்ஸ்வாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இவரால் உணவை வாயில் வைத்து மென்று உண்ண முடியாத நிலை. ஏற்பட்டது. எனவே தனக்கு ஒரு உறிஞ்சு குழல் (straw) கொடுத்தால் தான் உறிஞ்சி உறிஞ்சியாவது தன்னால் உணவை உட்கொள்ள முடியும் என்று ஸ்டேன்ஸ்சுவாமி கேட்ட பொழுது உறிஞ்சு குழல் கூட கொடுக்க முடியாது என்று பாசிச பாஜக அரசும் நீதிமன்றமும் மறுத்ததைக் கண்டு உலகம் முழுக்க உள்ள மனிதநேயம் மிக்கவர்கள் அதிர்ந்து போயினர்.

தள்ளாத வயதில் சிறையில் இருந்த எட்டு மாதத்தில் ஒரு தடவை கூட, என்ஐஏ இவரிடம் விசாரணை நடத்தவில்லை என்பதும் நீதிமன்றத்தால் தொடர்ச்சியாக இவரின் பிணை மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


படிக்க: பாதிரியார் ஸ்டேன் சாமி படுகொலை! உங்களுக்குள் ‘குற்றவாளி’ இல்லையா?


பீமா கோரகானில் கலவரத்தை தூண்டியதற்கான ஆதாரமும் மாவோயிஸ்டுகள் உடனான இவரது தொடர்புக்கான ஆதாரமும் இவரது மடிக்கணினியில் உள்ளதாக பாஜக அரசு கூறிவந்தது.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகளுடன் ஸ்டேன்ஸ்வாமி தொடர்பில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக,
வெளியில் இருந்து, சதித்தனமாக
அவரது மடிக்கணினியில் போலியாக ஆதாரங்கள் உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமான அர்செனல் கன்சல்டிங் நிறுவனம் ஆய்வு செய்து நிரூபித்தது.


படிக்க: 2017-பீமா கோரேகான் வன்முறையும், எல்கர் பரிஷத் வழக்கும்! நடந்தது என்ன?


ஆனால் இப்படி நிரூபிக்கப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஸ்டேன்ஸ்வாமி தனது 84 ஆவது வயதில் 2021 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவர் இறந்தது மும்பை மருத்துவமனை ஒன்றில் தான் என்றாலும் அவர் பாசிச பாஜக அரசின் போலியான குற்றச்சாட்டின் காரணமாக, தள்ளாத வயதில் தனது உணவை உறிஞ்சிக் குடிப்பதற்கு கூட மறுக்கப்பட்ட நிலையில், சிறை கைதியாகவே இறந்தார் என்பதுதான் கொடூரத்தின் உச்சம்.

இவரது இறப்புச் செய்தியை கேட்ட ஜார்கண்ட் மாநில பழங்குடியின மக்கள் அனைவரும் தங்களது சொந்தத் தந்தை இறந்து விட்டதைப் போல “அப்பா” என்று கதறி துடித்தனர் என்பது தான் ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களுக்காக இவர் எந்த அளவிற்கு சேவை செய்துள்ளார் என்பதற்கான அளவுகோல்.

இப்படிப்பட்ட தியாகியான ஸ்டேன்ஸ்வாமி அவர்களுக்கு தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி தனது சொந்த நிலத்தில், தனது சொந்த செலவில் நினைவுச்சின்னம் அமைக்க முயன்றார். இப்படி நினைவுச் சின்னம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதிட்டு தோற்றுப் போய் உள்ளது.

ஸ்டேன்ஸ்வாமி நக்சலைட்டுகளுடன் — மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்தவர் என்று என்று கூறி நினைவுச் சின்னம் அமைக்க திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி தமிழக அரசின் மறுப்பை தள்ளுபடி செய்ததுடன், தனிநபர் தனது சொந்த நிலத்தில் சொந்த செலவில் ஸ்டேன்ஸ்சுவாமிக்கு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை இல்லை என்று தீர்ப்பளித்து விட்டது.

சமூக நீதி, திராவிட மாடல் என்று மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அரசு என்பதை ஸ்டேன்ஸ்வாமிக்கு நினைவுச் சின்னம் எழுப்ப தடை கோரியதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் கொண்டுள்ளது.

குமரன்

1 COMMENT

  1. மக்கள் அல்லது சமூக செயல்பாட்டாளர்கள் யார் பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி எல்லாம் திராவிட அரசுக்கு கவலை இல்லை.

    கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில் சிறிதும் சமரசம் இன்றி திமுக அரசு செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here