உத்திரபிரதேசத்தின் ப்ரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் பக்தர்கள் குளிக்கும் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் மனித மற்றும் விலங்குகளின் கழிவுகளில் பொதுவாக காணப்படும் பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக உள்ளதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ளது.
இந்துக்களின் மத நம்பிக்கையை கேடாக பயன்படுத்திக் கொண்டு மூடநம்பிக்கையை ஆழமாக விதைத்துள்ளது பார்ப்பனிய கும்பல். அதன் விளைவாக அறிவியல் அற்ற மூடத்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் பக்தர்கள். மண் சோறு சாப்பிடுவது, உடம்பில் அலகு குற்றிக் கொள்வது, தீ மிதிப்பது, தலையில் தேங்காய் உடைப்பது, தீர்த்தம் என மாட்டு மூத்திரத்தையும், கழிவுநீரையும் குடிப்பது என எண்ணிலடங்கா செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இதை எந்த பார்ப்பானும் செய்வதில்லை. சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு மத (மூட) நம்பிக்கையை தீர்வாக பார்க்கிறார்கள் அப்பாவி ‘இந்து’ மக்கள்.
அதுபோல்தான் தற்போது நடக்கும் மகா கும்பமேளாவிலும் குளித்தால் பாவங்கள் தீரும் விமோசனங்கள் கிடைக்கும் தங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என சாரை சாரையாக செல்கிறார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் – காவி கும்பல் அரசியல் செய்வதை நாம் அம்பலப்படுத்தி ஏற்கனவே எழுதியுள்ளோம்.
இப்போது மகா கும்பமேளாவில் குளித்ததினால் பிரச்சனை தீரவில்லை. புதிதாக ஒரு பிரச்சனை உருவாகி இருக்கிறது என ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும். உத்திரப் பிரதேச அரசு, ‘புனித யாத்திரை’யின் போது ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை மற்றும் யமுனை நதிகளில் புனித நீராடுவதாகக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
கங்கை மற்றும் யமுனை நதிகளில் உள்ள நீரின் தரம் குறித்த மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிப்ரவரி 3 ஆம் தேதி நீர் மாசுபாடு குறித்த அறிக்கையை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்தது, பிப்ரவரி 17 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் அதைக் கவனத்தில் கொண்டது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையில் இவ்வாறு கூறியது: “ஆற்று நீரின் தரம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்காணிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மலக் கோலிஃபார்ம் [FC] குளிப்பதற்கான முதன்மை நீரின் தரத்துடன் ஒத்துப்போகவில்லை. மகா கும்பமேளாவின் போது பிரயக்ராஜில் ஏராளமான மக்கள் ஆற்றில் குளிக்கின்றனர், தற்போது பலகோடி பேர் குளித்த நிலையில் ஆற்று நீரின் தரம் இன்னும் மோசமாகியிருக்கும்.
மலக் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் என்பது பொதுவாக மனிதர்கள் உட்பட சூடான இரத்தம் கொண்ட விலங்குகளின் குடலில் வாழும் நுண்ணுயிரிகளாகும், மேலும் அவை அவற்றின் கழிவுகளில் காணப்படுகின்றன.
மகாகும்பமேளா தொடங்குவதற்கு முன்பே கங்கை, யமுனை ஆற்றில் நீரின் தரம் மோசமாக இருந்தும் அதனை கண்டுக் கொள்ளாமல் இந்த நிகழ்வினை தனது மத பிரச்சாரத்திற்கும், கார்ப்பரேட் வியாபாரத்திற்கும் பயன்படுத்திக் கொண்ட யோகி அரசு ஆற்றில் நீராடும் அப்பாவி மக்களை பற்றி யோசிக்கவில்லை.
படிக்க:
♦ பார்ப்பன மதத்தின் மூடநம்பிக்கையின் விளைவே கும்பமேளா உயிர் பலி!
♦ மகாகும்பமேளா: சனாதனத்தின் அழுக்குகளைக் எதைக்கொண்டு கழுவுவது?
நீர் மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய டிசம்பர் 23 அன்று பிறப்பித்த உத்தரவை உத்தரப் பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் நிறைவேற்றவில்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
அதனையடுத்து பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி அன்று உத்தரபிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (UPPCB) தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் முடிவுகள் சி.பி.சி.பி.யின் நீர் தரம் தொடர்பான அறிக்கை முடிவுகளை ஆராய கூடுதல் கால அவகாசம் கேட்டு இழுத்தடிக்கிறது.
இது குறித்து உத்திரபிரதேச சட்டசபையில் பேசிய யோகி ஆதித்யநாத் “நீரின் தரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் சங்கமத்தைச் சுற்றியுள்ள அனைத்து கால்வாய்களும் கண்காணிக்கப்படுகின்றன. நீர் முழுமையாக சுத்தகரிக்கப்படுகிறது. மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ச்சியாக நீரின் தரத்தை மதிப்பீடு செய்து வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
பிரயாக்ராஜில் 100 மி.லி நீரில் 2500க்கும் குறைவான அளவிலேயே கோலிஃபாம்கள் இருப்பதாக தெரிவித்தார். மகா கும்பமேளாவின் நன்மதிப்பை சிதைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனின் அளவு 3-க்கும் குறைவான அளவே இருந்தால் போதும். ஆனால் சங்கமம் பகுதியில் அதன் அளவு 8-9 ஆக இருக்கிறது. எனவே சங்கமத்தில் உள்ள நீர் குளிப்பதற்கு மட்டுமின்றி குடிப்பதற்கும் உகந்தது என்று தெரிவித்தார் யோகி ஆதித்யநாத்.
மகாகும்பமேளாவில் ஆற்று நீரானது குளிப்பதற்கே ஏற்றதல்ல என்று கூறியது காவி கும்பலால் எதிரியாக பாகிஸ்தான் அல்ல. மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாசு கட்டுப்பாடு வாரியம். அவர்கள் தான் அதாவது மோடி தான் கும்பமேளாவின் நன்மதிப்பை கெடுக்க விரும்புகிறாரா?
தொலைக்காட்சிகளில் மக்கள் நீராடுவதை நாமே பார்த்திருப்போம். குப்பைகளும் கழிவுகளும் சேர்ந்த கழிவு நீரை போல் காட்சியளிக்கும் ஆற்று நீர் தான் குளிப்பதற்கு மட்டுமல்ல, குடிப்பதற்கும் உகந்தது என யோகி ஆதித்யநாத் கூறுகிறார். தங்களின் மத வெறி நிகழ்ச்சி நிரலுக்காக கோடிக்கணக்கான மக்களையும் கொல்ல தயாராக இருக்கிறார்கள் பாசிஸ்டுகள்.
கும்பமேளாவில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் பலருக்கு காய்ச்சல், சளி, தும்மல், இருமல் மற்றும் சுவாச பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடெல்லியில் அமைந்திருக்கும் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் பன்னலால் இது குறித்து பேசும் போது, “இது அடிக்கடி நடப்பது உண்டு. அதிக அளவில் மக்கள் ஒன்று கூடுவதால் இது தவிர்க்க முடியாத ஒன்று. குறைந்தபட்சம் 20% பக்தர்களாவது இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள். அதன் தாக்கம் சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
பார்ப்பனியம் உருவாக்கிய மத மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ள அப்பாவி பக்தர்கள் இன்று கும்பமேளாவில் குளித்ததன் மூலம் நோயாளிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். நாளை அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் கூட அதற்கு தான் காரணம் அல்ல என்று அதிகார மையங்களில் நிறைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மூலம் மூடிமறைக்கப்படும்.
இதனை உணர்ந்து அப்பாவி உழைக்கின்ற மக்கள் தொழில்நுட்பங்கள் வளரந்த இந்த காலத்தில் பார்ப்பனியம் உருவாக்கிய மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு அறிவியல் ரீதியாக சிந்திக்க தொடங்கினால் தான் தங்களுக்கு உருவாகும் பிரச்சினைகளை சரியான வழியில் தீர்க்க முடியும்.
- நலன்
கும்பமேளா மூடநம்பிக்கைகள் கொலைகள் மற்றும் நோய் பரப்பும் அசுத்தங்கள் பற்றி சிறப்பான முறையில் அம்பலப்படுத்தி இருக்கிறார் கட்டுரையாளர் நலன். பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!