நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும் அதற்கு பொறுப்பு ஏற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் டெல்லியில் கடந்த ஜூலை மாதத்தில் காக்ரோச் ஜனதா பார்ட்டி யால் நடத்தப்பட்ட போராட்டம் மோடி அமித்ஷாவை மண்டியிட வைத்து தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து விலகச் செய்தது. இந்தப் போராட்டம் நாட்டு மக்களின் மத்தியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 20ஆம் தேதி அன்று நடந்த போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்ட பெண் ஒருவரின் தந்தை சஞ்சை குமார் என்பவரின் தலையில் ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு தாக்கப்பட்டார்.
இந்த தாக்குதல் குறித்து ”அவரின் மண்டையை நான் உடைத்தேன். 60 தையல்கள் போடப்பட்டன. என் மீது கொலை வழக்கு விழும் என்று தெரிந்திருந்தும் கூட, எனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால், காவல்துறை என்னை கைது செய்யவில்லை” என்று பரத்வாஜ் என்ற சங்கி பேசி, சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்ட பின்னரும் காவல்துறை அவரை கைது செய்யவில்லை.
இந்துத்துவ கருத்துக்களை கேட்போரின் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடும் இந்த நபர் பாஜகவிற்கு நெருக்கமானவர் என்பதால் காவல்துறை கைது செய்யாமல் இருந்தது.
பெல்லட் குண்டுகளால் போராட்டக்காரர்களின் முகத்தை சிதைத்து மட்டுமின்றி போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி ஒருவரை கொலை செய்த டெல்லி காவல்துறை உடனடியாக இந்த நபரை கைது செய்திருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.
இந்த நிலையில் இந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று காக்க்ரோச் ஜனதா பார்ட்டியினர் டெல்லியில் நாடாளுமன்ற சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு எதிரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் வேறு வழி இன்றி டெல்லி காவல்துறை சென்ற வெள்ளிக்கிழமை அன்று அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அந்த குற்றவாளியை ஒருநாள் போலீஸ்காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் லட்சக்கணக்கானோர் ஒரு திரண்டு நடத்திய போராட்டத்தின் போது ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்களும் குல்லாய் அணிந்த முஸ்லிம் ஆண்களும் பெரும்பான்மை இந்துக்களால் மத வேறுபாடு இன்றி – எவ்வித பாகுபாடும் இன்றி சரிசமமாக நடத்தப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது பெண்களை சீண்டியதாகவோ பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவோ எந்த ஒரு சிறு சிறு சலசலப்பு கூட எழவில். போராட்டக்காரர்கள், குப்பைகளை தாங்களே பொறுக்கி தாங்கள் இருந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தனர்.
இந்த விவரங்களை படிக்கும் பொழுது தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் மக்கள் இப்படித்தான் நடந்து கொண்டனர் என்பது நம் நினைவிற்கு வருகிறது.
போராட்டக்காரர்களின் இந்த ஒழுங்கும் மத நல்லிணக்கமும் ஆர் எஸ் எஸ் பாஜகவினருக்கு கடும் ஆத்திரத்தையும் பயத்தையும் ஏற்படுத்து இருக்கும். மக்களை மதரீதியாக பிளந்துதான் தங்களால் ஓட்டுக்களை பெற முடியும் என்ற நிலையில், போராட்டக்காரர்களின் இந்த நடத்தை சங்கிகளை தூங்க விடாமல் செய்திருக்கும்.
மறுபுறம், இலங்கையிலும் பங்களாதேஷிலும் நேபாளத்திலும் நடைபெற்ற ஜென் -சி இளைஞர்களின், மக்களின் போராட்டம் அந்த நாட்டின் ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வைத்தது. இந்த நிலை இந்தியாவிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று பாஜக — ஆர் எஸ் எஸ் கும்பல் பதைபதைத்து போய் இருக்கும்.
மேலும் படிக்க: போலீசு, ராணுவத்துடன், ஆர்.எஸ்.எஸ் பாசிச குண்டர் படையும் இணைந்து தாக்குதல் நடத்திய டெல்லி சிஜேபி போராட்டம்.
இந்த நிலையில் காக்ரோச் ஜனதா பார்ட்டி -யினரின் இந்த மாபெரும் போராட்டம் மோடி, அமித்ஷாவையும் கதிகலங்க வைத்துள்ளது. மணிப்பூர் பற்றியோ வேறு பிரச்சினைகள் பற்றியோ பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கோ நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கோ கால்தூசு அளவிற்கு கூட மதிப்பளித்து மோடி பதில் சொன்னதில்லை.
அப்படிப்பட்ட மோடியோ இந்தப் போராட்டத்தால் பதறிப் போய் நள்ளிரவு 12 மணிக்கு அவசர அவசரமாக பேசி செல்பி எடுத்து வெளியிட்டார் என்றால் எந்த அளவிற்கு அஞ்சா நெஞ்சர், 56 இன்ச் மோடி பயந்து போய் இருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
மக்கள் ஒற்றுமையுடன் போராடுவதை எந்த சங்கியாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் இந்தப் போராட்டக்காரர்களின் மீதான வெறுப்பின் வெளிப்பாடு தான் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணுடைய தந்தையின் மீதான பரத்வாஜ் என்ற இந்த சமூக ஊடக சங்கியின் தாக்குதல். தனது இந்த செயல் ஆர் எஸ் எஸ் பாஜகவினர் மத்தியில் தனக்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும், அதன் மூலம் ஆதாயம் அடையலாம் என்று கருதியும் கூட பரதராஜ் என்ற இந்த சங்கி இப்படி நடந்து கொண்டிருக்கலாம்.
எது எப்படி இருப்பினும் ஒரு தாக்குதலை நடத்தி விட்டு அந்த தாக்குதலை ”நான் தான் செய்தேன்” என்று உலகறிய ஒரு சங்கி வீடியோ வெளியிடுவது என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல. காவல்துறை உள்ளிட்ட அரசின் துறைகள் அனைத்தும் தங்களது (அதாவது ஆர் எஸ் எஸ் பாஜகவின்) கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நம்மை யாராலும் ஆட்டவும் முடியாது; அசைக்கவும் முடியாது என்று நேரடியாக ஆட்சி அதிகாரத்தின் பொறுப்புகளில் இல்லாத சங்கிகள் கூட கொலை வெறி பிடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. அதன் ஒரு வெளிப்பாடு தான் பரத்வாஜின் இந்த செயல்.
இதற்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும்? வெறுமனே ஒரு அமைச்சரை பதவி விலக வைப்பதால், ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்ற வைப்பதால் இந்தியாவின் நிலை மாறிவிடாது.
ஆர்எஸ்எஸ் பாஜகவின் பாசிசத்தை வீழ்த்த வேண்டும் எனில் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டி மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்; பாசிச பாஜக அரசை தூக்கி எறிந்து ஒரு ஜனநாயக கூட்ட அரசை நிறுவ வேண்டும். இதன் மூலம் தான் நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும்.
குமரன்







