பொதுவாக, அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டி அரசுக்கு கோரிக்கை வைப்பது என்பதையே நாம் செய்து வருகிறோம். ஆனால், அவற்றில் ஏற்படும் நல்ல அனுபவங்களையும், மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பையும் பற்றி பகிர்வது பணம் பிடுங்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகள் எப்படி சிறந்து விளங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டும். தனியார் பல் மருத்துவமனைகளில் சிகிச்சை எந்த அளவு செலவாகும் பலரும் அறிந்த ஒன்றே. பிறகு ஏன் அங்கு செல்கிறார்கள்? அரசு மருத்துவமனையில் சிகிச்சை, அணுகுமுறை மீதான எதிர்நிலையான கருத்தே காரணம். அதற்கு மாற்றாக இருந்தது அரசு பல் மருத்துவமனை அனுபவம்.
பிராட்வேயில் உள்ள அரசு பல் மருத்துவமனையை எடுத்துக் கொள்ளலாம். பல் சிகிச்சைக்கு வருபவர்கள் பதிவு கட்டணமாக சுமார் ஐந்து ரூபாய் செலுத்தி மாதக் கணக்கில் இலவச சிகிச்சை பெறுகின்றனர்.
முதல் முறை மருத்துவமனைக்கு வருபவர்கள் மருத்துவரை பார்க்க எங்கே செல்வது என்று தெரியாமல் தடுமாறுவதை தவிர்க்க வரவேற்பு அறையிலேயே மேஜையை போட்டு, தயங்கி நிற்பவர்களை அழைத்து இரண்டு மருத்துவ மாணவர்கள் வழிகாட்டிகளாக செயல்படுகின்றனர்.

பல் தொடர்பான சிகிச்சையை தர பல்வேறு வார்டுகளாக பிரித்து கையாளுகின்றனர். நோயாளிகளின் தேவையை கேட்டு, பொருத்தமான வார்டுக்கு அனுப்பியும் வைக்கின்றனர்.
மின்னல் வேகத்தில் பரிசோதனைகள்!
குறிப்பிட்ட சிகிச்சைக்கு நோயாளியின் ரத்த சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனை முடிவுகள் தேவைப்படுகின்றன. இவை இலவசமாகவே செய்யப்பட்டு, உடனுக்குடன் முடிவுகள் தரப்பட்டு, முதல் நாளிலேயே சிகிச்சை தொடர உதவியாக உள்ளது.
பல்லில் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை செய்வதற்கு முன் எக்ஸ்ரே எடுக்கிறார்கள். வாயில் எந்தப் பகுதியில் உள்ள தாடை, பற்களை எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் குறித்து தந்து அனுப்புகின்றனர்.
இங்கு எக்ஸ்ரேக்கள் உடனே எடுக்கப்பட்டு, சில நிமிடங்களில் முடிவுகளும் தரப்பட்டு வருகிறது. அதுவும் குறைந்தபட்சமாக ஐந்து ரூபாய், அதிகபட்சமாக 50 ரூபாய், மிக மிக சிக்கலான நவீன எக்ஸ்ரேக்கள் அதற்கு மேல் கூடுதல் கட்டணத்திற்கு எடுக்கப்படுகின்றன.
நமது அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு முடிவுகளை, xray படங்களை வாட்ஸ் அப்பிலும் அனுப்புகிறார்கள்.
நோயாளி – மருத்துவர் உறவு!
எனக்கு தெரிந்து அரசு மருத்துவமனையில் இங்கு மட்டும்தான் மருத்துவரின் whatsapp எண் நோயாளிகளுக்கு கிடைக்கிறது. தனது சந்தேகங்களை எப்போது வேண்டுமானாலும் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும் முடிகிறது.
மருத்துவர்கள் தமது whatsapp எண்ணிற்கு முடிவுகளை அனுப்பச் சொல்லி, தாமதம் இன்றி பரிசீலித்து வந்துள்ள முடிவுகளையும் நோயாளிகளுக்கு விளக்கி, சிகிச்சைக்காக எந்த நாளில் வரவேண்டும் என்றும் ஆலோசனை தந்து விடுகிறார்கள்.
அவர்கள் குறித்த நாளில் நாம் வருகிறோமா என்பதை முந்தைய நாளே போன் செய்து உத்தரவாதப்படுத்தியும் கொள்கின்றனர். இதன் மூலம் மருத்துவர்களின் நேரமும் நோயாளிகளின் நேரமும் வீணாவது தவிர்க்கப்படுகிறது
காலையில் உணவு உண்டு விட்டு ஏழரை மணிக்கு வரச் சொல்லி சிகிச்சையை தொடங்குகிறார்கள். சொத்தைப் பல்லுக்கான ரூட் கேனல் எனப்படும் பல் வேர் சிகிச்சை முதல், செயற்கை பல் பொருத்துவது வரை அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக தரப்படுகிறது.

அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றில் முதுகலை படிக்கும் பயிற்சி மருத்துவர்கள்தான் நோயாளிகளை கையாளுகிறார்கள். இந்த பயிற்சி மருத்துவர்களை அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவர்கள் வழி நடத்துகிறார்கள். மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களாகவும், மருத்துவமனையில் குறிப்பிட்ட பிரிவுக்கு தலைவராகவும், கண்காணிக்கும் பொறுப்பிலும் உள்ள இவர்கள் நோயாளிகளுக்கு தரப்படும் சிகிச்சையை நேரில் வந்து பார்த்து, தேவையான ஆலோசனைகளை சொல்லி வழி நடத்துகிறார்கள்.
துறை தலைவர்களாக உள்ள மருத்துவர்கள் தேவைக்கேற்ப ஒரு சிகிச்சையின் இடையே இரண்டு, மூன்று முறை கூட நேரில் வந்து பரிசோதிக்கிறார்கள். அல்லது பயிற்சி மருத்துவர்கள் அவர்களை வரவைத்து காட்டி, ஒப்புதல் பெற்றே அடுத்த கட்ட சிகிச்சையை தொடர்கின்றனர்.
அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு!
நோயாளிகள் சாய்வு படுக்கையில் வசதியாக படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது. பல் ஈரில் செய்யப்படும் அறுவை சிகிச்சையான FLAP மிகவும் சிக்கலானது. சுமார் 3 மணி நேரம் ஓய்வு இல்லாமல் மருத்துவர்கள் கடினமாக உழைக்கின்றனர். அதாவது நோயாளிகள் சொகுசாக படுத்த நிலையில் சிகிச்சை பெறும் போது, மருத்துவர்கள் தேவைக்கேற்ப நிமிர்ந்தும், முன்னால் குனிந்தும் மணிக்கணக்காக, விடாப்பிடியாக, தீவிர கவனத்துடன் சிகிச்சையை தருகின்றனர். ஒரு தாடையில், ஒரு புறத்திற்கு மட்டுமே 3 மணி நேரம் எடுக்கிறது. இரண்டு தாடைகளிலும் சேர்த்து, நான்கு புறத்திலும் இந்த FLAP சிகிச்சையை முடிக்க மொத்தமாக 12 மணி நேரம் எடுக்கிறது. நான்கு முறை வரச் சொல்லி பகுதி பகுதியாக செய்கிறார்கள்.
சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவர் உதவியாளராக தம்முடன் இணைந்து நிற்கும் இளங்கலை மருத்துவர்களுக்கு சிகிச்சையினூடே வகுப்பும் எடுக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் ஓய்வில்லாமல் பொறுமையாகவும் அதே நேரம் தீவிரமாகவும் உழைக்கும் இந்த மருத்துவர்களின் சேவைக்கு நாம் நிச்சயம் தலைவணங்கத்தான் வேண்டும்.

இந்தப் பல் மருத்துவமனையில் இல்லாத பரிசோதனைகளை அருகில் உள்ள ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு சென்று எடுக்கவும் வழிகாட்டுகிறார்கள். ஒப்பீட்டளவில் ராஜீவ் காந்தி மருத்துவமனையானது பல் மருத்துவமனைக்கு வரும் நோயாளியின் எண்ணிக்கை விட பல மடங்கு நோயாளிகளை தினமும் கையாள்கிறது. அதற்கேற்ப அங்குள்ள பரிசோதனையகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதை திறமையாக கையாளுவதற்கு ஏற்ப கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு பிரமிக்க வைக்கின்றன.
பரிசோதனைக்காக பதிவு செய்வதற்கு ஐந்து நிமிடம், ரத்த மாதிரியை தருவதற்கு பத்து நிமிடம், ஆய்வு செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் கையில் கிடைக்க சுமார் 2 மணி நேரம் என சிக்கலான ரத்த பரிசோதனைகளை கூட மூன்று மணி நேரத்திற்குள் முடித்து விட்டு முடிவுகளுடன் வெளியே வந்து விட முடிகிறது. இது கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வேலைகள் நடக்கும் வேகத்திற்கு இணையானது.
முன்னுதாரணமாக உள்ள சென்னை அரசு மருத்துவமனைகள்!
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தரப்படும் சிகிச்சையின் தரம் கார்ப்பரேட் மருத்துவமனைகளுடன் போட்டி போடத் தக்கதாக உள்ளது.
வெளியூரில் இருந்து ரயிலில் சென்ட்ரலில் வந்து இறங்குபவர்கள் எளிமையாக நடந்தே செல்லும் தூரத்தில் புகழ்பெற்ற அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அருகிலேயே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையும் சற்று தொலைவில் ஸ்டான்லி மருத்துவமனையும், கடற்கரைக்கு அருகில் பன்னோக்கு மருத்துவமனையும் செயல்படுகிறது. இவை அனைத்தும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுடன் போட்டி போடும் வகையில் சிறந்த மருத்துவ சேவைகளை இலவசமாகவே வழங்கி வருகின்றன.
படிக்க: பொதுமருத்துவமனையின் கோவிட் வார்டிலிருந்து எப்படி அரிதாக உயிர்பிழைத்தேன்?
கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனைக்கு சென்றால் அங்கு மூத்த குடிமக்களுக்கு என்று தனி பிளாக்கையே வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும், அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் உயர்தரத்தில் இலவசமாகவே தரப்படுகிறது.
தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்த அயோத்திதாசர் பண்டிதர் மருத்துவமனைக்குச் சென்றால் நமது பிரமிப்பு மேலும் அதிகமாகிறது. சிறு குன்றின் அடிவாரத்தில் பசுமை சூழ அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் ஞாயிறுகளில் காலை 8 மணிக்கு கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் தேவைக்கேற்ப புறநோயாளிகள் பிரிவில் வார்டுகளாக பிரிக்கப்பட்டு, சிகிச்சையின் தன்மைக்கேற்ப நோயாளிகள் பிரித்து அனுப்பப்பட்டு உடனுக்குடன் மருத்துவரால் சோதிக்கப்படுகின்றனர். இந்த வளாகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
மருந்துகள் வழங்கும் இடத்திலும் கூட சுமார் 6, 7 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு தனி கவுன்டரும் செயல்படுகிறது. உள்நோயாளியாக சிகிச்சை எடுப்பவருக்கு சிகிச்சை மட்டும் இன்றி உணவும் கூட இலவசமாகவே தரப்படுகிறது.
படிக்க: விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை அடிப்படை சுகாதார கட்டமைப்பு வசதிகளுடன் இயங்குகிறதா?
இம்மருத்துவமனையில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்றால் மருந்தை எடுத்து தரும் பொழுது அந்தத் கவரின் மேல் மருந்தை எந்த நேரத்தில், எந்த எண்ணிக்கையில் சாப்பிட வேண்டும் என்பதை எழுதியோ, அல்லது சீல் வைத்தோ தருகிறார்கள். மருத்துவமனைக்கு வெளியே பிளாஸ்டிக் டப்பாக்கள் பத்து ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதில் கஷாயம் எண்ணெய் போன்றவற்றை வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.
சிறு தவறு – பெரும் இழப்பு!
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் இதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மாத்திரை வாங்கும் பொழுது மாத்திரைகளை மொத்தமாக அள்ளிப்போட்டு சாப்பிட வேண்டிய முறைகளை விரைவாக சொல்லி விரட்டுகிறார்கள். வயது முதிர்ந்த, போதிய படிப்பறிவு இல்லாத நோயாளிகளால் இதை புரிந்து கொள்ள முடிவது இல்லை.
மாத்திரைகளை முதன்முறையாக பார்ப்பவர்களோ அல்லது மாத்திரைகளின் மேல் உள்ள ஆங்கில எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பெயர்களை படிக்க முடியாதவர்களோ எந்த வேளையில் உணவுக்கு முன் அல்லது உணவுக்கு பின் எத்தனை மாத்திரைகளை சாப்பிடுவது என்பதை ஒரு முறை சொன்னவுடன் நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமே இல்லாத ஒன்று.
தரமான மருத்துவர்களைக் கொண்டு நோயைப் பரிசோதித்து, பொருத்தமான மருந்துகளை பரிந்துரைத்து, அந்த மருந்துகளை உற்பத்தி செய்து நோயாளிகள் கையில் தரும்போது கோட்டை விடுகிறார்கள். மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய முறையை பொருத்தமாக எழுதி, புரியவைத்து அனுப்பாததால், மொத்த உழைப்பும் வீணடிக்கப்படுகிறது. மருந்துகளை தவறாக உட்கொள்வோர்களுக்கு நோயும் குணமாகாமல் போகிறது.
தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி நிறுவனத்தின் அயோத்திதாசர் பண்டிதர் மருத்துவமனையில் மருந்துகள் தரப்படும் முறையை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து சாப்பிட வேண்டிய நேரம் முறை குறித்து எழுதி அல்லது அச்சடித்து தனித்தனி கவர்களில் போட்டு தருவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
சீர்குலைக்க துடிக்கிறது ஒன்றிய அரசு!
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலும் உழைப்பிலும் உருவாக்கப்பட்ட இத்தகைய அரசு சுகாதார கட்டமைப்பைதான் சீர்குலைக்க துடிக்கிறது ஒன்றிய மோடி அரசு. பிற மாநிலங்களுடன், குறிப்பாக வட மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது, இங்கு தரப்படும் சிகிச்சை என்பது உயர்தரத்திலானதாக உள்ளது. வட மாநிலத் தொழிலாளர்களாக இங்கு பணிபுரிபவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இங்குள்ள மருத்துவமனைகளின் உள்ளே நுழையும் போது பிரமிப்பதையும் பார்க்க முடிகிறது.
குஜராத் மாநிலத்திலிருந்து வந்த மருத்துவக் குழுவானது, தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை வியந்தோதிப் புகழ்ந்தனர். இது பாசிச மோடிக்கு உவப்பானதாக அமையாது தான். மருத்துவ சேவையில் தமிழகம் இந்தியாவிற்கு முன்மாதிரியாக உள்ளதை அவராலும் மறுக்க முடியாது தான்.
அரசு மருத்துவர்களின், செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். இவர்களின் சேவையை அனுபவித்து வரும் உழைக்கும் மக்களான நாம் இவர்களுக்காக களத்தில் தோள் கொடுத்து நிற்கவும் வேண்டும்.
மருத்துவ கட்டமைப்பை மேலும் வளர்த்தெடுக்க தமிழக அரசு கவனம் தர வேண்டும். மருத்துவர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும். நிதி ஒதுக்கீடு உயர்த்த வேண்டும்.
தமிழ் தெரிந்த மருத்துவராக இருப்பதால்தான் நோயாளிகளின் பிரச்சனைகளை கேட்டு, முழுமையாக புரிந்து கொண்டு, பொருத்தமாக பரிசோதனைகளை செய்ய வைத்து சிகிச்சையும் தர முடிகிறது.
நீட், அகில இந்திய ஒதுக்கீடு என்ற பெயரில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் மேட்டுக்குடி பிள்ளைகளும் மட்டுமே இங்குள்ள மருத்துவ கல்லூரிகளை மொத்தமாக ஆக்கிரமித்தால், இங்குள்ள மக்களின் நிலைமை என்ன ஆவது என்பதை நாம் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீட்டிற்கு எதிராக நிற்கும் தமிழக அரசுடன் கரம் கோர்த்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக களமாடவும் வேண்டும்.
- இளமாறன்







அரசு மருத்துவத்தின் மகத்துவம் பற்றி விளக்கியது சிறப்பு அதை பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு!