சித்த மருத்துவத்திற்கு இழைக்கப்படும் அநீதி குறித்து தெளிவாக மெய்ப்பிக்கும் சிறந்த கட்டுரை. இது குறித்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கோ, மக்கள் இயக்கங்களுக்கோ பெரிய அளவில் புரிதலோ, அக்கறையோ இல்லை என்பதுதான் யதார்த்த நிலையாகும். இதனை சித்தமருத்துவத்துறை சார்ந்த பிரச்னையாகக் குறுக்கிவிடாமல், தமிழினத்தின் பிரச்னையாகப் பார்க்க வேண்டும்.

“சில நாட்களுக்கு முன்பு மதிப்பிற்குரிய பேராசிரியர் புது.ஜெயப்பிரகாஷ்நாராயணன் சார் அவர்கள் தங்கள் வேதனையை முகநூலில் பதிவிட்டிருந்தார். சித்த மருத்துவத்தின் எதிர்காலம் இனி எப்படி????

பல இடங்களில் மத்திய அரசால் சித்த மருத்துவம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு தான் சித்த மருத்துவம் என ஆயுஷ் துறை அதிகாரிகள் நம்புவதால் ஆயுர்வேதத்தின் ஒரு பகுதிதான் சித்த மருத்துவம் என எண்ணி சித்தமருத்துவ வளர்ச்சியை தடை செய்கின்றனர்.

1. விக்கிபீடியாவில் சித்த மருத்துவம் ஒரு போலி மருத்துவம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மத்திய அரசிடம் பல முறை புகார் மனு அளித்தும் நிவர்த்தி செய்யப்படவில்லை. ஆனால் அதே நேரம் ஆயுர்வேத மருத்துவம் பற்றிய விக்கிபீடியா தகவல்கள் சரி செய்யப்பட்டுவிட்டன.
https://en.wikipedia.org/wiki/Siddha_medicine, https://en.wikipedia.org/wiki/Ayurveda,

2. எம்.எஸ்.எம்.இ தொழில் பட்டியல் வரிசையில் ஆயுர்வேதம் யுனானி ஹோமியோபதி ஆகியன தனி தொழிலாக குறிப்பிடப்பட்டு அதற்கான தேசிய குறியீடு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சித்த மருத்துவத்திற்கு தனிக் குறியீடு வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததில் சித்த மருத்துவத்தை ஆயுர்வேதாவின் கீழ் பதிந்துக் கொள்ள வேண்டும் என பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்தை புறக்கணிக்கும் செயலாகும்.

(https://www.ncs.gov.in/Documents/NIC_Sector Page54

3. 1940 க்கு பிறகு மருந்து மற்றும் அழகு சாதன சட்டத்தில் 30 சித்த மருத்துவ நூற்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.1940ம் ஆண்டு சேர்க்கப்பட்ட சித்த மருத்துவ நூற்கள் பட்டியலுடன் ஏறத்தாழ 800 சித்த மருத்துவ நூற்களின் பட்டியல் கூடுதலாக சேர்க்க தமிழக அரசால் தொகுத்து அளிக்கப்பட்டது. இவற்றை பரிசீலனை செய்த மத்திய அரசு குழு 77 சித்த மருத்துவ நூற்கள் மட்டுமே மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தகுதியானவைகளாக பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசிதழில் இந்த 77 நூற்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் புதிய சித்த மருந்துகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு இதனை நடைமுறைப்படுத்த தயங்குகிறது.
https://www.tnslaim.tn.gov.in/documents.html
http://www.e-aushadhi.gov.in/ayush/acts

4. மதுரையில் 120க்கும் மேற்பட்ட சித்த மருந்து செய் நிலையங்கள் உள்ளன. மதுரை சித்த வைத்திய சங்கம் மிகப்பழமையானது. மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மூலிகைகள் சேகரிக்கப்பட்டு மருந்து செய்ய நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. NIPER போன்று ஆராய்ச்சி நிலையம் மதுரையில் அமைக்கப்பட்டு அதில் சித்த மருந்து ஆராய்ச்சிக் கூடம் அமைக்க வேண்டும். சித்த மருந்துகளின் தர ஆய்விற்காக இந்த மருந்து கூடங்களை சித்த மருந்து செய் நிலையங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
http://www.niper.nic.in/

5. சி.டி.ஆர்.ஐ எனப்படும் மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி பரிசோதனை குறிப்பேட்டில் சித்த மருத்துவம் குறிப்பிடப்படவில்லை. சித்த மருத்துவம் பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் ஆயுர்வேதம் என்ற தலைப்பின் கீழேயே நடக்கின்றன. இது திட்டமிட்டு சித்த மருத்துவ வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சியை தடை செய்யும் முயற்சியாகும்.
ctri.nic.in/Clinicaltrials/addnewtrail.php?EncHid=14015.45110&modid=&compid=&n=1

6. தற்போது மத்திய அரசு அமைத்துள்ள உலக பாரம்பரிய மருத்துவ அமைப்பில் (GCTM) சித்த மருத்துவம் இல்லை. யோகா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவ நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் சித்தமருத்துவ நிறுவனங்கள் இதில் இணைக்கப்படவில்லை.
https://theprint.in/india/cabinet-nod-to-setting-up-who-global-centre-for-traditional-medicine-in-india/865752/

7. கடந்த மாதம் மெக்சிகோ நாட்டின் தூதருடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாரம்பரிய மருத்துவத்தின் கீழ் ஆயுஷ் மருத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயுஷ் மருத்துவம் பற்றிய விளக்கத்தில் வேண்டுமென்றே சித்தா தவிர்க்கப்பட்டு AYUSH ல் S என்ற எழுத்துக்கு விளக்கமாக சோவா ரிக்பா என்ற மருத்துவமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சித்த மருத்துவம் ஆயுஷ் மருத்துவ முறைகளில் தனித்த மருத்துவம் அல்ல என்றும் ஆயுர்வேதா உடன் இணைந்த மருத்துவம் என்றும் உலக நாடுகளுக்கு புரியவைக்க முயற்சி செய்யப்படுகிறது.
https://theprint.in/india/india-mexico-discuss-various-aspects-of-collaboration-in-field-of-traditional-medicine/895664/

8. ஆல் இந்தியா இன்ஸ்டியூட் ஆப் ஆயுர்வேதா புதுதில்லியில் உள்ளது. ஆல் இந்தியா இன்ஸ்டிட் ஆப் ஹோமியோபதி புது தில்லியில் நரேலா என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஆனால் சித்த மருத்துவத்திற்கான ஆல் இந்தியா இன்ஸ்டிட் ஆப் சித்தா நிறுவப்படவில்லை. இப்பொழுது முயற்சி செய்தால்தான் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் நிறுவ முடியும்.
https://main.ayush.gov.in/1083-2/

9. இந்தியா முழுவதும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ கன்டோன்மென்ட் மருத்துவமனைகள் 17 மாநிலங்களில் 62 இடங்களில் இயங்குகின்றன. தற்பொழுது நாட்டில் 37 கண்டோன்மென்ட் மருத்துவமனைகளில் ஆயுர்வேத பிரிவுகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இதிலும் சித்தமருத்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக மருத்துவமனைகள் சேர்க்கப்படவில்லை. டெல்லி மற்றும் தமிழகத்தில் சென்னை மற்றும் ஊட்டியில் உள்ள கண்டோன்மெண்ட் மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவுகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் மத்திய பல்கலை கழகங்களிலும், ரயில்வே மருத்துவமனைகளில் சித்தமருத்துவம் புறக்கணிக்கப்படுகிறது.
https://theprint.in/india/ayurveda-clinics-at-37-cantonment-hospitals-from-1-may-defence-ministry-announces/895295/

10. தேசிய உடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் தொழில் முனைவோருக்கான வங்கி கடன் வழங்குவதற்கான பட்டியலில் சித்த மருத்துவம் சேர்க்கப்படவில்லை. ஆயுர்வேதா யுனானி ஹோமியோபதி பல் மருத்துவம் மற்றும் ஆங்கில மருத்துவம் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. சித்தமருத்துவ படிப்பான BSMS கல்வித் தகுதியாக குறிப்பிடப்படவில்லை என்பதால் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கும் போது பிராந்திய மேலாளர்களுடன் இது சம்பந்தமாக நீண்ட விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. ஆகவே மத்திய ரிசர்வ் வங்கி இது சம்பந்தமாக அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு சித்த மருத்துவ தொழில் முனைவோரை ஊக்குவிக்க பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவ கல்வி பட்டப்படிப்பை இணைத்து ஆணை வழங்க வேண்டும். சம்மந்தமாக பிரதமருக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

11. மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் (CGHS) பகல் நேர பராமரிப்பு மையங்களில் ஆயுர்வேத சிகிச்சை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சித்த மருத்துவம் இதில் சேர்க்கப்படவில்லை. ஆகவே மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தில் தமிழகத்திலுள்ள மற்றும் பிற மாநிலங்களில் உள்ள CGHS மையங்களில் சித்த மருத்துவத்தையும் சேர்க்க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆணையிட வேண்டும்.
https://www.livemint.com/science/health/central-govt-employees-pensioners-to-get-ayush-day-care-facility-under-cghs-11606920923225.html

12. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவத்திற்கு என ஆலோசகர் இல்லை. ஆயுர்வேதா யுனானி ஹோமியோபதி போன்ற மருத்துவத்திற்கு தனியாக ஆலோசகர் இருக்கின்றனர். ஆனால் சித்த மருத்துவ ஆலோசகர் இல்லை. சித்த மருத்துவ ஆலோசகர் பணியை ஆயுர்வேத மருத்துவ ஆலோசகர் செய்வதால் சித்த மருத்துவ வளர்ச்சி தடைபடுகிறது. வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் வெளிநாடுகளில் சித்த மருத்துவமனை ஏற்படுத்துதல் சித்தமருத்துவ தேவையான நிதியை கேட்டுப் பெறுதல் ஆகியவற்றிற்கு இதனால் பெரும் தடை ஏற்படுகிறது.
https://main.ayush.gov.in/whos-who/

13. ஆயுர்வேதா யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அமைந்திருக்கும் புதுடில்லியில் தலைமை அலுவலகம் இருக்கும்பொழுது சித்த மருத்துவத்திற்கு அங்கு தலைமை அலுவலகம் இல்லை. இதனால் சித்த மருத்துவம் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை கேட்டு வாங்கவும் அல்லது ஆலோசனை செய்யவும் முடிவதில்லை. ஆகவே புதுடெல்லியில் மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில் தலைமை மையம் அமைய வேண்டும்.
https://main.ayush.gov.in/1083-2/

14. அனைத்து இந்திய மருத்துவ முறைகளும் (AYUSH) ஆல் இந்தியா இன்ஸ்ட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனங்களில் இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. இந்தியா முழுவதும் 24 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 19 நிறுவனங்கள் செயல்பட தொடங்கி விட்டன. செயல்படும் அனைத்து எய்ம்ஸ் நிறுவனங்களிலும் ஆயுர்வேதா இருக்கிறது. ஆனால் ராய்பூரில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் மட்டும் தான் சித்த மருத்துவம் உள்ளது. பிற நிறுவனங்களில் சித்த மருத்துவம் இல்லை.
https://www.aiimsraipur.edu.in/user/directive-office.php?id=Siddha

15. ஆயுர்வேத மருத்துவ நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன. ஆனால் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்ட கோரிக்கை விடுக்கப்பட்டும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இது சித்த மருத்துவ வளர்ச்சியை முடக்கிப் போடும் செயலாகும்.
http://www.nia.nic.in/about.html

16. மலேசியாவில் சித்த மருத்துவ வர்ம சிகிச்சை ஆய்வுக்காக சித்த மருத்துவர் அயல் பணியில் அமர்த்தப்பட்டார். ஆனால் தற்சமயம் அந்த இடம் காலியாக உள்ளது. ஆராய்ச்சி தொடர்வதற்காக அந்த பணியிடத்தை நிரப்புவதற்கான எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. இதனால் அந்த ஆராய்ச்சி இடையிலேயே நின்று போகும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சித்த மருத்துவத்தில் சிறப்பான வர்ம மருத்துவம் தன் புகழை அடையவிடாமல் தடுக்கப்படுகிறது. ஆனால் அதே நேரம் வர்ம மருத்துவமானது ஆயுர்வேத மர்ம மருத்துவமாக ஆயுர்வேத மருத்துவத்தின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் சிறப்பு மையம் அமைக்க மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இது சித்த மருத்துவத்தின் தனித் திறமை வாய்ந்த வர்ம மருத்துவத்தை சித்த மருத்துவத்தில் இருந்து பிரித்து ஆயுர்வேத மருத்துவம் ஆக நிலைநிறுத்த செய்யும் சூழ்ச்சியாகும்.
https://main.ayush.gov.in/schemes-2/ayush-centre-of-excellence-ace-programme/

17. வெளிநாடுகளில் ஆயுர்வேதா இருக்கை அமைக்கப்பட்டு அதனை விரிவுபடுத்த முயற்சி நடந்து வருகிறது. ஆனால் எந்த ஒரு நாட்டிலும் சித்தமருத்துவ இருக்கை துவக்கப்படவில்லை. 13 நாடுகளில் ஆயுர்வேதம் மற்றும் யோகா இருக்கைகள் துவக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழர் அதிகம் வசிக்கும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில்கூட சித்தமருத்துவம் இருக்கை அமைக்கப்படவில்லை. வெளிநாடுகளில் சித்த மருத்துவ வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694455

18. மத்திய அரசின் கீழ் இயங்கும் சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் தினமும் 5000 முதல் 7500 நோயாளிகள் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். இந்த புற நோயாளிகளின் எண்ணிக்கை மத்திய அரசின் ஆயுர்வேதா யுனானி ஹோமியோபதி மற்றும் யோகா தேசிய நிறுவனங்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம். மத்திய சித்தா ரிசர்ச் கவுன்ஸில் புதிய பிராந்திய மற்றும் பிற மாநில சித்த ஆராய்ச்சி மையங்கள் நிறுவ போதுமான நிதி ஒதுக்கப் படுவதில்லை. மத்திய சித்தா ஆராய்ச்சி மையத்திற்கு 35.3 கோடிகளும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு 47.5 கோடிகளும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் இதற்கு இணையான ஆயுர்வேதா யுனானி ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நிறுவனங்களுக்கு இதைவிட இரண்டு மற்றும் மூன்று மடங்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்வேறு ஆயுர்வேத நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன அவற்றுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சித்த மருத்துவத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை.
https://cdn.ayush.gov.in/wp-content/uploads/2021/09/Point-No.-16.pdf

19. பாராளுமன்ற கட்டிடத்தில் சித்த மருத்துவத்தைத் தவிர அனைத்து இந்திய மருத்துவ முறை மருத்துவர்களும் பணி புரிகின்றனர். சித்த மருத்துவம் வேண்டும் என்றே தவிர்க்க படுகிறது.

நாம் என்ன செய்யப்போகிறோம்?

சித்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் சங்கம், மதுரை”

வட அமெரிக்காவில் சித்த மருத்துவத்தைப் பரப்பிய சித்த மரு.செல்வ சண்முகத்துடனான நேர்காணலை இக்கட்டுரையுடன் இணைத்துப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here