இதுதான் இன்றைய இந்தியா!

தமிழா நீ இந்துவா? உரக்க குரல் எழுப்புவோம்!


சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு, அதாவது பிறப்பால் பார்ப்பனர் அல்லாதவர்கள் பாடுவதற்கு தடைவிதித்து கொட்டமடித்து வருகின்றனர் தீட்சிதர் பார்ப்பனர்கள்.

அதேபோல அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூக நீதி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்ட பார்ப்பனர் அல்லாதவர்கள் கருவறைக்குள் நுழைந்து பூசை செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது.

திருச்சி அருகில் உள்ள குமாரவயலூர் முருகன் கோவில் அரசாணையை அமல்படுத்த சென்ற பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் தமிழில் வழிபடுவதற்கு எதிராக சிவாச்சாரியார்கள் என்ற பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20 நூற்றாண்டுகள் வரை பழக்கவழக்கம் என்ற பெயரிலும் ஆகமங்கள் என்ற பெயரிலும் கோவில்களில் வழிபடும் உரிமையை ஒவ்வொரு சாதிக்கும், ஒவ்வொரு இடம் என்று தடுத்து ஆதிக்கம் புரிந்து வந்த பார்ப்பனர்கள் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக கோவிலுக்குள் பிற சாதியினரை அனுமதிக்கின்றனர்.

படிக்க:

♦  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – தோழர் வாஞ்சிநாதன் பேட்டி

  ஆகம விதிகள் எனும் பார்ப்பன புரட்டு!

அதுவும் பார்ப்பனரல்லாத பக்தர்களின் வருவாய் உண்டியல் மூலமும் தட்டு காசு மூலமும் கொட்டுகிறது என்பதால் ஆகமங்கள் என்ற “செப்படி வித்தை” கடைபிடிக்கப்படுவதில்லை.

இந்தப் பார்ப்பனர்கள் ஆகம விதிகளை கரைத்துக் குடித்தவர்கள் போல பித்தலாட்டம் புரிவதை நீதிபதி மகாராஜன் கமிட்டி ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது.

ஆகம விதிகளின் படி தலைமுடி குறைவாக உள்ள வழுக்கை தலை உடையவர்கள், சொத்தைப்பல் உள்ளிட்ட பல் விழுந்த நபர்கள், இயற்கையாக உடலில் ஏற்பட்ட குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் என்று யாரும் அர்ச்சகர்களாக பணி செய்ய முடியாது.

ஒவ்வொரு ஆகமத்தையும் எடுத்துப்பார்த்தால் தற்போது மணி அடிக்கும் பார்ப்பனர்கள் யாரும் இந்த வேலைக்கு லாயக்கற்றவர்கள் ஆகிவிடுவார்கள்.

கருவறைக்குள் எலக்ட்ரானிக் கருவிகளின் மூலம் ஒலிக்கும் சமஸ்கிருத மந்திரங்கள் துவங்கி நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள ஒளி விளக்குகள், மின்சார மேள வாத்தியங்கள், அனைத்திற்கும் மேலாக ஏசி வசதி போன்றவை அனைத்தும் எந்த ஆகமத்தின் கீழ் வருகிறது என்பதற்கு இதுவரை நேர்மையான பதில் கிடையாது.

இருபது நூற்றாண்டுகளாக சாதியின் பெயரால் கருவறைக்குள் சென்று வழிபடும் உரிமை மறுக்கப்பட்ட மக்கள் தற்போது போராடிப் பெற்ற உரிமைகள் பயனாக கருவறைக்குள் சென்று பூசை செய்ய முன்வந்தால் கருவறைக்கு வெளியில் நிற்கும் பெருச்சாளிகள், நந்திகள் போல பார்ப்பன கும்பல் தடுக்கிறது.

இந்து மதம் என்பதே படிநிலை சாதி அமைப்பு முறையை கடுமையாக பின்பற்றுகின்ற இயல்பிலேயே சமத்துவத்தை  மறுக்கின்ற, ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு நீதி என்ற சட்டங்களும், ஒவ்வொரு குலத்திற்கும் உரிய தனித்தனி சடங்குகள், அதற்குரிய நடைமுறைகளை வலியுறுத்தும் அமைப்பாகும்..

வேதத்தின் அடிப்படையிலும், ஆகமங்களில் அடிப்படையிலும் படிநிலையில் உச்சியிலுள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே கருவறைக்குள் செல்லும் உரிமை பிறப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து நமது முகத்தில் அறைந்து புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர்கள்.

ஆனால் நம்மையும் அறியாமல் கடவுளை மறுப்பவர்கள் உள்ளிட்ட அனைவரையும் “இந்து” என்ற கட்டுக்குள் அடக்கப் பார்க்கிறார்கள்.

“தமிழா நீ இந்துவா? தமிழர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும், தமிழை நீசபாசை என்றும் இழிவு படுத்தும் பார்ப்பன இந்து மதத்தில் உனக்கென்ன வேலை?” என்ற முழக்கத்தை ஓங்கி ஒலிக்கச் செய்வோம்!

  • இரா.கபிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here