ண்மையில் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பட்டியல் பிரிவு மக்களுக்கான (எஸ்சி, எஸ்டி) இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 2009 – ல் பட்டியல் சாதியினரில் மிகவும் பின்தங்கிய அருந்ததியர் சமூகத்துக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டமியற்றியது.

அதை எதிர்த்து புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன் பிறகு பல்வேறு வழக்குகள், மேல்முறையீடுகள் என இவ்விவகாரம் பயணித்து இறுதியாக அந்த சட்டம் செல்லும் என தீர்ப்பு கிடைத்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இதை வரவேற்றுள்ளனர்.

சமூக ரீதியாக இன்றும் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே உள்ள தலித் மற்றும் ஆதிவாசி பிரிவினரிடையேயும் இந்தத் தீர்ப்பு வரவேற்பை பெற்றுள்ளது. அரசின் வேலை வாய்ப்புகளிலும் கல்வி நிறுவனங்களிலும் பட்டியல் மற்றும் பழங்குடியினரில் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு தனி ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் விதமாக இது நிச்சயம் அமையும். 

இது குறித்து டெல்லியின் மனித மேம்பாட்டு கல்வி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியரான வர்ஜினியஸ் சாக்சா,  பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகிய பிரிவுகளுக்கான இடஒதுக்கீடு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை நிவர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டதே தவிர பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலைக்காக அல்ல என்று தெளிவுபடுத்துகிறார்.   

ஓரான் எனும் ஆதிவாசி சமூகத்தை சார்ந்தவரான அவர் பழங்குடியினரின் விவகாரங்களில் இந்தியாவிலேயே முன்னணி நிபுணர்களில் ஒருவராக உள்ளார். இவர் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு என்பது தீண்டாமையின் தவறுகளை நிவர்த்தி செய்வதற்கானதாகும் என்றும், தலித் மற்றும் பழங்குடி சமூகங்களின் மீது மாபெரும் இந்திய சமுதாயம் மற்றும் அரசினால் இன்றுவரை தொடரும் ஒடுக்கு முறையின் நீண்ட வரலாற்றையும், உறவையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். 

பிரதிநிதித்துவம் இல்லாமல் பாதிக்கப்பட்ட பிரிவினர்!

கர்நாடகாவில் உள்ள மடிகா என்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளரான அம்பன்னா அரோலிகர், “இந்த உத்தரவுக்காக நாங்கள் 30 ஆண்டுகள் காத்திருந்தோம். கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த மடிகா சமூகத் தலைவர்கள் மற்ற தலித் சமூகங்களான ஹோலியா மற்றும் மாலாக்கள் பட்டியல் பிரிவு இட ஒதுக்கீட்டின் சலுகைகளைப் பெற்று வந்ததாக குற்றம் சாட்டி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பிரிவினரில் சிலர் சிறப்பாக செயல்பட்டாலும், பெரும்பாலும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர்” என்றார்.  

இதேபோல ஜார்க்கண்டின் அசுர் சமூகத்தை சேர்ந்த கவிஞரான சுஷ்மா அசுர், மாநிலத்தில் உள்ள 42 பழங்குடியினரில் சந்தால், முண்டா, ஓரோன் மற்றும் ஹோ போன்ற எண்ணிக்கையில் பெரிய சமூகங்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்று வருகின்றனர். அசுர் போன்ற பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் இன்னும் பின்தங்கியே உள்ளனர் எனக் குறிப்பிடுகிறார். 

மேலும் “எங்களது மக்களுக்கு இலவச ரேஷன் மட்டும் வழங்கப்பட்டு, அடக்கி ஒடுக்கி வைக்கப்படுகிறோம். பல அசுர் மாணவர்கள் பள்ளிப் படிப்பு அல்லது பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் உள்ளனர். இப்போது முறையான கணக்கெடுப்பும், துணை வகைப்பாடும் செய்து உரிய ஒதுக்கீடு கிடைக்கும் என நம்புகிறேன்” என்கிறார். 

பீகாரிலும் 22 தலித் சமூகத்தவரில் 4 அல்லது 5 சமூகங்கள் மட்டுமே பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். 

பட்டியல் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்துமா? 

சிலர் இந்தத் தீர்ப்பு பட்டியல் சமூகத்தினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் என வாதிடுகின்றனர்.  மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியரான பிரபாகர் நிசர்காந்த், சில தலித் பிரிவினர் நேர்மையற்ற முறையில் இட ஒதுக்கீட்டால் பயனடைந்ததாகக் கூறி தலித் சமூகத்துக்குள் பிளவை உருவாக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்கிறார். 

இதே போன்ற குற்றச்சாட்டை அரசியல் தலைவர்களில் சிலரும் வைத்துள்ளனர். குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, பகுஜன் அகாடியின் பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் ஆம் ஆத்மியின் ராஜேந்திர பால் கௌதம் போன்ற தலைவர்கள் தீர்ப்பை விமர்சித்துள்ளனர். இவர்கள் அனைவருமே தலித் சமூகத்தில் உள்ள ஆதிக்கப் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். மாயாவதியும், ராஜேந்திர பாலும் ஜாதவ் சாதியையும், அம்பேத்கர் மஹர் சாதியையும் சேர்ந்தவர்கள். இந்த சாதியினர் தங்கள் மாநிலங்களில் உள்ள மற்ற தலித் சமூகத்தினரை விட கூடுதல் பிரதிநிதித்துவம் பெற்றவர்களாக உள்ளனர். 

தலித் சமூகங்களில் உள்ள வேறுபாடுகளை ஒப்புக்கொண்ட தேசிய தலித் மற்றும் ஆதிவாசி அமைப்புகளின் தலைவரான அசோக் பார்தி, தலித் மக்களிடையே மிகவும் பிற்படுத்தப்பட்ட குழுக்கள் உள்ளன.  அரசுகளின் தோல்வியே இதற்கு காரணமாக உள்ளது. அரசாங்கங்களின் தோல்விக்காக நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என கேள்வி எழுப்புகிறார். 

படிக்க:

♦ சம உரிமை ; இட ஒதுக்கீடு=பார்ப்பன மேலாதிக்கம்!

♦ இட ஒதுக்கீட்டை ‘பிச்சை’ என்று இழிவுபடுத்தும் பார்ப்பன திமிர்!

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் கூட்டமைப்பின் ஆர்வலரான சதீஷ் பிரகாஷ் இந்த உட்பிரிவு ஒதுக்கீடு என்பது அரசு வேலைகளில் தலித் மற்றும் ஆதிவாசி பிரதிநிதித்துவத்தை மேலும் குறைக்கும் என்கிறார். ஏற்கனவே ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏனெனில் தங்களுக்கு பொருத்தமான நபர்கள் கிடைக்கவில்லை என அரசாங்கங்கள் கூறுகின்றன என்று ஏற்கனவே இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பதால் உள் ஒதுக்கீடு மேலும் அதை மோசமாக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். எவ்வளவு உயர்ந்த சட்டமாயினும்‌ அதை அமல்படுத்தும் வரின் நோக்கமே அதன் விளைவை தீர்மானிக்கும். அது இட ஒதுக்கீடு கொள்கைக்கும் பொருந்தும் என்பதே வரலாறு.

தெளிவில்லாத அளவுகோல்கள்! 

பட்டியல் சாதிகளில் துணை வகைப்படுத்தலில் எத்தகைய அளவுகோல்களை கடைப்பிடிப்பது என்பதில் தெளிவில்லாததால், இதை செயல்படுத்துவது கடினமாகும். துணை வகைப்பாடு மக்கள் தொகை அடிப்படையிலா அல்லது வருமானம் அடிப்படையிலா? இந்த அளவுகோல்களை மாநில அரசுகள் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு கூறுகிறது. 

இது அதிக குழப்பம் மற்றும் பல்வேறு வழக்குகளுக்கு தான் வழிவகுக்கும். ஏனெனில் துணை வகைப்படுத்தலுக்கு எந்த அனுபவத் தரவுகளும் இல்லை. அது இல்லாத நிலையில், மாநில அரசுகள் நிர்ணயிக்கும் அளவுகோல்கள் தெளிவில்லாமல்தான் இருக்கும் என்று நிசர் காந்த் கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து, சில மாநில அரசுகள் தீர்ப்பை அமல்படுத்த போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டன.

அம்பேத்கர் அவர்களின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மட்டுமல்ல. ஓபிசிக்கள் மற்றும் பொதுப் பிரிவினரை சேர்ந்தவர்களும்தான்.  வரலாற்று ரீதியாக பின்தங்கிய பட்டியல் வகுப்பினர் மட்டுமே வகைப்படுத்தப்பட்டால் அது சமத்துவக் கொள்கையை மீறுவதாக அமையும். மேலும் அரசியல் அமைப்பின் 14 வது பிரிவின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான நீதியை வழங்காது என்று தெரிவித்துள்ளார்.

கொள்கை அளவில் இது சரியான தீர்ப்பாக இருப்பினும், இது சரியாக செயல்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால் அதிக பிரதிநிதித்துவம் கொண்ட தலித் மக்கள் ஒரு வேளை உள் ஒதுக்கீட்டை எதிர்க்கும் சூழலில் அரசியல் கட்சிகள் அத்தகைய சமூகத்தை பகைத்துக் கொள்ளாது என்பதே யதார்த்தம். மறுகாலனியாக்க கொள்கை ஏற்கனவே இட ஒதுக்கீடு அமலாக்கத்தை பெரும்பின்னடைவுக்குத் தள்ளிவிட்டது.

இந்த சூழலில் ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக மேற்கொண்டு, அதன் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்வதே தற்காலிக தீர்வாக அமையும். மறுகாலனியாக்க கொள்கை‌யை தீவிரமாக அமல்படுத்தும்‌ கார்ப்பரேட்- காவிப் பாசிசத்தை வீழ்த்துவதே நிரந்தரமான தீர்வை நோக்கி முன்னேறச் செய்யும்.

  • குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here