
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகத்துறை, ஆட்சியாளர்களால் அவ்வப்போது நெருக்கடிக்கு ஆளாவது உலகெங்கும் நடக்கும் நிகழ்வுதான். எனினும் சமீப காலங்களில் பல்வேறு நாடுகளில் பாசிசம் தலை தூக்கி வரும் நிலையில், அதிகாரத்தில் அமர்ந்துள்ள அத்தகைய பாசிச சக்திகளின் அதிகார அத்துமீறல்களை, ஊழல் முறைகேடுகளை மக்களுக்கு அம்பலப்படுத்தி காட்டுவதே ஊடகத்துறைக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் நடந்துள்ள அத்தகைய அடக்குமுறைகள் சிலவற்றை பார்ப்போம். கர்நாடகாவின் செய்தி இணையதளமான “தி ஃபைல்” தனது யூடியுப் சேனலை கடந்த டிசம்பர் மாதம் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.1500 க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்து, கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் இந்த வீடியோக்களை பார்த்துள்ள நிலையில், அதன் நிறுவனரும் ஆசிரியருமான மூத்தப் புலனாய்வு பத்திரிகையாளர் மகந்தேஷ், “வருமான வரித்துறையின் மூலமாக எங்களது இணையத்தின் இலாப நோக்கமற்ற நிலை (Non profit status) என்பது ரத்து செய்யப்பட்ட பிறகு, என்னால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது” என்கிறார்.
“ஒரு டிரஸ்ட் எனும் நிலையில், வருமான வரியில் இருந்து பிரிவு 12 A விலக்கு அளித்திருந்தது. அதை ரத்து செய்தும், நன்கொடைகளுக்கு விலக்கு அளிக்கும் பிரிவு 80 G பொருந்தாது எனவும் கூறிவிட்டனர். எமது இணையதளமானது வணிகம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்தது என முத்திரை குத்தி விட்டனர். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது” எனக் கொந்தளிக்கிறார்.
படிக்க:
🔰 இந்தியாவில் பல்லிளிக்கும் பத்திரிக்கை சுதந்திரம்!
🔰 நியூஸ் க்ளிக் மீது பாசிச பாஜகவின் தாக்குதல்! கல்லறை கட்டப்படும் பத்திரிக்கை சுதந்திரம்!
“நாங்கள் அரசினுடைய மக்களுக்கான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, கிடைக்கும் தகவல்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கிறோம். நன்கொடைகள் மூலம் மட்டுமே இணையத்தை நடத்தி வருகிறோம். இதில் குறைந்தபட்சம் கூகுள் உள்ளிட்ட எந்த வணிக விளம்பரத்தையும் செய்வதில்லை” என்று விளக்கமளிக்கிறார். வருமான வரித்துறையின் இந்த அநீதியான நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்திருப்பதாகவும், அதன் விசாரணை எப்போது தொடங்கும் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இந்த இணையதளம் வெளியிட்ட மிக முக்கியமான கட்டுரைகள் முந்தைய கர்நாடக பாஜக அரசுக்கு கடுமையான நெருக்கடிகளை உருவாக்கின. அதிலும் குறிப்பாக அப்போது ஆர்எஸ்எஸ்-க்கு அடிமாட்டு விலையில் அரசின் நிலத்தை ஒதுக்கீடு செய்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. மேலும் கோவிட் தொற்று காலத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய முதல்வருமான சீத்தாராமையா, பாஜக அரசின் செலவின முறைகேடுகளை அம்பலப்படுத்த ஃபைலின் கட்டுரைகளை பயன்படுத்திக் கொண்டார். இந்த செய்தி நிறுவனம் இதுவரை பெற்ற நன்கொடைகள் போன்ற வருமானங்களுக்கும் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றை கட்ட வேண்டும் என வருமான வரித்துறை சொன்னதுதான் கொடுமையிலும் கொடுமை.
இதே போன்ற நெருக்கடியை வருமான வரித்துறையின் மூலம் சந்தித்த இன்னொரு இணையப் பத்திரிகை “ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” ஆகும். அதன் செய்தி ஆசிரியர் ஜனவரி 28, 2025 – ல் வெளியிட்ட அறிக்கையில், “வருமான வரித்துறை எங்களது இலாப நோக்கமற்ற நிலையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நாட்டில் சுதந்திரமான, பொதுநோக்குள்ள ஊடக வெளியீட்டு உரிமைகளை இது தடுக்கிறது. நாங்கள் செய்து வந்த வேலையை இது கடுமையாக பாதிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக ‘உத்தமர்களுக்கு’ உண்மை சுடத்தானே செய்யும்!
பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு 2015-ல் அன்றைய ஒன்றிய அமைச்சர் விஜய்குமார் பத்திரிகையாளர்களை “பிரஸ்டிடியூட்” எனக் கொச்சைப்படுத்தினார். அப்போதிலிருந்து இந்தியாவில் பெரும்பாலும் நன்கொடைகள் மூலம் செயல்படும் சிறிய, ஆனால் உறுதியான இணைய ஊடகங்கள் அரசால் கடுமையாக ஒடுக்கப்படுவது தொடர்கிறது.
இத்தகைய ஊடகங்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் தொடரப்படுவதும், செய்தி ஆசிரியர்கள் சிறைப்படுத்தப்படுவதும் வழமையாக உள்ளது. இந்தியா முழுவதும் சுதந்திரமான ஊடக உரிமைக்காக குரல் கொடுக்கும் ஊடக அறக்கட்டளையான IPSMF மீதும் வருமான வரிச் சோதனை, கைது, சிறைவாசம் என இடைவிடாமல் அராஜகங்கள் தொடர்கின்றன.
உண்மை சரிபார்க்கும் (Fact check) இணையதளமான Altnews, பாஜக பரப்பி வந்த பல பொய்த் தகவல்களை அம்பலப்படுத்தியதால், அதன் மீது வெளிநாட்டிலிருந்து முறைகேடாக நிதி பெற்றதாக 2022 – ல் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. கேரளப் பத்திரிகையாளர் சித்திக்காப்பன் UAPA மற்றும் PMLA சட்டங்கள் ஏவப்பட்டு 846 நாட்களுக்குப் பின்னரே பிணையில் வெளியில் வந்தார்.
படிக்க:
🔰 நியூஸ் க்ளிக் மீது பாசிச பாஜகவின் தாக்குதல்! கல்லறை கட்டப்படும் பத்திரிக்கை சுதந்திரம்!
🔰 உத்திரப் பிரதேசத்தில் வேட்டையாடப்படும் பத்திரிக்கையாளர்கள்!
நியூஸ் கிளிக் இணையப் பத்திரிகை 2021 முதல் பல்வேறு தருணங்களில் டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை போன்றவற்றின் மூலம் அலுவலகம் மற்றும் ஊழியர்களின் வீடுகள் போன்றவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன. சீனாவின் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக நிதி பெற்றதாக பொய்க் குற்றம் சாட்டி பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நியூஸ் க்ளிக்-ன் நிறுவனரும் ஆசிரியருமான 74 வயதான பிரபீர் புர்காயஸ்தா யுஏபிஏ வின் கீழ் கைது செய்யப்பட்டு 225 நாட்கள் பிணை மறுக்கப்பட்டு சிறையில் இருந்தார். 2023 இறுதியில் நியூஸ் கிளிக்கின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால், ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியவில்லை. இப்படி ஒரு கொடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உண்மையின் பக்கம் நிற்கும் பத்திரிகையாளர்களை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தளர்வுறச் செய்கிறது இந்த பாசிச பாஜக அரசு.
அரசை விமர்சித்தால் அடக்குமுறை பாயும்!
கோவிட் தொற்று நோயை மோடி அரசாங்கம் தவறாகக் கையாள்வது குறித்த தொடர் கட்டுரைகளை வெளியிட்ட ஹிந்தி நாளிதழான “டைனிக் பாஸ்கர்” வருமான வரிச் சோதனைகளை எதிர்கொண்டது. குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நிகழ்த்தப்பட்ட இஸ்லாமிய இனப்படுகொலையில் மோடியின் பங்கு குறித்த ஆவணப் படத்தை வெளியிட்ட BBC நிறுவனம் மீதும் இதே போன்ற வருமான வரிச் சோதனை தொடுக்கப்பட்டது.
2020 – ல் காஷ்மீரத்தின் மிகப் பழமையான செய்தித்தாள்களில் ஒன்றான “காஷ்மீர் டைம்ஸ்” மாநில அரசால் வழங்கப்பட்ட வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. பெங்களூரில் நியூஸ் மினிட் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 2019-ல் NDTV நிறுவனர்கள் பிரணாய் மற்றும் ராதிகா ராய் மும்பை விமான நிலையத்தில் சர்வதேச விமானத்தில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இம்மாதம் 16ஆம் தேதி மோடி குறித்த கார்ட்டூன் வெளியிட்டதற்காக விகடன் குழுமத்தின் இணையதளம் முடக்கப்பட்டது.
அதானி குழுமத்தின் ஊழல் வணிக சாம்ராஜ்யத்தைப் பற்றி 2015 முதலே விரிவாக எழுதி வரும் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பரஞ்சோய் குஹா, இன்றைய ஆட்சி சகிப்புத்தன்மையற்றது மட்டுமல்ல, பழிவாங்கும் வகையில் செயல்படுகிறது என்கிறார். தி ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ்- க்கு எதிரான நடவடிக்கை பற்றி குறிப்பிடும் அவர், தேர்தல் பத்திர முறைகேடுகள் பற்றியும், மணிப்பூர் வன்முறைகள் குறித்தும் புலனாய்வு செய்து அவர்கள் செய்தி வெளியிட்டனர்.
அரசாங்கத்தின் மோசமான செயல்பாடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தியதால் அவர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர். எனவேதான் சட்ட அமைப்புகளான CBI,, ED, IT போன்ற அனைத்தையும் அவர்கள் மீது ஏவி விட்டுள்ளனர். இது போன்ற சுதந்திர செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து அரசின் தாக்குதல் இலக்காகவே உள்ளன என்கிறார்.
உலக அளவில் நெருக்கடிக்கு உள்ளாகும் ஊடக சுதந்திரம்!
இந்தியாவில் மட்டும்தான் ஊடகங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறதா என்றால், அதுதான் இல்லை. உலகின் பல நாடுகளிலும் இது ஒரு போக்காக மாறி வருகிறது. மே 2023 – ல் நியூயார்க்கில் நடந்த ஐநா சபையின் நிகழ்வில் இப்போது மூடுவிழா காணும் US Aid-ன் நிர்வாகி சமந்தா பவர்ஸ், உலகில் எங்கிருந்தாலும் சட்டரீதியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு உதவும் வகையில் ரிப்போர்ட்டர்ஸ் ஷீல்டு எனும் திட்டத்தை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வழக்கறிஞர் குழுவான ஃப்ரீடம் ஹவுஸ் தனது அறிக்கையில், 1973 முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்ட அரசியல் மற்றும் மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய போக்குகள் குறித்த ஆய்வில் 2022 ஆம் ஆண்டில் குறைந்தது 157 நாடுகளில் ஊடக சுதந்திரம் நெருக்கடியை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்த அமைப்பு நாஜி ஜெர்மனிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டவும், ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 1941 – ல் ஏற்படுத்தப்பட்டது.
கடந்த 17 ஆண்டுகளில் ஊடக சுதந்திரக் குறியீட்டில் ஜீரோ மதிப்பெண் பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 14 இல் இருந்து 33 ஆக உயர்ந்துள்ளது என்பதை குறிப்பிடுகிறது. உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க ஜனநாயக நாடுகளில் கூட ஜனரஞ்சகத் தலைவர்கள் பத்திரிகை சுதந்திரத்தை தடுப்பதாக குற்றம் சாட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 19 சதவீத நாடுகளில் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
ஊடகத்துறை என்பது பொதுசேவையா அல்லது வியாபார சந்தையா?
இந்தியாவில் மார்ச் 2024 நிலவரப்படி 922 தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் பதிவு செய்துள்ளன. 20,821 செய்தித்தாள்கள் உட்பட பதிவு செய்யப்பட்ட அச்சு வெளியீடுகள் 1,46,045 உள்ளன. மீடியா துறையில் ரிலையன்ஸ் 20 ஆண்டுகளாகத்தான் இயங்கி வருகிறது. 2012 – ல் நெட்வொர்க் 18 உடன் ஒப்பந்தம் போட்ட அடுத்த ஐந்து ஆண்டுகளில் 72 தொலைக்காட்சி சேனல்களை தன்வசமாக்கியது. அதன் தலைவர் முகேஷ் அம்பானி, “நாங்கள் 800 மில்லியன் இந்தியர்களை சென்றடைகிறோம்” எனப் பேசியுள்ளார். அப்படிப் பார்க்கையில் கிட்டத்தட்ட 95 சதவீத தொலைக்காட்சி பார்வையாளர்களை ரிலையன்ஸ் எனும் கார்ப்பரேட் நிறுவனம் சென்றடைகிறது.
அதானி குழுமம் 2021- ல் தான் ஊடக வணிகத்துறைக்குள் நுழைந்தது. தி குயின்ட் மற்றும் ndtv ஆகிய ஊடக நிறுவனங்கள், மோடி அரசின் ஆதரவால் மிரட்டி பணிய வைக்கப்பட்டு அதானி குழுமத்தின் வசமாயின. ரிலையன்ஸுக்கு போட்டியாக ஊடக சாம்ராஜ்யத்தை நிறுவும் நோக்கத்துக்காகவும், மோடி அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த அந்த நிறுவனங்களின் குரலை ஒடுக்கும் விதமாகவும்தான் இந்த காரியம் அரங்கேறியது.
ஒரு மதிப்பீட்டின்படி 2026 – ல் உலகின் ஐந்தாவது பெரிய தொலைக்காட்சி விளம்பர சந்தையாக இந்தியா இருக்கும் எனத் தெரிகிறது. இந்த சந்தையை இரு பெரும் கார்ப்பரேட் முதலைகள் தன் வசமாக்கியுள்ளன.
பொதுநலன் சார்ந்த ஊடகத் துறையை பாதுகாப்பது எப்படி?
2022 – ல் யுனெஸ்கோ வெளியிட்ட பொதுமக்களுக்கான பத்திரிகைத்துறை – கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக மேம்பாட்டில் உலகப் போக்குகள் எனும் அறிக்கையில், அரசியல் மற்றும் அதிகாரத்துவ தலையீடு இல்லாமல் பத்திரிகைத் துறையை பொதுமக்கள் நலனுக்கானதாக செயல் படுத்துவதற்கு சாத்தியமான சூழலை எப்படி உருவாக்குவது என்பதை பற்றி ஆராய்ந்தது. ஊடகங்களின் பன்முகத்தன்மை பெருகிவரும் அதே நேரத்தில் பொருளாதார சவால்கள் பத்திரிகையை நீடித்து செயல்பட விடாமல் முடக்குகிறது என்பதைக் கண்டறிந்தது. எனவே பொது சேவை நோக்கோடு செயல்படும் பத்திரிகைகளுக்கு பொதுமக்களிடமிருந்து முதலீடுகள் தேவைப்படுகிறது என அறிக்கை கூறியது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு லாப நோக்கமற்ற செய்தி நிறுவனத்தின் (INN) தகவல் தொடர்பு இயக்குனரான ஷரீன் அஸ்மி, “அதிபர் டிரம்ப் தன்னை கோபப்படுத்திய செய்தி நிறுவனங்களை பழிவாங்கப் போவதாக தெரிவித்தார். டிரம்ப் பொறுப்பேற்று சில வாரங்கள் ஆகிய நிலையில் செய்தி நிறுவனங்கள் மீதான அவதூறு வழக்குகள், அவர்களது நிருபர்களை அச்சுறுத்துவது ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டி வரும் எனக் கவலையை வெளிப்படுத்துகின்றன. உலகெங்கிலும் உள்ள 475 க்கும் மேற்பட்ட சுயேச்சையான செய்தி நிறுவனங்களை INN ஆதரிக்கிறது. அவற்றிற்கு சட்ட ரீதியாகவோ, வேறு வகையிலோ ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளுக்கு உதவும் வகையில் ஆன்லைன் பாதுகாப்பு மையத்தை உருவாக்கியுள்ளோம்” எனத் தெரிவிக்கிறார்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் வெளியீட்டாளரான சுல்ஸ்பெர்கர், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் அமைதியாக போர் தொடுக்கும் என வாஷிங்டன் போஸ்ட் முன்னறிவித்ததை சுட்டிக்காட்டுகிறார். அவர் தனது சகாக்களுடன் சேர்ந்து பல மாதங்களாக இந்தியா, ஹங்கேரி மற்றும் பிரேசில் போன்ற ‘ஜனநாயக’ நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் எப்படி நசுக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதாக குறிப்பிடுகிறார்.
பொதுமக்களின் முதலீடு தேவைப்படுகிற பொதுநலனுக்கான இதழியல் என்ற கருத்தை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிஸ்ட் தெரிவித்துள்ளார். மேலும் “சிறப்பான ஊடகத்தை உருவாக்குவது காலத்தின் மிக முக்கிய சவால்களில் ஒன்று. ஆனால் அதை செய்யத் தவறினால் நமது ஜனநாயகம், நமது பொருளாதாரம் மற்றும் நமது சமூகங்களுக்கு பெரிய கேடான விளைவுகள் ஏற்படும்” என்றும் குறிப்பிடுகிறார்.
பொதுமக்கள் நலனிலும், நாட்டு நலனிலும் அக்கறை கொண்ட ஊடகங்கள் நிதி நெருக்கடியால் தொடர்ந்து இயங்க முடியாமல் தடுமாறுவது உண்மைதான் எனினும், அரசின் அடக்குமுறை தான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. உலகெங்கிலும் இத்தகைய ஊடகங்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், ஆட்சியாளர்களின் அராஜகங்களுக்கு எதிராகப் பொதும
க்கள் கிளர்ந்தெழுந்தால்தான் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
- குரு