நாள் 10-6-2022
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

அன்பார்ந்த தோழமை சக்திகளுக்கு எமது அமைப்பின் சார்பில் ஒரு வேண்டுகோள்!

மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற சிலர் மக்கள் அதிகாரம் என்ற பெயரில் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். இந்த நிலை தொடர்வதால் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. கூட்டு இயக்கங்களில் இருவரையும் அழைத்து ஒன்றாக பெயர் போடுவது இன்னும் குழப்பத்தை அதிகரிக்கிறது. எனவே அதை தவிர்க்கும் பொருட்டு கூட்டமைப்பில் இருவரும் ஒன்றாக பங்கேற்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் தோழர் வெற்றிவேல் செழியன் தரப்பினரையோ, அல்லது வேறு சிலரோ இதே பெயரில் இயங்குவதை அங்கீகரித்து அழைப்பது பற்றி தாங்கள் பரிசீலிக்க வேண்டும் என கோருகிறோம்.

இது குறித்து சில விபரங்களை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்,

மக்கள் அதிகாரம் பெயரில் இயங்கும் எமது அமைப்பு “குறிப்பிட்ட தருணத்தில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்கை சரியாக அவதானித்து அதை எதிர்த்து முறியடிக்கும் வகையில் மக்களை அணிதிரட்டும் வகையில் ஒன்றுபட்ட அரசியல் தலைமையால் வழக்கறிஞர் சி.ராஜு மாநில ஒருங்கிணைப்பாளராக, தோழர் காளியப்பன் பொருளாளராக மேலும் சில தோழர்களை உள்ளடக்கி மாநில ஒருங்கிணைப்பு குழுவாக 2015-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. போராடி வருகின்ற பல்வேறு தரப்பு வர்க்க பிரிவு மக்களையும் பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைத்து ஈடுபடுத்தும் நோக்கத்தில் மக்கள் அதிகாரம் உருவாக்கப்பட்டது.

அன்றைக்கு ஒருங்கிணைப்பு குழுவில் ஒருவராக இருந்த தோழர் வெற்றிவேல் தரப்பினர் இந்த நோக்கத்திலிருந்து மாறியதுடன், 2015ஆம் ஆண்டு துவக்கபட்டபோது, “குறிப்பான தருணத்தில் நாட்டின் பிரதான அபாயத்தை எதிர்த்து முறியடிப்பதை நோக்கமாக கொண்டு புதிய ஜனநாயக புரட்சிக்கு இடையில் ஓர் அதிகார அமைப்பாக” மக்கள் அதிகாரம் செயல்படும் என தீர்மானிக்கப்பட்டதை தற்போது மறுத்து விட்டனர். மீண்டும் புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு என்கின்றனர். கொடியில் இருந்த கருப்பு கலர் கையினை இடது பக்கம் திருப்பியதுடன், வெள்ளை நிறத்திற்கு மாற்றி உள்ளனர். அதற்கு “வலது திசை விலகலை அடையாளபடுத்தும் விதமாக கை வலது புறம் இருப்பதை இடது புறமாக திருப்புகிறோம் என்றதுடன் ஒற்றுமையின் அடையாளம் கருப்பு அல்ல, எனவே வெள்ளையாக மாற்றுகிறோம் என சித்தாந்த விளக்கம் அளித்தனர். மக்கள் அதிகார கொள்கையை ஆதரிப்பவர்கள் அனைவரும் உறுப்பினராகலாம் நிர்வாகியாக வரலாம் என்பதை சுருக்கி கம்யூனிச கொள்கையை ஆதரிப்பவர்கள் மட்டும் என மாற்றி புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுக்கும் அமைப்பாக மாற்றிக்கொண்டனர், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு முதற்கட்டமாக மக்கள் அதிகாரம் என்ற முழக்கத்தை அமைப்பாக கொண்டு செயல்படுகின்ற எமது மக்கள் அதிகாரம் பெயரை புதிய ஜனநாயகப் புரட்சிதான் மக்கள் அதிகாரத்தின் இலக்கு என அறிவித்துக் கொண்ட பிறகும் மக்கள் அதிகாரம் என்ற பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளாதது அறிவு நாணயமற்றது உள்நோக்கம் கொண்டது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.

மேலும்,பாசிசத்தை வீழ்த்துவதற்கு தோழர் டிமிட்ரோவ் முன் வைத்த ஐக்கிய முன்னணி தற்போதைக்கு சாத்தியம் இல்லை. புதிய ஜனநாயகப்புரட்சியே பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழி என்று கொள்கை முடிவெடுத்து புதிதாக கொள்கை அறிக்கையும் நிறைவேற்றிய பிறகு அமைப்பு பெயரை மட்டும் மாற்றாமல் இருப்பது நேர்மையற்ற செயலாகும்.

மக்கள் அதிகாரத்தின் அரசியல் தலைமை 2020-ஆம் ஆண்டு தனது ஜனநாயக விரோத அதிகாரத்துவ தன்மையினால் ஏற்பட்ட தவறுகளை மறைப்பதற்கு ஒன்றுபட்ட மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்புக்குழுவில் மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில பொருளாளர் உட்பட பெரும்பான்மையினரை புறக்கணித்து ஒரு சில தோழர்களை ரகசியமாக கூட்டி அனைவரையும் நீக்கி விட்டதாக அறிவித்தனர். அமைப்பின் ஜனநாயக வழிமுறைகளை துச்சமாக தூக்கி எறிந்து எந்த விவாதமும் இன்றி தலைமையின் அதிகாரத்தை கேள்வி எழுப்பிய மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு தோழர்களை அவதூறு செய்து தமக்கு சாதகமான ஒரு சிலரை அழைத்துக்கொண்டு அமைப்பை பிளவுபடுத்தியது. தலைமைக்குழுவில் இருந்த வெற்றிவேல் செழியனும் சில தோழர்களும் அமைப்பை பிளவுபடுத்தி வெளியேறிய பிறகு புதிய பெயர் வைத்து இயங்காமல் பெரும்பான்மை தோழர்கள் உள்ள எமது மக்கள் அதிகாரம் அமைப்பு பெயரை பயன்படுத்தும் செயலையும் கண்டிக்கிறோம்.

பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுக்குழு கூடி 80 % தோழர்கள் பங்கேற்க வெற்றிவேல்செழியன் தரப்பிலான சிறுபான்மை தோழர்கள் ரகசியமாக எடுத்த முடிவை நிராகரித்து தற்போது தோழர் ராஜு தலைமையிலான மக்கள் அதிகாரத்தை உறுதி செய்தது. கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்! என்ற இலக்கை அடைவது என கொள்கை உருவாக்கி நிறைவேற்றியதுடன், மாநில அமைப்பு மாநாடு, மாநில அரசியல் மாநாடு, புதிய நிர்வாகிகள் தேர்வு என தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

படிக்க 

மக்கள் அதிகாரத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட மூடு டாஸ்மாக், ஆற்று மணல் கொள்ளை, காவிரி உரிமையை மீட்பதற்கான நடைபயணம், நீதிதுறை பாசிசத்திற்கு எதிரான போராட்டங்கள், கார்ப்பரேட்-காவி பாசிசத்தை எதிர்த்து நடத்தப்பட்ட பெரும் மக்கள் திரள் மாநாடுகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் எமது மக்கள் அதிகார அமைப்பின் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறைகள், வழக்குகள் போன்ற அனைத்திலும் எமது அமைப்புடன் தோளோடு தோள் நின்று ஆதரவு கொடுத்தீர்கள். தொடர்ந்து தங்கள் அமைப்போடு இணைந்து இயங்க விரும்புகிறோம். பாசிசத்தை வீழ்த்த பரந்த ஐக்கிய முன்னணி தேவை அதை உருவாக்க வேண்டும் என்பதில் முழு உறுதியோடு செயல்பட விரும்புகிறோம். ஆனால் கூட்டு இயக்கங்களில் ஒரே பெயரில் இரு அமைப்புகள் என்பது தொடருவது தவிர்க்க வேண்டும் என கருதுகிறோம். எனவே இது குறித்து தாங்கள் ஜனநாயக அடிப்படையில் பரிசீலியுங்கள் என கோருகிறோம். அது மட்டுமல்ல எமது அமைப்பிற்கும், வெற்றிவேல் செழியன் தரப்பினருக்கும் நடைமுறையில் பொது எதிரிக்கு எதிரான கொள்கையிலும், முழக்கங்களிலும் தேர்தல் முறையை அணுகுவதிலும் பாரிய வேறுபாடு இருக்கிறது.

ஜனநாயக மத்தியத்துவம் என்ற உட்கடசி ஜனநாயக கோட்பாட்டை நாங்கள் வழுவாமல் கடைபிடிப்பதால் குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்று சேர்கின்ற பல கட்சிகள் இயக்கங்கள் ஆகியவற்றுடன் ஜனநாயக பூர்வமான விவாதங்களையும் தோழமையுடன் கூடிய அணுகுமுறையையும் நாங்கள் கையாண்டு வந்துள்ளோம்.

நாடு தழுவிய அளவில் கார்ப்பரேட் காவி பாசிசம் ஏறித்தாக்கி வருகின்ற சூழலில் அதனை பிரதான எதிரியாக வைத்து எதிர்த்துப் போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒரு குடையின்கீழ் திரட்டுவதற்கு பொருத்தமான வேலை முறையை முன்வைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால் எங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டு செயல்படும் சிலர் நட்பு சக்திகளை எதிரிகளை போல கடுமையாக விமர்சனம் செய்து உண்மையான எதிரிகளான பாரதிய ஜனதா கட்சி கட்சிக்கு சேவை செய்கின்றனர்.

எனவே தற்போது நாட்டின் பிரதான அபாயமான கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக போராடுவதை திசைதிருப்புகின்ற வகையில் செயல்படும் வெற்றிவேல் செழியன் எமது மக்கள் அதிகாரம் பெயரில் இயங்குவதையும் தாங்கள் அதனை அங்கீகரிப்பதை பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.

அமைப்புகள் கட்சிகள் பிளவுபடுவது ஒன்றும் புதிதல்ல.பெரும்பாண்மையான அமைப்புகளில் நடந்து வருகின்ற ஒரு செயல்தான். பிரிந்தவர்கள், சிறுபான்மை தகுதி கொண்டவர்கள் தங்களது பெயரை மாற்றி செயல்பட்டு வருவதுதான் மரபு, ஜனநாயக பூர்வமானது நேர்மையானது. இதற்கு முன்பு பிரிந்த தேர்தல் கட்சிகளோ, பெரியாரிய இயக்கங்களோ பிரிந்தவர்கள் மீண்டும் கூட்டாக வெவ்வேறு பெயரில் பல போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் வெற்றி தரப்பினர் பிடிவாதமாக அதே பெயரில் இயங்குவதன் மூலம் அவர்களின் கீழ் உள்ள அணிகள் மத்தியில் எமது அமைப்பின் மீதான வெறுப்பரசியலை விதைப்பதுடன், அவதூறு சேற்றை வாரி இறைத்து சக தோழர்களுடன் உரையாடுவதையே தடுத்து சிதைக்கின்றனர்.

இன்றைய அரசியல் பொருளாதார பண்பாட்டு சூழல் அனைத்தும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக மாற்றப்பட்டு வருகிறது. இத்தகைய கார்ப்பரேட்-காவி பாசிசத்தை தேர்தல் அரசியலுக்கு அப்பாலும் பரந்து பட்ட கூட்டணி அமைத்து முழுமையாக வீழ்த்த வேண்டியது அனைவரின் கடமையாகும். அத்தகைய போராட்டத்தின் வழியாக பெரும் மக்கள் திரள் நலனை பிரதிபலிக்கும் உத்திரவாதப்படுத்தும் பங்கேற்க செய்யும் ஜனநாயக கூட்டரசை உருவாக்க வேண்டும். இதற்காக மக்கள் அதிகாரம் சாத்தியமான அனைவரோடும் கைகோர்த்து செயல்படும் என்பதை உறுதியாக சொல்கிறோம்.

எனவே கூட்டியக்கங்களில் எமது மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று அதே பெயரில் இயங்கும் தோழர் வெற்றிவேல் செழியன் தரப்பினர் அல்லது வேறு எவரையும் அதே பெயரில் அங்கீகரித்து எமது மக்கள் அதிகாரம் அமைப்பையும் ஒன்றாக அழைப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

தோழமையுடன்
வழக்கறிஞர்சி.ராஜு
மாநில பொதுச்செயலாளர்

மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு-புதுச்சேரி.

9 COMMENTS

 1. //2015ஆம் ஆண்டு துவக்கபட்டபோது, “குறிப்பான தருணத்தில் நாட்டின் பிரதான அபாயத்தை எதிர்த்து முறியடிப்பதை நோக்கமாக கொண்டு புதிய ஜனநாயக புரட்சிக்கு இடையில் ஓர் அதிகார அமைப்பாக” மக்கள் அதிகாரம் செயல்படும் என தீர்மானிக்கப்பட்டதை தற்போது மறுத்து விட்டனர். //

  அப்படியா முடிவு! மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டி எழுத வேண்டியது தானே!

  ஆமா.. இப்போ நீங்க மட்டும் மக்கள் அதிகார இடைக்கட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக கூட்டரசை நிறுவப் போவதாக அறிவித்துள்ளீர்களே – அப்போ இதுவும் தீர்மானத்தை மறுத்தது தானே!

  அதற்கப்புறம்… அதென்ன நட்பு சக்தி! திமுக என்று எழுத கை கோணுகிறதா? திமுக நட்பு சக்தி என்றே வைத்துக் கொள்வோமே. நட்பு சக்தியை விமர்சிக்கவே கூடாது என்பது என்ன வகையான வாதம்?

 2. செயல் தந்திர அரசியல் வழி அளவுக்கு அதிகமாகி விட்டதால் மொத்த அமைப்பும் வலது திசையில் விலகலுக்கு சென்றுவிட்டது.
  1992 க்கு பிறகு இப்போதுதான் அமைப்பில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.
  விவசாயிகள் மத்தியில் அமைப்பு இல்லாமல் வர்க்க அடித்தளம், போராட்டம், கைது, சிறை எதற்கும் செல்லாமல் போர்க்குணம்!
  மொத்தத்தில் கேட்கும் கேனையர்கள் இருப்பதால் பூனை புல்டோசர் ஓட்டுகிறது!
  உருட்டும் பூனையோ அவ்வப்போது ‘மொழி’க்கிறது. இல்லை இல்லை விழிக்கிறது!

 3. ஆக திமுக வின் செயல்களுக்கு முட்டு கொடுப்பதுதான் ஐக்கியமாக்குன் பணியா..?

  ஓட்டுபொறுக்கிகளுடன் கூட்டணி வைப்பனால் எப்படி புரட்சி பற்றி போதிக்கமுடியும்?

  நட்பு சக்திகளுக்கு வால் பிடித்து காணாமல் போன போலி புரட்சிவாதிகளை பார்த்தும் திருந்த மாட்டீர்களா?

 4. சாமி
  மக்கள் அதிகாரம் எந்தெந்த விஷயங்களில் திமுகவிற்கு
  முட்டு கொடுக்கிறது.
  அண்ணாமலை பாணியில் பேச வேண்டாம்.
  தூங்கியவன் தொடையில் திரித்தவரை
  ஆதாயம் !

 5. //மக்கள் அதிகாரம் எந்தெந்த விஷயங்களில் திமுகவிற்கு
  முட்டு கொடுக்கிறது//

  கனிமொழி அவர்களே,

  தி.மு.க. செய்யும் மக்கள் விரோத நடவடிக்கைகளை, சமரச – சந்தர்ப்பவாதங்களை விமர்சிக்காமல் ஊமையாக கிடப்பது, ஆனால் திராவிட மாடல் அரசின் ‘சாதனை’ என சிலவற்றை மெச்சிக் கொண்டிருப்பதற்கும் பெயர் என்ன? அது முட்டு இல்லையா?

  • பழைய தொட்டி அவர்களே! திமுகவின் தவறை மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் அமைப்பு விமர்சிக்கவில்லை என்பது தங்களது கருத்து. ஆனால் அமைப்பு தவறை விமர்சித்துள்ளது. அது தொடர்பான கட்டுரைகள் இந்த தளத்திலேயே வந்துள்ளது தேடி பார்க்கவும். அமைப்பை விமர்சிக்க வேறு வழி ஏதாவது இருந்தால் தேடுங்கள்.

  • திராவிட மாடலின் சாதனை என்று எங்கு எப்போது அமைப்பு சொல்லியிருக்கிறது?

   • அட வெக்கமே இல்லாம திராவிடமாடல் ஆட்சி நிகழ்ச்சியில் பேசியது தெரியாதா?

    கோமாவில் இருந்தீர்களோ..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here