இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கிய சாம்சங் இரட்டை வேடம்!
இந்திய நாட்டில் தொழில் தொடங்கியுள்ள சாம்சங் நிறுவனமானது இங்குள்ள தொழிலாளர் நல சட்டங்களை காலில் போட்டு மிதித்து வருகிறது. இதை தொழிலாளர் நலத்துறையோ, இந்திய அரசோ, ஆட்சியாளர்களோ கண்டுகொள்வதே கிடையாது.

ப்ரல் இருபதாம் தேதி தமிழ் இந்து நாளிதழில் சாம்சங் பற்றிய ஒரு கட்டுரை வந்துள்ளது அது கட்டுரையா அல்லது விளம்பரமா (Paid News) என்பது தமிழ் இந்துவுக்கே வெளிச்சம்.

கட்டுரையின் தலைப்பு “5,000 தமிழக இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கிய சாம்சங்” என்பதாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை தன் நிறுவனத்தில் ஆண்டுக்கணக்கில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வைத் தராமல் வஞ்சிப்பதில் “இழிபுகழ்” பெற்றுள்ளது சாம்சங் நிறுவனம். ஆனால் இந்து தமிழ் திசையின் கட்டுரையோ சாம்சங்கைப் புகழ்ந்து தள்ளுகிறது.

சாம்சங்கின் சமூக பொறுப்புணர்வு?!

தன்னிடம் வேலைச் செய்யும் தொழிலாளர்களுக்கே பொறுப்பாக நடந்து கொள்ள வக்கற்ற samsung நிறுவனம், இந்த சமூகத்திற்குப் பொறுப்பாக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறதாம். இதுவரை சுமார் 15 லட்சம் மக்களுக்குப் பயன் அளித்துள்ளதாம்.

குறிப்பாக, 2024-25 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூபாய் 144 கோடி செலவிட்டுள்ளதாம். அதுவே 2025 – 26 ஆம் ஆண்டில் 193 கோடியாக உயர்ந்துள்ளது சாம்சங் நிறுவனத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது இந்து தமிழ்.

இதை எப்படி புரிந்து கொள்வது? உதாரணமாக பத்து ஊரின் விளை நிலங்களை மொத்தமாக வளைத்துப் போட்டு, ஊர் மக்களை பண்ணை அடிமைகளாக்கி கசக்கிப் பிழையும் பண்ணையார் கால் வயிற்று கஞ்சிக்கு மட்டுமேயான கூலியைக் கொடுத்துவிட்டு மொத்தத்தையும் தனது சொத்தாக குவித்து வைத்தனர். அதேநேரம், ஊர் திருவிழா வந்தால் ஊருக்கு தன் செலவில் அன்னதானம் போடுவது, அர்ச்சகர் தட்டில் காணிக்கைப் போடுவது என்று தன்னை ஒரு வள்ளலாகவும் காட்டிக் கொண்டனர். அந்த கேடுகெட்ட பண்ணையாரை விட படுமோசமானதாகத்தான் சாம்சங் நிர்வாகத்தின் செயல்பாடு அமைந்துள்ளது.

எந்த தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் சாம்சங் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து லாபம் குவிகிறதோ, அந்த லாபத்திற்கு காரணமான உழைப்பை தந்த தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வைத் தராமல் அவர்களின் வயிற்றில் அடித்து கசக்கி பிழிந்து சொத்து சேர்க்கிறது சாம்சங் நிர்வாகம். தான் அடிக்கும் கொள்ளையை மூடி மறைப்பதற்காகவே, “கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு” என மோடிக்கு – பாஜகவுக்கு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளாகவும், தேர்தல் பத்திரங்களாகவும் பணத்தை வாரி இறைத்துக்கொண்டே ஒரு சிறு பகுதியை அன்னதானத்திற்கும் அர்ச்சகர் தட்டில் போடும் காணிக்கைக்கும் ஒதுக்கி ஊருக்கு உழைப்பவனைப் போல நாடகமாடுகிறது.

இந்திய நாட்டில் தொழில் தொடங்கியுள்ள சாம்சங் நிறுவனமானது இங்குள்ள தொழிலாளர் நல சட்டங்களை காலில் போட்டு மிதித்து வருகிறது. இதை தொழிலாளர் நலத்துறையோ, இந்திய அரசோ, ஆட்சியாளர்களோ கண்டுகொள்வதே கிடையாது. அனைத்தையும் பணத்தால் விலை பேசி வருகின்றனர் கார்ப்பரேட்டுகள். தமிழகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் துவக்கிய சிஐடியு தொழிற்சங்கத்தின் நியாயமான போராட்டத்தை நசுக்கிய திமுக அரசும் இந்த நிறுவனத்தின் நன்கொடை பட்டியலில் நிச்சயம் இருக்கவே செய்யும்.

சாம்சங் தரும் தொழில் பயிற்சியின் நோக்கம்!

தொழிற்சாலையைத் தொடங்கி TV உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை உற்பத்திச் செய்து, சந்தையில் விற்று, லாபத்தைக் குவிக்கும் ஒரு கொரிய நிறுவனமானது, தமிழகத்தில் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் பயிற்சித் தரும் அவதாரத்தையும் சேர்த்தே எடுத்துள்ளது. வெளிநாட்டுக்காரனுக்கு நம் மக்களின் மீது என்ன ஒரு சமூக அக்கறை என்று கார்ப்பரேட் ஊடகங்களுக்கு புல்லரிக்கிறது போலும். வரிந்து கட்டிக்கொண்டு கட்டுரைகள் எழுதுகின்றன.

படிக்க:

 பழிவாங்கும் சாம்சங் நிர்வாகம்! போராடும் தொழிலாளர்களுக்கு துணை நிற்போம்!

 சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான போராட்டமும்! ஆளும் வர்க்கத்தின் கார்ப்பரேட் விசுவாசமும்!

சாம்சங் இன்னொவேசன் கேம்பஸ் (SIC) திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்தாயிரம் இளைஞர்களுக்கு பயிற்சியைத் தந்து சான்றிதழையும் தந்துள்ளது சாம்சங் நிறுவனம். கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் பயிற்சியும் பயிற்சியின் முடிவில் தரப்படும் சான்றிதழுக்கும் ஏதேனும் மதிப்பு உள்ளதா என்றால், ஒரு மண்ணும் கிடையாது.

இதே சாம்சங் நிறுவனம் தான் பயிற்சியும் சான்றிதழும் தந்த ஐந்தாயிரம் இளைஞர்களுக்கு தனது நிறுவனத்தில் நிரந்தர வேலை போட்டு தர முன்வருமா? ஐந்தாயிரம் பேர் வேண்டாம், குறைந்தது ஆயிரம் பேருக்காவது நிரந்தர வேலையை உத்திரவாதம் செய்யுமா? செய்யாது.

நம் இளைஞர்களின் உழைப்புச் சக்தியை உறிஞ்சிக் கொழுக்கும் ஆக்டோபஸாக வளர்ந்து நிற்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனமானது, தனது தோற்றத்தை ஊருக்கு படி அளக்கும் பரோபகாரியை போல மாற்றிக் கொள்வதற்காகவே இத்தகைய தொழிற்பயிற்சி நாடகங்களை அரங்கேற்றுகிறது. இந்த நோக்கத்திற்காக தான் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு என்ற பெயரில்  அடிக்கும் கொள்ளையிலிருந்து ஊருக்கும் கொஞ்சம் செலவிடும்படி இந்திய அரசும் வழிகாட்டுகிறது.

பள்ளிக்கல்வி முதல் தொழில்நுட்பக் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி வரை அனைத்தையும் தருவதற்குதான் இந்தியாவில் பல்வேறு மட்டங்களிலான அரசுக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதைக் கண்காணிக்கவும் நெறிப்படுத்தத்தவும்தான் பல்கலைக்கழக மானிய குழுவும் உள்ளது.

நம் நாட்டின் எதார்த்தம் இப்படி இருக்கையில், கார்ப்பரேட்டுகளுக்கு ஏன் இந்த கல்வித் தரும் வேலை? என்று மோடியின் கார்ப்பரேட் நல அரசும் கேட்காது; கார்ப்பரேட் மீடியாக்களும் எழுதாது. ஆனால், நாம் கேள்வியை எழுப்புவோம். கார்ப்பரேட்டுகள் தான் செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆப் திங்ஸ், பிக் டேட்டா, நிரலாக்கம் போன்றுவற்றுக்கு பயிற்சி தரும் என்றால், IIT, IIM களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் என்ன வேலை?

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here