சர்வாதிகாரத்தின், பாசிசத்தின் முளைகள் தமிழகத்தின் அரசியல் களத்தில், சில ஊர்களில் தம்மை வெளிக்காட்டி நிற்கின்றன. துவக்க நிலையிலேயே அதை இனம் பிரித்து, களையெடுக்க வேண்டியது ஜனநாயகத்தை விரும்புவர்களுக்கு அவசியமானதாகிறது.
தான் விரும்புவதைத்தான் பிறர் செய்ய வேண்டும் என்று எப்பொழுது ஒருவர் தீர்மானிக்கிறாரோ, அதிலிருந்து அவர் படிப்படியாக சர்வாதிகாரியாகவும், ஆட்சியதிகாரத்தை பிடித்து ஆளும்வர்க்க சேவையின் ஊடாக, பின்னர் பாசிஸ்ட் ஆகவும் உருமாறுகிறார். இதுவே ஒரு அமைப்போ, அல்லது கட்சியோ, அப்படி தமது கருத்தையோ, கொள்கைகளையோ திணிக்க ஆரம்பித்தால், அக்கட்சியே ஒரு பாசிச கட்சியாக மாற்றம் பெறுகிறது. இதற்கு நம் கண் முன் உள்ள உதாரணம் தான் மோடியும், பாஜகவும்.
வைரஸை பரவ விடலாமா?
சர்வாதிகாரம் மற்றும் பாசிசம் என்பது பரவக்கூடிய ‘வைரஸ்’. இந்த ‘கிருமிக்கு ‘ ஒரு தனி சிறப்பான குணம் உண்டு. அது குறிப்பிட்ட சிலரை தான் தாக்கும்.
சுரண்டும் வர்க்கத்தினரையோ, அல்லது அவர்களின் விருப்பத்திற்கு உகந்த ஆட்சியாளரையோ, அதிகார வர்க்க போதை தலைக்கேறி ஆட்டம் போட்டவரையே தனக்கு முன் மாதிரியாக வரித்துக்கொள்ளும் யாரை வேண்டுமானாலும் இது தாக்கும். தாக்கியும் வருகிறது.
தற்போது நடப்பில் உள்ள முதலாளி வர்க்க (கார்ப்பரேட்) சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டும் என்றால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம் என்ற நிலைப்பாட்டைத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எடுக்கின்றன. இது தவிர்க்க முடியாததும், நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதும் ஆகும். ஆனால் அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லாத கட்சிகள் ஏதோ ஒரு வகை சர்வாதிகாரத்தை அமல்படுத்தவே செய்கின்றன.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட வடமாநிலங்களில் செல்வாக்குடைய கட்சிகளாகட்டும், அல்லது திமுக, அதிமுக, பாமக, நாதக, புது வரவான தவெக உள்ளிட்டவைகளும் இந்த அரசியல் வைரசால் பாதிப்புகளை சந்திக்கவே செய்கின்றன. குறிப்பாக சீமான் தன்னைத் தவிர மற்ற எவரையும் மதிப்பதே இல்லை; ஒருமையில் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தம்பிகளை வெறியேற்றி அரசியல் அறுவடையை செய்யப் பார்க்கிறார். பாசிஸ்டுகளின் வாரிசாக கூசாமல் புளுகுகிறார்.
சர்வாதிகார தாக்குதல்களில் உச்சம் தொடுவது பாஜக தான். இது இந்தியாவுக்குள் செயல்படும் அரசியல் கட்சியுடன் மட்டும் வரம்பிட்டெல்லாம் மோதுவதில்லை. நாட்டில் மத சிறுபான்மையினரை ஒழிக்கும் வெறியுடன் “சட்டபூர்வ” மற்றும் “சட்ட விரோத” தாக்குதல்களை தொடுத்து ஏவி வருவதோடு மட்டும் திருப்தி அடைவதில்லை.
மோடி தலைமையிலான பாஜக அரசானது இந்தியாவின் அண்டை நாடுகளுடனும் கூட அவ்வப்போது சீண்டிப் பார்த்து எல்லையில் போர் பதற்றத்தை தூண்டுகிறது. இதில் இந்தியாவிற்கு வழிகாட்டும் பெரியண்ணனாக உலக மேலாதிக்க வெறிபிடித்தலையும் அமெரிக்கா தான் உள்ளது.
ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தனது முடிவுகளை திணித்தால், பகை வளர்ந்து அது போராகவும் மாறுகிறது. அதற்கு உதாரணம்தான் அமெரிக்காவானது ஈரானின் மீது தொடுத்து வரும் தாக்குதல்களாகும். இதற்கு பின்னே உள்ள கார்ப்பரேட்டுகளின், ஏகாதிபத்தியங்களின் நலன்கள் தனியாக பரிசீலிக்கப்பட வேண்டியவை. நாம் இந்தியாவின் நிலைமைகளை பற்றி பார்ப்போம். குறிப்பாக தமிழகத்தின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெளிப்பட்டுள்ள சில கூறுகளையும் பரிசீலிப்போம்.
இந்தியாவின் களக்காட்சிகள்:
- மேற்கு வங்கத்தின் ஆசன்சோல் வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரசென்ஜித் புய்தாண்டியுடன் இணைந்து தேப்தீப் சாட்டர்ஜி என்பவர் பணியாற்றி வந்தார். தேர்தல் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது, திரிணமூல் காங்கிரஸுடன் தொடர்புடைய சமூக விரோதிகளால் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காங்கிரஸின் அரசியல் ஒரு போதும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டதல்ல; இனிமேலும் இருக்காது. நாங்கள் பல தொண்டர்களை இழந்திருந்தாலும், எப்போதும் அகிம்சை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதையையே தேர்ந்தெடுத்துள்ளோம்”.
படிக்க: ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம் 8
“இதுவே எங்களது பாரம்பரியம் மற்றும் உறுதிப்பாடு. குற்றவாளிகள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். தேப்தீப் சாட்டர்ஜி குடும்பத்துக்கு முழு பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும். இந்தியாவின் அகிம்சைப் பாரம்பரியத்துக்குக் களங்கம் விளைவிக்கும் இந்த அரசியலுக்கு நாங்கள் பணிய மாட்டோம். நீதி நிலைநாட்டப்படும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.” என்கிறது இந்து தமிழ் திசையின் பதிவு. ராகுலின் கருத்து பிழையானது. இந்திரா காந்தியே ஒரு பாசிஸ்ட் என்பது, ராகுல் மறக்க விரும்பும் உண்மையாக இருக்கிறது.
- தமிழகத்திலோ 2026 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் திமுகவினர் திட்டமிட்டு தவாக (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) தொண்டர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியதாகவும், கள்ள ஓட்டுப் பதிவு செய்ததாகவும் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
- திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்த திண்டுக்கல் லியோனி மீது, ஏப்ரல் 19, 2026 அன்று மாலையில் சோடா பாட்டில் வீசப்பட்டது. கீழப்புதூரில் நடந்த இந்த சம்பவத்தில், பாட்டில் பிரச்சார வாகனத்தில் பட்டு சிதறியதால் லியோனி காயமின்றி உயிர் தப்பினார்.
- சுப்பிரமணியபுரம் படத்தில் இசையமைப்பாளரும், சன்டிவி தொகுப்பாளரும், அரசியல் விவாதங்களில் ஊக்கமாக பங்கெடுப்பவரும், தற்போது திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் இருந்துவரும் ஜேம்ஸ் வசந்தன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஜேம்ஸ் வசந்தன் சாப்பிடச் சென்றபோது, மர்ம நபர்கள் அவரது காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர். “இது தறுதலையின் வேலையா? அல்லது தற்குறிகளின் வேலையா? என்பது தெரியவில்லை” என்று ஜேம்ஸ் வசந்தன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முளைவிடும் சகிப்புத்தன்மையின்மை!
இந்தியாவின் வட மாநிலங்களில் குறிப்பாக பாஜக கும்பல் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள இடங்களில் பாசிச குண்டர்களின் ஆட்சி தான் நடக்கிறது. மாற்றுக் கருத்துக்களையோ, மாற்று கொள்கைகளையோ, மாற்று நம்பிக்கைகளையோ, மாற்று கடவுள்களையோ, மாற்று உணவு முறைகளையோ, மாற்று மதங்களையோ ஏற்பதற்கு காவி பாசிசம் தயாராக இல்லை. அதனால் அங்கு பாசிச தாக்குதல்கள் இயல்பானதாக மாறி வருகின்றன.
படிக்க: வி.எச்.பி கூட்டத்தில் மதவெறியைக் கக்கிய உயர்நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடு!
தமிழ்நாட்டிலும் சாதிய வெறியாட்டங்களும், மத வெறியாட்டங்களும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன. எனினும், வட மாநிலங்களில் நடக்கும் படுகொலைகளின் அளவிற்கு தமிழ்நாடு இன்னும் சீரழியவில்லை; அல்லது, எதிர்க்கட்சிகள் அந்த அளவிற்கு இன்னும் பாசிஸ்ட்டுகளாக உருமாறி விடவில்லை என்பது சற்றே ஆறுதல் தரக்கூடியதுதான்.
ஒரே நாளில் ஒருவன் கிரிமினலாக ஆகிவிடுவதில்லை. சிறிய திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சின்னஞ்சிறிய குற்றங்களில் தொடங்கி படிப்படியாக முன்னேறித்தான் தேர்ந்தெடுத்த கிரிமினலாக நிலை பெறுகின்றனர். அதேபோல் தான் இப்போது சோடா பாட்டில் வீச்சு, கார் கண்ணாடி உடைப்பு என்று தொடங்கி இருப்பதும் நாளை அரசியல் படுகொலைகளை நடத்தும் கைதேர்ந்த கிரிமினல் மாஃபியாவாக வளர்ச்சி பெறுவதில் போய் முடியும். எனவே சோடா பாட்டில் வீச்சையோ, கார் கண்ணாடி உடைப்பையோ, வேல்முருகன் கட்சியினரின் மீதான தாக்குதல்களையோ எளிதாக கடந்து செல்லக்கூடாது.
ரவுடியிசத்தின் வரலாறு!
ஆங்கிலேயர்கள் காலத்திலேயே தமிழகத்தில் பகுத்தறிவு பிரச்சாரத்தை தந்தை பெரியார் மேற்கொண்ட போது பார்ப்பனர்களின், ஆதிக்க சாதியினரின் தொடர் தாக்குதல்களை எதிர்கொண்டார். செருப்பு வீச்சு சாணி மற்றும் மலத்தால் அடிப்பது என்று பல வழிகளில் பகுத்தறிவாளர்களின் மீதான, தந்தை பெரியாரின் மீதான தாக்குதல்கள் அரங்கேறின. இதுவே பின்னர் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்த திராவிட கட்சிகளின் காலத்தில், தமக்குள்ளாக அடித்துக் கொள்ளும் போக்கும் உருவெடுத்தது. அதுவரை நேரடியாக குறிப்பிட்ட அமைப்பை சார்ந்தவர்களே களம் இறங்கினர். தமக்காக ரவுடிகளை பணிக்கு அமர்த்தவில்லை. அதைத் தொடங்கியது ‘புரட்சி’த்தலைவர் எம்ஜிஆர் தான்.
தமிழகத்தின் அரசியலில் ரவுடிகளின் நுழைவு என்பது எம்ஜிஆர் காலத்திலேயே வந்து விட்ட ஒன்றுதான். உருட்டுக்கட்டை தாக்குதல், சோடா பாட்டில் வீச்சு, கொடிக்கம்பங்களை வெட்டி வீசுதல் என்று தொடங்கியது பின்னர் ஆசிட் வீச்சு, அரசியல் படுகொலைகள் என்று அரசியலில் ரவுடியிசமானது அடுத்த கட்ட பரிணாமத்தை எட்டியது.
படிக்க: கிரிமினல் விஜய்: தமிழக அரசியலில் முளைத்துள்ள புதிய விசச் செடி!
அரசியல் படுகொலைகளில் முதலில் களப்பணியானவர்கள் கம்யூனிஸ்டுகளே. குறிப்பாக காவிரி டெல்டாவில், கீழைத்தஞ்சையில் உழைக்கும் மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காகவும் களத்தில் நின்ற கம்யூனிஸ்டுகளில் பலரும் பண்ணையார்கள் ஏவிய அடியாட்களால் படுகொலை செய்யப்பட்டு தியாகிகளாகினர்.
பண்ணையார்களுக்கும் கூலி ஏழை விவசாயிகளுக்குமான வர்க்க போராட்டத்தின் வெளிப்பாடாக அரசியல் கட்சிகள் மோதின. காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட்களும் களத்தில் மோதினர். அதில் பண்ணையார்கள் அதாவது அரசியல் கட்சி என்ற வகையில் காங்கிரசார் படுகொலைகளை பங்கேற்றினர்.
அதன் பின்னர் ஆளும் வர்க்க சேவையை முன் நிறுத்தி செயல்பட்டு வரும் கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்டவை தமக்குள் அதிகாரத்துக்காக, பதவிக்காக நாற்காலிக்காக மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். அதாவது வர்க்கப் போராட்டமாக இல்லாமல், ஒரே வர்க்கத்திற்குள் உள்ள பிரிவினர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியாக மோதல்கள் வெடித்தன. பண்ணையார்களைப் போலவே இவர்களுக்கும் குண்டர்கள் தேவைப்பட்டனர். இப்படி அரசியலில் ரவுடியிசத்தை புகுத்தும் வன்முறை கலாச்சாரமானது 1980களிலிருந்தே ஆட்சியாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்றுதான்.
கொள்கையே இல்லை: ரவுடியிசமே பாதை!
ரவுடிகளின் பலத்தில் அரசியல் செய்தவர்களில் முன்னணியில் இருந்தவர் தான் ‘புரட்சி’த் தலைவர் எனும் எம்ஜிஆர். முதலில் காங்கிரஸில் இருந்தவர், பின்னர் திமுகவில் இணைந்து, 1972-ல் அதிமுக (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) என்ற தனி கட்சியைத் தொடங்கினார். 1977-ல் தமிழகத்தின் முதலமைச்சரும் ஆனார். இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை (1977–1987) முதலமைச்சராகப் – ராமாபுரம் பண்ணையாராக – ஆட்சி செலுத்தினார்.
இவரைப் பார்த்து அதே கனவில் தான் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் அரசியல் களம் காண்கிறார். அவரின் பாசிச பாதையில் தான் விஜய்யும் பயணிப்பார் என்பதற்கான அறிகுறிகள் தான் விஜயின் அணுகுமுறைகளும், அணில் குஞ்சுகளின் தற்போதைய தாக்குதல்களுமாகும்.
தற்போது தேர்தல் கூட்டணிகளை தீர்மானிப்பது கொள்கைகள் அல்ல; தொகுதி பங்கீட்டு சீட்டு கணக்குகள் தான். கொள்கைக்காக மோதிக் கொள்வது என்பது போய், கார்ப்பரேட் கொள்ளைக்காகவும், அதில் கிடைக்கும் பங்குக்காகவும் மோதிக் கொள்வது என்பதாக அரசியல்களம் சீரழிகிறது.
படிக்க: எஸ்.ஜி.முருகையன் மக்கள் தொண்டாற்றிய மகத்தான மனிதர்
தமிழகத்தைப் பொறுத்தவரை சமீப காலமாக அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பகிரங்க மோதல் குற்றங்கள் அளவில் தணிந்திருந்தன. சட்டமன்றத் தேர்தலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மீண்டும் முளை விடுகின்றன.
ஆதிக்க சாதிவெறி, மதவெறி கட்சிகளை நாம் விட்டு வைத்தால், அது நம்மை அடிமைப்படுத்தவே செய்யும். பாசிச பாஜகவின் B மற்றும் C – டீம்களையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். தற்போதைய தாக்குதல்களையும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
வன்முறை வெறியாட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டை நேசிக்கும், கருத்து உரிமையை உயர்த்தி பிடிக்கும், ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரின் விருப்பமாகும். அடுத்ததாக சட்டமன்றத்தில் அதிகாரத்தில் அமரப் போகும் ஆட்சியாளர்களும், அரசும் இதை கணக்கில் எடுக்க வேண்டும். தவறினால், நாட்டு மக்கள் மேற்குறிப்பிட்ட குற்றங்களோடு, அதை தூண்டி வளர்ப்பவர்களையும் இலக்காக வைத்து கணக்கு தீர்ப்பார்கள். அது மட்டும் இன்றைய குற்றவாளிகளுக்கு அராஜகமாகவோ, வன்முறையாகவோ, சர்வாதிகாரமாகவோ தெரிந்தால், அது உழைக்கும் மக்களின் தவறல்ல.
இளமாறன்






