கருகும் இளமை: எந்திரகதியான கல்விமுறையின் விளைவு!
மாணவர்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் “ஃபுட் போர்டு அடிப்பது” போன்ற அர்த்தமற்ற அபாயகரமான செயல்களில் இறங்கி சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்கள். இது எதனால்? இதை தடுப்பதற்கு வழியே இல்லையா?
மாணவப் பருவம் என்பது செயல் துடிப்பு மிக்க பருவம்; சாதிக்க துடிக்கும் பருவம். அது அறிவுத்திறனை காட்டுவதாகவும் இருக்கலாம், உடலின் செயல் திறனை காட்டுவதாகவும் இருக்கலாம்.
படிப்பில் ஆர்வம் மிக்க மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக, அதிக மதிப்பெண் பெறுபவர்களாக தங்களை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். அதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
படிப்பை விட விளையாட்டில், சிலம்பம், கராத்தே போன்ற கலைகளில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு என்ன வசதி வாய்ப்புகள் உள்ளன. தங்களுக்குள்ள தனித்திறனை தாங்களாகவே பெரும்பாலான மாணவர்கள் அடையாளம் கண்டு கொள்வதில்லை. அதற்கு ஆசிரியர் ,பெற்றோர் போன்றோரின் உதவி தேவைப்படுகிறது.
திசையறியா மாணவர்கள்!
இப்படிப்பட்ட துடிப்பும், செயல் திறனும் மிக்க மாணவர்கள் பெரும்பாலும் படிப்பில் ஆர்வம் செலுத்துவது இல்லை. அதேசமயம் தங்களது உடல் திறனை, செயல் திறனை, துடிப்பை காட்டிக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் தான் விளையாட்டு களத்தில், மைதானத்தில் சாகசம் செய்ய வேண்டிய மாணவர்கள் திசை மாறி பேருந்து படிக்கட்டில் அபாயகரமாக தொங்குவது, ஓடும் பேருந்தில் தொங்கிக் கொண்டே ரோட்டில் காலை உரசிக்கொண்டு செல்வது (ஃபுட் போர்டு அடிப்பது) போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் ஒரு மாணவி ஓடும் ரயிலில் தொங்கியபடி பிளாட்பாரத்தில் காலை உரசி கொண்டே சென்றது பார்ப்போரை கதிகலங்க செய்தது.
“ரூட் தல” விவகாரம்:
“ரூட் தல” என்று ஒரு மாணவனுக்கு அடைமொழி கொடுத்துக்கொண்டு அந்த மாணவனின் தலைமையில் ஒரு குழுவாக கூத்தடித்தபடி பேருந்தில் பயணம் செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!
“ரூட் தல” மாணவர்கள் குழுவாகப் பிரிந்து கொண்டு எந்த “ரூட் தல” குழு பெரியது
என்று தங்களுக்குள் மோதிக் கொள்வது என்பது தற்பொழுது அடிக்கடி நடக்கிறது. இந்த மோதல்கள் காரணமாக மாணவர்கள் கைது செய்யப்படுவதும் நடக்கிறது.
குறிப்பிட்ட “ரூட் தல” குழுவின் மாணவர்கள் தினமும் பயணிக்கும் பேருந்து எந்த தேதியில் முதல் முதலாக இயக்கப்பட்டதோ அந்த தேதியை “ரூட் டே “ என்று கூறிக்கொண்டு பேருந்தின் கூரைகளில் ஏறிக் கொண்டும் பேருந்து ஜன்னல்களில் தொற்றிக் கொண்டும் மிகமிக அபாயகரமான முறையில், களியாட்டத்துடன் பயணம் செய்வதை சென்னையில் அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.
மாணவர்களை நெறிப்படுத்துவதற்கான வழிகள்:
தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தன்னை கவனிக்க வேண்டும்; பாராட்ட வேண்டும் என்ற நோக்கில் இப்படி அபாயகரமாக செயல்படும் மாணவர்களை நெறிப்படுத்துவது, ஆற்றுப்படுத்துவதற்கான வழிமுறைகளில் ஒன்று விளையாட்டு, மற்றொன்று இலக்கியம்.
விளையாட்டு.
தனியார் பள்ளிகளில் விளையாட்டுக்கு என்று தனியாக பயிற்சியாளர்களை வைத்திருக்கிறார்கள். விளையாட்டில் தங்கள் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் சாதிப்பதை காட்டியே கூடுதல் பணத்தை பெற்றோர்களிடமிருந்து கறக்கிறார்கள்.
ஆனால் அரசு கல்வி நிலையங்களில் நிலை என்ன? விதிவிலக்காக ஒரு சில அரசு கல்விக்கூடங்களைத் தவிர
இதையும் படியுங்கள் : “மாணவர்களை உயர்கல்வியிலிருந்து விரட்டவரும் மோடியின் ABC”
ஆகப்பெரும்பான்மையான அரசு கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்கான போதிய கருவிகளோ, வசதிகளோ இல்லை. இதற்கென போதுமான நிதி ஒதுக்கப்படுவது இல்லை. மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து, அதற்கென பயிற்சிகள் கொடுப்பது என்ற நடைமுறை அரசு கல்வி நிறுவனங்களில் இல்லை.
இலக்கியம்
கணிதம், அறிவியல், வரலாறு, வணிகவியல் போன்ற துறை சார்ந்த பாடங்களின் மூலமாக ஒரு மாணவன் அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் மிக்கவனாக, பெரும் அறிவு படைத்தவனாக மாறலாம். ஆனால் சமூக பொறுப்புள்ளவனாக மாறுவது என்பது இந்தப் பாடங்களின் வழியாக நடப்பதில்லை. மொழி பாடங்களில் உள்ள கதை கவிதை போன்ற இலக்கியங்களை பாடமாக கற்றுக் கொடுப்பதன் வழியாகத்தான் எப்படி ஒரு மனிதன் நல்லவனாக வாழ வேண்டும்? சமூகப் பொறுப்புள்ளவனாக வாழ வேண்டும் என்பதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடிகிறது.
தற்போதைய கல்வி முறையின் விளை பொருள்.
ஆனால் தற்போதைய நிலை என்ன? கல்வி என்பது நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதிப்பதற்கானதாக மட்டும் பார்க்கப்படும் தற்போதைய நிலையில் மொழிப் பாடங்கள் என்பது முக்கியத்துவமற்ற ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கல்வி என்பது முதலாளிகளுக்கு வேலை செய்யும் திறமை மிக்க வேலையாட்களை உருவாக்குவதற்காக மட்டும் தான் உள்ளதே தவிர சமூக பொறுப்புள்ள, சக மனிதனை மதிக்கின்ற, நேசிக்கின்ற குடிமகனை உருவாக்குவதற்கானதாக இல்லை!
செயல் துடிப்புடன், சுறுசுறுப்புடன் இருக்கும் மாணவர்களின் தனித் திறனை கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் அந்த மாணவனை வளர்த்தெடுக்க வேண்டியது கல்வித் துறையின் பொறுப்பு.
மனிதாபிமானம் மிக்கவர்களாக சமூக பொறுப்புள்ளவர்களாக மாணவர்களை வளர்ப்பதற்குத் தேவையான வகையில் கல்வியை மேம்படுத்த வேண்டியதும் கல்வித் துறையின் பொறுப்பு. ஆனால் மாணவர்களின் நிலைமையை இன்னும் மோசமானதாக மாற்றத் துடிக்கிறது மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை.
இதையும் படியுங்கள் : தேசிய கல்விக் கொள்கை 2020ல் பண்பாட்டு திட்டமும், அரசியல் பொருளாதாரத் திட்டமும்
கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை சரி செய்யாமல், அராஜகத்தில் ஈடுபடும் மாணவர்களை சமூக விரோதிகளைப் போல, பார்ப்பதும் வெறுப்பதும் தவறானது. இந்தச் சூழலை மாற்றுவதற்காக குரல் கொடுக்காமல் இருப்பது என்பது மக்கள் செய்யும் தவறு. இந்த சூழ்நிலையை மாற்றாமல் அப்படியே நீடிக்க விடுவது என்பது அரசு தெரிந்தே தனது பொறுப்பை தட்டி கழிகின்றது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
தேவையான மாற்றங்களை கொண்டுவருவதற்காக நாம் குரல் கொடுப்போம்! போராடுவோம்!!
பாலன்