கடந்த மே-15 ந்தேதி பல்கலைகழக மானியக் குழு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் உடனடியாக கடந்த 2021-2022 கல்வியாண்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் புள்ளிகளை (கிரெடிட்) Academic Bank of Credits யில் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜுலை 28ந்தேதி Academic Bank of Credits (ABC) உருவாக்கப்பட்டதை அரசிதழ் மூலம் அறிவித்தது. இந்த ABC என்பது தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பே, NAAC அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களை கட்டாயம் இதன்கீழ் இணைய அறிவுறுத்தி இருந்தது.
இந்த ABC மின்னணு தகவல் சேமிக்கும் தளம். இந்த தளத்தில் பல்கலைகழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் இணைவதன் மூலம் அதன் மாணவர்கள் பெற்ற கிரெடிட்டுகளை இதில் பதிவேற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் உருவாக்கப்படும் தனிக் கணக்குகளில் அது பதிவேறும். இப்படி மாணவர்கள் பெறும் புள்ளிகளை (Credits) ஒரு சேமிப்பு தளத்தில் பதிவதில் என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா?
இந்த ABC தளம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை தெரிந்துகொள்வதன் மூலம் அதனை புரிந்து கொள்ள முடியும். இந்த திட்ட அறிவிப்பு நான்கு உறுதிமொழிகளை அளிக்கிறது ”1. சுதந்திரமான, வளைந்து கொடுக்கக்கூடிய பல்கலைகழக பட்டம் அளிக்கும் முறை; 2. இந்திய உயர்கல்வியை ஒற்றைத் தரத்துக்கு கொண்டு வருவது; 3. இந்திய உயர்கல்வியை வலுவாக ஒருங்கிணைப்பது; 4. இந்திய உயர்கல்வியை சர்வதேசமயப்படுத்துவதை நோக்கி நகர்த்தும் ஒரு அடி.”
எளிமையாக சொல்வதெனில், இந்த வங்கியில் பதிவு செய்யும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் படிப்பை எந்த செமஸ்டரிலும் நிறுத்திக் கொண்டு, மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அதே கல்வி நிறுவனத்திலோ வேறு கல்வி நிறுவனத்திலோ படிப்பை தொடரலாம். அதிலும் குறிப்பாக, ஒரு கல்வி நிறுவனத்தின் கீழ் இருந்து 50% கிரெடிட்டுகளை பெற்றால் போதும். மீதம் கிரெடிட்டுகளை வெளியில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். SWAYAM, NPTEL, V-Lab போன்ற இணைய வழிகல்வி மூலம் பெறப்படும் கிரெடிட்டுகளும் இந்த ABC தளத்தில் இணைத்துக் கொள்ளலாம்..
கல்லூரி படிக்கும் மாணவர்கள் வீட்டு பொருளாதார பிரச்சினை, உடல்நிலை பிரச்சினை போன்றவற்றின் காரணமாக கல்வியை தொடர முடியவில்லை எனில் மீண்டும் கல்லூரியில் இணைந்தோ, வெளியில் இருந்தோ படிப்பை முடித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் உயர்கல்வியைவிட்டு விலகுவது (dropout) குறையும் என வியாக்யனம் செய்கிறது மோடி அரசு.
இந்த திட்டம் ஏற்கனவே அமெரிக்கா, கனடா, தென்கொரியா போன்ற நாடுகளில் அமலில் உள்ளது. அந்த நாட்டு மாணவர்களை போல் நமது மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட படிப்பில் சேர்ந்துவிட்டால், அதையே தான் படிக்க வேண்டும் என அவசியம் இல்லை. வேறு பாடங்களை தங்கள் விருப்பம் போல் எடுத்துப் படித்துக் கொள்ளும் சுதந்திரத்தை அளிக்கிறது. அதனால் மாணவர்கள் “DROPOUT” ஆவது நிற்கும் என்றும், மாணவர்கள் அவர்கள் விரும்பும் பாடங்களை படிப்பதன்மூலம் அவற்றில் பெறும் கிரெடிட்டுகளை சேர்த்து தங்களுக்கு தேவையான வகையில் பல்கலைகழக பட்டத்தை வடிவமைத்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், மேலும் வெளிநாட்டுப் பல்கலைகழகங்களையும் இந்த திட்டத்தில் இணைப்பதன் மூலம் நம் நாட்டு மாணவர்கள் தரமான கல்வியை பெற முடியும் என்றும் கதையளக்கிறது பல்கலைகழக மானியக் குழு.
டெல்லி பல்கலைகழக ஆசிரியர் சங்கமோ “இந்த திட்டம் 1. மாணவர்களின் ஏற்றத்தாழ்வை கணக்கில் கொள்ளாதது என்றும்; 2. பல்கலைகழக படிப்புகளின் ஒழுங்கை, தீவிரத் தன்மையைக் குறைத்துவிடும் என்றும்; 3. முறையற்ற கல்வியின் காரணமாக ஆசிரியர்களின் பணி பாதுகாப்பற்றதாக ஆகிவிடும்.” என்று விமர்சித்துள்ளது.
மேலும், இந்த திட்டம் பரவலாக நடைமுறைக்கு வருமெனில் ஏழை, எளிய மாணவர்கள் முறையான கல்வியிலிருந்து விலகி முறைசாரா கல்விக்கோ அல்லது படிப்பில் இருந்தே விலகுவதற்கோ வழிவகுக்கும். பல்கலைகழக மானியக் குழு சொல்வது போல் “Dropout” குறையாது. யார் “Dropout” ஆனார்கள், யார் தொடர்ந்து கல்வி பயில்வார்கள் என்ற எல்லைக்கோடே இல்லாமல் போய்விடும் என்பதுதான் எதார்த்தம்.
நம்மூரில் குடும்ப பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி எப்படியாவது படித்து பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று அரைவயிறாக கல்லூரிக்கு வந்துவிடுகிறான் ஏழை, எளிய மாணவன். அந்த மாணவனிடம் ”நீ எப்போது வேண்டுமானால் படித்துக் கொள்ளலாம். குடும்பத்துக்காக தற்போது வேலைக்கு போ” என்று நயவஞ்சமாகக் கூறி படிப்பைவிட்டு வெளியேற்றும் பேரபாயத்தை கொண்டு வருகிறது மோடி அரசின் இந்த திட்டம். மாணவர்கள் ஒரு முறை வேலைக்கு சென்றுவிட்டால், மீண்டும் கல்லூரிக்கு திரும்புவது மிக கடினம் என்பதே உண்மை நிலை. கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரி விடுமுறையின் போது வேலைக்கு சென்ற லட்சக்கணக்கான மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர வரவில்லை என்பதே அதற்கு உதாரணம்.
தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான முறைசாரா கல்வியை ஊக்குவிப்பது என்பதை நடைமுறைப்படுத்துவதற்கான வழியே இந்த ABC. முறைசார்ந்த கல்வியை சிதைக்க வரும் இந்த திட்டத்தை பல்கலைகழக, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு தன் மாநில பல்கலைகழகங்களை ABC யில் இணைப்பதை ஏற்கக் கூடாது. நாடு முழுக்க கடும் எதிர்ப்பை சந்தித்த தேசிய கல்விக் கொள்கை -2020- யை நுழைவு தேர்வுகள், ABC என தனித்தனியாக அமல்படுத்தும் பாசிச மோடி அரசின் சதித்தனத்தை முறியடிக்க வேண்டும்.
- அப்துல்லா