திருப்பூர், நவ.16- திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்டிப் படைத்து வந்த ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் ஏற்றுமதி பின்னலாடைத் தொழிலில் ஏற்றுமதியாளர்களின் முக்கிய அமைப்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் நிறுவனத் தலைவராக ஏ.சக்திவேல் செயல்பட்டு வந்தார். நீண்ட காலம் ஒருவரே தலைவராக இருந்த நிலையில் ஏற்பட்ட அதிருப்தி மனப்பான்மையை பயன்படுத்திக் கொண்டு “மாற்றத்துக்கான அணி” என்ற ஒரு அணியை சிலர் உருவாக்கினர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, சி.பி.சி. விஜயகுமார் உள்ளிட்ட வர்கள் அந்த அணியில் முக்கியமானவர்களாக இருந்து வழிநடத்தினர். 9 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சங்கத் தேர்தலில் இந்த அணியினர் ராஜா எம்.சண்முகம் தலைமையில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

அதற்கடுத்த மூன்றாண்டுகளில் நடை பெற்ற தேர்தலில் சக்திவேல் உள்ளிட்டவர்கள் போட்டியைத் தவிர்த்து சுமூகமாக நிர்வாகிகளைத் தேர்வு செய்யலாம் என்ற அடிப்படையில் ராஜா எம்.சண்முகம் தலைமையிலான அணியினர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி துணைத் தலைவராகவும், விஜயகுமார் பொதுச் செயலாளராகவும் பதவிக்கு வந்தனர். அதற்கடுத்த முறையும் இந்த அணியினர் பல முயற்சிகளை மேற்கொண்டு தேர்தலை தவிர்த்து மீண்டும் பதவியில் தக்க வைத்துக் கொண்டனர். எனினும் இவர்களது ஐந்தாண்டு கால நிர்வாகத்தில் திருப்பூர் ஏற்றுமதி தொழிலுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. குறிப்பாக மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் அடுத்தடுத்த தாக்குதல்களான பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, ஏற்றுமதி சலுகைகளுக்கு வெட்டு, அரசிடம் இருந்து வர வேண்டிய பல்வேறு திட்ட நிலுவைத் தொகைகள் ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைப்பதற்கு தாமதம் என எந்த பிரச்சனையிலும் இவர்கள் திருப்பூர் தொழில் துறையினருக்கு குறைந்தபட்ச நன்மைகூட செய்யவில்லை.

ராஜா சண்முகம்

இதைவிட மிக முக்கியமாக, தற்போது நூல் விலை வரலாறு காணாதபடி கிலோவுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. இதைப் பற்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய ஜவுளித் துறை சங்கங்கள் தங்கள் கருத்தை தெரிவித்து சில அமைப்புகள் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் ஏறத்தாழ ரூ.27ஆயிரம் கோடி ஏற்றுமதி உள்பட ஏறத்தாழ ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் பின்னலாடை உற்பத்தியை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய திருப்பூரில் முக்கிய சங்கமான ஏற்றுமதியாளர் சங்கம் குறைந்தபட்சம், வாய் திறந்து முணுமுணுப்பைக் கூட காட்டவில்லை. இவை எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் ஆர்எஸ்எஸ் பிடியில் சங்கம் இருப்பதால், ஆளும் பாரதிய ஜனதா அரசை எதிர்த்து எந்த விதத்திலும் வாய் திறக்கக் கூடாது என்ற ஒற்றைக் காரணம்தான்! அத்துடன் இந்த சங்கத்தில் நிர்வாகிகளாகவும், செயற்குழு உறுப்பினர்களாகவும் இருக்கக்கூடியவர்கள் பலர் ஒரு புறம் பின்னலாடை ஏற்றுமதியாளர்களாக இருப்பதுடன், மறுபுறம் நூற்பாலைகளையும் நடத்தி வருகின்றனர். எனவே இரு தொழில்களின் பங்குதாரர்களான இவர் கள் நூல் விலை உயர்வைப் பேசுவது தங்களுக்கு எதிராகப் பேசுவதாக இருக்கும் என்றும் மௌனம் காத்து வருகின்றனர்.

மாற்றத்துக்கான அணி வந்தால் ஏற்றுமதி தொழிலுக்குத் தேவையான விசயங்களை முந்தைய தலைமையை விட சிறப்பாக சாதிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த, எந்த சார்பும் இல்லாத ஏற்றுமதியாளர்கள் பலர் தற்போது ஏமாற்றத்துக்கும், கடும் அதிருப்திக்கும் தள்ளப்பட்டு விட்டனர். இந்த நிலையில்தான் ஏற்றுமதியாளர் சங்கத்தை ஆட்டிப் படைக்கும் ஆர்எஸ்எஸ் கும்பல், மீண்டும் தங்கள் அதிகாரத்தை இந்த சங்கத்தில் தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சியை மேற்கொண்டது. அதற்காக, ஏற்கெனவே இவர்கள் ஆரம்பத்தில் என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தார்களோ, எந்தெந்த பிரச்சனைகளை எதிர்த்துப் பேசினார்களோ அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்தனர். ஒருவர் இருமுறைக்கு மேல் தலைவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்து, சங்க விதியில் திருத்தம் கொண்டு வந்தவர்கள், இப்போது தலைவர் பதவிக்கு இரண்டு முறை என்ற கட்டுப்பாட்டை நீக்கி தலைவர் பதவியில் தொடரவும், ஏற்றுமதியாளர் சங்கத்தை உருவாக்கி வளர்த்த ஆயுள் கால உறுப்பினர்களின் வாக்குரிமையைப் பறிக்கவும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயற்குழுவில் அவர்கள் இந்த தீர்மானங்களை நிறைவேற்றி, நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இதை முன்மொழிந்தனர். ஐகேஎப்ஏ வளாகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் இந்த தீர்மானங்களை முன்மொழிந்தனர். 586 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த பொதுக் குழுவில் இந்த இரண்டு தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டன.

அதைவிட முக்கியமாக இதுபோன்ற தீர்மானத்தை இனி எந்த காலத்திலும் சங்க வரலாற்றில் கொண்டு வரக் கூடாது என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய தலைவர் ராஜா சண்முகம், “என்னை பலரும் பாஜக ஆதரவாளர் என்றும், அவர்களுக்கு ஆதரவான சங்கமாக நடத்துவதாக கூறுகின்றனர்…” என்று மறுத்துப் பேச முற்பட்டதாகவும், ஆனால் அரங்கில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள், “ஆம்! ஆம்!!” என்று அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என குரல் எழுப்பியுள்ளனர்.

ஏற்றுமதியாளர் சங்கத்தில் ஆர்எஸ்எஸ் பிடியை இறுக்குவதற்கும், விமர்சனக் குரல்களை ஒடுக்குவதற்கும் அவர்கள் மேற்கொண்ட முயற்சி இதன் மூலம் படுதோல்வியில் முடிந்தது. இவர்கள் ஆட்சியாளர்களுக்கு சார்பானவர்கள் தான், பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதையும் ஏற்றுமதியாளர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை மேற்கண்ட சம்பவம் நிரூபித்துள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிர்வாகிகள் தேர்தலில் இவர்களின் தோல்விக்கு தற்போது முன்னுரை எழுதப்பட்டுள்ளது என்று ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். இதுதவிர சங்கத்தின் நிறுவனத் தலைவரான ஏ.சக்திவேல் இப்பொதுக்குழுவில் பேசிய தனது உரையை ஊடங்களுக்கு அனுப்பி இருக்கிறார். இதில் கடந்த 9 ஆண்டு காலமாக ராஜா சண்முகம் தலைமையிலான அணியினர் எப்படி மோசமாக நடந்து கொண்டனர் என்பதையும் விரிவாக விளக்கி இருக்கிறார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் ஆர்எஸ்எஸ் கும்பல் அம்பலப்பட்டிருப்பது ஏற்றுமதியாளர் சங்கத்தைப் பாதுகாக்க உதவும், அத்துடன் ஏற்றுமதி பின்னலாடை தொழில் குறித்து எந்த அரசியல் சார்பும் இல்லாமல் அதன் நலனை மையப்படுத்தி செயல்படவும் வழி ஏற்பட்டுள்ளது என்று பொதுக்குழுவில்
பங்கேற்ற ஏற்றுமதியாளர்கள் கூறினர்.

நன்றி: தீக்கதிர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here