போலி ஜனநாயகத்தை நம்புகிறவர்களே! மனந்திரும்புங்கள்!!
நாடாளுமன்ற, சட்டப்பூர்வ வழிமுறைகள்
இனியும் உதவாது!

எதிர்கட்சிகள் பேரணி

ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடக்க இருந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஒன்றிய மோடி அரசு முடித்துக்கொண்டது. அதற்கு முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர்கள் மீது அவைக் காவலர்களை கொண்டு பாசிச தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை “ஜனநாயகத்தின் படுகொலை” என அறிவித்து 14 எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து டெல்லி விஜய் சவுக் வரை பேரணி நடத்தியுள்ளனர். பியுஷ் கோயல் உள்ளிட்ட அமைச்சர்களோ, ஏற்கனவே பலமுறை அம்பலமாகி நாறிக்கிடக்கும் நாடாளு மன்றத்தின் ’மாண்பை’ குலைத்ததற்கு எதிர்கட்சிகள் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

இந்த முறை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்கட்சிகள் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து குரலெழுப்பி வந்தனர். நாடாளுமன்ற அவைகளில் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. பிரதமர் மோடியும் அவரது சகபாடி அமைச்சர்களும் மவுனம் காத்தனர். அதனை கண்டித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து போராடினர். இந்த போராட்டங்கள் காரணமாக நாடாளுமன்றத்தின் மாண்பு சிதைக்கப்பட்டதாகவும் அதனால் தான் தூக்கம் இழந்ததாகவும் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கண்ணீர்விட்டு நாடகமாடினார்.

இன்னொரு பக்கம் எதிர்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடி வந்த நிலையிலும் 20 மசோதாக்களை விவாதங்கள் இன்றி மோடி அரசு நிறைவேற்றிக்கொண்டது. சில மசோதாக்கள் ஒவ்வொன்றும் ஒரிரு நிமிடத்திற்குள் நிறைவேற்றப்பட்டதாக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த பாசிச கோமாளிகளின் கேடு கெட்ட நடவடிக்கைகளால் உண்மையாகவே மானம் போய் நிற்பது இவர்களை நம்பி ஏமாந்து ஓட்டு போட்ட மக்கள் தான்.

எதிர் கட்சிகளின் எதிர்ப்புகள் ஒருபுறமிருக்க அதிரடியாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் ஒரு பகுதியாக நான்கு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மசோதாவை ஒன்றிய அரசு மக்களவையில் நிறைவேற்றி இருந்தது.. மாநிலங்களவையில் நிறைவேற்ற ஆகஸ்டு 10ந்தேதி எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் YSR காங்கிரஸ் கட்சியை சேந்ந்த விஜய் சாய் ரெட்டி “2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தைத் தனியார்மயமாக்க இருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த மசோதா நான்கு பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது” மேலும் “தனியாருக்கு 51% பங்குகளை விற்க அனுமதியளிப்பதன் மூலம், நிறுவனத்தின் கட்டுப்பாட்டைத் தனியாருக்கு வழங்குவதை மசோதா முன்மொழிகிறது. இது நிதியமைச்சர் முன்மொழிந்தது அல்ல.” என்று மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனை ஆதரித்த ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அம்மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பக் கோரின. இந்த கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய அரசு மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற முயன்றது. அப்போது CPI கட்சியை சேர்ந்த பினோய் விஸ்வம் பத்திரிக்கையாளர் மேஜை மீதேறி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றார். அதனை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடும்போது அவைக் காவலர்கள் 60-க்கும் மேற்பட்டோரை பத்திரிக்கையாளர் மேஜை முன் நிறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்களை அவைத்தலைவரை நோக்கி முன்னேறவிடாமல் தடுத்தது மட்டுமன்றி எதிர்த்து போராடிய சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை தரையில் இழுத்ததும் நடந்தது.. இதனை கண்ட ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ”ஆயுதந்தாங்கிய படையே அவைக்குள் வரக்கூடும்” என பீதியில் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சரத் பவார், மல்லிகார்ஜுன கார்கே போன்ற பாராளுமன்ற தொழுவத்தில் நீண்ட அனுபவமிக்க எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோ தாங்கள் இதுவரை கண்டிராத வகையிலான கட்சிகள் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டதாகவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய ராஜ்ய சபா டிவி நேரலை போராட்டம் நடந்த சமயத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் பெகாசஸ்க்கு எதிராக போரடும் எம்பிக்கல்.

ஒன்றிய அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கை கண்டித்து 14 எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்து பேரணி நடத்தியது. இந்த பேரணியின் இறுதியில் ராகுல் காந்தி “நாங்கள் பெகாசஸ் பிரச்சினை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை ஆகிய விசயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பினோம். ஆனால் அங்கு பேச அனுமதிக்கப்படவில்லை. அது ஜனநாயக படுகொலை. அதனால் உங்களிடம் பேச வந்துள்ளோம்” எனப் பேசியுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பு அம்சமாக கருதப்படும் விவாதங்களுக்கு மோடி அரசு நீடிக்கும் வரை வாய்ப்பில்லை என்பதையும் நாடாளுமன்ற வழியான போராட்டம் முட்டுசந்துக்கு வந்துவிட்டதையுமே இந்நிகழ்வுகள் காட்டுகிறது. விவாதம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஆளும் வர்க்கங்கள் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கைகளே நடைமுறை படுத்தப்படும் என்ற உண்மை மீண்டும் வெளியில் வந்து நாடாளுமன்ற ஜனநாயகம் சந்தி சிரிக்கிறது.

மோடி அரசு 2014-ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து நாடாளுமன்றத்துக்கு உள்ளே விவாதங்கள் இல்லாமல் GST, காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு திருத்தம் என பல்வேறு சட்டங்களை நிறைவேற்றியது. அது மட்டுமல்லாமல் ரபேல் ஊழல் தொடங்கி பெகசாஸ் பிரச்சினை வரை எதிர்கட்சிகள் விவாதிக்கக் கோரும் எந்த பிரச்சினைகளையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஒன்றிய மோடி அரசு எதிர்கட்சிகளையும் நாடாளுமன்றத்தின் நெறிமுறைகளையும் துச்சமாக மதித்து வந்துள்ளது. உதாரணமாக பெகசாஸ் பிரச்சினை வெளிவந்த பிறகு அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள்கூட தங்கள் நாடாளுமன்றத்தில் அது குறித்து விவாதித்தன. ஆனால் பாசிச மோடி அரசோ இந்தியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள், முன்னாள் நீதிபதிகள், எதிர்கட்சி தலைவர்கள் என பலரையும் உளவு பார்த்ததாக நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்ட போதும், தி வயர் உள்ளிட்ட சுதந்திர ஊடகங்கள் காறி துப்பிய பிறகும் அது தொடர்பான விவாதத்தை நடத்த மறுத்துள்ளது.

இந்த நிகழ்வுகள் மோடி அரசு நாடாளுமன்றத்திற்குள்ளே பெரும்பான்மை பலத்தை கொண்டு பாசிச நடைமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நாடாளுமன்றத்துக்கு வெளியேயோ கார்ப்பரேட் நலனுக்காகவும், இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றும் விதமாகவும் கொண்டு வரப்படும் சட்டங்களையும் பாசிச நடவடிக்கைகளையும் எதிர்த்து போராடுபவர்கள் மீது ஊபா, 124A போன்ற அடக்குமுறை சட்டங்களை ஏவி விசாரணையின்றி ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்து வருகிறது.

பீமா கோரேகான் வழக்கில் 16 சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதும், CAA போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை UAPA கீழ் கைது செய்யப்பட்டதும் அதற்கான சான்றுகள். மோடி அரசின் இந்த பாசிச அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஜனநாயகத்தை காப்பதாக கூறப்படும் தூண்களில் ஒன்றான நீதித்துறையும் துணை நிற்கிறது.

நாடாளுமன்றத்துக்குள் விவாதங்கள் மூலமாகவோ, நாடாளுமன்றத்துக்கு வெளியே நீதித்துறையின் மூலமாகவோ மோடி அரசின் மக்கள்விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முறியடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனதை நடப்பவற்றை நாணயமாக பரிசீலிக்கும் எவரொருவரும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எதிர்கட்சிகளோ இதனை புரிந்துகொண்டு மாற்றுத் தீர்வை யோசிப்பதாக தெரியவில்லை. அவர்கள் மக்களை 2024 வரை காத்திருக்க சொல்வதாகவே தெரிகிறது. தேர்தல் வெற்றிக்காக அமைக்கப்படும் வானவில் கூட்டணியால் பாசிசத்தை வீழ்த்தவும் முடியாது; அந்த தீடீர் வானவில் கூட்டணிகள் பணம், அதிகார சண்டை, சாதி, மத, இன வாதங்களின் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விடும் என்பதே கடந்த 74 ஆண்டுகால அனுபவமாகும்.

ஆனால், எதிர்கட்சிகள் வந்து வீழ்த்துவார்கள் என மக்கள் 2024 வரை காத்திருக்க போவதுமில்லை; காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. CAA எதிர்ப்பு போராட்டங்களைப் போன்றும், புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் போராட்டத்தை போன்றும் தொழிற்சங்க சட்ட திருத்தங்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களை போன்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் தொடரவே செய்யும். எதிர் கட்சிகள் தாங்கள் செயல்படவே மக்கள் பிரிவினரின் வீரமிக்க போராட்டங்களோடு இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

மோடி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் மக்களுக்கு எதிராக கொண்டு வந்த பல்வேறு சட்டங்களை ரத்து செய்வதை திட்டமாக கொண்ட முன்னணியை உருவாக்கி பரந்துபட்ட மக்களை ஓர் அரசியல் எழுச்சிக்கு திரட்டுவது மட்டுமே நம் முன்னே உள்ள நம்பிக்கையூட்டும் களங்கரை விளக்காகும். கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்தும் அரசியல் போராட்டங்களை நடத்துவதே உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கான முதல் நடவடிக்கையாக இருக்க முடியும்.
சதாம் ஹுசேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here