மக்களாட்சி அமைப்பில், ஆளும் வர்க்கத்தின் அதிகார அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தும் சுதந்திரமான அமைப்பாக நீதித்துறை செயல்பட வேண்டும் என்பதே அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை எதிர்பார்ப்பு. ஆனால், அண்மைக்காலமாக இந்திய நீதித்துறை ஆளும் பாசிச மோடி அரசின் அரசியல் நலன்களுக்கு ஏற்ப சமரசம் செய்துகொண்டு, அதன் கொள்கைகளைத் தடையின்றிச் செயல்படுத்த உதவும் துணை அமைப்பாக மாறி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் மூத்த நீதிபதியான சஞ்சய் கிஷன் கவுல், தனது “Without Fear or Favour” என்ற சுயசரிதை நூலிலும், நேர்காணல்களிலும் வெளியிட்டுள்ள தகவல்கள், ஆளும் பாஜக அரசின் அழுத்தங்களுக்கு நீதித்துறை எவ்வாறு பணிந்து போகிறது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.
நீதித்துறை என்பது ஆளும் வர்க்கத்தின் பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்ட, நடுநிலையான அமைப்பு என்று கூற முடியாது. அது ஆளும் வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் கருவியாக மாறும் ஆபத்து உள்ளது என்பதை நீதிபதி கவுலின் கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன.
கொலீஜியத்தின் வீழ்ச்சியும் பாசிசத்தின் ஆதிக்கமும்: “முன் ஒப்புதல்” நடைமுறை
நீதிபதிகள் நியமனத்தில் நீதித்துறையின் முதன்மை அதிகாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே கொலீஜியம் முறை உருவாக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசின் தலையீடு அதிகரித்து வருவதை நீதிபதி கவுல் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொலீஜியத்தில் ஒரு நீதிபதியின் பெயரை முறைப்படி விவாதிப்பதற்கு முன்பே, ஒன்றிய அரசின் ‘முன் ஒப்புதலை’ (pre-approval) அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேட்டதாக கவுல் குறிப்பிட்டுள்ளார். அதாவது, சஞ்சீவ் கண்ணா, கவாய் மற்றும் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரின் நியமனங்கள் இவ்வாறுதான் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் நியமன விவகாரத்தில், தலைமை நீதிபதி அரசிடம் அளவுக்கு அதிகமாகப் பணிந்து சென்றார் (too deferential) என்றும் கவுல் விமர்சித்துள்ளார்.
படிக்க: காவிமயமாகிய நீதித்துறை: – ஜி.ஆர்.சுவாமிநாதன்-லெட்சுமி நாராயணன்களே சாட்சி!
அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, சுதந்திரமாக செயல்பட வேண்டிய நீதித்துறை, தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் – காவி பாசிச அரசியல் அதிகாரத்திடம் ஆலோசனை கேட்பதைக் கடந்து, அனுமதியே கேட்கும் நிலைக்கு சென்றுள்ளது. இது நீதித்துறையின் சுதந்திரத்தை பாசிச கும்பலிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் சொல்லும் செயலை நிறைவேற்றும் அமைப்பாக சுருங்கிவிட்டதை நீதிபதி கவுலின் குறிப்புகள் காட்டுகின்றன.
சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை முடக்குதல்
ஒரு ஜனநாயக சமூகத்தின் பன்முகத்தன்மை நீதிமன்றங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பது அடிப்படையான கோட்பாடு. ஆனால், ஆளும் அரசின் சித்தாந்த விருப்பங்களுக்கு ஏற்ப நீதிபதிகள் நியமனம் நடைபெறுவதை கவுலின் குறிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தகுதியான ஒருவரை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிசீலித்தபோது, “ஏற்கனவே மற்ற சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கும்போது, இன்னொரு சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம் தேவையா?” என்று ஒன்றிய அரசு கேள்வி எழுப்பியது. அதுமட்டுமல்லாமல், அந்தக் குடும்பம் மதம் மாறுவதற்கு முன்பு எந்தச் சாதியைச் சேர்ந்தது என்ற வியப்பூட்டும் கேள்வியையும், தலைமை நீதிபதி மூலம் அரசு கேட்டதாக கவுல் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
படிக்க: நீதி வழங்குவதில் 86 ஆம் இடத்தில் உள்ள இந்திய நீதித்துறை! கோர்ட்டுகளில் நீதி கிடைக்குமா?
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் 68 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். இத்தகைய சூழலில், அக்டோபர் 2026-ல் பரிந்துரைக்கப்பட்ட 9 வழக்கறிஞர்களில் இருவர் மட்டுமே முஸ்லிம்கள். மேலும், முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஜஹாங்கீர் இக்பால் கனாயின் பெயர் எந்தவித விளக்கமும் இன்றி கொலீஜியத்தின் பரிந்துரைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்களில், ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறது. பெரும்பான்மைவாத இந்துத்துவ சித்தாந்தத்திற்கு நீதித்துறை இடமளித்து வருவதையே இவை வெளிப்படுத்துகின்றன. இங்கு பிரதிநிதித்துவம் என்பது இல்லாமல் இந்துத்துவமே கடைபிடிக்கப் படுகிறது.
வழக்குகளை எந்த நீதிபதிக்கு ஒதுக்குவது என்பதைத் தீர்மானிக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ‘ரோஸ்டர் மாஸ்டர்’ (Master of the Roster) அதிகாரம், ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்படாத வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் கவுல் குற்றம் சாட்டியுள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழான ஒரு வழக்கை நீதிபதி கவுல் விசாரிக்கவிருந்தார். அப்போது தலைமை நீதிபதி அவரைத் தனது அறைக்கு அழைத்து, அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டாம் என்றும், ‘இணக்கமான வழியை’ (middle path) பின்பற்ற வேண்டும் அல்லது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், நீதிபதிகள் நியமனத்தில் அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தது. மேலும், குஜராத் உயர் நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பான வழக்கை நீதிபதி கவுலின் அமர்வு விசாரிக்கவிருந்தது. ஆனால், விசாரணைக்கு முந்தைய கடைசி நேரத்தில் அந்த வழக்கு இரவோடு இரவாக அவரது அமர்விலிருந்து நீக்கப்பட்டது. இது அரசுக்கு சாதகமாக செய்யப்பட்டதாக கவுல் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய வழக்குகள் தந்திரமாக முடக்கப்படுவதும், அரசுக்கு எதிராகத் தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி அகில் குரேஷி போன்ற நேர்மையான நீதிபதிகளுக்குப் பதவி உயர்வு வழங்காமல் புறக்கணிப்பதும், நீதித்துறை அரசின் விருப்பங்களுக்கு அடிபணியத் தொடங்கிவிட்டதைக் காட்டுகின்றன.
இது கடந்த கால நீதிமன்றங்களின் தீர்ப்புகளையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தொழிலாளர், விவசாயிகள் தொடர்பான தீர்ப்புகள் அவர்களுக்கு எதிராகவே அமைந்துள்ளன. கார்ப்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பாசிச மோடி அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு சிறை தண்டனை, போராடுவதற்கு தடைகள் வழங்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான தீர்ப்புகள் என நீதித்துறையால் வழங்கப்பட்டுள்ள அனைத்து தீர்ப்புகளும் மீளாய்வுக்கு உட்பட்டவையே.
படிக்க: நீதித்துறையில் ஊழல்: கரடியே காரித் துப்பியது போல் நீதிபதிகளே ஒப்புதல் வாக்குமூலம்!
நீதித்துறையின் எதிர்காலம் குறித்து இன்று பெரும் கவலை எழுந்துள்ளது. பாசிச மோடி அரசின் ஆட்சியில் காவி அரசியலும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கைகோர்த்துச் செயல்படும் சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய காலகட்டத்தில், அரசுக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்க வேண்டிய இறுதிப் புகலிடமாக நீதித்துறை இருக்க வேண்டும். ஆனால், அது ஆளும் அதிகார வர்க்கத்தின் துணை அமைப்பாக (executive’s extended arm) சுருங்கி வருவது மிகப்பெரிய ஆபத்தாகும்.
இந்திய நீதித்துறையில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் பெரும்பான்மையாக அமர்ந்துள்ளது என்றும், அது பாசிசத்தின் ஒரு அங்கமாக மாறிவருகிறது என்பதையும் எமது இணையதளத்தில் பல கட்டுரைகள் வாயிலாக ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தோம். ஆனால் இன்று அதே நீதித்துறையில் ஒரு நீதிபதி தனது பேட்டியின் மூலம் அதனை உண்மையென நிரூபித்திருக்கிறார்.
நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வெளியிட்டுள்ள தகவல்கள் நீதித்துறை தனது அமைப்புச் சுதந்திரத்தைத் தானே இழந்து, ஆளும் பாசிச பாஜக அரசின் நிபந்தனைகளுக்கு ஏற்ப செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு நீதித்துறை அரசுக்கு அடிபணியும்போது, அது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மட்டுமல்லாமல், சாதாரண மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியையும் சேர்த்தே புதைத்துவிடுகிறது.
- நலன்







